இனியென்று காண்பேன் நின் புன்முறுவலை
இரண்டு நாள் தாடியுடன் தடியில்லாமல்
இறுதியாத்திரை புறப்படுமுன் இறுதி நித்திரையில் நீ
இருந்த போதினில் என் இறுகிய நெஞ்சினில்
தோன்றி மறைந்த பசுமை நினைவுகள்
உனை வந்து பார்த்துவிட்டு வீட்டுக்கு கிளம்புமுன்
‘ராசம்’ என் ஆச்சியின் ஆணைக்குட்பட்டு
ருபாயினையும் தந்துவிட்டு அன்பாய் முத்தமிடுவாயே
அன்று கன்னத்தை குத்திய தாடி
இன்றும் இன்பமாய் என் நெஞ்சினைக் குத்துதே.
உன் சரீரம் நான் சுமந்த குடத்து நீர்
நனைத்தபோது சற்று அசைந்ததே
வேடிக்கையாய் பேசி வேதனை மறந்து
சிரித்திடும்போது அசையுமே உன் தேகம் நின்
நாவினில் நர்த்தனம் ஆடிய வார்த்தைகள் எனை
இன்றும் இன்பமாய் நனைக்குதே
புத்தம்புதிய கதராடை உன்னுடலை அலங்கரிக்க
என் கரத்தால் பொத்தானைப் போட்டேனே
புன்னைநகர் மாமா வீட்டில் இருந்து சனிதோறும்
காலையில் என் வீட்டுக்கு அழைத்துவர உனக்கு
சட்டையும் போட்டு பொத்தானையும் போட்டு கைப்பிடித்து
நிழலாய் வருவேனே....
அந்த நிழல்கள் இன்றென் கண்ணில் நீரையும்
ஊறவைத்து நெஞ்சையும் கனக்கவைக்குதே
விண்ணுலகம் என்ன தவம் செய்த்தோ ?
நின்பங்கும் அங்கு வேண்டும் என்பதனாலா?
அங்குளோரும் வேதனை மறந்து சிரித்திடல்வேண்டுமென்பதாலா?
எதனால் உனை சித்திரைக்கு முன்னே அவ்வுலகம்
நிரந்தர விருந்தினராய் அழைத்தது?
அன்புக்கு மறுபெயர்-தாத்தா உன்பெயர்தான்
பொறுமைக்கு மறுபெயர்-தாத்தா உன்பெயர்தான்
பசுமையான நினைவுக்கு மறுபெயர்-தாத்தா உன்பெயர்தான்
சகிப்புக்கு மறுபெயர்-தாத்தா உன்பெயர்தான்
புறம்கூறாமைக்கு மறுபெயர்-தாத்தாஉன்பெயர்தான்
ரகசியங்களை புதைக்கும் குணத்துக்கு மறுபெயர்-தாத்தா உன்பெயர்தான்
எனக்கெல்லாம் ஒரேஒரு பெருமைதான் உண்டு தாத்தா
உன் பெயரன் என்பது மட்டும்தான் அது தாத்தா
என்றும் எங்களை இறையாய் இருந்து
காத்திடல் வேண்டி நின் தாழ்பணிந்து
வணங்கிடுவேன் தினமும் தாத்தா....
என்றும் காண்பேன் உன்புன்முறுவலை நினைவில்
(தன் தாத்தா மறைந்த அந்த வாரத்தில் பெயரன் பொன்.அனந்தபத்மகுமார்(முருகன்) வடித்த கவிதை)
இன்றும் இதை படிக்கும் போது கண்ணீர் வருகிறதே.......
ReplyDeleteஉண்மைதான். இன்று இதனைப் படித்த தினேஷ் உன் அம்மையின் கண்களிலும் கண்ணீர் வந்தது. உந்தம்பியின் கவிக்கு உயிர் இருக்கிறது உண்மையும் இருக்கிறது.என்றும் வாழும் அந்தக் கவிதை
ReplyDeleteகாரில் வைத்து நீங்கள் கூறும் போது உங்கள் குரலை கேட்டு ஒரு நிமிடம் நானும் மனதில் அழுதுவிட்டேன்.கவிக்கு உயிர் இருப்பது உண்மைதான்....
ReplyDeleteஎன் தம்பி முருகன் (அனந்தபத்ம குமார்)எழுதிய இந்த நெஞ்சை உருக்கும் கவிதையை என் தந்தைதான் எனக்கு அனுப்பித்தந்தார்கள். நான் அவனுக்கு ஒரு கடிதம் சென்னையில் இருந்து அனுப்பினேன். இதோ அந்தக்கடிதம் :---
ReplyDeleteஅன்புள்ள முருகனுக்கு,
நீ எழுதிய கவிதையினை அப்பாவின் கடிதம் மூலம் பார்த்தேன் படித்தேன் ரசித்தேன். மறந்தேன் கவிஞர்கள் பலரிருப்பதை. பல நிமிடங்கள் நான் என்னையே மறந்தேன் தாத்தாவின் நினைவுகளோடு.
மிகையென்று நினைக்காதே.வான்மெயில் என்று ஒன்றிருந்திருந்தால் நான் நீ எழுதிய கவிதையினை அனுப்பியிருப்பேன். என்றும் உன் கவிதையினை ரசிக்கும் அன்பு தினேஷ்
படித்ததால் வடிந்தது கண்ணீர் எங்கள் கன்னங்களில்
ReplyDelete