Tuesday, November 27, 2012

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை....4....

இரவு விடை பெற்றுப் போனது. 28-ஆம் தேதி பகல் வரவேற்றது.
 நான் என் செல் போனை எடுத்துப் பார்த்தேன். பகீரென்றது. சார்ஜ் தீர்ந்து போகும் என எச்சரிக்கை குறியீட்டுக் கோடு பயமுறுத்தியது.

நாங்கள் இருந்த ரயில் பெட்டியில் சார்ஜ் செய்யும் வசதி உண்டு. அதற்கு  நீண்ட காத்திருத்தல் கண்டு, சார்ஜ் பண்ண வாய்ப்பு கிடைக்கும்னு தோணாததால்,என் போனை அணைத்து என் பையில் போட்டு வைத்தேன்.

காலைக் கடன் செய்யும் பணி முடிந்தது. எங்களுக்கு முருகன் தேனீர் வாங்கித் தந்தார். காலையின் விடியல் பொழுது மெல்ல மெல்ல வெளிச்சத்தை  கொணர்ந்தது. ஞாயிறு காலை நேரம். எல்லோருக்கும் தேயிலை அல்லது காப்பி குடிக்கணும் போல் இருந்தது. காப்பிக் கொண்டு வருபவனுக்காக காத்திருந்தோம். ஒருவன் வந்தான் .ஆனால் அவன் வைத்திருப்பது தேயிலை.
சரி எதையாவது சூடாக் குடிப்போம் என்று குடித்தோம்.

காலையில் இட்லி தந்தார்கள். காலை உணவுப் பிரச்சினை எதுவுமின்றி முடிந்தது,பகல் பொழுது பேசிக் கொண்டிருந்தோம்.

முருகதாஸ் சுவாமி எல்லோரிடமும் போய் நலம் விசாரித்துவிட்டு எங்கள் பக்கமும் வந்து நலம் விசாரித்தார். நான் அவரிடம் எதையோ கேட்க நினப்பதாகப் புரிந்த அவர் என்னிடம்,” சார் ! என்ன வேண்டும்”
சுரதவனம் முருகதாஸ்
சத்திரம்
 என வாஞ்சையுடன் கேட்டார்.

நாளை நாம் எத்தனை மணிக்கு காசிக்குப் போவோம்?

திங்கள் காலை 7 மணிக்கு நாம் காசியில் இருப்போம் என்றார்.

எங்கே தங்கப் போகிறோம் ?

கோவில் பக்கத்தில் உள்ள சத்திரத்தில்  தான் . தனி அறை வேண்டுவோருக்கு ஒரு நாளைக்கு 300 ருபாய் கொடுத்து தங்கலாம்.
நான் எனக்கு ரூம் வேண்டும் எனச் சொன்னேன். சிறிது நேரம் பேசி விட்டுப் போனார்.
 நான் ராஜேந்திரனிடம் பேச ஆரம்பித்தேன். நேரம் பொகணுமே!.

”நாளை என்ன Programme.? உனக்குத் தெரிந்தால் சொல்லலாமே”

காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு ,கங்கையில் போய் குளிக்கலாம். மொட்டை போடுபவர்கள் மொட்டை போடலாம். குளித்து விட்டு திரும்பலாம்.
தர்ப்பணம் செய்ய விரும்புவோர் காசி கோவில் பக்கம் உள்ள ஆற்றின் படித்துறையில் அந்த காரியங்களைச் செய்யலாம். அதன்பிறகு நேரம் இருந்தால் கோவிலுக்குப் போகலாம். பேசிப் பொழுதைப் போக்கினோம். அடுத்த நாள் காலையில் மிகவும் சரியான சமயத்தில் காசியில் ரயில் வந்து சேர்ந்தது. எல்லோரையும் வாடகைகாரில் அனுப்பி விட்டு கடைசி ஆளாக அவர் எங்களுடன் வந்தார். நாங்கள் சத்திரத்தை வந்தடைந்தோம். நான் நினைத்ததை விட சத்திரம் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

காலை உணவு அங்கேயே கிடைத்தது. சாப்பிட்டு முடித்ததும் எங்களுக்கு அறைச்சாவியை முருகதாஸ் சாமியே வந்து தந்து ரூமையும் பார்த்துவிட்டு திருப்தியோடு போனார்.

எல்லோரையும் கோயிலின்  பக்கத்தில் உள்ள மணிகர்ணிகா படித்துறைக்கு அழைத்துச் சென்றார். இரண்டு படகுகளில் ஏறி கங்கை யாற்றின் எதிர்புறம் உள்ள கரைக்குச் சென்றோம். அங்கு ஆசை தீரக் குளித்தோம்.
மொட்டை போட்டவர்கள் அந்த இடத்தில் குளித்து முடிந்ததும்  கரைக்கு வந்தோம். தர்ப்பணம் செய்ய விரும்பியவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்து மந்திரங்களும் பாடல்களும் ஒரு பண்டிதர் சொல்ல சொல்ல இவர்களும் சொன்னார்கள். கொஞ்ச நேரம் இருந்து விட்டு நானும் சிலரும் சத்திரம் நோக்கி நடந்தோம்.
மதிய உணவு சாப்பிடும் நேரம் நெருங்கியதும் சத்திரத்தில் டோக்கன் பெற்று சாப்பிட்டோம்.

மாலை நேரம் நெருங்கியதும் எல்லோரும் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டோம். சத்திரத்துக்குப் போனோம்.

எங்களுடன் வந்தவர்கள் தங்கியது ஒரு பெரிய ஹால். நம் பொருட்களை வைத்திட லாக்கர் வசதியும் உண்டு.

அந்தஹாலில் சத்சங்கம் நடந்து கொண்டிருந்தது. (திங்கள் இரவு).யோகிராம் சுரத்குமார் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

அவர் பேசியது நன்றாக இருந்தது. பேசி முடிந்ததும் அவர் சில தெய்வப்பாடல்களைப் பாடினார். குருவுக்கு நன்றி செலுத்தும் விதமாக தீபாராதனை நடந்தது.
 இரவு உணவுடன் அன்றைய நாள் இனிதாய் நிறைவுற்றது.

1 comment: