Tuesday, August 28, 2012

Diary -இன் சில தாள்களில் என்னைத்தொட்ட வரிகள்.

வேலை இல்லாமல் ஒரு நாள் சும்மா இருந்த நான் என் பழைய Diary களை சும்மாதான் அதன் பக்கங்களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தேன். தமிழில் என் எண்ணத்தில் தோன்றியவைகளை நாற்பது வருடங்களுக்குப் பின் பார்த்ததில் ,படித்ததில்  ஏற்பட்ட உணர்வுகள் என்னை என்னவெல்லாமோ செய்தது. கண்களில் நீர்வடிந்தது என் அம்மாவைப்பற்றிய வரிகளை கண்டதால்.

"அம்மா! சின்ன  வயதில்  நீ  சொல்லி  நான்  கேட்பதில்லை   .  ஆனால் நான் சொல்லி நீ எதையும் கேட்காமல் இருந்ததில்லை.

அம்மா ! நான் அப்பாவிடம் இருந்து ஏச்சு  வாங்கியதில்லை . எனக்காக நீ ஏச்சு வாங்காமல்  இருந்ததில்லை .

அப்பாவுக்கு செல்லப்பிள்ளை நான். அம்மா  உனக்கும்  நான்  செல்லப்பிள்ளை  தான்  . நல்ல பிள்ளையாக இருந்தேனா ."

பல செய்திகள் , பல சம்பவங்கள் ..... என் மனதினை மிகவும் பாதித்தது.

பிறர் மனமும் பாதிக்கும் அதனைப் படிக்க நேர்ந்தால்.கிழித்துப் போட்டேன். அழிந்து போனச்சுவடுகள் மறுபடியும் என் மனதை அழுத்துகின்றன.அனுபவம் இல்லா அந்த வயது இன்றில்லை என்பதால் சுமையும் சுவையாகவே இருக்கிறது இப்போது.

அறிவு என் வாழ்க்கையை வசதியாக்கியது; வசந்தமாக்கியது.
அன்பு என்னை நல்ல கணவனாக்கியது;மனிதனாக்கியது.

எதனையோ எழுத நினைத்து எழுத ஆரம்பித்தேன். வேறு எதனையோ எழுதுகிறேன் . திசை மாறி என் கைகள், மாறிய மனம் சொன்னபடி இயங்குகின்றன. Diary குறிப்புகள் பாதித்ததால் இருக்கலாம்.

சற்று ஓய்வுக்குப்பின் சந்திக்கலாமே

Sunday, August 12, 2012

ஏழு வருடங்களுக்கு முன்னால் செமினார்ஒன்றில்பேசியது

Total Quality Management
State Level Seminar on "Global Challenges in Higher Education "—11 & 12b March 2005 at South Travancore Hindu College, Nagercoil.
Respected Syndicate member and my dear learned Colleagues
I consider it a rare opportunity and honour to stand amidst the college teachers who mould the students into an excellent shape. Let me share my views with you on total quality management which you  all know well.

The quality of students depends upon their quality of education which again depends upon the quality of teachers. We, the teachers are here to know and discuss about education, which should be worth for the students of the modern era.

The students of the educational institutions are our real customers.They get the fruit of education after paying to the institutions. We including the parents of the students and the management of the educational institutions are interested in fulfilling the needs of the students.

What do the students wish to have ? To cater the needs of the student community what we teachers are going to do ? What should be done for the higher education ?

 Now the higher education that has been under pressure and which changes globally is competitive and is facing different challenges globally.To be competitive at global level we need a change in higher education that should be attractive, excellent and effective. We have to think of elevating the quality of education to an excellent state.

Total Quality Management (TQM) is customer oriented management philosophy. As for as we the teachers are concerned, it is centred as quality so as to achieve the object of the students' delight through systematic efforts for improvement of the educational institution.

Total Quality Management is to be moved with an expectation of education with grade, dignity and decorum, which maintain high standards of discipline. The activities of the management which determine the quality,policy, objectives and responsibilities and to implement them by means such as quality planning, quality control, quality assurance and quality improvement within the quality system.

The quality assurance may be described as systematic, structured and continuos attention to quality in terms of quality maintanace maintenanceand improvement. All the planned and systematic activities implemented within the quality system will fulfill the requirements for quality. The quality improvement may be of improving quality of teaching, research and other activities.

The tools and instruments of Qualty Assesment are evaluation as professional judgement ,self evaluation, the review by academic expert, certification process like NAAC (National Accreditaion and Assessment Council).

The assessment helps the colleges to know their strength and weaknesses that has enhanced both faculty and the management to march towards academic excellence. UGC plays an important in supporting the institution of excellence accredited through various assessments.

Total Quality Management in Higher Education is the system that should have the ability to satisfy the needs of the students who must get recognition in their carreer. Total Quality Management has an important role in any organization to make them shine well.

Before concluding, I want to mention Dr.B.K.Krishna Vanavarayar's words. " We are living in a fast changing world. We have to change with the times or else run the risk of being left isolation. It is time for us to perform miracles by adhering to the new value systems of other countries- we have to develop the national pride of USA, the work culture of Japan, the hard work culture of Korea, the discipline of China and the quality consciousness of Germany. If we do this, we are fully global".
Thank you.

Tuesday, August 7, 2012

நானும் கல்லுரியில் நடந்த வரலாற்று துறை நடத்திய செமினாரில் பேசினேன்.

கல்லூரியை தினம் காக்கும் விநாயகரை வணங்கி ,என்னைப் பற்றி உயர்வாய்ப் பேசிய கல்லூரிக்குழுத் தலைவருக்கும் 18-ஆம் முதல்வர் மீனாட்சி சுந்தரராஜன் அவர்களுக்கும் நன்றி. மேலும் என்னைப் பற்றி பேசி அமர்ந்திருக்கும் கோபாலன் அவர்களுக்கும் நன்றி.

வரலாறு –கழிந்த ஒரு வாரம் கல்லூரி முதல்வரின் வேண்டுகோளின் படி எல்லாத் துறைத்தலைவர்களும் தங்கள் துறைகளின் வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.-பரிசும் உண்டு நல்லதொரு வரலாற்றுக்கட்டுரைக்கு.
வரலாறு இல்லாத ஒன்று எதுவுமே இல்லை.


இன்று மலர்.
அதன் நேற்றைய வரலாறு மொட்டு.
நாளை அது வரலாறு படைக்கும் காயாய்க் கனியாய்.

நம் தாய் இந்துக் கல்லூரி
அதன் வரலாற்றை வளர்ச்சிப் பாதையை அறிந்து கொள்ளவே இந்த அருமையான வைரவிழாவை ஒட்டிய கருத்தரங்கம்.

நானும் மாணவனாய் மாறி உங்கள் முன் நிற்கிறேன். தெரிந்ததைச் சொல்கிறேன்.

South Travancore Hindu College is the brain child of Kavimani Desikavinaayakam Pillai. அவர் வாழ்த்திய வரிகளோடு என் உரையை ஆரம்பிக்கிறேன்.

தேசிகவிநாயக நின் சேவடியைச் சேவித்து
வாசமலர் தூவி வணங்குகின்றேன் –மாசிலா
இந்துக் கலாசாலை வளர்ந் திந்நாகை நன்னகரில்
சந்தமும் வாழ வரம் தா.


இந்த வரிகளுக்கும் வயது இன்று அறுபது.
இந்த அரஙகம் இந்துக் கல்லூரி வரலாறு பற்றி ஒரு வரலாறு படைக்கப் போகிறது. வாழ்த்திப் பேச வந்திருக்கும் என் வரலாற் பற்றி உங்களுடன் ஒரு நிமிடம்.


இந்துக் கல்லூரியில் மாணவனாக வந்த போது எங்கள் முதல்வர் வி.எம்.ஸ்ரீதரமேனன். கணித ஆசிரியனாக அனுமதித்தவர் தலைவர் பி. வீரபத்திரபிள்ளை. முதல்வர் எல்.சி.தாணு. இதுவே என் வரலாறு.
இம்மூவரையும் வணங்கி என் உரையை மேலும் தொடர்கிறேன்.
மேடையில் அமர்ந்திருக்கும் வரலாற்று நாயகர்களே !
தென் திருவிதாங்கூர் கல்லூரிச் சங்கத்தின் பங்குதாரர்களே, ஆசிரியப் பெருமக்களே ,நாளை வரலாறு படைக்கக் காத்திருக்கும் எனதன்பு மாணவர்களே ! என் அன்பு வணக்கம்.

தெ.தி.இந்துக்கல்லூரி இருக்குமிடம் தேசிகவிநாயகர் அருளிய பூமி. அது ஒரு ஞான பூமி ; புன்ணிய பூமி. எத்தனையோ ஆசிரியர்கள் பணியாற்றவும் மாணவர்கள் படிப்பதற்காகவும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
நானும் அவ்வாறு வந்து போனவர்களில் ஒருவன். 1953-54 இல் வெளியான் முதல் கல்லூரி ஆண்டுமலரில் ஒரு கட்டுரையைப் படித்தேன். அதை எழுதியவர் அன்று கல்லூரியில் படித்த மாணவர்களில் ஒருவர்.

கட்டுரையின் தலைப்பு 'கவிதை'. உள்ளத்து உள்ளது கவிதை-இன்ப உருவெடுப்பது கவிதை என்று ஆரம்பித்து வள்ளுவன் வரிகளில் முடிகிறது அந்தக் கட்டுரை. அதில் ஒரு கவிஞன் மனம் பற்றிய வரிகளும் இடம் பெற்றிருந்தன.
வானத்தில் இரவு நேரம் வெண்ணிலாவைப் பார்க்கிறான் கவிஞன். பல கோடி விண்மீன்கள் சூழ , அவை நடுவே ஒரு வெள்ளி ஓடம் போல் வருகிறது அவ்வெண்ணிலா.
ஆதாரம் ஒன்றில்லாமல் அது அந்தரத்தில் நிற்பதைக்கண்டு அதிசயிக்கிறது அந்த உள்ளம்.
சும்மா சுற்றித்திரியும் அதன் அநாதை நிலைகண்டு அதற்கு "சொந்த இடம் எதுவுமில்லையோ " என்று அனுதாபப்படுகிறது அந்த மனம்.
அந்த வருகை கண்டு அவனது உள்ளத்து உணர்ச்சி துள்ளிக்குதிகிறது. அந்த உனர்ச்சியின் பெருக்கம் இனிய தமிழில், " " பறக்கச் சிறகிருந்தால் வெண்ணிலாவே – உந்தன் பக்கம் வந்து சேருவேனே வெண்ணிலாவே " எனக் கவிதையாகிறது.
கவிதை கவிமணியினுடையது.
அந்தக் கட்டுரையை எழுதிய மாணவர், இந்துக் கல்லூரியின் முதல் மாணவர். 36 வருடங்கள் இக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய முதல்வர் எல்.சி.தாணிவின் முதல் மானவர்.அன்று மாநிலத்தில் அதிக மார்க்கு எடுத்தவர். இந்துக்கல்லூரி வருவதற்கு முதற் காரணமாய் இருந்த நாஞ்சில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் தம்பி மகன்.
அவர் தான் இந்துக்கல்லூரியில் பொருளாதாரத்துறை ஆசிரியராகவும் ,முதல்வராகவும் பணியாற்றி கல்லூரி இயகுநராகவும் இருந்த எங்கள் அன்புக்குரிய இரவிபுதூர் தே. வேலப்பன்.
1963-64-இல் Pre- University வகுப்பில் இங்கு படிக்கும்போது முதல்வராய் இருந்தவர் மறைந்த பேராசிரியர் வி.எம்.ஸ்ரீதர மேனன். அவர் நமது கல்லூரியின் ஏழாம் முதல்வர். கோட்டும் சூட்டும் அணிந்துதான் தினமும் வருவார். சற்று உயரம் குறைவாக இருந்தாலும் கதாநாயகன் போன்ற தோற்றம் உடையவர். அவர் நடந்தால் அது ராஜநடை.
ஆங்கிலப்பாடம் நடத்திய பாங்கு, சங்கீதம் போன்ற அவரது குரல் இரண்டுமே அன்று என்னைக் கவர்ந்தவை. அந்த வசீகரக்குரல் இன்றும் என் காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கிறது. அந்த நாட்களில் அவரது கண்டிப்பும், அதனால் ஏற்பட்ட மாணவர்கள் ஒழுக்கமும் பெரிதாகப் பேசப்பட்டன..
இப்பொழுது இருக்கும் கல்லூரி நூல்நிலையக்கட்டிடம் அவரது சிந்தனையில் மலர்ந்தக் கட்டிடம். 1
959-60 –இல் வடிவமைக்கப்பட்ட இந்துக்கல்லூரியின் சின்னம் அவரது முயற்சியினால் வந்தது. மாணவர்களிடையே இலச்சினை வரையும் போட்டி வைத்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்த அந்தச் சின்னம் கல்லூரி பொன்விழா ஆண்டில் இரு யானைகளுடன் புதுப் பொலிவு பெற்றது..
அன்று முதல்வராய் இருந்த திரு மேனன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்தச் சின்னத்தைப் பற்றி மிகவும் பொருத்தமாகப் பாட்டு எழுதியவர் Dr.D. வேலப்பன் .
திரு. மேனன் அவர்கள் 1962 முதல் 1969 வரை முதல்வராக இருந்தார். ஒரு கல்லூரி முதல்வர் எவ்வாறு கல்விச்சாலையை நிர்வகிக்க வேண்டும். எவ்வாறு ஆசிரியர்களை வழி நடத்திச்செல்ல வேண்டும் . எவ்வாறு மாணவர்களை ஒழுங்கு படுத்திடல் வேண்டும் என்று நடத்திக் காட்டியவர்.
அவரது Annual Report ஒவ்வொன்றிலும் ஒரு message இருக்கும். 1964- ஆண்டு மலரில் அவர் சொன்னது.
" A College is not a market selling knowledge with one eye or both eyes on the University examinations. It is an Alma matter, a kind and loving mother who trains her children to lead a life , " dominated by principles as distinguished from a life dominated by mere impulses from within and mere circumstances from without."
"We must thank our students for whom this college exists, in whom our hopes are centred and who by their obedience and hard work do their best to fulfill their hopes"
"சுயநலமற்ற பாரபட்சமற்ற உண்மையான வெளிப்படையான கண்டிப்புதான் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும். இதனையே பின்னர் மாணவர்களே பாராட்டுவார்கள்"
வரலாற்று ஆவணமாய் இருக்கும் கல்லூரி ஆண்டுமலர்கள் எனக்குக் கிடைத்ததால் தான் என்னால் இத்தனை தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடிந்தது. ஆண்டு மலர்களை பாதுகாப்பாக வைப்பது ஒரு நல்ல செயல்.
பல சுவையான செய்திகள் ஆண்டு மலர்கள் அனைத்தையும் படிக்கும்போது கிடைத்தது. 59 மலர்கள் பார்த்ததில் ஒன்றே ஒன்றில் ஒரு வித்தியாசம் இருப்பதைக் கண்டேன். அந்த ஒரு மலரில் இரண்டு தலைவர்கள், இரண்டு முதல்வர்கள் போட்டோ இருக்கக் கண்டேன்.
நீங்கள் தேடுங்கள்...... தேடலில் ஒரு அனுபவம் இருப்பதை நீங்களும் உணர்வீர்கள் என்று கூறி , இந்த அருமையான வாய்ப்பினை எனக்களித்த முதல்வர் ,வரலாற்றுத்துறைத்தலைவர் உட்பட நல் உள்ளம் கொண்ட அனவருக்கும் நன்றி கூறி , நடைபெறப் போகும் செமினார் நல்லதொரு வரலாறு படைக்க வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன்.
கவிமணியின் வரிகளோடு தொடங்கிய எனது உரையை அவர்தம் வரிகளோடு முடித்து விடை பெறுகிறேன்.
எத்தொழிற்கும் முன்னின்ற எமக்குத் துணைபுரியும்
அத்தி முகத்தண்ணல் அருளாலே- சித்தமகிழ்
இந்நாகை நன்னகரில் இந்துக் கலாசாலை வளர்
தெந்நாளும் வாழ்க இனிது.
நன்றி வணக்கம்.

Friday, July 27, 2012

தூத்துக்குடியில் நான் கண்ட எளிமையான ஆசிரமம்

அன்போடு அழைத்தால் அழைப்பை மதித்து போவது ஒரு நாகரீகமான செயல். எனக்கும் போவது பிடிக்கும். போகமுடியாத நிலை சில சமயங்களில் ஏற்பட்டு விடுகிறது . ஜூன் மாதம்  ஐந்தாம்  தேதி   7  ஆம்  தேதி  என இரண்டு நாட்கள். முதலாவது திருமண நிகழ்ச்சி. இரண்டாவது புதிதாய் பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா.

3-ஆம் தேதியே திருமண அழைப்பிதழ் தந்த பெனெடிக்ட் வீட்டுக்குப் போய் பரிசும் கொடுத்துவிட்டு 4-ஆம் தேதி நான் பெங்களூர் போனதில் சற்று மன ஆறுதல். 11-ஆம் தேதி ஊருக்கு வந்ததும் ஒருநாள் அடுத்து போகாத அந்த வீட்டுக்குப் போகணும் என முடிவெடுத்து நேற்றுதான் போக முடிந்தது.

26-07-12 காலையில் திருச்செந்தூர் முருகனையும் கும்பிட்டுவிட்டு நாங்கள் ஒரு மணியளவில் தூத்துக்குடி TAC நகருக்குப் போனோம். அங்கே அந்தவீட்டில் உள்ளவர்கள் எங்களை மிகவும் அன்பாக வரவேற்று உபசரித்தார்கள் . மதிய உணவை அங்கே முடித்துவிட்டு இரண்டரை மணியளவில் அங்கிருந்து புறப்பட்டோம். தூத்துக்குடிக்குப் போய் ஒருவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக டாக்டர் சிவ பிரதாப்சிங் அவர்கள் இருக்கும் இடம் நோக்கிப் பயணித்தோம்.

அந்த இடம் ஒரு ஆசிரமம். அனாதைகளும், ஆதரவற்ற பிள்ளைகளும், ஊனமுற்ற முதியோர் வாழும் ஒரு அன்பு இல்லம். விவேகானந்தர் சேவா இல்லம்.

பத்து நிமிடங்களில் அவரை சந்தித்தோம்.

முதல் முதலாக அப்பொழுதுதான் நான் அவரை பார்க்கிறேன்.

இவரா ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்.  ஒல்லியான பச்சை வேட்டி கட்டி மிக எளிமையான தோற்றத்துடன் காணப்பட்ட அவரை அதிசய
மனிதராகவே பார்த்து அவர் பின்னால் போனோம்.

ஒரு பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள வீட்டுக்கு அழைத்துப் போனார். வெளியே ஒரு பெயர்ப்பலகை.அதில் அவர் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
நாங்கள் அவருடன் மாடிக்குப் போய் அவருடைய 94 வயதான தாயைப் பார்த்தோம். அவளுடைய காதுகள் நம்மோடு ஒத்துழைக்கவில்லை. நாம் சிரமப்பட்டு குரலை உயர்த்திப் பேச வேண்டும். கண்கள் அவளுக்கு விவேகானந்தரையும் ராமகிருஷ்ணரையும் சாரதாதேவியையும் படிக்க துணை செய்கின்றன.

நான் பிரதாப்சிங்குடன் பேச ஆரம்பித்தேன்.

இந்தவீட்டை அவர் விலைக்கு  வாங்கி வசதியைக் கூட்ட மாடி கட்டினார்.இப்போ இந்த வீட்டில் எட்டு பேர் இருக்கிறர்கள். இருவர் பெண்கள் கல்லூரியில் படிக்கிறார்கள். பள்ளிக்கூடத்திலும் படிக்கிறார்கள். பலர் இங்கு இருந்து வேலை செய்ய வெளியே போய்விட்டார்கள். இது போல் நான்கு வயதில் அனாதையாக வந்த ஒரு பெண் கல்வியல் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறாள். அவள் இந்த ஆஸ்ரமத்தையும் கவனித்துக் கொண்டு இங்கேயே இருக்கிறாள்.

இவர் வ.உ.சி கல்லூரியில் பணிபுரிந்தவர். என்.சி.சி Navy-யில் ஆபீசராக இருந்தவர். தனது 45 வயதில் கடற்கரையோரம் ஒரு வீடெடுத்து அனாதைப் பிள்ளகளை அங்கே தங்க வைத்து வளர்த்து வந்தார்.
 அந்த நகரில் ஒண்ணே கால் ஏக்கரில் ஊனமுற்றவர்களை பாதுகாக்க வீடுகள் கட்டி வைத்திருக்கிறார். அங்கேயும் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , கைகால் ஊனமுடைய சிலர் இருக்கின்றனர். ருபாய் யாரிடமும் இவர் ஆசிரமத்திற்கென கேட்டதில்லை. தெரிந்தவர்கள் சிலர் உதவி செய்வதுமுண்டு.

பிரதாப்சிங்கின் ஊர் நாகர்கோவில். 94 வயதான தாய் ஒரு ஓய்வு பெற்ற அன்பான ஆசிரியை.அவளது பிள்ளைகளுக்கு  உணவை மட்டும் ஊட்டவில்லை. ஆன்மீகத்தை ,நாட்டுப்பற்றை ஊட்டி வளர்த்தாள். பிரதாப்சிங்க் தான் படித்த ஆன்மீகத்தில் இருந்து கற்றதை கொஞ்சமாவது செயல் படுத்தணும் என்ற எண்ணத்தில் இதனை நடத்திக்கொண்டு வருகிறார்.

அவரது தாயார்,” எனக்கு இங்கே தூக்கமே வர மாட்டேங்கு. ” என்றாள்.

”இந்த வயதில் நீங்க எதுக்கு நாகர்கோவிலில் இருந்து இங்க வந்தீங்க.” என் மனைவி கேட்டாள்.

“என்னை இவன் கவனிக்கவில்லை... சரியாய்ப் பார்க்கவில்லை என்று ஊரில் யாரும் சொல்லிவிடக்கூடாதுல்லா....அதுக்காக நான் இங்க வந்திருக்கேன்....” என்றாள்.

பிரதாப் சிங்குக்கு முதியோர் அனைவருமே தாய் அல்லது தந்தை தானே.

இப்பொழுது பிரதாப்சிங்க் மிக மிக அழகாய்த் தோன்றினார். அவரது அக அழகு மிகவும் பிரகாசமாய் என் மனதுக்கு தெரிந்தது.

இவரால் இந்துக் கல்லூரியும் பெருமை பெறுகிறது. ஆம்.... இவர் அங்கே படித்தவர்...... M.A பயின்றவர்..... அவர் செயல்கள் அனைத்துமே பிரமிப்பை தந்து கொண்டிருந்தன.....

Thursday, July 26, 2012

இணைந்த இரு உயிர்கள் காற்றோடு கலந்தது ஒரே நாளில்.

அவர் ஒரு கொத்தனார். வேலைக்குப் போகும்போது வெள்ளைக் கதராடை உடுப்பைப் போட்டுக்கொண்டு கதராடை உடுத்து நடந்தும் பஸ்ஸிலும் வேலை நடக்கும் இடத்துக்குச் செல்வார். அவர் பெயர் நிருபதி.
எனது வீட்டை அவர் தான் கட்டினார். நான் ஏன் அவரிடம் அந்தப் பணிதனைக் கொடுத்தேன்? கடுக்கரையில் எனது அப்பா  1950 களில்வீடு கட்டும்போது நாகர்கோவிலில் இருந்து ராமகிருஷ்ணன் என்ற ஒருவர் வந்து கட்டினார்.
அவருடன் கையாளாக வந்தவர் தான் ராமகிருஷ்ணனின் தங்கை மகன் நிருபதி.

நான் வேலை பார்த்த கல்லூரி அருகில் உள்ள தட்டான் விளைதான் நிருபதியின் வீடு இருக்கும் இடம்.

முச்சந்தியில் உள்ள கடையில் அவர் அடிக்கடி நிற்பதை நான் பார்ப்பதுண்டு. அவர் என்னைக் கண்டால்,” பொன்னப்பா...... வீடு கட்டாண்டாமா? ”அன்பாகக் கேட்பார்.

என்ன சொல்வது..... அந்த நினைப்பே இல்லாதிருந்த காலமது.

வீடு கட்டணும் என்ற நினைப்பு என் நெஞ்சில் ஒருநாள் மலர்ந்தது. கூடவே வெத்தலைப் போட்டு வெள்ளை நிறமாறிய காவிப்பல்லும் அவருடைய நிரந்தர புன்முறுவலும் என் மனக்கண்ணில் மின்னல் போன்று தெரிந்து மறைந்தன.

வீடு கட்ட ஆரம்பித்தோம். எனக்கு எந்த அறிவும் இல்லை. கல் வேண்டும். மணல் வேண்டும். யாரிடம் கேட்பது. கம்பி வாங்க வேண்டும். எதுவும் எனக்குத் தெரியாது. செங்கல் மாத்திரம் நான் விரும்பிய சேம்பர் செங்கலை வாங்கினேன்.
வறுமையிலும் ஒருவன் நேர்மையாய் இருப்பதை நான் கண்டதில்லை.மிகவும் நேர்மையானவர் நிருபதி.கல் மணல் தருபவன் கொத்தனாருக்கு பணம் கொடுக்கும் காலமது. அவருக்கு கிடைக்கும் கமிசனை என்னிடமே கொண்டு தருவார். நான் அதை வாங்குவதில்லை.

ஒரு நாள்  அவர் வீட்டுக்கு நானும் என் மகனும் போனோம்..... முதல் முதலாக அந்த வீட்டுக்கு அன்று தான் நான் போகிறேன்.

அவர் உள்ளே இருந்து வந்தார். எங்களை அமரச்சொன்னார்.
நாங்கள் போன அந்த நாள் ஒரு விசேசமான நாள். பாயசம் தந்தார். அருந்தினோம்.
பாயசத்தைக் கொண்டுவந்தவள் ஒரு பெண். வயதான பெண். குனிந்தே நடந்து வந்தாள். அவள் முதுகுப்புறம் சற்றுப் பருத்து ஆமை வடிவம் போன்று இருந்தது. பார்ப்பதற்கு சுமாராக இருந்தாள். அவளால் நிமிர்ந்து நடக்கவே முடியாது எனபது கொஞ்ச நேரம் போனபின் தான் தெரிந்தது.

சற்று நேரம் இருந்து விட்டு , வெளியேறினோம்.
என் மனம் கனமாய் இருந்தது. அந்தப் பெண் யாராக இருக்கும்?

அடுத்த நாள் வேலை செய்ய வந்த அவரிடம் தனியாக பேசும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து அவரிடமே கேட்டேன் அந்த பெண் யாரென்று ?.
”என் மனைவி” அவர் சொன்னார்.

நான் சிலை போல் பேசாமல் நின்றேன்.

அவரே பேச ஆரம்பித்தார். “ அவள் என் தாய் மாமா ராம்கிருஷ்ணனின் மகள். அவளுக்கு மாப்பிள்ளையே கிடைக்கவில்லை. எனக்கு அவர் மாமா மட்டும் அல்ல. எனது குரு. என்னை ஆளாக்கினதே அவர் தான். நானே என் மாமன் மகளைக் கட்டலேண்ணா யாரு அவளைக் கட்டுவா..... அவளுக்கு பாதுகாக்க யாரு இருக்கா... ஒருத்தரும் இல்ல. என் அம்மையும் என்ன மாதிரியே நினைச்சா. அதனால நானே கட்டிகிட்டேன்.”

எவ்வளவு பெரிய தியாகம் குடும்பத்துக்காக..... அவர் மீதுள்ள மதிப்பு மிக அதிகமானது.

அவளது குணம் மிக நல்ல குணம்.

வயோதிகம் அவரை வாட்டும் நேரம் நெருங்கியது.... கொடுமையான நோயும் அவரை துன்புறுத்தியது....அதுதான் அவருக்கு வந்த முதல் நோய். தனக்கிருந்த நோய் பற்றி அவரது மனைவியிடம் சொல்லவில்லை... நோய் பற்றி கவலைப் பட்டதை விட தன் அருமை மனைவியை இனி யார் கவனிப்பார்கள் என்ற பரிதவிப்பு அவர் மனதை ரொம்பவே பாதித்தது.....
காலன் விரட்ட ஆரம்பித்தான். ஒடிப் பார்த்தார்...... வெல்ல முடியுமா காலனை..... நாடித்துடிப்பு சீராக இல்லையென்று சொல்லி பக்கத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போனார்கள். அப்பந்தான் தெரிகிறது அவளுக்கு.. தன் மணாளன் நோயினால் கஷ்டப்பட்டது கண்டு கண் கலங்கினாள்.
ஓரிரு நாள் கழிகிறது. நிருபதிக்கு குளுக்கோஸ் போட்டு சிகிச்சை நடக்கிறது என்று அவளிடம் ஒருவர் சொன்னார்....

“ அய்யோ.... ஒரு ஊசிவரை இது வரை அவர் போட்டதே கிடையாதே.... எப்படி அவரால் இதைத் தாங்க முடியும்” என்று கத்தினாள்...... கீழே சுருண்டு விழுந்தாள்...... விழுந்தவள் எழுந்திருக்கவே இல்லை.

மனைவி இறந்ததை எப்படி நிருபதியிடம் சொல்வது?

ஆஸ்பத்திரியில் இருந்து ஒருவர் வேகமாக வீட்டிற்குள் வருகிறார். அவர் சொன்னார்,”

நிருபதிப் பாட்டா போயிட்டாரு.....

காலன் நிருபதியை கொண்டுபோனால் பதி இல்லா மனைவியை பார்க்க ஆளில்லை என்று அவளையும் கொண்டு போனானோ .....

Tuesday, July 24, 2012

தெருவே வீடென வாழ்பவர்களுக்கு ஒரு நாள் உணவளிக்கும் “அவர்”

அந்த நேரம் அதிகாலை நேரம். நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன்.
எங்கும் எந்த இடத்துக்கும் போவதற்காக அல்ல. நடக்க வேண்டுமே என்பதற்காக நடந்து கொண்டிருந்தேன்.

என் எதிரே வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தோளில் பச்சை நிற சோல்னா பையுடன் வேகமாக சாலையில் சற்று தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். இடைவெளிக் குறையக் குறைய அவரது முகம் அவரை யாரென்று அடையாளம் காட்டிற்று. அவர்........ ம்...ம்.. அவர் பெயர்..... யாராக இருந்தாலென்ன...... அவரது பெயரா முக்கியம்...?

என்னருகே வந்த அவரிடம் , “ என்ன --, ஸ்பீடா நடந்து வாறீங்க......” கேட்டேன்.

அவர் மிகவும் நிதானமாக “எனக்காக அங்கே ஒருவர் காத்து நிற்கிறார்......பின்னால் சந்தித்தால்  நாம் பேசலாம்....” என்று தெளிவாகவே சொல்லிவிட்டு வேகமாய்ப் போய் அவருக்காக காத்திருந்த எனக்குத் தெரியாத அவருடைய ஸ்கூட்டரின் பின்பக்கம் ஏறிப் போய்விட்டார்.

அன்று அவருடைய செயல் எனக்கு வித்தியாசமாகவே பட்டது.
 
 அந்த நிகழ்வு என் நினைவினை விட்டுப் போன பின் இருவருமே சந்தித்தோம். அவரும் அதனைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

அதன்பிறகு  ஒருநாள் ...... காலை நேரம்..... அவரை அதே சோல்னா பையுடன் சந்தித்தேன்.....அவர் நின்று கொண்டிருந்தார்.... ஆம் அவர் ஒருவரின் வருகையை எதிர் பார்த்துக் கொண்டு நிற்கிறார்.

நான், “ என்ன--, இங்கே நிக்கிறீங்க ..... யாராவது வரணுமா.?...”

அவர்,  “ஆமாம்.... இப்போ ஒருவர் வருவார்..... அவரும் நானும் போய் சாலையோரத்தில் கோவில் பக்கத்தில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு இந்த பொதியலை கொடுத்துவிட்டு வருவோம். மாதத்தில் ஒரு நாள் இது போல செய்து வருகிறோம்....”

எனக்கு அவர் சொன்னது சற்று வித்தியாசமான அதிர்ச்சியைத் தந்தது.
பிச்சைக்காரர்கள் தெருத்தெருவாய் பிச்சை எடுப்பார்கள். அவர்களைத் தேடித்தெருத்தெருவாய் அலைந்து கண்டுபிடித்து பொதியலைக் கொடுக்கிறார்களே. அதிசயமாக இருக்கிறதே...!

நான் அவரிடம்,“நீங்கள் இருவரும் தான் செலவு செய்வீர்களா....இந்த உணவுப் பொட்டலத்தை வாங்கும் செலவுக்கு நானும் பணம் தந்தால் நீங்கள் வாங்கிக்கொள்வீர்களா.......”

அவர்,” உங்கள் பிறந்ததினம் அல்லது பிள்ளைகள் பிறந்ததினம் அல்லது பேரன் பேத்திகள் பிறந்ததினம் வரும் நாளில் உணவு கொடுக்க நீங்கள் ருபாய் தந்தால் வாங்கிக்கொள்வோம்” என்றார்.

நானும் என்மகள் பிறந்தநாளன்று அவரிடம் அவர் கேட்ட ருபாயைக் கொடுத்தேன். அது முறையாக பயன்படுத்தப்பட்டது.

காலச் சக்கரம் உருண்டோடியது. ஒரு நாள் என் நண்பர் ஒருவருடன்   அவரும் அவருடன் சில நல்ல மனம் கொண்ட இருவரும் எனது வீட்டுக்கு வந்தனர்.

அவர் கையில் சோல்னா பை இருந்தது. ஆனால் அந்தப் பையில் ஒன்றும் இல்லாமல் காலியாகவே இருந்தது.அந்தப் பையை பார்த்ததும் என் நினவுகள் என்னை பின்னோக்கி இழுத்துச் சென்றது.

நான்,“  இது அதே சோல்னா பைதானா!...... உணவுப் பொட்டலத்தை கொடுத்தாச்சா?.......”

 “இல்ல இது அந்தப் பை இல்ல...... பொதியலைக் கொடுத்தாச்சு.......” என்றார்.

அவரது பேச்சில் இருந்த கிண்டல் எனக்குப் பிடித்திருந்தது.

நான், “ நான் பை எனச்சொன்னது அந்த அர்த்தத்தில் அல்ல.  அது ஒரு அடையாளமாக என் மனதுக்குப்பட்டது. இத்தனை ஆண்டுக்குப் பின்னும் யாரோ ஒருவர் என்றோ செய்த ஒரு நற்செயல் இன்று என்னை அச்செயல் பற்றி பேசவைக்க அந்தப் பை எனும் சொல் தேவைப்பட்டது.”என்றேன்.

பை மாறும். பையின் நிறம் மாறும் .உணவும் மாறும். வாங்கும் இடம் மாறும். பெறுபவர்கள் மாறுவர்.நடை மாறி காரில் பயணம் என்று எல்லாமே மாறும். அவருடன் வரும் ஆட்கள் கூட மாறுவர்.

மாறாதது ஒன்றே ஒன்றுதான். அந்த ஒன்று பிச்சைக்காரர்களுக்கு கொடுக்கும் நற்செயலே......  அந்தச்செயலை செய்து கொண்டிருக்கும் அவர்  தோற்றத்தில் மாறினாலும், நற்செயல் செய்வதில் இருந்து மாறவே இல்லை.

ஒவ்வொரு ஆங்கில மாதம் 23-ஆம் நாளில் அவரது சோல்னா பை உணவுப் பொட்டலங்களை சுமக்கத் தவறுவதே இல்லை.

பிச்சைக்காரர்களை தேடிப் போவதும் இறையைத் தேடிப்போவதும் ஒன்று தானோ...... திருவண்ணாமலை விசிறி சாமியார் தன்னை பிச்சைக்காரனென்றுதானே கூறுவார்.

அதெல்லாம் இருக்கட்டும்... நற்செயல் செய்தவரின் பெயர் ?

பெயர் முக்கியமா....? செயல் முக்கியமா?

செயல் முக்கியம் என்றே மனதில் கொள்க..... பெயர் வேண்டுவோர் பெயர் ஒன்று வைத்திடுக.

அழகாய் இருப்பதால் அழகு என்க. அழகு என்றால் முருகு தானே முருகென்க..... முருகன் என்றால் வேலன் தானே..... வேலனை பாலசுப்பிரமணி என்றும் அழைக்கலாமா....... அழைக்கலாமே......பாலன் என்றும் கூப்பிடலாமோ......

எந்தப் பெயரிட்டு ரோஜாவைக் குறிப்பிட்டாலும் ரோஜா என்றுமே மணக்கும். ”அவர்”... அவராகவே இருக்கட்டும்.... அதுதான் அவருக்கு அழகு.

Wednesday, July 11, 2012

எது நல்ல குங்குமம்......தாலியை கயிற்றில் தான் போடணும்

ரயிலில் பயணம் செய்யும்போது பல அனுபவங்கள் பாடமாய் அமைவதுண்டு .
 தாம்பரம் ரயில் வந்தடைந்ததும் ,நாங்கள்   இருந்த இருக்கையின் பக்கத்தில் ஒரு தம்பதியினர்  வந்து அமர்ந்தனர். அவர் வரும்போதே ஒரு பாடலை மெல்லிய குரலில் பாடிகொண்டே வந்தார்.
அவர்கள் இருவரும்  பேசிக் கொண்டிருந்தனர். "ஒரு TV நிகழ்ச்சியைப் பற்றி பேசும்போது ,நான் பின்னால் இருந்ததால் குரல் எனக்கு
  சரியாக கேட்கவில்லை...." அவள் அவரிடம்  சொன்னாள் .

எவ்வளவு நேரம் பேசாமல் இருப்பது ?நாமே பேசுவோம் .....

நானே அவரிடம் பேச ஆரம்பித்தேன்.

 'நீங்கள்  நாகர்கோவிலுக்குத்தானே போகிறீர்கள்'  என  நான் கேட்க   அவர் ,ஆமாம்  என்றார் .

என்னை எங்காவது பாத்திருக்கிறீர்களா என்று என்னைக் கேட்க ,நான் அவரிடம்,' இல்ல......நீங்க  போன் பேசும்போது ,"பிள்ளையார் கோவில் பக்கம் காலைல வந்துரு" என  சொன்னீங்க ......

அதனால  நாகர்கோவில் தான்  என நினைத்துக் கொண்டேன் ......

உங்க பெயர் சந்திரனா ?     .......எப்படிச்சொன்னேன் ....

அவருக்கு ஆச்சரியம் ...

அதனையும் நீங்க போனில் பேசும்போது தான்  கேட்டேன் என்று சொன்னேன்

அவர்  கம்பளத்தில் பத்தி,குங்கும கடை ......பிச்சி ஸ்டோர்ஸ் ...... வைத்திருக்கிறேன்.நாங்க இப்பம் ஒரு நிகழ்ச்சிக்கு போயிற்று வாறோம் .... கோபுரம் மார்க்கு குங்குமம்  கம்பெனி நடத்தும் நிகழ்ச்சி .... கூடுதலாக விற்ற தால் எங்களை அழைத்து கௌரவித்தார்கள் ...52 பேர் கலந்து கொண்டோம் ...அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி நடந்தது.
,தங்க லாட்ஜ் ,சாப்பாடு,போய் வர AC ticket எல்லாம் கம்பனி செலவுதான்.

"எங்களுக்கு  வெள்ளியில் விளக்கு பரிசாக தந்தார்கள்....

 என்மகள் திருமணத்துக்கு கொடுத்த வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாமே பரிசாக கிடைத்தது தான்."

"நான் ,என்ன உங்க மகளுக்கு கல்யாணம் ஆயிற்றா ...... நீங்க பாக்கதுக்கு சின்னப் பையன் மாதிரியல்லா இருக்கியோ !"

"அப்படியா ..... நான் சின்ன பையன் மாதிரியா இருக்கேன். எங்க அண்ணன் மகளுக்கு கல்யாணம் நடந்தபோது ,எல்லோரும் என்னைப் பாத்து
உங்க தம்பியின் மகளுக்கா கல்யாணம்  என்று கேட்டார்கள்.என் தலை முடி வெள்ளையா இருக்கில்லா .... "

"இல்ல..... சின்னப் பையன் போலதான் நீங்க இருக்கியோ ......  உங்களை பார்த்தும் நீங்க இருவரும் பாடகர்கள் என நினைத்துக் கொண்டேன். " இது நான்.

அவர் ," எனக்கு ஒரு பையன் இருக்கான். B.tech படிச்சுட்டு இருக்கான்.....
நாங்க இருவரும் காலைல கடைக்கு வருவோம். நான் மாவட்டம் முழுவதும் வேனில் பத்தி ,குங்குமம் கொடுத்து  விட்டு வருவேன்.கடையில் வேலைக்கு ஆள் ஒன்றும் கிடையாது"
.
நான் சற்று வெளியே போன போது ,அவர் என்னருகே வந்து  ,"நீங்க சொன்னது சரிதான்.ஆனால் என் மனைவி பாடகி இல்லை. கல்யாணத்துக்கு முன் கதா காலட்சேபத்துக்கு போவது உண்டு. திருவாடுதுறை ஆதினத்தில் அவள் ஒரு புலவர்."

பேச்சு மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.

நாங்கள் வெள்ளாளர்கள். நீங்க யாரு ? அவர் கேட்டார்.

நான், " நாங்களும் உங்க ஆள்தான்...... உங்க மனைவி தாலியை மஞ்சள் கயிற்றில் போட்டிருக் கிறாங்களே ...திருநெல்வேலியா?" கேட்டேன்.

இல்லையில்லை இந்த ஊர்தான். கொட்டாரம் தான் எங்க ஊர் ..
நான் என்னைப் பற்றி  சொன்னதும் அவர் கடுக்கரையில் இருந்த ஒருவரைப் பற்றி பெருமையாகக் கூ றி  தெரியுமா ?என்று கேட்டார்.

என்மனைவி ," குங்குமத்தை நெற்றியில் வைத்தால் , நெற்றியில் கருப்பு தழும்பு ஏற்படுகே..... நல்ல குங்குமம் எது.."கேட்டாள் .

கோபுரம் மார்க்கு குங்குமம் தான் நல்லகுங்குமம் என்றாள் .

"தாலியை கயிற்றில் தான் போடவேண்டும். திருமணமான புதிதில் நான் சின்னப் பெண்ணாக இருந்தேன் . தங்க செயினில்தான் தாலி போட்டிருந்தேன் .ஆனாலும் என்னை கல்யாணம் ஆயிற்றா என்றுதான் என்னைக் கேட்டார்கள்."
"அதன்பிறகுதான் நான் மஞ்சள் கயிற்றில் தாலி கட்ட ஆரம்பித்தேன்.இந்து மதம்
 எதை சொல்கிறதோ அதையே நான் செய்கிறேன்.

நான்  வருடத்துக்கு  ஒரு முறை கயிறை மாற்றுவேன்."என்றாள் . நெற்றி வகிடில் குங்குமத்தை வைப்பதுவும் எனது பழக்கம் என்றும் சொன்னாள் .

காலையில் ரயில் நாகர்கோவில் வந்தது.....ரயில் நண்பர்கள் பிரியா விடைபெறும்
நேரமும் வந்தது . வணக்கம் சொல்லி விட்டு வந்தோம்....