Friday, October 14, 2011

இலங்கையில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள்

காலை 7 மணி.நானும் என் மனைவியும் காலையில் நடப்பதற்காக வீட்டின் அருகே உள்ள ஃபாஹீல் கடற்கரை நடைபாதையில் நடந்து கொண்டிருந்தோம். சற்றுத் தொலைவில் 2 கப்பல்கள் நின்று கொண்டிருந்தன. அவைகள் பிரயாணிகள் கப்பல் அல்ல.அது சாமான்களைக் கொண்டு செல்லும் கப்பல் என என் மனைவியிடம் சொல்லும்போதே அவள் நீங்கள் கப்பல்ல சிலோணுக்கு போனீங்கள்ளா.அதப் பற்றி எழுதலாமே.

எப்பம் போனேன். ஞாபகம் இல்ல..எங்கேல்லாம் போனேன் ஞாபகம் இல்ல..என்ன செய்வது...யோசித்துக் கொண்டிருக்கும்போது ராமலிங்கம் நாங்கள் அங்கே போனதைப் பற்றி எழுதிய கட்டுரை இந்துக் கல்லூரி Magazine-ல் பிரசுரமானது ஞாபகத்துக்கு வந்தது.

எந்த வருஷத்து மேகஸீன்.....என் மகன் முருகன் பிறந்து ஒரு வயசு ஆனபின் நான் போனதாக என் மனைவி சொன்னாள்.உத்தேசமாக 1979,80,81 -ஆம் வருஷத்து மேகஸீன பார்த்தால் தெரிந்துவிடும். சமயம் கிடைக்கும் போது தேடிப்பார்த்து தகவல் தரும்படி காந்திநாதனுக்கு e-mail அனுப்பினேன். உடன்தானே அனுப்பித் தந்த கட்டுரையைப் படித்தேன்.

ஜூன் மாதம் நாகர்கோவிலில் இருந்து மறந்த முதல்வர் Prof.L.C.THANU தலைமையில் புறப்பட்டுபோனோம்.Dr.D.வேலப்பன்,Dr.S.சுப்ரமணியம்,Dr.C.சங்கரன்பிள்ளை,ராமலிங்கம்,சங்கர்,கிருஷ்ணமூர்த்தி,வித்யாசாகர்,R.S.பிரபாகரன்,திரவியம் பிள்ளை,சுப்பிரமணிய பிள்ளை,பீர்முகம்மது,சத்தியமூர்த்தி,சுந்தரேசன்,நான் எல்லோரும் 11-6-79-ல் இராமேஸ்வரத்தில் இருந்து ராமானுஜம் என்ற கப்பலில் பயணமானோம்.மாலையில் தலைமன்னார் போய் சேர்ந்து அங்கிருந்து ரயில் மார்க்கமாய் கொழும்பு போய் சேர்ந்தோம்.

நானும் சுந்தரேசனும் எனது உறவினர்வீட்டுக்குப் போக அனுமதி கேட்டோம்.ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் போய் வர முடியுமானால் போங்கோ என்று சொல்ல நாங்களும் போய் பார்த்துவிட்டு வந்தோம்.அந்த உறவினரின் பெயர் பகவதி.எங்க அம்மையின் பெயரும் பகவதியம்மாள்.அம்மையின் தாய் மாமாவின் மகள் அவள்.

தமிழர்கள் அதிகம் வாழ்ந்த எந்த இடத்துக்கும் எங்களை அழைத்துச் செல்லவில்லை.

கதிர்காமம் ,அனுராதாபுரம்,திருகோணமலை,கண்டி,பொலனருவா,சிகிரியா எல்லா இடங்களுக்கும் போய் வந்தோம். முதல் நாள் எங்கெல்லாமோ சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு ஹோட்டலுக்குப் போனோம். உள்ளே நுழையும்போதே அங்கிருந்து வந்த வாடை கொமட்டியது.சாப்பாடு அறவெ பிடிக்கவில்லை. பல இடங்களிலும் சாப்பாடு நன்றாக இல்லை.

கொழும்பு வந்ததும் நாங்கள் 3 பேர் நாகர்கோவிலில் இருந்து ஒரு ஆசாரி வீட்டுக்குப் போனோம். இந்தியாவில் இருந்து வாங்கிய சங்கு மார்க் லுங்கி இரண்டு கொடுத்தோம். அவரது வீட்டில் சாப்பிட்ட சாப்பாடு ஒன்றுதான் நன்றாக இருந்தது.

சிகிரியாக் கோட்டை யென்று நினைக்கிறேன்.அங்கு போனோம். சுவரில் இருந்த ஓவியம் நமது தஞ்சாவூர் ஓவியம் போன்று இருந்தது.எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் வரைந்தது.தமிழக மன்னன் ஆண்ட காலமது. அதற்கு மேல் ஏறுவது சிரமம். ப்ரின்சிபால் உசுப்பேற்றிவிட நான்,சுந்தரேசன்,ராமலிங்கம் ஏறினோம்.

7 கிணறு பார்த்தோம். கைவிட்டு தண்ணீர் எடுக்கலாம்.ஒவ்வொரு கிணற்று நீரும் வேவ்வேறான சூட்டில் இருந்தது .எந்த காலத்திலும் இப்படியே இருக்கும்.

ராமேஸ்வரம் வந்தோம்.கஸ்டம்ஸ் செக்கிங்குக்காக வரிசையில் நின்றோம். என் முறை வந்தது. இது என்ன புஸ்தகம் எனக் கேட்க நான் ’செஸ் புக்’ என்றேன். என்ன செக்ஸ் புக்கா அதெல்லாம் கொண்டுவரக்கூடாதே என்றான். என் பின்னால் நின்ற வித்தியாசாகர் இல்லையா அது செஸ் விளையாட்டு பற்றியுள்ள புக் என்று சொன்னதும் புக்கை தந்துவிட்டான். சங்கு மார்க்கு லுங்கியை என்னிடம் கேட்டு அவன் எடுத்துவிட்டான். என்னை எதுவுமே கேட்காமல் ஜட்டியையும் சிகரெட் பாக்கட்டையும் எடுத்து விட்டான். மனதில் ஏசிக்கொண்டே வெளியே வந்தேன்.

நண்பர்கள் எல்லோரும் அங்கிருந்து ரயிலில் கிளம்பினோம். பறக்கை கோபி சார் என்னருகே வந்தார்.”பொன்னப்பா….நீ சிலோணில் வைத்து 50 காசு தந்தேல்லா. இன்னா 25 பைசா வச்சுக்கோ” என்று சொல்லி அவர் பட்ட கடனை தீர்த்தார். அவர் குணம் தெரிந்து நான் அதை வாங்கினேன்.
ஒரு வாரம் மிக சந்தோசமாக பல இடங்களைக் கண்டு களித்தோம். Celon Old Brand Arrack ஒரு இடத்தில் கிடைத்தது.கொழும்பில் Duty Free shop-ல் பொருள்கள் வாங்கினோம்.எல்லாமே தரம் வாய்ந்த பொருளாகவே இருந்தது.அந்தக் காலத்தில் அது மிகவும் கவரப்பட்ட விசயம்.நாகர்கோவிலில் எதுவுமே சொப்பனத்தில் கூட பார்க்க முடியாது.ஏதாவது வாங்கணும்னா கள்ளத்தனமாகத்தான் வாங்கணும்.

வெளிநாடு சென்ற முதல் ஆள் எங்கள் குடும்பத்தில் நான் தான் என பெருமை பீத்திக் கொண்டு கொஞ்ச நாள் அலைந்தேன்.என்ன இருந்தாலும் இலங்கையும் வெளிநாடுதானே.இப்போ அது SRI LANKA.

1 comment:

  1. Photos taken during the tour by me are kept in the Economics dept. in our S.T.Hindu college All are black and white,that may give more information to write further.I am happy to share the green memories,Asari friend is Mr.Bala Subra Manian of Meenakshipuram,Thanks --Vidhyasagar

    ReplyDelete