“எம்மா....வண்டி போட்டு சினிமா பாக்க போக அப்பா சம்மதிச்சாச்சு.எங்க கூட நீயும் வாம்மா”...... “நான் வரல்ல நீங்கள்ளாம் போங்கோ”....இது ஒரு நாள் நானும் அம்மையும் பேசியது. மணத்திட்டை எங்கள் ஊரில் இருந்து 3 மைல் தூரத்தில் இருக்கும்.அங்கு தான் தியேட்டர் இருக்கு. பழைய படங்கள் போடுவாங்க.அப்பாவுக்கு சினிமா புடிக்காது....பிள்ளைகள் எங்களுக்காக அதுவும் எப்பமா ஒரு தடவை சம்மதிச்சு வண்டி போட்டு அனுப்புவா. பஸ்ல போக சம்மதிக்க மாட்டாங்க.ஏண்ணா படம் பாத்துட்டு திரும்பி வர பஸ் கிடையாது, நடந்து தான் வரணும். நடந்து வரணும்னு எனக்கு ஆசையாய் இருக்கும்.....
“எம்மா.....உனக்கு சினிமா புடிக்காதா....தியேட்டர்ல பொம்பள கூட்டம்தாம்மா அதிகமாஇருக்கு. நீ ஏன் வரமாட்டேங்க”
“அப்பா ஒரு தடவை சினிமா பாத்துட்டு வந்தண்ணைக்கு ரொம்ப ஏசிப்பொட்டா.அப்பாட்ட கேட்டுட்டுதான் போனேன்..சினிமா த்யேட்டர்ல இடி விழாதாண்ணு சத்தம் போட்டா. என்னால எதுக்கு இடிவிழணும்னுகிட்டு சினிமா பாக்கவே போக மாட்டேன்”
காலங்கள் கடந்தன. நான் கல்லூரியில் வேலை பார்க்கும் போது என் நண்பர் வித்யாசாகர் என்னிடம்,“ பொன்னப்பா... ஒரு சின்ன help....please.....எனக்காக..மறுக்க கூடாது.பாரதிராஜா சினிமா சூட்டிங்க்காக நாரூலுக்கு வந்திருக்காரு.பல location பாத்ததிலே கடுக்கரையில் ஒங்க வீடு புடிச்சிருக்கு .நான் ஓம்பேரச்சொல்லி பிரச்சனை ஒன்னுமில்லன்னு சொல்லிட்டேன்.எப்படி சம்மதிப்பியா” கேட்டார்.
“அப்பாட்டதான் கேக்கணும். ஆனா இப்பம் அறுவடை சமயம்... களத்தில் சூடடிக்கும் வேலை நடந்துட்டுருக்கு. எங்கப்பா சம்மதிப்பாண்ணு தோணல்ல. கேட்டுச் சொல்கேன்.”
அப்பாட்ட போய் கேட்டேன். இப்பம் வயல் அறுத்து கெட்டு களத்தில் இருக்கிறது. அறுப்படிப்பு முடிந்து வரச்சொல் என அப்பா சொன்னதை நான் வித்யாசாகரிடம் சொன்னேன்.
காலையில் அப்பா என்னக் கூப்பிட்டார் “கட்டாயம் கொடுக்கணுமா. எனக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்ல...ஆனா ஓம் friend வித்யாசாகர்லா கேட்டுருக்காரு.சரி உனக்காக ...சம்மதிக்கேன். நாளைக்கு வரச் சொல். 2 நாள் வந்து எடுத்துட்டுப் போகச்சொல். ஒரு கண்டிசன்....செருப்பு போட்டுட்டு எவனும் களத்துல வரக்கூடாது.”....நான் பஸ்ஸில் போகும்போது அப்பாவின் மனசையே நினைச்சுட்டு இருந்தேன்....எனக்காகல்லா சரிண்ணு சொல்லி இருக்கா. shootting நடந்தா கூட்டம் ரொம்ப வரும் களத்த நாசமாக்கீருவாங்களே.என்ன செய்ய....நேத்துதான் சொல்லியாச்செ...அப்படியே விட்ரலாம்.... சினிமாவே புடிக்காத அப்பா சினிமா எடுக்க அனுமதி தந்ததே எனக்காக மட்டுமே....சாதாரண நாட்களில் கூட காலில் செருப்பு போட்டு களத்தில் அப்பாவுக்கு பயந்து நடந்து செல்ல மாட்டார்கள்....பீடியோ எதுவுமே குடிக்கவும் கூடாது....என்னால் எந்த மன வருத்தமும் அப்பாவுக்கு ஏற்படக்கூடாது.....முடிவெடுத்தேன் சினிமா shooting -க்கு அனுமதிக்க வேண்டாம்.
என் ரூமில் இருக்கும்போது வித்யாசாகர் வந்தார். அவரிடம் நான் நினைத்ததை சொன்னேன்..... அவர் பரவாய் இல்லை என்றார்.அவர் மத்தியானம் திரும்பவும் என்னிடம் வந்து, “பொன்னப்பா.... நீ சொன்னஎல்லாம் பாரதி ராஜாட்ட சொன்னேன். அவர் நிபந்தனைகள சரியாக கடைபிடிப்போம்னு சொல்கிறார்....என்ன செய்ய நட்புக்காக சம்மதித்தேன்....
சொன்ன படியே வேறு எங்கோ நடக்க வேண்டிய shooting-ஐ cancel பன்ணிகிட்டு கடுக்கரையி்ல் எங்க வீட்டில் படப்பிடிப்பு நடந்தது. பாரதிராஜாவும் கேமரா மேன் கண்ணனும் செருப்பு போட அனுமதி கிடைத்தது. வேறு யாரும் செருப்பு போடவில்லை.கார்த்திக்,ராதா முதல் முதலாக நடிக்க தியாகராஜன் ராதாவினண்ணனாக நடித்த ஒரு சில ஸீனை எடுத்து முடித்து விட்டுப் போனார்கள்.
அறுவடை முடிந்த பின் மறுபடியும் படபிடிப்பு நடந்தது. எங்கள் களத்தில் ஒரு குடில் அமைக்க அனுமதித்தோம். எங்கள் சொந்தக்கார சிறுமிகள் இருவர் அந்த சினிமாவில் ஒரு காட்சியில் வருவார்கள்.பாரதிராஜாவின் மகனும் என் மகன் தினேஷும் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.அந்த சினிமாவில் வரும் வில்வண்டியும் காளையும் என் மனைவியின் அப்பா தெரிசனம்கோப்பில் இருந்து அனுப்பி தந்தார்கள். எதுக்குமே நாங்கள் ஒரு பைசா கூடவாங்கல. படம் பார்க்கும்போது நன்றி அறிவிப்பில் என் அப்பா பெயர் போடுவதாகச் சொன்னது இல்லாமல் இருந்தது. வித்யாசாகர் பெயர் இருந்தது.
அந்த சினிமா அலைகள் ஓய்வதில்லை
No comments:
Post a Comment