Tuesday, January 3, 2012

கடுக்கரையும் வெள்ளிமலை சாமியாரும்

ஒவ்வொரு ஆண்டு ஜனுவரி 1-ஆம் தேதி காலையில் நாங்கள் ஒருவரின் வருகைக்காக காத்திருப்போம்

அவர் 6.30 மணிக்கு வருவார் தனது காரில். நான் அவரது கார் எஞ்சின் சப்தம் கேட்ட உடனேயே வாசலுக்கு சென்று புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி வரவேற்பேன். அவர் மறவாமல் கேக் தருவார். வீட்டினுள் வந்து எங்களது பிள்ளைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு நலம் விசாரிப்பார். இது கழிந்த 26 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் ஒரு நிகழ்ச்சி.

இந்த வருடமும் அவர் வந்தார் தனது காரில். அவர் ஒரு டாக்ஸி ஓட்டுநர். அவரது பெயர் பெனெடிக்ட்.அவர் மதத்தால் ஜீசஸ்ஸின் பக்தர்.

வெள்ளிமலைக்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கும் போகலாம் என்று சொன்னேன். ராமு எனது காருக்குப் பதிலாக புஸ்கலா நடேஷின் காரை ஒட்டி வந்தார்.

இரண்டு காரிலும் நாங்கள் புறப்படத் தயாராகும்போது பெனெடிக்ட் என்னிடம், ”சார், நாம் முதல்ல பக்கத்தில் உள்ள கேம்ப் பிள்ளயார் கோவிலுக்குப் போய்விட்டுப் போகலாம்” என்றார்.

அதன்படியே பயணம் ஆரம்பமானது.

மண்டைக்காடு அம்மன் கோவிலுக்கும் ,வெள்ளிமலைக்குப் போய் முருகன் கோவிலுக்கும் போன பின் வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்தர் ஆஸ்ரமத்திற்குப் போனோம்.

இந்த ஆஸ்ரமத்தை நிறுவியவர் ஸ்ரீமத் அம்பானந்த சுவாமிகள்.அவரது இயற்பெயர் மதுரநாயகம் பிள்ளை. இவரது சிஸ்யரின் பெயர் சுவாமி மதுரானந்தர். இப்பொழுது ஆஸ்ரமத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி.

அம்பானந்த சுவாமிகள் கடுக்கரையில் 1951 மே மாதம் மகா சமாதியானார். அவரது திரு உடல் கடுக்கரை K.C.பெருமாள் பிள்ளையின் பார்வத்திகாரர் பங்களாவில் கிடத்தப் பெற்றிருந்தது. அவரது திரு உடல் கடுக்கரை திடல் என்னும் ஊரில் தகனம் செய்யப்பட்டது. சமாதி இடத்தில் ஒரு ஓங்கார பீடமும் அதைச் சுற்றி மதில் கட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்ரமத்திலுள்ள சாப்பாட்டு அறையில் வைத்து நாங்கள் கொண்டுபோன காலை சிற்றுண்டியை அருந்தினோம் . கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புஸ்தகத்தினை வாங்கினேன். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம்.

பெனெடிக்ட் எங்களிடம் டாக்ஸிக்கான கட்டணத்தினை பெற்றுக்கொண்டு நன்றி சொல்லி விடை பெற்றார்.

ஒரு கிறிஸ்தவர் வருட ஆரம்பத்தில் பெற்றுக்கொள்ளும் முதல் வருமானம் ,எந்த அரசியல் தலைவனுமில்லாத சாதாரண கல்லூரி ஆசிரியரான சாமானியமான ஒரு இந்து வான என்னிடம் இருந்துதான்.

எங்கள் முன்னால் சாஸ்டாங்கமாய் விழுந்து கால்களைத் தொட்டு வணங்கி விட்டுப் போனதும்
அவர் எங்களைப் பற்றி சொன்ன நல்ல சொற்களும் எங்களை திக்கு முக்காடச் செய்து விட்டது.

”இறைவா,என்றும் எல்லோருக்கும் நல்லவனாக இருக்கும் மனதினைத் தா”....இதுதான் எனது இந்த வருட பிரார்த்தனை.

No comments:

Post a Comment