சின்ன கிராமம்.மலைகள் அரண்கள் போல் காட்சிதரும்.எங்கு பார்த்தாலும் பசுமை.பச்சைக் கம்பளம் விரித்தது போல் காட்சி தரும் வயல் வெளிகள்.அறுவடை முடிந்தபின் விளையாட்டு மைதானமாக மாறும் ஊரடி வயலகள். நான்கு திசைகளிலும் கோயில்கள். கிழக்கில் உருவாகி மேற்கும் தெக்குமாக ஒடும் ஆறு.வயக்கிணறு,கோனார் கிணறு,மேலக்கிணறு,கிராமத்துக் கிணறு,வடகிணறு,பொத்தை ஊத்து.....எதர்க்கும் யாரையும் கையேந்த வேண்டிய நிலையில்லா ஊர் அது.
இன்று வடகிணறைக் காணவில்லை. பொத்தை ஊத்துக்கு போகமுடியுமா? தெரியவில்லை.பஞ்சாயத்து நீர் வசதியை செய்து கொடுத்திருக்கு. அரிசிக்கு பஞ்சமில்லை.100 நாள் நிச்சயமாக வேலை உண்டு.பஞ்சாயத்து நூலகம்,உயர்னிலைப்பள்ளி எல்லாம் உண்டு
தை மாதத் திருவிழா, அம்மன் கோயில் கொடை,திருக்கார்த்திகை விழா,பங்குனி உத்திரத்தன்று நம்புரான் விளையாட்டு,ஆயினூட்டுத் திருவிழா ....இவையெல்லாம் ஊர் மக்களால் நடத்தப்படும் கோயில் விழாக்கள்.
வரி எழுதும்போது முதல் வரி தரவேண்டியவர் அந்த ஊரின் முதலடியோ அல்லது அந்த ஊர் மூத்தபிள்ளையோ ,பணக்காரனோ அல்ல. ஆரம்ப காலத்தில் வரி எழுதத்துவங்கும்போது ஊரின் ஈசான மூலையில் இருக்கும் வீட்டில் இருந்துதான் ஆரம்பிப்பார்கள்.அந்த வீட்டில் இருப்பவர் ஏழையாய் இருந்தாலும் சரி,இளைஞராய் இருந்தாலும் சரி அவர்தான் முதல் வரி.எனக்குத் தெரிந்தவரை கடுக்கரையில் முதல் வரி யாருக்கென்று தெரியவில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரி உண்டு ஆனால் மணமாய்ப் போகும் பெண்ணுக்கு வரி கிடையாது.
நம்புரான் வாகனத்தை தூக்குவதற்கும் தூக்கிக் கொண்டே ஒடிவிளையாட முன் போல் பலம் வாய்ந்த ஆண்கள் இல்லையென்றே சொல்லலாம்.சொக்கப்பனை சிவன் கோயில் திருக்கார்த்திகையில் கொழுத்துவது நின்றுபோனது..இரண்டு நாள் மேலக்கோயில் திருவிழா 7 நாள் விழாவாக மாறியிருக்கிறது.கோயில் ட்ற்ஸ்டின் செலவில்தான் நடந்த திருவிழா மக்களின் உதவியால் நடக்கிறது.நம்புரான் வாகனத்தை எடுத்துச் செல்லும்போது குதிரையை சுற்றிவிட சரியான ஆள் இல்லாமையால் விளையாட்டும் இல்லை.
முத்தாரம்மன் கோயில்,சிவன் கோயில் கும்பாபிஷேகம் ஊர்மக்களால் நடத்தப்பட்டது. வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது.தெய்வ கிருபையால் கடுக்கரை இளைஞர்கள் பலர் பல நாடுகளில் பணியாற்றுகின்றனர். கடுக்கரை விவசாயிகள் எவ்வளவோ சிரமத்துக்கு இடையிலும் பயிர் செய்து வாழ்கின்றனர். நெல் விலை கூடினால் தான் விவசாயிகளின் வாழ்வு வளம்பெறும்.
No comments:
Post a Comment