Wednesday, February 29, 2012

இந்துக்கல்லூரியின் மூன்று முத்திரைகள்

South Travancore Hindu College 1952-ல் ஆரம்பமானது.
கல்லூரியின் emblem (முத்திரை) குத்துவிளக்கு.




1960-க்குப் பின் குத்துவிளக்குடன் ,கோபுரம்,ஏரும் கதிரும் .தாமரைமலரில்  கலைமகள் கையில் வீணையுடன் அமர்ந்திருக்கும் திரு உருவம் என மாற்றி அமைக்கப்பட்டது. “ஒழுக்கம் விழுப்பந்தரும்” is the motto of the college.
இது முத்திரையின் கீழ் பொறிக்கப்பட்டது.



2002-க்குப் பின் மாறிய முத்திரை


2012 கல்லூரியின் வைர விழா வருடம்.Posted by Picasa

பாக்கெட் பாலில் கலக்கப்பட்ட நச்சுப் பொருள்.......



உங்கள் காலைப் பொழுதினை ஒரு கோப்பை பாலுடன் துவங்குகிறீர்களா...?
நிறுத்துங்கள்!

 பாலில் கலந்திருக்கும் washing soda -ல் இருந்து Urea வரை உங்களை என்ன செய்யும் எனத் தெரிந்தபின்,உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க மனம் வருமா?

மேலும் பாக்கெட்டில் பால் கெடாமல் இருக்க,சேர்க்கப்படும் நச்சுப் பொருள்கள்:-

1) Carbonates
2) Bi-carbonates
3) Starch
4) Urea
5)Hydrated lime
6)Formalin
7)Ammonium sulphate

கலப்படமான பாலை அருந்துவதால் ஏற்படும் நோய்கள்:-

 (Report of Indian Council of Medical Research)

1.Food poisoning
2. gastrointestinal complication
3.heart problem, cancer
4.kidney damage
5.Hypertension heart ailments
6.சிறு குழந்தைகளுக்கு குமட்டல், gastritis.

கலப்படமில்லாத பால் என சோதனை மூலம் பரிசோதித்து தெரிந்தபின் தான் நியாயமாக பால் விற்பனைக்கு கொண்டு வரப்படவேண்டும்.......ஆனால் நிலமை
அப்படி இல்லை.

N.B: Avin  milk is being tested every time .
        The leading dairies do not do that. the rejected milk had been sent to make casein.
It is a protein precipated from milk that is used in making plasics,adhesives,and water based paints.

Tuesday, February 28, 2012

பசுவின் பால் குடிக்கலாமா...? ஒரு விஞ்ஞானியின் செய்தி.......


நான் எனக்கு எப்போதோ அனுப்பிய ஒரு மின் –கடித்ததை இன்று படித்தேன். அது என் மைத்துனன் சி,கிருஷ்ணன் அனுப்பிய கடிதத்தின் இணைப்பு.
Extracted from Your Life in Your Hands, by Professor Jane Plan
அந்த இணைப்பின் கடைசி வரிகள்
 It was difficult for me, as it may be for you, to accept that a substance as 'natural' as milk might have such ominous health implications. But I am a living proof that it works and, starting from tomorrow, I shall reveal the secrets of my revolutionary action plan.

பேராசிரியைகேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பிரிட்டன் நாட்டுப் பெண் விஞ்ஞானி.

தான் இந்த நோயில் இருந்து விடுபட ஒன்று சாக வேண்டும் அல்லது வாழ வேண்டும்.

அழகான தனது வீட்டில் தன் அன்பான கணவனோடும் இரண்டு குழந்தைகளுடனும் தான் வாழ்ந்தாக வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.

ஏற்கனவே நோயின் பாதிப்பால் தன் ஒரு மார்புப் பகுதி அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்ட பின்னும் அந்த நோயின் துன்பம் தொடர்ந்து கழுத்துப் பாகத்தில் தோன்றிய கட்டி அவளை மேலும் சிரமப்படுத்தியது.

விஞ்ஞானியான தன் கணவன் சீனாவில் இருந்து வரும்போது அந்த நாட்டு விஞ்ஞான நண்பர்கள் தந்த herbal suppositories -யும்(மூலிகை மருந்து) சில சீனா பற்றிய தகவல் குறிப்புகளையும் தன் மனைவியிடம் கொடுக்கிறாள்.
அந்த மருந்தின் மீது நம்பிக்கையில்லாமலேயே குறிப்புகளை படிக்கிறாள்……..சீனாவில் கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறைவு.

அந்நாடு முழுவதுமே கேன்சர் இல்லையென்றே சொல்லலாம்..10000 பெண்களில் ஒரு பெண் அந்த நோயால் பாதிக்கப்படுகிறாள். பிரிட்டனில் 12 பேருக்கு ஒருவரும் மேற்குப் பகுதி நாடுகளில் 10-க்கு ஒருவர் எனவும் புள்ளி விவரம் கூறுகிறது.

ஏன் இந்த விகிதாசாரம் சீனாவில் குறவு……………..?

ஊர்ப்புறத்தில் வாழும் சீனர்கள் பால் குடிப்பதில்லை.பாலில் இருந்து செய்யப்படும் உணவு பொருட்கள் எதுவும் சாப்பிடுவதும் இல்லை. இதே சீனர்கள் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் மேல் நாட்டு நாகரீகப்படி பால் அருந்தியும் மற்ற உணவு வகைகளையும் சாப்பிட்டு வருவதால் அவர்கள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நோயை சீனர்கள் பணக்கார நோய் என்று கூறுவார்கள்.

கேன்சர் ஒரு மரபு வழி நோய் அல்ல. உணவுப் பழக்கத்தினால் ஏற்படுவது தான் இந்நோய்.....என முடிவுக்கு வருகிறாள்.

மிக அதிகமாக பால் உணவை விரும்பி சாப்பிட்ட அந்த பெண் விஞ்ஞானி இனிமேல் அவற்றை ஒதுக்கி விட முடிவெடுக்கிறாள்..........
2-வது chemotherapy treatment -முடிந்து இரண்டு வாரங்களுக்குப் பின் தன் கழுத்துப்பகுதியில் இருந்த கட்டிகளின் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டது..அதன்பிறகு 6 வாரங்கள் கழிந்த பின் கட்டி மறைந்தது.நோயில் இருந்தும் முழுவதும் விடுபட்டாள்.

70% உலக மக்களுக்கு பாலில் உள்ள சுகர்,லேக்டோஸ் ஜீரணம் ஆவதில்லை. தவறான உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை
இயற்கையும் நமக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

சீனர்கள் விருந்தின் போதுகூட பால் உணவை தவிர்த்து விடுகிறார்கள்.

 பெண் விஞ்ஞானியின் ஆராய்ச்சி முடிவு:-
I now believe that the link between dairy produce and breast cancer is similar to the link between smoking and lung cancer.  

There is an important point for men here, too. I have observed in my research that much of the data about prostate cancer leads to similar conclusions.

According to figures from the World Health Organization, the number of men
contracting prostate cancer in rural China is negligible, only 0.5 men in every 100,000.

Monday, February 27, 2012

என் பால்ய நண்பன் கணபதி

நானும் கணேசனும் சம வயதுள்ள பக்கத்து வீட்டுக்காரர்கள்.கடுக்கரையிலும் குறத்தியறை பள்ளியிலும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். பின் பூதப்பாண்டியில் 9-ம் வகுப்பு வரை சேர்ந்து தான் படித்தோம் .அதன் பிறகு கணேசன் நாகர்கோவிலில் டி.வி.டி பள்ளியில் படித்தார். அவரது மாமாவின் வீட்டில் தங்கிப் படித்தார்.

கணேசனின் அப்பா மிகவும் கண்டிப்பான மனிதர். மாலையில் வீட்டில் விளக்கு கொளுத்துவதற்கு முன் அவன் பாடங்களைப் படிக்க விளக்கின் முன் உட்கார வேண்டும். இல்லையென்றால் நிச்சயமாக அடி உண்டு. தெருவில் வைத்தும் அடி படுவதை நான் பார்த்திருக்கிறேன். அவரைப் பார்த்தாலே நானும் பயப்படுவேன்.அவரது பெயர் ராமன் பிள்ளை .கடுக்கரையில் பஸ் நிற்கும் இடத்தில் மளிகைக் கடை வைத்திருந்தார்.என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார்.

என்னைத்தவிர யாருடனும் கணேசன் விளையாடவோ பழகவோ கூடாது.......இதை மீறி நடந்தது, பெரியவருக்கு தெரிய வந்தால் கணேசனுக்கு தண்டனை உண்டு.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியபின் விடுமுறை காலத்தில் நானும் அவனும் சந்தித்து விளையாடுவதுண்டு......அப்பொழுது கணேசன், “ நாம் அடுத்த வருஷம் S.S.L.C Public Examination எழுதணும்..... நல்ல மார்க்கு எடுக்கணும்.....கணக்குப் பாடத்துக்கு ட்யூசன் படிக்கப் போலாமா....... நீயும் வந்தால் நாம் சேர்ந்தே போகலாம் .......நீ வந்தால் தான் எங்க அப்பா சம்மதிப்பார்கள்....நீ உங்க அப்பாட்ட கேளேன்......”என்றான்.

நாங்கள் கடுக்கரையில் நயினார்தோப்பில் ஆறுமுகப்பணிக்கர் சாரிடம் கணிதம் படிக்கப் போய்க் கேட்டோம்......எங்களை யார் எனத்தெரிந்து கொண்டு எங்களுக்காகவே கணக்கும் ஆங்கிலமும் மாலையில் சொல்லித்தந்தார். சுரேந்திரனும் எங்களுடன் ட்யூசன் படிக்க வந்தான்.......

மிக அழகாக ,தெளிவாக சொல்லித் தந்தார்.....கணக்கு கேள்வியைதந்து, செய்யும் போது ,யார் சீக்கிரம் விடையெழுதி காண்பிக்கிறார்கள் என்பதில் எங்களுக்குள்ளேயே ஒரு போட்டி நடக்கும்....ஒரு தடவை நான் முதல் ஆளாய் எழுதி முடித்து அவரிடம் காண்பித்தேன். விடை சரியான விடைதான்.....ஆனால் விடையின் பக்கத்தில் பெருக்கல் போட்டு விட்டார்......

எனக்கு ஒன்றும் புரியவில்லை.......மற்ற இருவருக்கும் சரி என டிக் போட்டார்....அதே விடை தான்.......

என் நோட்டை எடுத்து நான் எழுதிய விடையான 47 -க்குப் பக்கத்தில் பெரியதாக
 வடை என எழுதினார்.

எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது... ஆசிரியர் சொன்னார், “ விரைவாக கணக்கு செய்வது மாத்திரம் முக்கியமல்ல......சரியான விடைக்குத்தான் மார்க்கு கிடைக்கும்......47 பென்சில்கள் அல்லது 47 பென்கள் என எழுதணுமென்று சொன்னார். அவர் எழுதிய அந்த நோட்டை வெகுநாள் பாதுகாப்பாக வைத்திருந்தேன்....

காலங்கள் ஓடின. தெ.தி.இந்துக்கல்லூரியில் நாங்கள் ஒன்றாகவே படித்தோம் ....
ஹாஸ்டலில் தங்கிப் படித்தோம் .அவர் அரசுப் பள்ளி ஆசிரியாராக தன் பணியினைத் துவங்கினார்..

இருவருமே கடுக்கரையில் தாமதித்து வந்தோம். ஊர்மக்கள் பயன்பெற வேண்டுமென்ற நோக்கத்தில் கணேசனின் முயற்சியால் சர்வோதயா சங்கம் ஒரு நூற்பு நிலையத்தை கட்டித் தந்தது....அதற்கு நான் தான் இடம் கொடுத்தேன்.
அதுவும் கணேசன் கேட்டதனால் மாத்திரமே கொடுத்தேன் என்பதுதான் உண்மை.
கடுக்கரை பெருமாள் கோவிலில் சமய வகுப்பு நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கணேசன். ஊர் மக்களுக்கு நன்மை செய்வதில் எப்பொழுதுமே நாட்டம் உடையவர்.

தான் தலைமை ஆசிரியராக ஓய்வு பெறும் போது பெரிய சோதனைதனை எதிர்கொண்டார்........கண்டிப்பானவர் என்பதால் இவரைப் பிடிக்காத ஆசிரியர் ஒருவரின் சதியால் போலீஸ் கேஸாகி ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்டார்.

நல்ல மனிதர் ஒருவருக்கு இப்படியொரு நிலமை வந்திருக்கவே கூடாது.

 அவருக்கு ஏற்பட்ட அவல நிலையைக் கண்டு ஊரே கொந்தளித்து அவருக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக ஊர்மக்களே திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

அந்த கேஸில் வந்த போலீஸ் அதிகாரியே அவருடைய அனுபவத்தால் ஆசிரியரின் நற்குணங்களைப் புரிந்து மனம் நொந்ததாக கேள்விப்பட்டேன்..

நான் அவரிடம் நேற்று தொலைபேசியில் பேசினதில் நீதிமன்றம் அவருக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்த தகவலைச் சொன்னார்.

ஆசிரியர் கணேசன் எளிமையாகவே எப்பொழுதும் இருப்பார். இதற்கெல்லாம் காரணம் எளிமையாக வாழ்ந்த ஆசிரியர் ஆறுமுகப் பணிக்கர் தான் என்றால் அது மிகையல்ல.

 கணேசன் மிகவும் கண்டிப்பான ஆசிரியர். இந்தக் குணம் அவருக்கு அவர் தந்தையால் தான் வந்தது....

என் நண்பர்களில் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத ,பகட்டும் படோடோபமும் இல்லா நல்லவன்......அவன் தான் கணபதியாபிள்ளை...
                

Sunday, February 26, 2012

பேராசிரியர் ஒருவரின் கானல் நீராய்ப் போன ஆசை

பேராசிரியர் ஆறுமுகம் பிள்ளை என்னுடன் ஒருநாள் பேசிக்கொண்டிருந்த போது அவருடைய அனுபவம் ஒன்றினை ,தான் ஒரு பெரிய தமிழ்நாடே போற்றும் எழுத்தாளரை அவர் வீட்டிலேயே சந்தித்து பேசியதை சொன்னார்.

ஆறுமுகம் பிள்ளை சுந்தரம் ராமசாமியின் நெருங்கிய நண்பர்,பொன்னீலனின் மாணவர்,நாஞ்சில் நாடனுக்கும் தெரிந்தவர்,ஜெய மோகனையும் அறிந்தவர்......
அவர் எப்பொழுதும் படித்துக் கொண்டே இருக்க விரும்புபவர். நான் நாவல்களை ஓரளவு படித்திருக்கிறேன் என்றால் அதற்கு அவரே காரணம் .

அவர் ஆனந்தவிகடனில் அந்த எழுத்தாளரின் எழுத்துக்களைப் படித்து நாட்கள் பல ஆன பின் அவருடைய புத்தகங்களை காசு கொடுத்து வாங்கிப் படித்த போது,அந்த நாவலாசிரியரின் முகவரியைப் பார்த்திருக்கிறார். பார்த்ததும் அவர் இருக்கும் இடம் தன் மகள் இருக்கும் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடமல்லவா ......எப்போதாவது இனிமேல் போனால் எப்படியும் அந்த எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

2005 -ம் வருடத்தில் ஏதோ ஒரு நாள் ........ 

ஈக்காடுதங்கல்-க்கு தன் மகளின் வீட்டுக்கு ஒருதடவை போனார் ......காலையில் நடந்து போகும்போது ஒரு தெருவில் அவரது பெயரை பார்த்தார். 

உடன்தானே காலிங் பெல்லை அழுத்த ,ஒருவர் வந்து கதவைத் திறந்தார்.

அவர் தான் அந்த பிரபல எழுத்தாளர்.

அவர் ," யார் நீங்க , உங்களுக்கு என்ன வேணும் ."  கேட்டார்.

ஆறுமுகம்பிள்ளை ," நான் உங்க கதை எல்லாம் படித்திருக்கேன் . உங்களை பாக்கத்தான் வந்திருக்கேன் ." என சொன்னார் .

அவர்," நீங்க appointment ஒண்ணும் வாங்காம திடீர்னு வந்திருக்கீங்க ..."


என் மகள் வீடு இங்க பக்கத்தில தான் .உங்க பேரப் பாத்துக்கிட்டு தான் வந்தேன்.

ஒரு நாவலின் பெயரை சொல்லி ,"நான் இந்த நாவலை விகடனில் படித்தேன் ... பிரம்மாதமாக இருந்தது .....நான் ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியர்." என்று
கூறினார் .மேலும் தன் எழுத்தாள நண்பர்களின் பெயர்களையும் கூறிவிட்டு நான்
இன்னொரு நாள் வருகிறேன் என்று வெளியே போகத் தயாரான போது அவர் ," வாருங்கள் உட்காருங்கள் "என வரவேற்றார் .

ஆறுமுகம் பிள்ளையும் அந்த எழுத்தாளரும் முப்பந்தைந்து நிமிடங்களுக்கு மேல் பேசிக்கொண்டிருந்தனர்.

ஆறுமுகம் பிள்ளையின் பேசுகின்ற பாணி எழுத்தாளருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

எழுத்தாளர் அவரிடம் ," நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள் .....அழகாக கேள்வியும் கேட்கிறீர்கள் ...... பேட்டி எடுக்க உங்களிடம் திறமை இருக்கிறது " என்றார் .

மேலும் ," நீங்க பிரபலமான ஆட்களை சந்தித்து பேட்டி எடுக்க கேட்டுக்கொண்டால் சம்மதிப்பீர்களா "

" யாரிடம் ......"

"பழைய சினிமா நடிகர் நடிகைகளிடம் ....... "

"எந்த நடிகர் ?"

"பத்மினி,சரோஜாதேவி,ஜெமினிகணேசன் .........."

"ஐயோ ...! அவங்கள்ளாம் ரொம்ப பெரிய நடிகர்கள் ......"

"அப்படி ஒண்ணும் நினைத்து நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் .....இப்போது நீங்கள் பேட்டி எடுக்கப் போனால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் ."

பேராசிரியர் முழு மனதுடன் சம்மதித்து தனது மொபைல் போண் எண்ணைக் கொடுத்து விட்டு வந்தார்.

பிரபலமான பழைய நடிகையிடம் சந்தித்து பேட்டி காணும் நாளை ஆவலோடு
எதிர்பார்த்துக் காத்திருந்தார் பேராசிரியர்.

சென்னையில் இருக்கும் வரை யாரும் அவரை பேட்டி எடுக்க வரும்படி  அழைக்க வில்லை.

ஒருநாள் கடுக்கரையில் சும்மா நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது சிணுங்கிய போணை எடுத்து காதில் வைத்தார் பேராசிரியர் .

"Am I talking to Professor Arumukam Pillai....." ஆண்மை கலந்த  பெண்ணின் குரல் .....American English.

" May I know who you are......."

" I am Padmini"

பத்மினி ," நீங்க பேட்டி எடுக்க வருவதாக எழுத்தாள நண்பர் ....... சொன்னார். எப்பொழுது வருவீர்கள் "

நான் என் மகள் வீட்டுக்கு வரும்போது உங்களுக்கு தெரிவித்து விட்டு வருகிறேன் என்று ஆறுமுகம் பிள்ளை சொன்னார்.

பத்மினி ." உங்களுக்கு நாட்டிய சாஸ்திரம் தெரியுமா ?......"

அவர், " எனக்கு உங்கள் நாட்டியம் தான் சாஸ்திரம் ....நீங்க நடனமாடும்போது கால்கள் தரையில் படுகிறதா ,பட வில்லையா என்று கூட காண முடியாத அளவுக்கு காண்பதற்கு ரம்மியமாக இருக்கும் ........நீங்கள் வேடனாக பாவனை செய்யும் போது எய்யும் அம்பு போல் காட்சி தருவீர்கள் ...."

பத்மினி ," நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க .......சீக்கிரம் வாருங்க..."

அவர்," எனக்கு இப்போ வயது .....எங்க சின்ன வயதில் நீங்க தானே திரையுலக கனவுகன்னி ......"

பத்மினி,"  நீங்க எந்தக் கேள்வியானாலும் கேளுங்க .ஆனால் சிவாஜி கணேசனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு பற்றி எதுவும் கேட்கவேண்டாம் .....அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லி சொல்லி எனக்கே மடுத்து விட்டது ........நீங்க சென்னை வரும்போது என் வீட்டுக்கு வந்து பேட்டி எடுக்க மறந்து விடாதீர்கள் ..."

அவர்," I am very much interested in meeting with you for the Interview.."

பேராசிரியர் சென்னை சென்ற போது பத்மினி சென்னையில் இல்லை...

இது போல் மூன்று தடவை முயன்றும் சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை

பேட்டி எடுக்கும் நாள் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது ......

செப்டெம்பர் மாதம் 23 -ஆம் தேதி கலைஞர் கருணாநிதியைப் பாராட்டும் நிகழ்ச்சியில் பத்மினி கலந்து கொண்டவிவரத்தைப் பேப்பரில் பார்த்த பேராசிரியர் ,பத்மினியை பேட்டி காண சென்னை செல்ல திட்டமிடுகிறார்.

ஆனால் மிகவும் ஆசைப்பட்ட பேட்டிதனை  எடுக்க முடியாமல் விதி தடுத்து விட்டது .

திட்டமும் தவிடு பொடியாகி விடுகிறது ........

காலன் கவர்ந்து சென்று விட்டான் அந்த நாட்டிய பேரொளியை ...

ஆம் .... பத்மினி மறைந்தாள்......

அந்த நாள்  ....செப்டெம்பர் 25 ,2006 (வயது 74 )

பேட்டி எடுக்க நினைத்தது கானல் நீராகி விட்டதே ........

முதலில் பேட்டி காண நினைத்த  ஜெமினி கணேசனும் மறைந்தார்......

இப்போ பத்மினியும் போய்விட்டாள்

இனி யாரையும் பேட்டி காண நினைக்கவே  வேண்டாம் என முடிவெடுத்ததாக சொன்னார் பேராசிரியர் ஆறுமுகம் பிள்ளை.   

Friday, February 24, 2012

நாகர்கோவிலில் நியாயத்துக்காக மட்டுமே மேடை போட்டு பேசிய மாவீரன்


Posted by Picasa
பல விசித்திரமான மனிதர்களை பார்த்திருக்கிறேன் .அப்படி பார்த்த ,ரசித்த ஒரு

மனிதரை என் வரிகளில் பதிவு செய்ய  நான் விரும்பினேன் ...........

1970 களில் நான் கண்ட ஒரு மனிதர். அரசியல் அறிவும் ,மனித நேயமும் கொண்ட நல்லவர்.

நான் எனது அறையில் இருந்து எதனையோ படித்துக் கொண்டிருந்த வேளையில் என் முன்னால் யாரோ நிற்பது போன்று தோன்றவே நிமிர்ந்து பார்த்தேன் .

எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே ......!

கருத்த ஒல்லிஎன்றும் தடிமன் என்றும் சொல்ல முடியாத உருவம் .தலையில் காந்திக் குல்லா.கதர் ஜிப்பா .தோளில் ஒரு தொங்கும் பை.

நான், அவரிடம் என்ன விஷயம் என்று கேட்க , அவர் பதில் சொல்வதற்குள் , எங்கள் துறைத் தலைவர் ," அண்ணாச்சி ! வாங்கோ ..... என்ன விசயமாய் வந்திருக்கீங்க .........." எனக் கூறி அவரை அவர் அருகே வரும்படி அழைத்தார் .

பேசி முடித்து வெளியே போனார்.  அவர் போனதும் அது யார் சார் என தலைவரிடம் கேட்டேன்.

ஹ...ஹா..... என சிரித்து அவர் யார் என்பதனை சொன்னார்.

எனக்கும் ஞாபகம் வந்து விட்டது.   ஒஹ் !  அவரா இவர் ?

யார் இவர் ?

 அநீதியைக் கண்டு பொங்குபவர்.......! நியாயத்துக்காக போராட விரும்புபவர்.
முனிசிபல் மைதானத்தில் மேடை போட்டு பேசுவார் .அரசின் தவறான கொள்கைகளை விளாசுவார் .....மாவட்ட பிரச்சனைகளை அலசுவார். மேடையில் தரக்குறைவான வசனம் பேசவே மாட்டார்..... மேடைப்பேச்சு  முடிந்ததும் கேள்வி கேட்கலாம். பதில் சொல்வார்.

ஒரு சைக்கிள் . அதில் தான் எங்கும் பயணிப்பார் . " பூமேடை முழங்குகிறார் " என அவரே செலவு செய்து போஸ்டர் அடித்து ,அவரே சுவரில் கொண்டு ஒட்டுவார். இது போன்ற செயலால் அவர் கேலி செய்யப்பட்டார் . ஆனால் அவர் எதற்கும் கவலை படுவதில்லை.கேலி செய்தாலும் பொருட்படுத்துவதுமில்லை
.
அவர் பாட்டுக்கு துரு பிடித்த சைக்கிளில் வலம் வருவார்.

அவரை யார் பார்த்தாலும் சிநேக பாவனையில் சிரிப்பார். தன சைக்கிளில் பின்னால் ஏறி வரும்படி அழைப்பார்.....

தனது சொத்துக்களை விற்று தன் காலத்தைக் கழித்தார்.அவருக்கென்று நாகர்கோவில் நகரத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.

நான் அவரது பேச்சைக் கேட்டதே இல்லை.

 இந்த ப்ளாக் எழுதுவதற்கு முன் என் நண்பர் ஒருவரை சந்தித்து அவர் பேசியதில்  நகைச்சுவையாய் பேசியது ஏதாவது தெரியுமா ? எனக் கேட்டேன்.

அவர் சொன்னது...........
பூமேடை பேசுகிறார் :-
" எனக்கு நெருங்கிய நண்பர் . அவர் மாவட்ட ஒரு கட்சியின் தலைவர்....தமிழ் நாட்டில் உள்ள பல எம்பிக்களில் அவரும் ஒருவர்.அடிக்கடி இந்தியாவின் வடக்கில் உள்ள டெல்லிக்கு சென்று வருபவர். தேர்தல் சமயம்.

நான் புத்தேரி குளத்துக் கரையில் ஒரு மாலை நேரத்தில் நின்று கொண்டிருந்தேன் . அப்பொழுது வடக்கே இருந்து ஒரு காரில் நம்ம எம்.பி வந்து கொண்டிருந்தார் . என்னைக் கண்டதும் கார் என்னருகே வந்து நின்றது. அவர் காரை விட்டு இறங்கினார்.

நான் , " சுகம் தானா.... வடக்கேல்லாம் நிலவரம் எப்படி இருக்கு....."

அவர்," நான் இப்பம் வடக்கே இருந்துதான் வாறேன்....ஏன்...என்ன விஷயம்? அங்கே விசேசம் ஒண்ணும் இல்லையே... "

பாத்தீங்களா. ஒரு தேசியத் தலைவருக்கு வடக்கு என்றால் கடுக்கரையும்,,காட்டுப்புதுரும் தான். ஆனால் இந்தப் பூமேடைக்கு வடக்கு என்றால் டெல்லி .....

தேர்தல் சமயத்தில் இவரும் போட்டி இடுவார் .... அப்படி ஒருதடவை தேர்தலில் போட்டியிடும் போது இவருக்கு கிடைத்த சின்னம் யானை .

வெள்ளைக் கொடியில் யானைசின்னத்தை பொறித்து அவர் தனி ஆளாய் நடந்தும் ,சைக்கிளிலும் சென்றும்  பிரச்சாரம் செய்தார்.

அவர் தன் வாழ்வில் சொத்தை இழந்த , மனித நியாயத்துக்காக தன் வாழ்நாள் முழுவதுமே போராடிய அந்த மாமனிதன் தேர்தல்லயும் வெற்றி பெறல்ல.....


கோமாளியாகவே நாட்டு மக்கள் அனைவரும் அவரைப் பார்த்தனர்.


நல்லவன் வாழ்வான் என்பது நடை முறையில் சாத்தியம் இல்லையா?

நல்லவனாகவே வாழ்ந்து மடிந்த அந்த மனிதன் தான் .

பூமேடை ராமையா பிள்ளை