Tuesday, July 24, 2012

தெருவே வீடென வாழ்பவர்களுக்கு ஒரு நாள் உணவளிக்கும் “அவர்”

அந்த நேரம் அதிகாலை நேரம். நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன்.
எங்கும் எந்த இடத்துக்கும் போவதற்காக அல்ல. நடக்க வேண்டுமே என்பதற்காக நடந்து கொண்டிருந்தேன்.

என் எதிரே வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தோளில் பச்சை நிற சோல்னா பையுடன் வேகமாக சாலையில் சற்று தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். இடைவெளிக் குறையக் குறைய அவரது முகம் அவரை யாரென்று அடையாளம் காட்டிற்று. அவர்........ ம்...ம்.. அவர் பெயர்..... யாராக இருந்தாலென்ன...... அவரது பெயரா முக்கியம்...?

என்னருகே வந்த அவரிடம் , “ என்ன --, ஸ்பீடா நடந்து வாறீங்க......” கேட்டேன்.

அவர் மிகவும் நிதானமாக “எனக்காக அங்கே ஒருவர் காத்து நிற்கிறார்......பின்னால் சந்தித்தால்  நாம் பேசலாம்....” என்று தெளிவாகவே சொல்லிவிட்டு வேகமாய்ப் போய் அவருக்காக காத்திருந்த எனக்குத் தெரியாத அவருடைய ஸ்கூட்டரின் பின்பக்கம் ஏறிப் போய்விட்டார்.

அன்று அவருடைய செயல் எனக்கு வித்தியாசமாகவே பட்டது.
 
 அந்த நிகழ்வு என் நினைவினை விட்டுப் போன பின் இருவருமே சந்தித்தோம். அவரும் அதனைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

அதன்பிறகு  ஒருநாள் ...... காலை நேரம்..... அவரை அதே சோல்னா பையுடன் சந்தித்தேன்.....அவர் நின்று கொண்டிருந்தார்.... ஆம் அவர் ஒருவரின் வருகையை எதிர் பார்த்துக் கொண்டு நிற்கிறார்.

நான், “ என்ன--, இங்கே நிக்கிறீங்க ..... யாராவது வரணுமா.?...”

அவர்,  “ஆமாம்.... இப்போ ஒருவர் வருவார்..... அவரும் நானும் போய் சாலையோரத்தில் கோவில் பக்கத்தில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு இந்த பொதியலை கொடுத்துவிட்டு வருவோம். மாதத்தில் ஒரு நாள் இது போல செய்து வருகிறோம்....”

எனக்கு அவர் சொன்னது சற்று வித்தியாசமான அதிர்ச்சியைத் தந்தது.
பிச்சைக்காரர்கள் தெருத்தெருவாய் பிச்சை எடுப்பார்கள். அவர்களைத் தேடித்தெருத்தெருவாய் அலைந்து கண்டுபிடித்து பொதியலைக் கொடுக்கிறார்களே. அதிசயமாக இருக்கிறதே...!

நான் அவரிடம்,“நீங்கள் இருவரும் தான் செலவு செய்வீர்களா....இந்த உணவுப் பொட்டலத்தை வாங்கும் செலவுக்கு நானும் பணம் தந்தால் நீங்கள் வாங்கிக்கொள்வீர்களா.......”

அவர்,” உங்கள் பிறந்ததினம் அல்லது பிள்ளைகள் பிறந்ததினம் அல்லது பேரன் பேத்திகள் பிறந்ததினம் வரும் நாளில் உணவு கொடுக்க நீங்கள் ருபாய் தந்தால் வாங்கிக்கொள்வோம்” என்றார்.

நானும் என்மகள் பிறந்தநாளன்று அவரிடம் அவர் கேட்ட ருபாயைக் கொடுத்தேன். அது முறையாக பயன்படுத்தப்பட்டது.

காலச் சக்கரம் உருண்டோடியது. ஒரு நாள் என் நண்பர் ஒருவருடன்   அவரும் அவருடன் சில நல்ல மனம் கொண்ட இருவரும் எனது வீட்டுக்கு வந்தனர்.

அவர் கையில் சோல்னா பை இருந்தது. ஆனால் அந்தப் பையில் ஒன்றும் இல்லாமல் காலியாகவே இருந்தது.அந்தப் பையை பார்த்ததும் என் நினவுகள் என்னை பின்னோக்கி இழுத்துச் சென்றது.

நான்,“  இது அதே சோல்னா பைதானா!...... உணவுப் பொட்டலத்தை கொடுத்தாச்சா?.......”

 “இல்ல இது அந்தப் பை இல்ல...... பொதியலைக் கொடுத்தாச்சு.......” என்றார்.

அவரது பேச்சில் இருந்த கிண்டல் எனக்குப் பிடித்திருந்தது.

நான், “ நான் பை எனச்சொன்னது அந்த அர்த்தத்தில் அல்ல.  அது ஒரு அடையாளமாக என் மனதுக்குப்பட்டது. இத்தனை ஆண்டுக்குப் பின்னும் யாரோ ஒருவர் என்றோ செய்த ஒரு நற்செயல் இன்று என்னை அச்செயல் பற்றி பேசவைக்க அந்தப் பை எனும் சொல் தேவைப்பட்டது.”என்றேன்.

பை மாறும். பையின் நிறம் மாறும் .உணவும் மாறும். வாங்கும் இடம் மாறும். பெறுபவர்கள் மாறுவர்.நடை மாறி காரில் பயணம் என்று எல்லாமே மாறும். அவருடன் வரும் ஆட்கள் கூட மாறுவர்.

மாறாதது ஒன்றே ஒன்றுதான். அந்த ஒன்று பிச்சைக்காரர்களுக்கு கொடுக்கும் நற்செயலே......  அந்தச்செயலை செய்து கொண்டிருக்கும் அவர்  தோற்றத்தில் மாறினாலும், நற்செயல் செய்வதில் இருந்து மாறவே இல்லை.

ஒவ்வொரு ஆங்கில மாதம் 23-ஆம் நாளில் அவரது சோல்னா பை உணவுப் பொட்டலங்களை சுமக்கத் தவறுவதே இல்லை.

பிச்சைக்காரர்களை தேடிப் போவதும் இறையைத் தேடிப்போவதும் ஒன்று தானோ...... திருவண்ணாமலை விசிறி சாமியார் தன்னை பிச்சைக்காரனென்றுதானே கூறுவார்.

அதெல்லாம் இருக்கட்டும்... நற்செயல் செய்தவரின் பெயர் ?

பெயர் முக்கியமா....? செயல் முக்கியமா?

செயல் முக்கியம் என்றே மனதில் கொள்க..... பெயர் வேண்டுவோர் பெயர் ஒன்று வைத்திடுக.

அழகாய் இருப்பதால் அழகு என்க. அழகு என்றால் முருகு தானே முருகென்க..... முருகன் என்றால் வேலன் தானே..... வேலனை பாலசுப்பிரமணி என்றும் அழைக்கலாமா....... அழைக்கலாமே......பாலன் என்றும் கூப்பிடலாமோ......

எந்தப் பெயரிட்டு ரோஜாவைக் குறிப்பிட்டாலும் ரோஜா என்றுமே மணக்கும். ”அவர்”... அவராகவே இருக்கட்டும்.... அதுதான் அவருக்கு அழகு.

No comments:

Post a Comment