என் மனதில் மலர்ந்த மலர்களையும் மலரும் நினைவுகளையும் நாளை எனது பேரன்கள் பார்த்து சிரிக்கவும் எனை நினைக்கவும் தனிமை என்னை வாட்டும் போதெல்லாம் இந்த வரிகள் என்னை இதமாக வருடவும் மாத்திரமே பதிவு செய்கிறேன்...... தங்கம்
Tuesday, October 18, 2011
இளைஞர்களின் வழிகாட்டியாம் பிள்ளையுடன் ஒரு மாலைப் பொழுதினில் நான்
மங்காஃபில் சுல்தான் செண்டர் பக்கம் உள்ள பிள்ளையின் வீடு
ஞாயிற்றுக்கிழமை சாயந்தரம் மாதேவன்பிள்ளை வீட்டுக்குப் போகணும் என்று ஏற்கனவே தினேஷ் என்னுடன் சொல்லியிருந்தான்.அதனால் நான் பக்கத்தில் நடந்து போகக் கூடிய தூரத்தில் தானே வீடு இருக்கிறது என நினைத்துச் சொன்ன சமயத்தில் புறப்பட்டு நடந்து போகத் தயாரானேன்.
அவர் வந்து காரில் நம்மை கூட்டிற்றுப் போவார் என்று சொன்னதால் கீழ்த்தளத்தில் போய் நடைப் பயிற்சிக்காக நடந்துகொண்டிருந்தேன்.எப்படியும் பத்து நிமிஷத்துக்கு மேலாகும் அவர் வருவதற்கு....... நடக்கும்போதே நினைக்கிறேன். புத்தேரி தினெஷின் மகனின் பிறந்த நாள் பார்ட்டியில் அவரும் நானும் பரஸ்பரம் பேசியாச்சே. வீட்டுக்குப் போனால் பேச ஒன்றுமில்லையே....போரடிக்குமோ...
அவர் காரில் அவர் வீட்டுக்குப் போனோம். அந்த வீட்டுக் குழந்தைகள் யதார்த்தமாக எங்களுடனேயே இருந்து விளையாடிக் கொண்டும் பேசிக்கொண்டும் இருந்ததைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தேன்.இப்போ குவைத்தில் இருப்பது போலவே இல்லை... நாகர்கோவிலில் இருக்கும் உணர்வே இருந்தது...
T.V யில் மலையாளச் சேனல் ஒன்றின் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு வேண்டி ராஜ் சேனல் மாத்தப்பட்டது. அங்கும் செய்தி தான்....புதுச்சேரி கல்வி அமைச்சரின் 10-ம் வகுப்புத் தேர்வில் ஆள்மாறாட்டம் பற்றியதாக இருந்தது...சே..சே... ஏசியா நெட் க்கு மாறியது...அங்கு ஹரிஹரன் சங்கீதம் பாடிக்கொண்டிருந்தார்....சன் நெட் ஒர்க் எதுவுமே இல்லை.ஒரே தமிழ்ச் சேனல் ராஜ் மட்டுமே.யாருமே சீரியல் பார்ப்பது இல்லை.எப்படி நேரம் போகுது எனக் கேட்டேன். நல்ல நிகழ்ச்சிகள் நிறைய இருக்கே அதை பார்ப்போம் என்றார்கள்.
ஊருக்குப் போனாலும் பிள்ளை சீரியல் பார்ப்பது இல்லை.அதனால் வீட்டில் அவர் இருந்தால் மற்றவர்களும் பெற்றவர்களேயானாலும் சீரியல் பார்ப்பது இல்லை. நான் என் மனைவியைப்
பார்த்து சிரித்தேன்.அவளும் சிரித்துக் கொண்டே நான் நம்மூரில் சீரியல் பாக்காமல் இருந்ததையும் இப்போ இங்க வந்தபின் பாப்பதையும் சொன்னாள்...
மாதேவன் பிள்ளை என்னிடம், “நீங்க ஜெயமோகன் கதையெல்லாம் படிச்சிரிக்கீங்களா” கேட்டார். ‘குங்குமம்’-த்தில் வந்த அவருடைய அப்பா பற்றியும்,Net-ல் கெத்தில் சாகிப், வணங்கான் கதைகளும் படிச்சிருக்கேன்.எனக்கு பிடிச்சிருந்தது என நான் சொன்னேன்.
சிறந்த எழுத்தாளர்கள் நாஞ்சில் நாட்டவர்கள் தான். கவிமணி,சுந்தரராமசாமி, ஜெயமோகன்,நாஞ்சில் நாடன்,அரவிந்தன்நீலகண்டன்,அ.கா.பெருமாள்,.....இவர்களைப் பற்றியும் அவர்களது எழுத்துக்களைப் பற்றியும் எங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டோம்.பேச்சு அரவிந்தன்நீலகண்டன் பக்கம் திரும்பியது.
ஆழிபெரிது ,விஜய் T.V-ல் பேசியதும் பற்றி மிக உயர்வாக பிள்ளை பேசிக்கொண்டிருந்தார்.
ஊருக்கு வரும்போது அரவிந்தனுடன் சந்தித்துப் பேசணும்.உங்களுக்கு அவரைத் தெரியுமா? எனக் கேட்டார்.நீங்கள் வரும்போது சந்திக்கலாம் எனக் கூறினேன்.அரவிந்தனுக்கும் எனக்கும் உள்ள உறவையும் சொன்னேன். மிகச் சிறந்த அறிவாளி...இந்தச் சின்ன வயதிலே என்ன வெல்லாம் எழுதிகிறார்...சொல்லிக் கொண்டே போனார். கேட்கக் கேட்க எனக்கு இன்பமாய் இருந்தது.
நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அக்காடமி விருது கிடைத்ததும் ஜெயமோகனின் வீட்டுக்கு போண் பண்ணி நாஞ்சில்நாடனின் நம்பரைக் கேட்டு அறிந்து பாராட்டு தெரிவித்ததையும் கூறினார். பணிச்சுமை கூடுதலாக இருந்த சூழ்னிலையிலும் தமிழைத் தேடிப் பிடித்துப் படிப்பதைக் கேட்டு சற்று ஆச்சரியப்பட்டேன்.
சாப்பிட அழைத்தார்கள். சாப்பாட்டு மேசையும் அழகாக இருந்தது.மேசையின் நடுப் பாகம் சற்று மேடாய் உயர்ந்து சுற்றும் வகையில் இருந்தது.அதில் பதார்த்தங்கள் உள்ள பாத்திரங்கள் இருந்தன.நாமே அதனை நம் பக்கம் நகர்த்தி நமக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளக் கூடிய அமைப்பு.வீட்டம்மாவே பரிமாற சாப்பிட்டுக் கொண்டும் பேசிக்கொண்டிருந்த போது அவர் வடக்கு வீட்டுவரலாறு பற்றி ஒரு புஸ்தகம் பார்த்தேன் கிடைக்குமா எனக் கேட்டார். நான் தருகிறேன் என்னிடம் இருக்கிறது என்றேன்.
நேரம் போனதே தெரியவில்லை. மணி பத்தானதால் நாங்கள் புறப்பட அவரே மறுபடியும் காரில் வீடுவரை வந்து விட்டுவிட்டுச் சென்றார்.
வீட்டுக்கு வந்தபின் தினேஷ், பிள்ளையைப் பற்றிச் சொன்னதைக் கேட்டு மலைத்து விட்டேன்.நாஞ்சில் நாட்டில் இருந்து 50 பேருக்கும் அதிகமாக குவைத்தில் அவரால் வேலை பார்க்கிறார்கள். என் மகன் இந்தக் கம்பனியில் வேலை பார்ப்பதும் அவரது உதவியால் தான்.ஒவ்வொரு வியாழன்று மாலையில் பிள்ளையின் வீட்டுக்கு எல்லோரும் வந்து நாஞ்சிநாட்டுத் தீயல்,புளிக்காறி,மீன் கருத்தக்கறி யினை ருசித்துப் பார்த்து செல்வது வழக்கம்.
தானும் வாழ்ந்து தன் சமுதாய இளைஞர்களும் வாழ வழிகாட்டிக் கொண்டிருக்கும் பிள்ளையின் வீட்டில் அவர் அருகே அமர்ந்து அமுதருந்தியதையும் செவிக்கு விருந்தாய் இருந்த தமிழமுதையும் என்னால் மறந்து விட முடியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment