Friday, August 26, 2011

கடுக்கரையில் நான் பார்த்த முதல் பச்சை ட்யூப் லைட்

கடுக்கரையில் அப்போது மின்வசதி இல்லை.பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டில் போய் பையை வைத்துவிட்டு விளையாடப் போவது வழக்கம்.விளையாட்டு, இருட்டு எங்களை விரட்டுவது வரை தொடரும்.

அன்றும் அது போல் ஒருநாள் இருள் கவ்வியதும் களிப்பதை நிறுத்தினோம். அந்த சமயத்தில் அந்தப் பக்கமாக வந்த வயது முதிர்ந்த முதியவர் எங்களை நோக்கி,“ மேலத்தெரு மங்களா வீட்டில் கரண்டு வந்து விளக்கு எரிகிறது....போய் பாருங்கோ”...

நம்ப முடியவில்லை... இருந்தாலும் நாங்கள் அங்கே போய் பார்க்க மிகவும் ஆவலாகப் போனோம்.எங்கள் கண்களையே எங்களால் நம்ப முடியவில்லை....ஆம் அங்கு குண்டு பல்பும் பச்சை நிற ட்யூப் லைட்டும் எரிந்து கொண்டிருந்தது...இது எப்படி...அந்த வயதில் ஒன்றுமே புரியவில்லை....

அந்த வீட்டில் உள்ள ஒருவர் எங்களை கூட்டிக்கொண்டு போனார்....அவரது வீட்டின் ஒரு பக்கத்தில் கிராமபோண் பெட்டிக்கு முன்னே ஒரு ஸ்டூலில் இருந்தவாறே ரெக்கார்டு (இசைத்தட்டு} போட்டுக் கொண்டிருந்தான்.சற்றுத் தள்ளி ஒரு பெட்ரோல் எஞ்சின் உறுமிக்கொண்டிருந்தது...அந்த எஞ்சின் தான் பல்ப் எரிவதர்க்கு காரணம்...

பெரியவர்களும் சிறியவர்களும் வந்து அதிசயமாகப் பார்த்துக் கொண்டு போனார்கள். நாங்கள் அந்த இடத்தை விட்டு எங்கும் நகரவே இல்லை....பெட்ரோல் தீர ஆரம்பித்ததும் உறுமல் சத்தம் குறையவே அங்கிருந்த ஆள் ஒடி பெட்ரோல் டின்னை எடுத்து வந்தான். பெட்ரோலை விடுவதற்கு முன்னரே எஞ்சின் சத்தம் நின்று விட்டது.உடனே அவன் தடித்த நூல்கயிற்றின் ஒரு முனையை எஞ்சினில் உள்ள ஒரு வட்ட வீலில் இறுக்கமாக வைத்துவிட்டு சுற்றினான்.பின் மறுமுனையைப் பிடித்து மிக வேகமாக பலமாக இழுத்தான். அந்த வீல் சுற்றியதும் எஞ்சின் மறுபடியும் உறும ஆரம்பித்தது .அணைந்த விழக்குகள் மீண்டும் எரிய ஆரம்பித்தன..... பிரிய மனமில்லாமல் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினோம்....

அந்த காலத்தில் நாகர்கோவிலில் இருந்துதான் ஸ்பீக்கர் செட் வரணும். இவர்களுக்கு வந்தது பாபுஜீ ரேடியோ சர்வீஸ்....

No comments:

Post a Comment