Monday, February 27, 2012

என் பால்ய நண்பன் கணபதி

நானும் கணேசனும் சம வயதுள்ள பக்கத்து வீட்டுக்காரர்கள்.கடுக்கரையிலும் குறத்தியறை பள்ளியிலும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். பின் பூதப்பாண்டியில் 9-ம் வகுப்பு வரை சேர்ந்து தான் படித்தோம் .அதன் பிறகு கணேசன் நாகர்கோவிலில் டி.வி.டி பள்ளியில் படித்தார். அவரது மாமாவின் வீட்டில் தங்கிப் படித்தார்.

கணேசனின் அப்பா மிகவும் கண்டிப்பான மனிதர். மாலையில் வீட்டில் விளக்கு கொளுத்துவதற்கு முன் அவன் பாடங்களைப் படிக்க விளக்கின் முன் உட்கார வேண்டும். இல்லையென்றால் நிச்சயமாக அடி உண்டு. தெருவில் வைத்தும் அடி படுவதை நான் பார்த்திருக்கிறேன். அவரைப் பார்த்தாலே நானும் பயப்படுவேன்.அவரது பெயர் ராமன் பிள்ளை .கடுக்கரையில் பஸ் நிற்கும் இடத்தில் மளிகைக் கடை வைத்திருந்தார்.என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார்.

என்னைத்தவிர யாருடனும் கணேசன் விளையாடவோ பழகவோ கூடாது.......இதை மீறி நடந்தது, பெரியவருக்கு தெரிய வந்தால் கணேசனுக்கு தண்டனை உண்டு.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியபின் விடுமுறை காலத்தில் நானும் அவனும் சந்தித்து விளையாடுவதுண்டு......அப்பொழுது கணேசன், “ நாம் அடுத்த வருஷம் S.S.L.C Public Examination எழுதணும்..... நல்ல மார்க்கு எடுக்கணும்.....கணக்குப் பாடத்துக்கு ட்யூசன் படிக்கப் போலாமா....... நீயும் வந்தால் நாம் சேர்ந்தே போகலாம் .......நீ வந்தால் தான் எங்க அப்பா சம்மதிப்பார்கள்....நீ உங்க அப்பாட்ட கேளேன்......”என்றான்.

நாங்கள் கடுக்கரையில் நயினார்தோப்பில் ஆறுமுகப்பணிக்கர் சாரிடம் கணிதம் படிக்கப் போய்க் கேட்டோம்......எங்களை யார் எனத்தெரிந்து கொண்டு எங்களுக்காகவே கணக்கும் ஆங்கிலமும் மாலையில் சொல்லித்தந்தார். சுரேந்திரனும் எங்களுடன் ட்யூசன் படிக்க வந்தான்.......

மிக அழகாக ,தெளிவாக சொல்லித் தந்தார்.....கணக்கு கேள்வியைதந்து, செய்யும் போது ,யார் சீக்கிரம் விடையெழுதி காண்பிக்கிறார்கள் என்பதில் எங்களுக்குள்ளேயே ஒரு போட்டி நடக்கும்....ஒரு தடவை நான் முதல் ஆளாய் எழுதி முடித்து அவரிடம் காண்பித்தேன். விடை சரியான விடைதான்.....ஆனால் விடையின் பக்கத்தில் பெருக்கல் போட்டு விட்டார்......

எனக்கு ஒன்றும் புரியவில்லை.......மற்ற இருவருக்கும் சரி என டிக் போட்டார்....அதே விடை தான்.......

என் நோட்டை எடுத்து நான் எழுதிய விடையான 47 -க்குப் பக்கத்தில் பெரியதாக
 டை என எழுதினார்.

எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது... ஆசிரியர் சொன்னார், “ விரைவாக கணக்கு செய்வது மாத்திரம் முக்கியமல்ல......சரியான விடைக்குத்தான் மார்க்கு கிடைக்கும்......47 பென்சில்கள் அல்லது 47 பென்கள் என எழுதணுமென்று சொன்னார். அவர் எழுதிய அந்த நோட்டை வெகுநாள் பாதுகாப்பாக வைத்திருந்தேன்....

காலங்கள் ஓடின. தெ.தி.இந்துக்கல்லூரியில் நாங்கள் ஒன்றாகவே படித்தோம் ....
ஹாஸ்டலில் தங்கிப் படித்தோம் .அவர் அரசுப் பள்ளி ஆசிரியாராக தன் பணியினைத் துவங்கினார்..

இருவருமே கடுக்கரையில் தாமதித்து வந்தோம். ஊர்மக்கள் பயன்பெற வேண்டுமென்ற நோக்கத்தில் கணேசனின் முயற்சியால் சர்வோதயா சங்கம் ஒரு நூற்பு நிலையத்தை கட்டித் தந்தது....அதற்கு நான் தான் இடம் கொடுத்தேன்.
அதுவும் கணேசன் கேட்டதனால் மாத்திரமே கொடுத்தேன் என்பதுதான் உண்மை.
கடுக்கரை பெருமாள் கோவிலில் சமய வகுப்பு நடப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கணேசன். ஊர் மக்களுக்கு நன்மை செய்வதில் எப்பொழுதுமே நாட்டம் உடையவர்.

தான் தலைமை ஆசிரியராக ஓய்வு பெறும் போது பெரிய சோதனைதனை எதிர்கொண்டார்........கண்டிப்பானவர் என்பதால் இவரைப் பிடிக்காத ஆசிரியர் ஒருவரின் சதியால் போலீஸ் கேஸாகி ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்டார்.

நல்ல மனிதர் ஒருவருக்கு இப்படியொரு நிலமை வந்திருக்கவே கூடாது.

 அவருக்கு ஏற்பட்ட அவல நிலையைக் கண்டு ஊரே கொந்தளித்து அவருக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக ஊர்மக்களே திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

அந்த கேஸில் வந்த போலீஸ் அதிகாரியே அவருடைய அனுபவத்தால் ஆசிரியரின் நற்குணங்களைப் புரிந்து மனம் நொந்ததாக கேள்விப்பட்டேன்..

நான் அவரிடம் நேற்று தொலைபேசியில் பேசினதில் நீதிமன்றம் அவருக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்த தகவலைச் சொன்னார்.

ஆசிரியர் கணேசன் எளிமையாகவே எப்பொழுதும் இருப்பார். இதற்கெல்லாம் காரணம் எளிமையாக வாழ்ந்த ஆசிரியர் ஆறுமுகப் பணிக்கர் தான் என்றால் அது மிகையல்ல.

 கணேசன் மிகவும் கண்டிப்பான ஆசிரியர். இந்தக் குணம் அவருக்கு அவர் தந்தையால் தான் வந்தது....

என் நண்பர்களில் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத ,பகட்டும் படோடோபமும் இல்லா நல்லவன்......அவன் தான் கணபதியாபிள்ளை...
                

1 comment:

  1. நண்பர் 21-08-2013 இரவு இவ்வுலகை விட்டு மறைந்தார்.

    ReplyDelete