Saturday, November 24, 2012

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை....1....

அக்டோபர் மாதக் கடைசியில் புனித காசிக்கு ஒரு புண்ணிய யாத்திரை பற்றிய அறிவிப்புத் தகவல் தாள் என் கையில் கிடைத்தது. அது அழகுற வடிவமைத்திருப்பது கண்டு ரசித்தேன். படித்தேன்.

அச்சில் பார்த்துப் படித்துப் பார்க்கும்போதே மனம் மலர்ந்தது.இரண்டாவது தடவை செல்லும் காசி யாத்திரை சுகமான யாத்திரையாகத்தான்  நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கை மனதில் பதிந்து விட்டது.

யாத்திரை நாள் 26 அக்டோபர் முதல் நவம்பர் 3 வரை(2012). யாத்திரையில் கலந்து கொள்பவர்கள் நலம் கருதி அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி பகல் 3,30 மணி முதல் 6 மணி வரை கஞ்சிமடம் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் வைத்து மகா ம்ருத்யுஞ்ஜய ஹோமமும் யாத்திரை விளக்கக் கூட்டமும் நடைபெறும். யாத்திரிகர்கள் இதில் அவசியம் கலந்து கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறார்கள்

பசுமையான வரிகள் மனதை ரம்மியமாக்கியது. நாங்களும் கலந்து கொண்டோம். மிகச் சிறப்பாக சொன்னபடியே அனைத்தும் நடந்தது. சுய அறிமுகம் என்று அனைவரும் தன் பெயரை சப்தமாக அனைவர் காதில் விழும்படியாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

நானும் என்முறை வரும்போது சொல்ல வேண்டும். சொல்வதில் தயக்கம் ஒன்றும் இல்லை. ஆனால் திரு. ஆறுமுகம்பிள்ளை கூட்டத்தில் பேசும்போது என்னைப் பற்றி அனைவரும் அறியும்படி சொன்ன பிறகு நானும் சொல்ல வேண்டுமா !.பெண்கள் அதிகமாக இருந்தார்கள். அவர்களுடன் என் மனைவியும் இருந்தாள். அவள் தன் பெயரை சொன்னாள். என்ன சொல்ல என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே என் பக்கத்தில் உள்ளவர் அவர் பெயரைச் சொன்னார். அவர் சொல்லி முடித்ததும் நான் எழுந்து நின்று சொன்னேன். “ அதோ அங்கே இருக்கும் சுப்பம்மையின் மாப்பிள்ளைதான் நான்” என்றேன். அனைவரும் ரசித்தார்கள் அதனால் சிரித்தார்கள் என நான் எடுத்துக் கொண்டேன் .

அந்தக் கணமே எங்களை அழைத்துச் செல்பவரின் நிர்வாகத்திறமையை, அவர் அறிவை, இதயத்தில் இருந்து மட்டுமே வெளிப்படும் அன்பை எங்களால் உணர முடிந்தது.
 அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி கன்னியாகுமரி விரைவு ரயிலில் எங்கள் பயணம் தொடங்கியது. நாங்கள் 9 பேர் ஒரு குழுவாக இருந்ததால் எங்கள் அனைவருக்கும் அருகருகே இருக்கும்படியாக இருக்கைகளே ஒதுக்கப் பட்டதில் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. வசதியாகவும் இருந்தது.

அன்று இரவுக்கான உணவை நாங்கள் கொண்டு போயிருந்தோம்.அதை  சாப்பிட்டு விட்டு இரவு தூங்கினோம்.

காலை 7 மணியளவில் எழும்பூருக்கு ரயில் வந்து சேர்ந்தது. எங்களை ஒரு வீட்டிற்கு அழைத்துப் போக வந்திருந்த நபரைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.







1 comment:

  1. அட இன்னாரின் மாப்பிள்ளை என்று சொல்வதில் என்ன ஒரு மகிழ்ச்சி....

    உங்களை அழைத்துச் செல்ல வந்தவர் யாரோ! சஸ்பென்ஸ்.... அடுத்த பகுதியில் சந்திக்கிறேன் அவரையும் உங்களையும்....

    ReplyDelete