நேற்று திரைப்பட மறைந்த நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்த நாள்.Face book-ல் மணியம் செல்வம் ஓவியமாய் தீட்டிய எம்.ஜி ஆரின் படத்தைப் பார்த்தேன். அதே மாதிரி ஒரு படம் என் வீட்டு மேசையில் இருக்கிறது. அழகாக லேமினேட் செய்யப்பட்ட படம்.
என்வீட்டில் எந்த அரசியல்தலைவரின் படமும் கிடையாது. நடிகரின் படமும் இல்லை. சினிமா நடிகர்களைத் தெரியாத சிலர் என்னிடம் இந்த படத்தில் இருப்பவர் யார்? எனவும்..உங்க அண்ணனா எனக் கேட்டவர்களும் உண்டு.
என்னை விட வயதில் பெரியவர்கள் என்ன ஒரு College teacher-ன் வீட்டில் சினிமா நடிகரின் படமா என முகம் சுளித்தவர்கள் உண்டு. எங்க குடும்பத்தில் பலர் சிவாஜி கணேசனின் ரசிகர்கள். என் வீட்டில் இருக்கும் எம். ஜி.ஆரின் படத்தை அங்கிருந்து வேறு எங்காவது மறைவாக வைத்துவிட்டுப் போனவர்களும் உண்டு. என் மனைவியே அதை எடுத்து மறைத்து வைத்து விடுவாள். ஆனால் நான் திரும்பவும் அந்தப் படத்தை எடுத்து இருக்கும் இடத்தில் வைத்து விடுவேன்.
நானும் சிவாஜியின் நடிப்பை மிகவும் ரசிப்பேன். பாட்டுக்காக எம்ஜிஆர் படம் பார்ப்பேன். நான் பார்த்த உலகம் சுற்றும் வாலிபன் படம் பற்றி மிகவும் புகழ்ந்து பேசினேன். நான் ரசித்ததால் அது எனக்கு பிடித்த படமாய் இருந்ததால் அவ்வாறு பேசினேன். நான் பேசிய இடம் சென்னையில் உள்ள என் உறவினர் ஒருவரின் வீட்டில். அப்பொழுது அதனை ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் ஒரு ஆட்டோ ட்ரைவர். பெயர் கேசவன். அவர் ஆங்கிலம் பேச விரும்பி இண்டியன் எக்ஸ்பிரஸ் படிக்கக் கூடியவர். நான் சென்னையில் இருக்கும் போதெல்லாம் அவருடைய ஆட்டோவில் தான் எல்லா இடங்களுக்கும் போவேன்.
2004-ல் எனது மகளின் திருமணவிழாவிற்கு கேசவனுக்கும் அழைப்பிதழ் அனுப்பி இருந்தேன். சென்னையில் இருந்து அவ்வளவு தூரம் செலவு செய்து வருவார் என நினைக்கவே இல்லை. நான் சற்றும் எதிர் பார்க்காமல் வந்தார். அவர் சார்,“ உங்களுக்கு என் அன்பு பரிசு. கலர் ஸெராக்ஸ் எடுத்தேன் ரெண்டு . ஒன்றை நான் என் வீட்டில் வைத்திருக்கிறேன்.” என்று சொல்லி தந்த படம் தான் எம்ஜிஆர் போட்டொ.
கேசவனின் அன்பினை மதிப்பதற்காக இன்றும் என் வீட்டு Hall-ஐ அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.எத்தனை கோடி உள்ளங்களில் வாழ்ந்து வருகிறார் எம்ஜிஆர்,அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் .
எனக்கு அவரையும் பிடிக்கும்.
No comments:
Post a Comment