என் அன்னையின் குணங்களில் என்னைக் கவர்ந்ததும் இன்றும் நான் நினைத்து பெருமைப் படுவதும் ஒன்று உண்டென்றால் அது ,‘யாரைப் பற்றியும் குறை கூறாமல் இருப்பதுதான்’.
அவளுக்கு வேதம் தன் கணவரின் வாக்குதான்.கோயிலுக்கெல்லாம் செல்வதில்லை.வீடுதான் கோயில்.அழகாக ஆங்கிலத்தில் கையெழுத்திடுவாள் ‘பகவதி’ என.
அம்மாவைக்கேட்டேன்.,’ “ நீ எத்தனாங்கிளாஸ் வர படிச்சிருக்கம்மா”
“2-ஆம் கிளாஸ்”
“அப்பம் இப்படி இங்க்ளீஸ்ல அழவோல ஒப்பு போடுகியே எப்படிம்மா”
“ அது அப்பா தாளில் எழுதி அதைப் பார்த்து நான் பழகினது”
ஆம்.. என் அம்மைக்கு தெரிந்த இங்கிளீஸ் B A G A V A T H Y யில் உள்ள 7 எழுத்துகள் தான்.
அதில் B மிக அழகான style -ல் எழுதுவாள்.
நான் அதிகம் குறும்பும் தவறும் செய்தாலும் அம்மை என்னைக் கண்டிக்க உபயோகிப்பது ‘அப்பாட்ட சோல்லிருவேன்’ எனற ஒன்றுதான்.சொல்ல மாட்டாள் என தெரியும்.சொன்னதும் இல்லை. அடித்ததும் இல்லை...நாளாக நாளாக அவளது அன்பே எனை பண்படுத்தியது.
இப்படிப்பட்டவளைப் பெற்றவள் தான் பொன்னம்மாள்.தாயைப்போல பிள்ளை.ஆம் என் ஆச்சியைப் போல என் அம்மா. அவள்பிறந்த இடம் கேரளாவில் வைக்கம் என்ற ஊரில். அதனால் அவளை வைக்கத்தாச்சி என்றால் தான் தெரியும்.அவள் பெயர் தான் எனக்கு பொன்னப்பனானது.எனது மருமகன்(அக்காள் மகன்) பேரும் அவள் பெயர்தான்.
நாங்கள் அவள் வீட்டுக்கு தினமும் பொவோம். போனால் பைசா கிடைக்கும். போகும் வழியில் பட்டிகளின் உபத்திரவம் கூடுதல்.பட்டி எங்களை கடித்து விடுமே. அழகப்பன் எனபவருக்கு குருவி சுடும் துப்பாக்கி உண்டு. அவனிடம் கூறி பட்டிகளை சுட்டுக் கொல்ல அணா கொடுப்பாள்.அவன் பட்டியை வேறு விதமாக கொன்று மாத்தி விடுவான். நல்ல காலம் மே
னகா அப்போ இல்லை. நாங்கள் போகும்பாதையில் எந்தத் தெருப்பட்டியும் கிடையாது.மந்திரி வரும் போது சாலை இருக்குமே அது போல.
5 அணா என் ஆச்சியிடம் வாங்கி இரண்டு போஸ்டல் கவர் வாங்கி ஒன்றில் என் விலாசம் எழுதி அதை இன்னொரு எம்.ஜி.ஆர் விலாசம் எழுதி அவருடைய போட்டொ கேட்டு எழுதிய லெட்டரும் வைத்து அனுப்பினேன்.போட்டொ அவர் கைஎழுத்துடன் எனக்கு வந்தது.
இந்துக்காலேஜுலெ நான் பி.யூ.சி படித்துக் கொண்டிருந்த நேரம். ஹாஸ்டலில் இருந்த என்னை என் அப்பா வந்து “ஆச்சியைப் போய் பாத்துட்டு வா. சுகமில்லை”.
நான் உடனே போய் பார்த்தேன்.நினைவு தப்பும் சமயம் போனதால் என்னை ஆச்சியால் அடையாளம் காண முடியவில்லை.இரண்டு நாட்களில் எங்களை விட்டு பிரிந்தாள்.அப்போது அவள் வயது 88 .போகவேண்டிய வயசுதான். ஆனாலும் நான் தனிமைப்பட்டு போனது போல ஒரு பயம்.அவளது பரிவும் பாசமும் வரிகளால் விவரிக்கப் பட முடியாது.ஊரில் இருந்தால் பாட்டியை பாராமல் ஒரு தினம் கூட கழிந்தது இல்லை.இன்றும் தினமும் நான் வணங்கும் தெய்வங்களுள் பொன்னம்ம ஆச்சியும் உண்டு.
No comments:
Post a Comment