Wednesday, November 28, 2012

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை....5....

குமரேசன் எங்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான்.

அவன் ,” காசியில் பசுமாடுகள் மிக அதிகம். பசுவுக்கு பக்தர்கள் உணவு கொடுப்பதுண்டு. மிரண்டு போகும் பசுவோ, முட்டும் பசுக்களோ கிடையாது.
நாய்கூட அந்த இடத்தில் குரைக்காது.”

சாலையில் பகல் நேரம் நடந்து செல்வதே கஷ்டம். இதனிடையில் இரு சக்கர வாகனங்கள் ஊர்ந்து செல்லும். சைக்கிள் ரிக்‌ஷாவில் எஜமானன் போல் இருப்பார்கள். அவை பல இடங்களில் சற்று வேகமாகச் செல்வதையும் பார்க்கலாம். அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறா வண்ணம் அனைவரும் நகர்ந்து செல்வதால் நேரம் அதிகமாகும் கோவிலை அடைவதற்கு.

சாலையில் சென்றால் இடது புறம் காசி விஸ்வநாதர் கோவில் இருக்கிறது என்பதை தோரணவாயில் அடையாளம் காட்டும். அந்த வழி சிறிய மிகவும் குறுகலான சந்து. இருபக்கமும் கடைகள். நம்மை கையைப் பிடித்து கடையினுள் இழுத்து விடுவதுபோல் அருகில் வந்து கடைக்கு வந்து சாமான் வாங்கும்படி அழைப்பு விடுப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் நம்மை மெட்டல் டிடெக்டர் மூலம் தலை முதல் உள்ளங்கால் வரைத் தடவி பார்த்து சோதனை செய்து அனுப்புவர். இது போல் இரண்டு மூன்று இடங்களில் சோதித்தபின் நாம் சன்னதியை (கர்ப்பக்ருஹம் வரை) அடையலாம். தரைத்தளத்தில் சதுரவடிவ பள்ளத்தில் சிவ லிங்க வடிவில் விஸ்வாநாதர் வீற்றிருப்பார். நாம் சிவலிங்கத்தைத் தொட்டு, புண்ணிய நீர் விட்டு நாமே அபிஷேகம் செய்யலாம். கூட்டம் அதிகம் இருந்தால், அதிக நேரம் நிற்க விடாமல் வெளியே அனுப்பி விடுவார்கள்.

கோவிலில் உள்ள கதவுகள் தங்கம் போல்  மின்னும்  தகடுகளால் பொதியப் பட்டிருந்தது. அது காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் செலவில் செய்யப்பட்டது.

அன்னபூர்ணேஸ்வரி கோவிலும் பக்கத்தில்தான் உள்ளது.விக்ரகம் மிகவும் ஐஸ்வர்யமுடையதாக இருக்கிறது.எங்களுக்கு பிரசாதமாக அரிசி கிடைத்தது.இங்கு வருபவர்கள் யாரும் பசியுடனோ, இரவுநேரம் சாப்பிடாமலோ  இருக்கக்கூடாதுஎன்பதால் இரவு கோவில் நடை அடைப்பதற்கு முன்பு கோவில் சேவகர்கள் இதனை உறுதி செய்து கொள்வர். கோவிலில் அனைவருக்கும் இரவு உணவு வசதி உண்டு.

 இங்கு அன்னபூரணி சின்ன விக்ரகம் வாங்கி வீடுகளில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிட்டும் என்பது நம்பிக்கை.காசித்தீர்த்தம் ஒரு சிறிய செப்புக் குடத்தில் வைத்து விற்பார்கள் தேவைப் பட்டவர்கள் சிறிய பெரிய அளவில் வாங்கலாம்.

ஊருக்குப் போய் உறவினர்களுக்கு கொடுக்கவும் பலர் வாங்கினார்கள்.
உத்திராட்ச மாலை வாங்கலாம். ஸ்படிகமாலை வாங்கலாம். பலர் வாங்கினார்கள்.ஸ்படிகமாலையைக் கயில் வைத்துப்பார்த்தால் குழுமையாக இருக்கும். நல்லதா என்று பார்க்க இரண்டு ஸ்படிக பாசிகளை ஒன்றோடொன்றை வைத்து வேகமாக உரச வேண்டும். தீப்பொறி வந்தால் அது நல்ல ஸ்படிகம்.

காசி நகரம் அழுக்கான நகரம் போலவே இருக்கு. காரணம் பக்தர்களின் அதிக கூட்டமும் பசுக்களின் நடமாட்டமும் தான்.  கங்கை அகலம் கூடுதல், ஆற்று நீர் கடல் போல் காட்சி அளிக்கிறது. கங்கை நீர் புனிதநீர். ஆனால் அது மாசுபட்டு, அம்மாசுவை எங்கேயோ கொண்டுபோக ஒடுகிறது. பார்த்துக் கொண்டே இருக்கலாம். காசியின் ஒரு புறம் கடல் போல் காட்சி தரும் ஆறு. இன்னொருபுறம் சாலையில் மக்கள் வெள்ளம்.

500 வெளிநாட்டு யாத்திரீகர்கள் மிகவும் ஒழுங்காக அனைவரையும் கவரும்படி பக்தி கானங்கள் பாடிச் சென்றனர்.  நாம் ஏனோ சுய ஒழுக்கத்தை அதிகம் விரும்பாமலேயே பொது இடங்களில் நடந்து கொள்கிறோம். நம்முடன் வரும் இளைஞர்களும் நம்மைப் பார்த்து நடந்து கொள்வதால் வருங்கால சமுதாயம் நல்ல முறையில் மாற்றம் காணும் என்பது வெறும் கனவே.
கங்கா ஆரத்தி பார்ப்பதற்கும் பாடும் பாடல்களைக் கேட்பதற்கும் நன்றாக இருக்கும்.அது தினமும் மாலை 6 மணிக்கு நடக்கும்.

நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரம் பற்றி அறிய ஆசைப் பட்டு ராஜேந்திரனிடம் கேட்டேன். அவர் சொல்ல ஆரம்பித்தார்.

1 comment:

  1. //நாம் ஏனோ சுய ஒழுக்கத்தை அதிகம் விரும்பாமலேயே பொது இடங்களில் நடந்து கொள்கிறோம். நம்முடன் வரும் இளைஞர்களும் நம்மைப் பார்த்து நடந்து கொள்வதால் வருங்கால சமுதாயம் நல்ல முறையில் மாற்றம் காணும் என்பது வெறும் கனவே.//

    உண்மை. சமீபத்தில் நானும் காசி மற்றும் அலஹாபாத் சென்று வந்தேன்.

    ReplyDelete