Tuesday, June 12, 2012

தெ.தி.இந்து கல்வியல் கல்லூரியை நிறுவியவர்





கொஞ்ச நாட்களாக ஒன்றுமே எழுதுவதில்லையே ஏன்…? என் மகன் என்னை வாஞ்சையோடு அழைத்துக் கேட்டான்…. எழுத வேண்டும் என்று ஆசைதான்….. என்ன எழுத…….எழுதுவதற்கு எதுவும் இல்லையே…? அனுபவங்களை யல்லவா எழுத வேண்டும்……? 


வீட்டில் அடைந்து கிடந்தால் எப்படி அனுபவம் கிடைக்கும். எனக்கே சற்று மனம் வருந்துகிறதோ எனத் தோன்றியது…….இல்லை…இல்லவே இல்லை…….


வீட்டில் கூடுதல் நேரம் இருந்தேன். ஆனால் எழுதிக் கொண்டே இருந்தேன். ஆம் சத்தியமாய் எழுதிக் கொண்டுதான் இருந்தேன். என்னை ஆளாக்கிய என் தாய்..... கல்லூரி.... இந்துக் கல்லூரி....அதன் வரலாறு எழுத முற்பட்டேன். அதனால் சற்று இடைவெளி.......


 நான் என் அன்னையை தந்தையைப் பற்றியெல்லாம் எழுதி விட்டேன். என்னை இன்று ஒரு மனிதனாய் உலவ வைக்கக் காரணமான என் தாய் போன்ற கல்லூரியைப் பற்றி உருப்படியான வரலாறு எழுத வேண்டாமா.


அதன் அறுபது ஆண்டுகால வளர்ச்சியான வரலாறை எழுத நினைத்து எழுத ஆரம்பித்தேன். முதலில் கல்லூரியின் எல்லா ஆண்டுமலர்களும் வேண்டும். அனைத்தும் கிடைத்தன. நான் இக்கல்லூரியின் மாணவன்…ஆசிரியன்….. ஆனாலும் என்னிடம் எதுவும் இல்லை.ஆனால் மற்றவர்களிடம், நண்பர்களிடம் இருக்கும் என எதிர்பார்த்தேன். 


ஆனால் அனைவரும் என்னைப் போலவே இருந்ததில் எனக்கும்
மகிழ்ச்சிதான்…..

முன்னாள் பேராசிரியர்… ஒரு மலையாள ஆசிரியர்…..அவர் இன்று உயிரோடில்லை….ஆனால் பொக்கிசமாக போற்றி வைத்திருந்த ஆரம்பகால ஆண்டுமலர்கள் அனைனத்தினையும் என் வேண்டுகோளை யேற்று டாக்டர் ராமகிருஷ்ணகுரூப் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கி பேராசிரியரின் மனைவி திரும்பத் தந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தந்து 
உதவினார்கள். எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
அந்தப் பேராசிரியர் திரு. உன்னிகிருஷ்ணன் அவர்கள். அவர் குடும்பம் திருவனந்தபுரத்தில் ..........
சுருக்கமான வரலாறு ஒன்றினை இன்று எழுதி முடித்தேன்……தகவல்கள் கிடைத்தாலும் கணினிதானே…. எந்த இடத்தில் நுழைக்க முடியுமோ அந்த இடத்தில் சேர்த்து விடலாம்…..
கல்லூரியில் இடம் இல்லை என்ற சொல்லுக்கே இனி இடம் இல்லை என்பது போல் இந்துக் கல்லூரி உதயமான ஆண்டு 1952. இன்று 2012.

வயதான ஒருவர் தனது தோட்டத்தில் தென்னங்கன்று ஒன்றை நட்டுக் கொண்டிருந்தார். அவரது பேரன் அவரது அருகில் சென்று, “தாத்தா….தாத்தா… இந்த கடும் வெயிலில் ஏந்தாத்தா கஷ்டப் பட்டு இதனை நடுகிறாய்……உனக்கு அதனால் என்ன பயன் கிடைத்து விடப் போகிறது…… வா..வா…. எழுந்திரு “ எனக் கூறி அழைத்தான்.
பெரியவர் வேலையை முடித்துவிட்டு பேரனிடம் பேசினார்.
“ அதோ தென்னை மரங்கள் காய்களை தந்து கொண்டிருக்கிறதே……… அது யார் வைத்தது தெரியுமா….? என் தாத்தா வைத்தது…….அன்று நானும் இதே மாதிரி சொல்லி அவரும் கன்றுகளை நடவாமல் இருந்தால்……… யோசித்துப் பார்…….. “
இலங்கத்து வேலாயுதம் பிள்ளையும், வடிவீஸ்வரம் செல்லையா பிள்ளை பாட்டாவும் கவிமணிப் பாட்டாவின் ஆசியுடன் அந்த வயதான பருவ காலத்தில் நடந்தும், காளை,குதிரை வண்டியிலும், காரிலும் வெயிலில் அலைந்து திரிந்து கஷ்டப் பட்டு உழைத்து உருவாக்கிய கல்லூரியால் எத்தனை எத்தனை பேரன்கள் உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் நிம்மதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நினைப்பதற்கே இனிப்பாக இருக்கிறது.
மாணவனாய் பார்த்த கல்லூரி……..ஆசிரியனாய் வாழ்வித்த கல்லூரி…… ஓய்வுற்றபோதும் இதம் தந்த கல்லூரி……..இயக்குநர் குழு உறுப்பினரான பெருமையைத் தந்த கல்லூரி…..எல்லாமே பிரமிப்பாய் இருக்கிறது. அன்று மரங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. இன்று கட்டிட அறைகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது.  தேசிக விநாயகர் படைத்த அன்னை பூமி…… அந்த பூமித்தாய்க்கு இந்துக் கல்லூரி என்றொரு சேய். 2008-ல் கல்வியல் கல்லூரி என இன்னோரு சேயும் பூமிதாய்க்கு கிடைத்தது…….. ஒரே வளாகத்தில் இரு கல்லூரிகள். காலம் காலமாய் மாணவர்களுக்கு ஒளி விளக்காய் வழி காட்டிக் கொண்டிருக்கும் கல்லூரி அமைத்தவர்களை என்றும் நினைவு கொள்வோம்.

இந்துக் கல்லூரியை நிறுவிய தலைவர் திரு வேலாயுதன் பிள்ளை…. இன்று புதியதாகப் பிறந்த கல்லூரியை நிறுவிய தலைவர் கடுக்கரை ராசப்பன் என்ற பொ.ஆறுமுகம்பிள்ளை.
கல்லூரி ……..எனது தாய்……….தினமும் போற்றி வணங்குவேன்……வைரவிழா ஆண்டு 2012-13.

No comments:

Post a Comment