Sunday, October 16, 2011

அப்பா வளர்த்த நாய்

குவைத்தில் தெருநாயையே காணாத நாங்கள் ஒரு நாயைக் கண்டோம். நாய் ஒருவரை சங்கிலியால் இழுத்துச் செல்கிறதா அல்லது நாயை இழுத்துக் கொண்டு அவர் நடந்து போகிறாரா தெரியவில்லை. வீட்டின் வெளியே நாயைப் பார்க்கவே முடியாது. அடைபட்டுக்கிடந்த நாயல்லவா அது குஸியுடன் ஓடியும் துள்ளியும் செல்கிறது.

இப்போல்லாம் எதைப் பார்த்தாலும் பேசினாலும் ஊர் ஞாபகமும் பழைய நினவுகளும் வந்து கண் முன்னே வந்து நர்த்தனம் ஆடுகிறது. இண்ணைக்கு வாலையாட்டி வந்து குழைந்தது எங்க வீட்டு கடுக்கரை நாய்.

கால்கள் குட்டையாய் கருப்பு வெள்ளை நாய்.உள்ளூரில் பிறந்த நாய் அது. வெளியே போன அப்பாவுடன் வந்த குட்டி அது. வீட்டு வெளிமங்களாதான் அதன் இருப்பிடம். வீட்டினுள் வரவெ செய்யாது. அது கொஞ்சம் வளர்ந்ததும் அப்பா கூடவே வயலுக்கும் தோப்புக்கும் போகும்.
இரவு நேரத்தில் காம்பவுண்ட் கதவை தாழ்போட்டபின் அது காவல் வேலையை ஒழுங்காகப் பார்க்கும்.யார் வந்து கதவைத் திறந்தாலும் சப்தம் இட்டு எழுப்பிவிடும்.

வீட்டுக்கு வரும் வெளியாள் யாரையும் கண்டு கொலைத்து பயமுறுத்தாது. நாங்கள் வெளியே சென்று உள்ளே வரும்போது கொலைக்கும்.என்னுடன் வரும் நண்பர்கள் ,”நாங்க வந்தா கொலைக்க மாட்டேங்கு, உன்னக் கண்டா கொலைக்கு,” கிண்டல் செய்வார்கள். நான் பதிலுக்கு அது கொலைப்பதுக்காரணம் நான் உங்க கூட வருகுது அதுக்கு பிடிக்கல்லடா அதான் கொலைக்குது எனச் சொல்வேன்.

என் சொர்ணப்பத்தான் ,”தங்கப்பனக் கண்டா அது கொலைக்கும்....என்னக் கண்டா கொலைக்காது...” அடிக்கடி சொல்லுவார்.

நான் என் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போகும்போதெல்லாம் என் கூடவே வரும். எதிரே வரும் நாயைக் கண்டாலும் சண்டை ஒன்றும் போடாமல் பாவம் போல் பதுங்கி வந்து விடும். எந்த வீட்டிலும் கிடக்கும் எச்சியானாலும் சரி கொடுத்தாலும் சரி அது சாப்பிடாது. பட்டி என்றால் கொஞ்சமும் புடிக்காத எங்க ஆச்சி வீட்டில் கொடுத்தால் மட்டுமே சாப்பிடும்.அங்கு போனால் தரிசு பட்டி வந்திருக்கு என்று அன்பாகவும் சந்தோசமாகவும் சொல்வது அதற்கும் புரிந்திருக்குமோ என்னவோ.போகசொன்னால் அது வீட்டுக்கே போய்விடும்.

ஒருநாள் நான் வீட்டுக்குள் நுழையும்போது கொலைத்தது.. கோபம் வந்து அடிக்க கம்பை எடுத்ததும் அது என் காலைச் சுற்றியே வந்தது. அடிக்கவில்லை.....பார்த்துக் கொண்டிருந்த அப்பா ”அதை ஏண்டா அடிக்கப் போறே...ஒன்னக் கண்டவுடன் அதுக்கு சந்தோசம் வருது...அதான் கொலைத்து வெளிக்காட்டுகிறது....நீ தான் வருகிறாய் என்பதை வீட்டின் உள்ளே இருந்தே அதன் சத்தத்தைக் கேட்டே நான் தெரிந்து கொள்வேன்.

கடுக்கரை சிவன் கோயிலில் பூஜை செய்யும் கொண்டைப் போத்தி தினமும் கொயிலில் இருந்து வீட்டுக்குப் போகும் போது சந்தணம் தந்துவிட்டு போவார்.அவர் இருக்கும் வாழைக்கோணத்தில் உள்ள வீட்டுக்கு அவர் போகும்போது எங்க நாயும் அவர் கூடவே வீடுவரை போய்த் திரும்பி வரும்.இது தினமும் நடக்கும் விசயம்.எனது சின்னப்பா இறந்த சமயம். தீட்டு என்பதால் 16 நாள் அவர் எங்க வீட்டுக்கு வரவில்லை.எங்க வீட்டை தினமும் கடந்துதான் அவர் போவார். வீட்டுக்குள் வராமல் போகும் போத்தியுடன் அவர் கூப்பிட்டாலும் கூட நாய் போகவில்லை. மிகவும் அதிசயமாய் அவரே சொன்னது இது.


1974 ம் வருடம்....யார் கண்பட்டதோ....கார் ஏறி அதன் பின்பக்கம் நன்றாக அடிபட்டு துடித்து ரோட்டில் நடக்கமுடியாமல் கிடந்த நாயை எங்க வீட்டின் பின் மங்களாவில் கொண்டு கிடத்தினார்கள்.வலியால் துடித்த நாயை நான் போய் பார்த்தேன்.கண்களில் நீர் வடிந்து கொண்டே முனகிக் கொண்டே இருந்தது. ஆசான் ஒருவரை அழைத்து பார்த்தோம் பிரயொஜனமே இல்லை.

அசையாமல் கிடந்த நாய்க்கு நாங்கள் வைத்திருந்த உணவை சாப்பிடக்கூட முடியவில்லை.அப்பா அதன் அருகே வந்ததும் அந்த வலியிலும் எழ மிக வேகமாக முற்பட்டது.அப்போதுதான் அசைவதைப் பார்த்தேன்.....எஜமான் விசுவாசமா....பாசமா....
வாழ்வை எங்களுக்காக மாத்திரமே வாழ்ந்த அந்த அன்பான நண்பன் மறைந்தான்.நானும் பப்பனாபிள்ளையண்ணனும் மிகவும் மரியாதையாக அதை பக்கத்து தோப்பில் பால்,பைசா எல்லாம் போட்டு புதைத்தோம்....அதன் பிறகு நாய் வளர்க்கவே இல்லை.

No comments:

Post a Comment