Saturday, October 13, 2012

சில ரயில்பயணத்தில் சில அனுபவங்கள்


ரயிலின் பகல் பயணம் மிகவும் பிடிக்கும்.வெளியே பார்த்துக் கொண்டு  வரும் போது சில வித்தியாசமான அனுபவங்கள்.
சாலைகளில் செல்லும் கார்கள் சற்று தூரத்தில் வேகமாக இரு திசைகளிலும் விரைந்து சென்று கொண்டிருக்கும். ரயிலை விட வேகமாகப் போவது போலவே இருக்கும்.  இணைந்து கொஞ்ச தூரம் வருவதும் திடீரென சண்டைக்காரன் போல் விலகிச் செல்வதும் உண்டு.
இந்தியன் ரயில் செல்லும் தண்டவாளப் பாதையில் வேறெந்த ரயிலும் செல்வது இல்லை. சாலை- அதில் கார்,லாறி, மனிதன் என எதுவும், எவரும் செல்லலாம்.
தனியார் ரயில் கிடையாது. தனியார் பஸ் உண்டு. வான் வெளியில் கூட தனியார் விமானச் சேவை உண்டு.
ரயிலை எதிர்த்து எதுவும் வர  முடியாது.
நான் சென்ற ரயில் ஒரு SUPER FAST TRAIN. எல்லா  முக்கியமான ரயில் நிலையத்திலும் ஒரு நிமிடம் நிற்கும். ஆனால் எதிர் திசையில் வரும் வண்டிகளுக்கு வழிவிட்டு நிற்கும். அவ்வாறு அடுத்துள்ள ரயில் செல்லும் போது நாம் இருக்கும் ரயில் போவது போன்ற ஒரு  உணர்வு ஏற்படும்.பதவி இழந்த மன்னன் போல் பவ்யமாய் நிற்கும். கால தாமதத்தில் ஏற்படும் நேரக் குறவை விரைவாகச் சென்று சமன் செய்யும்.
திருநெல்வேலி கழிந்து போகும் போது ஜன்னல் வழி வெளியே பார்த்தால் கருங்கடல் போல் தெரியும். வானும் தரையும் தொடும் தூரத்து அழகு நம்மைக் கவரும்.
கருமை நிற மண்கொண்ட பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பு-கரிசல் காடு  எதற்கோ தயாராய் கொண்டிருக்கும். ஒற்றைப் பனை மரம் எஜமானன் போல் கம்பீரமாக நிற்கும். சில இடங்களில் ஒற்றுமையாய் பல பனைமரங்கள்.  பல மரங்கள் நெருக்கமே இல்லாமல் அதிக இடைவெளியோடு….
கல்லூரிப்பேராசிரியர் போல் உடை அணிந்து கொண்டு மிடுக்காக அதிகம் பேசாமல் நம் அருகில் வந்து டிக்கட் பரிசோதிப்பார் ஒருவர். கணினிப் பதிவுத் தாளை அவரிடம் காண்பித்து திரும்பி நம் கையில் கிடைப்பது வரை படபடப்பு நெஞ்சில். வயது சரியாக இருக்கணும். நமக்கே நம் முகம் தானா என்று சந்தேகம் தரும் அடையாள அட்டையை அவர் பார்த்து நம்மிடம் தருவது வரை மனதில் ஒரு பயம்.அவர் அதனைத் திரும்பி நம்மிடம் தரும் போது அவர் கையில் வைத்திருக்கும் தாளையும் நாம் கொடுத்த தாளையும் சரிபார்த்து அதில் டிக் அடித்து ,இதில் கையொப்பமும் இட்டு தருவார். அதன் பிறகு சினேக பாவத்துடன் சிரித்துக் கொண்டு செல்வது…..
கல்லூரி ஆசிரியர்கள் ஜீன்ஸ் போன்ற உடை அணிந்தும் கட்டம் போட்ட சட்டையும் தான் அணிகிறார்கள். என்று மாறுமோ இந்த அலங்கோலம்.ஹோட்டல் ஊளியர்களுக்கே சீருடை…. மாணவர்களுக்குச் சீருடை….. ஆனால் ஆசிரியர்களுக்கு….. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். இவர்கள் மாறவேண்டுமே…. மாறும் காலம் வரும்.

ஈரோடு சந்திப்பில் நான் இருந்த இடத்தில் அடுத்துள்ள அறையில் ஒரே கூச்சல்…. ஒரு பெண்ணுடன் புதியதாய் வந்தவன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். அவள் இருக்கை தனது இருக்கை யென உரிமை கேட்டுச் சண்டை. அவள் பக்கம் நியாயம் இருந்ததால் அவள் அசையவில்லை அந்த இடத்தைவிட்டு. இவன் குரல் ஓங்க ,நல்ல வேளை பரமாத்மா போல் TTE அங்கே வர  டிக்கெட் கேட்டார். அவனிடம் டிக்கட் இல்லை. அவன் தன் மொபைல் போனில் உள்ள செய்தியை அவன் காண்பிக்கிறான். அந்தச் சமயம் பார்த்து அவளது கணவர் வர சண்டையும் வலுவாக ,இருவரின் சண்டித்தனம் முகம் சுழிக்க வைத்தது. TTE, Squad இருவரும் அவரை சமாதானப் படுத்தி வெளியே கூட்டிக் கொண்டு வந்து அந்த செய்தியை பார்த்ததில், அவர் ஏற வேண்டியதும் மும்பை ரயில் தான். ஆனால் அது இரவு 8 மணி வண்டி எனக் கூற அசடு வழிந்து போனான்.
தாளில் …. வேண்டாம்  ஒரு சின்னத் துண்டுத் தாளில் PNR தகவலை எழுதி வைக்கலாமே… படிக்க வாங்கும் செய்திதாளில் குறித்து வைக்கலாமே…..
முன்போல் ரயில் நிலையத்தில் நின்று பயணம் முடிந்து செல்பவர்களிடத்தில் காலாவதியான டிக்கட்டை கேட்க ஆள் யாரும் நிற்பதில்லை…..ரயிலில் கூட்டம் அதிகம். ஊளியர்கள் குறைவு.
நஷ்டத்தில் போகுதாம் ரயில்வேத் துறை......



No comments:

Post a Comment