Tuesday, November 27, 2012

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை....3....

ரயில் விரைவாகக் காசியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

நாங்கள் எங்களது லக்கேஜுகளை இருக்கையின் அடியில் உள்ள இடத்தில் ,  இருப்பதற்கும் தேவைப்படின் படுப்பதற்கும் வதியாக வைத்தோம்.

இந்த ரயிலின் பெயர் கங்கா-காவேரி எக்ஸ்பிரஸ். கங்கை காசியில் உள்ளது. காவேரி தமிழ்நாட்டில் உள்ளது தானே. காவேரித் தண்ணிர் தான் வரவில்லை. சென்னையில் இருந்து காசிவழியாகச் செல்லும் இந்த ரயில் கடைசியாய் நிற்கும் இடம் சாப்ரா.அதனால் அதற்கு சென்னை-சாப்ரா எக்ஸ்பிரஸ் என்ற பெயரும் உண்டு. அனேகமாக காசியில் அனைவரும் இறங்கி விடுவார்கள். சந்திரசேகர் பிரதம மந்திரியாக இருந்தபோது சாப்ராவுக்கு காசி வரை வந்த ரயில் நீட்டிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. சாப்ரா அவரது தொகுதியில் உள்ளதால்.... இருக்கலாம்.

தமிழ்நாட்டில் இருந்து செல்லும் இந்த ரயில் ஆந்திரா,மகாராஷ்ட்டிரா,மத்தியப் பிரதேஷ் எனமூன்று மாநிலங்களையும் கடந்து சென்று உத்தர்பிரதேஷில் உள்ள காசியை அடையும்.சனிக்கிழமை இரவு முழுவதும் ரயிலில் இருக்கவேண்டும்.  ஞாயிறு பகல் இரவும் ரயிலில் தான் பயணம். திங்கள் காலை 7 மணியளவில் காசியில் போய் சேரும்.

நாங்கள் 9 பேரும் ஒரு ஆளுக்கு ருபாய் 250 வீதம் வசூல் செய்து மொத்தப் பணத்தையும் முருகனிடம் கொடுத்து வைத்தோம். ரயிலில் எதனை வாங்கினாலும்  9 பேருக்கும் சேர்த்து வாங்குவது தான் வழக்கம். தேயிலையானாலும் சரி, ஆரஞ்சுப் பழமானாலும் சரி.....

காசின்னு சொல்லும் இந்த ஊரை வாரணாசி என்றும் சொல்கிறார்களே ! என்று எங்களில் குமரேசன் கேட்க, தெரிந்த ஒருவர் சொன்னார்.

2000 முதல் 3000 வருடங்களுக்கு முன்னமே உள்ள பழமையான இடம் இது. வேறு பெயர்களாலும் இந்த ஊர் அழைக்கப்பட்டது. பனாரஸ்,ஆனந்த வனம், மகா மயானம்,அவிமுக்தம் எனவும் பெயர்கள் உண்டு.
காசி என்பது தான் ஊரின் பெயராக அதிக மக்களால் சொல்லப்பட்டது.
மாவட்டம் வாரணாசி .
காசியில் விஸ்வநாதர் திருக்கோயில் உள்ளது. அம்மன் விசாலாட்சி .

காசி என்றால் என்ன ?

காசி என்றால் ஒளிநகரம். 12 ஜோதிர்லிங்கம் உள்ள கோவில்களில் காசி தான் முதன்மையானது.

 காசன் என்னும் அரசன் இப்பகுதியை ஆண்டதால் காசி என்னும் பெயர் இதற்கு உண்டாயிற்று என்றும் சொல்கிறார்கள்.பனாரன் என்னும் அரசன் இந்நகரத்தை பிற்காலத்தில் புதுப்பித்ததால் பனாரஸ் என்னும் பெயர் இதற்கு வழங்கப்படுகிறது.

வாரணாசி என்று அழைப்பதற்கும் ஒரு காரணம் இருக்குமே!

வாரணா,ஹசி என்ற இருநதிகளுக்கும் இடையில் அமைந்துள்ளதால் இவ்வூருக்கு வார்ணாசி என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.

இந்தக் கோவிலைக் கட்டியது யார் ?

அக்பர் கட்டியதாகச்சொல்கிறார்கள். ஆதார பூர்வமான தகவல் எதுவுமில்லை.

1669-இல் அவுரங்கசீப் ,விசுவநாதர் கோவிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை இப்போதும் காணலாம். காசி ஒரு புண்ணிய ஸ்தலம் மட்டுமல்லாது மத ஒற்றுமையை வலியுறுத்திய சின்னமாகவும் இருக்கிறது.

காசிக்கு வருவதற்கு ஏன் ஆசைப்படுகிறார்கள்.?

காசி விஸ்வநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது. கங்கையில் நீராடினால் நமது தேகம் புனிதம் அடைகிறது. காசிக்கயிறு என்னும் கறுப்புக் கயிறு கட்டினால்,தீயசக்திகள் எதுவும் அண்டாது. தனது ஆயுட்காலத்தில் ஒருமுறையாவது காசிக்கு வரவேண்டும் என்று சொல்வார்கள்.

பொதுவாக வயதானவர்களே காசிக்குப் போய் வரவேண்டும் என்ற எண்னம் உள்ளது. இளைஞர்களும் போய்வரலாம்.

காசியின் சிறப்பு என்ன ?
காசியில் 64 தீர்த்த கட்டங்களில்  ஹரிச்சந்திரா காட், மணிகர்ணிகா காட் முக்கியமானவை. (காட் என்றால் ஆற்றின் அருகே அமைந்திருக்கும் படிக்கட்டுகள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்).இது பிணத்தை எரியூட்டும் இடம். மன்னராய் இருந்த ஹரிசந்திரன் விதிப்பயனால் இந்தச் சுடுகாட்டை காவல்காத்ததால் அதற்கு இந்தப் பெயர். இறந்து போனவ்ர்களை கங்கையில் குளிப்பாட்டி அந்த சுடுகாட்டில் வைத்து எரிப்பதால் நித்திய சாந்தி உண்டாகும்.
காசியில் உள்ள இந்த இரு இடங்களிலும் “ பிணம் மணக்கும், பூ மணக்காது.” என்னும் பழமொழி இன்றும் அனுபவமாக பூர்வமாக உணரப்படுகிறது.
காசியில் மரணம் அடைந்தால் முக்தி கிடைக்கும் என்பதால் இறக்கும் தருவாயில் முதியவர்களை அவர்களது வாரிசுகள் காசியில் தங்க வைத்துக் கொள்வார்கள்.அவ்வாறு தங்குவதற்கென்று விடுதிகள் காசியில் உள்ளன.

  கங்கை ஆற்றின் அருகே தான்  உள்ள மயானத்தில் எப்பொழுதும் பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும்.

காசியில் செய்ய வேணியது என்ன?

பித்ரு தர்ப்பணம், முண்டனம்,தானதர்மங்கள் போன்ற புண்ணிய காரியங்கள் செய்யலாம்.

காசியில் எப்பொழுது கோயில் தரிசனம் பண்ணலாம் ?

 காலை 2.30 முதல் இரவு 11 மணி வரை.

காசியில் என்னென்ன வாங்கலாம் ?

காசிக்கயிறு, தீர்த்தச் செம்பு, அன்னபூர்ணா விக்ரஹம்,ஸ்படிகமாலை, ஸ்படிக லிங்கம்,ருத்ராட்சம் போன்ற பூஜைப் பொருள்கள் வாங்கலாம். பட்டுப்புடவைகள் வாங்கலாம்.

தங்குவதற்கு வசதிகள் உண்டுமா?

நிறைய உண்டு. லாட்ஜுகள் உள்ளன. சத்திரங்கள் உள்ளன. நாங்கள் தங்கும் இடம் காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே ,இரவு உணவு எங்கள் இருப்பிடத்திற்கே வந்தது. சாப்பிட்டோம்.  பின் சற்று நேரம்  பேசிக் கொண்டிருந்தோம்.9.30 மணியானதும் தூங்க ஆரம்பித்தோம்.

ரயில் சரியான சமயத்தில் எல்லா ரயில் நிலையங்களையும் கடந்து செல்வதாக அறிந்து கொண்டோம். அசைந்து அசைந்து செல்லும் ரயில் தொட்டில் போல் தூங்குவதற்கு சுகமாக இருந்தது. 27 ஆம் தேதி இரவு எங்களிடம் இருந்து விடைபெற தயாராக விழித்துக் கொண்டே இருந்தது.

.

1 comment:

  1. விரிவான தகவல்கள். நல்ல கட்டுரை... தொடர்கிறேன்.

    ReplyDelete