Thursday, July 26, 2012

இணைந்த இரு உயிர்கள் காற்றோடு கலந்தது ஒரே நாளில்.

அவர் ஒரு கொத்தனார். வேலைக்குப் போகும்போது வெள்ளைக் கதராடை உடுப்பைப் போட்டுக்கொண்டு கதராடை உடுத்து நடந்தும் பஸ்ஸிலும் வேலை நடக்கும் இடத்துக்குச் செல்வார். அவர் பெயர் நிருபதி.
எனது வீட்டை அவர் தான் கட்டினார். நான் ஏன் அவரிடம் அந்தப் பணிதனைக் கொடுத்தேன்? கடுக்கரையில் எனது அப்பா  1950 களில்வீடு கட்டும்போது நாகர்கோவிலில் இருந்து ராமகிருஷ்ணன் என்ற ஒருவர் வந்து கட்டினார்.
அவருடன் கையாளாக வந்தவர் தான் ராமகிருஷ்ணனின் தங்கை மகன் நிருபதி.

நான் வேலை பார்த்த கல்லூரி அருகில் உள்ள தட்டான் விளைதான் நிருபதியின் வீடு இருக்கும் இடம்.

முச்சந்தியில் உள்ள கடையில் அவர் அடிக்கடி நிற்பதை நான் பார்ப்பதுண்டு. அவர் என்னைக் கண்டால்,” பொன்னப்பா...... வீடு கட்டாண்டாமா? ”அன்பாகக் கேட்பார்.

என்ன சொல்வது..... அந்த நினைப்பே இல்லாதிருந்த காலமது.

வீடு கட்டணும் என்ற நினைப்பு என் நெஞ்சில் ஒருநாள் மலர்ந்தது. கூடவே வெத்தலைப் போட்டு வெள்ளை நிறமாறிய காவிப்பல்லும் அவருடைய நிரந்தர புன்முறுவலும் என் மனக்கண்ணில் மின்னல் போன்று தெரிந்து மறைந்தன.

வீடு கட்ட ஆரம்பித்தோம். எனக்கு எந்த அறிவும் இல்லை. கல் வேண்டும். மணல் வேண்டும். யாரிடம் கேட்பது. கம்பி வாங்க வேண்டும். எதுவும் எனக்குத் தெரியாது. செங்கல் மாத்திரம் நான் விரும்பிய சேம்பர் செங்கலை வாங்கினேன்.
வறுமையிலும் ஒருவன் நேர்மையாய் இருப்பதை நான் கண்டதில்லை.மிகவும் நேர்மையானவர் நிருபதி.கல் மணல் தருபவன் கொத்தனாருக்கு பணம் கொடுக்கும் காலமது. அவருக்கு கிடைக்கும் கமிசனை என்னிடமே கொண்டு தருவார். நான் அதை வாங்குவதில்லை.

ஒரு நாள்  அவர் வீட்டுக்கு நானும் என் மகனும் போனோம்..... முதல் முதலாக அந்த வீட்டுக்கு அன்று தான் நான் போகிறேன்.

அவர் உள்ளே இருந்து வந்தார். எங்களை அமரச்சொன்னார்.
நாங்கள் போன அந்த நாள் ஒரு விசேசமான நாள். பாயசம் தந்தார். அருந்தினோம்.
பாயசத்தைக் கொண்டுவந்தவள் ஒரு பெண். வயதான பெண். குனிந்தே நடந்து வந்தாள். அவள் முதுகுப்புறம் சற்றுப் பருத்து ஆமை வடிவம் போன்று இருந்தது. பார்ப்பதற்கு சுமாராக இருந்தாள். அவளால் நிமிர்ந்து நடக்கவே முடியாது எனபது கொஞ்ச நேரம் போனபின் தான் தெரிந்தது.

சற்று நேரம் இருந்து விட்டு , வெளியேறினோம்.
என் மனம் கனமாய் இருந்தது. அந்தப் பெண் யாராக இருக்கும்?

அடுத்த நாள் வேலை செய்ய வந்த அவரிடம் தனியாக பேசும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து அவரிடமே கேட்டேன் அந்த பெண் யாரென்று ?.
”என் மனைவி” அவர் சொன்னார்.

நான் சிலை போல் பேசாமல் நின்றேன்.

அவரே பேச ஆரம்பித்தார். “ அவள் என் தாய் மாமா ராம்கிருஷ்ணனின் மகள். அவளுக்கு மாப்பிள்ளையே கிடைக்கவில்லை. எனக்கு அவர் மாமா மட்டும் அல்ல. எனது குரு. என்னை ஆளாக்கினதே அவர் தான். நானே என் மாமன் மகளைக் கட்டலேண்ணா யாரு அவளைக் கட்டுவா..... அவளுக்கு பாதுகாக்க யாரு இருக்கா... ஒருத்தரும் இல்ல. என் அம்மையும் என்ன மாதிரியே நினைச்சா. அதனால நானே கட்டிகிட்டேன்.”

எவ்வளவு பெரிய தியாகம் குடும்பத்துக்காக..... அவர் மீதுள்ள மதிப்பு மிக அதிகமானது.

அவளது குணம் மிக நல்ல குணம்.

வயோதிகம் அவரை வாட்டும் நேரம் நெருங்கியது.... கொடுமையான நோயும் அவரை துன்புறுத்தியது....அதுதான் அவருக்கு வந்த முதல் நோய். தனக்கிருந்த நோய் பற்றி அவரது மனைவியிடம் சொல்லவில்லை... நோய் பற்றி கவலைப் பட்டதை விட தன் அருமை மனைவியை இனி யார் கவனிப்பார்கள் என்ற பரிதவிப்பு அவர் மனதை ரொம்பவே பாதித்தது.....
காலன் விரட்ட ஆரம்பித்தான். ஒடிப் பார்த்தார்...... வெல்ல முடியுமா காலனை..... நாடித்துடிப்பு சீராக இல்லையென்று சொல்லி பக்கத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போனார்கள். அப்பந்தான் தெரிகிறது அவளுக்கு.. தன் மணாளன் நோயினால் கஷ்டப்பட்டது கண்டு கண் கலங்கினாள்.
ஓரிரு நாள் கழிகிறது. நிருபதிக்கு குளுக்கோஸ் போட்டு சிகிச்சை நடக்கிறது என்று அவளிடம் ஒருவர் சொன்னார்....

“ அய்யோ.... ஒரு ஊசிவரை இது வரை அவர் போட்டதே கிடையாதே.... எப்படி அவரால் இதைத் தாங்க முடியும்” என்று கத்தினாள்...... கீழே சுருண்டு விழுந்தாள்...... விழுந்தவள் எழுந்திருக்கவே இல்லை.

மனைவி இறந்ததை எப்படி நிருபதியிடம் சொல்வது?

ஆஸ்பத்திரியில் இருந்து ஒருவர் வேகமாக வீட்டிற்குள் வருகிறார். அவர் சொன்னார்,”

நிருபதிப் பாட்டா போயிட்டாரு.....

காலன் நிருபதியை கொண்டுபோனால் பதி இல்லா மனைவியை பார்க்க ஆளில்லை என்று அவளையும் கொண்டு போனானோ .....

No comments:

Post a Comment