Friday, July 27, 2012

தூத்துக்குடியில் நான் கண்ட எளிமையான ஆசிரமம்

அன்போடு அழைத்தால் அழைப்பை மதித்து போவது ஒரு நாகரீகமான செயல். எனக்கும் போவது பிடிக்கும். போகமுடியாத நிலை சில சமயங்களில் ஏற்பட்டு விடுகிறது . ஜூன் மாதம்  ஐந்தாம்  தேதி   7  ஆம்  தேதி  என இரண்டு நாட்கள். முதலாவது திருமண நிகழ்ச்சி. இரண்டாவது புதிதாய் பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா.

3-ஆம் தேதியே திருமண அழைப்பிதழ் தந்த பெனெடிக்ட் வீட்டுக்குப் போய் பரிசும் கொடுத்துவிட்டு 4-ஆம் தேதி நான் பெங்களூர் போனதில் சற்று மன ஆறுதல். 11-ஆம் தேதி ஊருக்கு வந்ததும் ஒருநாள் அடுத்து போகாத அந்த வீட்டுக்குப் போகணும் என முடிவெடுத்து நேற்றுதான் போக முடிந்தது.

26-07-12 காலையில் திருச்செந்தூர் முருகனையும் கும்பிட்டுவிட்டு நாங்கள் ஒரு மணியளவில் தூத்துக்குடி TAC நகருக்குப் போனோம். அங்கே அந்தவீட்டில் உள்ளவர்கள் எங்களை மிகவும் அன்பாக வரவேற்று உபசரித்தார்கள் . மதிய உணவை அங்கே முடித்துவிட்டு இரண்டரை மணியளவில் அங்கிருந்து புறப்பட்டோம். தூத்துக்குடிக்குப் போய் ஒருவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக டாக்டர் சிவ பிரதாப்சிங் அவர்கள் இருக்கும் இடம் நோக்கிப் பயணித்தோம்.

அந்த இடம் ஒரு ஆசிரமம். அனாதைகளும், ஆதரவற்ற பிள்ளைகளும், ஊனமுற்ற முதியோர் வாழும் ஒரு அன்பு இல்லம். விவேகானந்தர் சேவா இல்லம்.

பத்து நிமிடங்களில் அவரை சந்தித்தோம்.

முதல் முதலாக அப்பொழுதுதான் நான் அவரை பார்க்கிறேன்.

இவரா ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்.  ஒல்லியான பச்சை வேட்டி கட்டி மிக எளிமையான தோற்றத்துடன் காணப்பட்ட அவரை அதிசய
மனிதராகவே பார்த்து அவர் பின்னால் போனோம்.

ஒரு பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள வீட்டுக்கு அழைத்துப் போனார். வெளியே ஒரு பெயர்ப்பலகை.அதில் அவர் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
நாங்கள் அவருடன் மாடிக்குப் போய் அவருடைய 94 வயதான தாயைப் பார்த்தோம். அவளுடைய காதுகள் நம்மோடு ஒத்துழைக்கவில்லை. நாம் சிரமப்பட்டு குரலை உயர்த்திப் பேச வேண்டும். கண்கள் அவளுக்கு விவேகானந்தரையும் ராமகிருஷ்ணரையும் சாரதாதேவியையும் படிக்க துணை செய்கின்றன.

நான் பிரதாப்சிங்குடன் பேச ஆரம்பித்தேன்.

இந்தவீட்டை அவர் விலைக்கு  வாங்கி வசதியைக் கூட்ட மாடி கட்டினார்.இப்போ இந்த வீட்டில் எட்டு பேர் இருக்கிறர்கள். இருவர் பெண்கள் கல்லூரியில் படிக்கிறார்கள். பள்ளிக்கூடத்திலும் படிக்கிறார்கள். பலர் இங்கு இருந்து வேலை செய்ய வெளியே போய்விட்டார்கள். இது போல் நான்கு வயதில் அனாதையாக வந்த ஒரு பெண் கல்வியல் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறாள். அவள் இந்த ஆஸ்ரமத்தையும் கவனித்துக் கொண்டு இங்கேயே இருக்கிறாள்.

இவர் வ.உ.சி கல்லூரியில் பணிபுரிந்தவர். என்.சி.சி Navy-யில் ஆபீசராக இருந்தவர். தனது 45 வயதில் கடற்கரையோரம் ஒரு வீடெடுத்து அனாதைப் பிள்ளகளை அங்கே தங்க வைத்து வளர்த்து வந்தார்.
 அந்த நகரில் ஒண்ணே கால் ஏக்கரில் ஊனமுற்றவர்களை பாதுகாக்க வீடுகள் கட்டி வைத்திருக்கிறார். அங்கேயும் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , கைகால் ஊனமுடைய சிலர் இருக்கின்றனர். ருபாய் யாரிடமும் இவர் ஆசிரமத்திற்கென கேட்டதில்லை. தெரிந்தவர்கள் சிலர் உதவி செய்வதுமுண்டு.

பிரதாப்சிங்கின் ஊர் நாகர்கோவில். 94 வயதான தாய் ஒரு ஓய்வு பெற்ற அன்பான ஆசிரியை.அவளது பிள்ளைகளுக்கு  உணவை மட்டும் ஊட்டவில்லை. ஆன்மீகத்தை ,நாட்டுப்பற்றை ஊட்டி வளர்த்தாள். பிரதாப்சிங்க் தான் படித்த ஆன்மீகத்தில் இருந்து கற்றதை கொஞ்சமாவது செயல் படுத்தணும் என்ற எண்ணத்தில் இதனை நடத்திக்கொண்டு வருகிறார்.

அவரது தாயார்,” எனக்கு இங்கே தூக்கமே வர மாட்டேங்கு. ” என்றாள்.

”இந்த வயதில் நீங்க எதுக்கு நாகர்கோவிலில் இருந்து இங்க வந்தீங்க.” என் மனைவி கேட்டாள்.

“என்னை இவன் கவனிக்கவில்லை... சரியாய்ப் பார்க்கவில்லை என்று ஊரில் யாரும் சொல்லிவிடக்கூடாதுல்லா....அதுக்காக நான் இங்க வந்திருக்கேன்....” என்றாள்.

பிரதாப் சிங்குக்கு முதியோர் அனைவருமே தாய் அல்லது தந்தை தானே.

இப்பொழுது பிரதாப்சிங்க் மிக மிக அழகாய்த் தோன்றினார். அவரது அக அழகு மிகவும் பிரகாசமாய் என் மனதுக்கு தெரிந்தது.

இவரால் இந்துக் கல்லூரியும் பெருமை பெறுகிறது. ஆம்.... இவர் அங்கே படித்தவர்...... M.A பயின்றவர்..... அவர் செயல்கள் அனைத்துமே பிரமிப்பை தந்து கொண்டிருந்தன.....

Thursday, July 26, 2012

இணைந்த இரு உயிர்கள் காற்றோடு கலந்தது ஒரே நாளில்.

அவர் ஒரு கொத்தனார். வேலைக்குப் போகும்போது வெள்ளைக் கதராடை உடுப்பைப் போட்டுக்கொண்டு கதராடை உடுத்து நடந்தும் பஸ்ஸிலும் வேலை நடக்கும் இடத்துக்குச் செல்வார். அவர் பெயர் நிருபதி.
எனது வீட்டை அவர் தான் கட்டினார். நான் ஏன் அவரிடம் அந்தப் பணிதனைக் கொடுத்தேன்? கடுக்கரையில் எனது அப்பா  1950 களில்வீடு கட்டும்போது நாகர்கோவிலில் இருந்து ராமகிருஷ்ணன் என்ற ஒருவர் வந்து கட்டினார்.
அவருடன் கையாளாக வந்தவர் தான் ராமகிருஷ்ணனின் தங்கை மகன் நிருபதி.

நான் வேலை பார்த்த கல்லூரி அருகில் உள்ள தட்டான் விளைதான் நிருபதியின் வீடு இருக்கும் இடம்.

முச்சந்தியில் உள்ள கடையில் அவர் அடிக்கடி நிற்பதை நான் பார்ப்பதுண்டு. அவர் என்னைக் கண்டால்,” பொன்னப்பா...... வீடு கட்டாண்டாமா? ”அன்பாகக் கேட்பார்.

என்ன சொல்வது..... அந்த நினைப்பே இல்லாதிருந்த காலமது.

வீடு கட்டணும் என்ற நினைப்பு என் நெஞ்சில் ஒருநாள் மலர்ந்தது. கூடவே வெத்தலைப் போட்டு வெள்ளை நிறமாறிய காவிப்பல்லும் அவருடைய நிரந்தர புன்முறுவலும் என் மனக்கண்ணில் மின்னல் போன்று தெரிந்து மறைந்தன.

வீடு கட்ட ஆரம்பித்தோம். எனக்கு எந்த அறிவும் இல்லை. கல் வேண்டும். மணல் வேண்டும். யாரிடம் கேட்பது. கம்பி வாங்க வேண்டும். எதுவும் எனக்குத் தெரியாது. செங்கல் மாத்திரம் நான் விரும்பிய சேம்பர் செங்கலை வாங்கினேன்.
வறுமையிலும் ஒருவன் நேர்மையாய் இருப்பதை நான் கண்டதில்லை.மிகவும் நேர்மையானவர் நிருபதி.கல் மணல் தருபவன் கொத்தனாருக்கு பணம் கொடுக்கும் காலமது. அவருக்கு கிடைக்கும் கமிசனை என்னிடமே கொண்டு தருவார். நான் அதை வாங்குவதில்லை.

ஒரு நாள்  அவர் வீட்டுக்கு நானும் என் மகனும் போனோம்..... முதல் முதலாக அந்த வீட்டுக்கு அன்று தான் நான் போகிறேன்.

அவர் உள்ளே இருந்து வந்தார். எங்களை அமரச்சொன்னார்.
நாங்கள் போன அந்த நாள் ஒரு விசேசமான நாள். பாயசம் தந்தார். அருந்தினோம்.
பாயசத்தைக் கொண்டுவந்தவள் ஒரு பெண். வயதான பெண். குனிந்தே நடந்து வந்தாள். அவள் முதுகுப்புறம் சற்றுப் பருத்து ஆமை வடிவம் போன்று இருந்தது. பார்ப்பதற்கு சுமாராக இருந்தாள். அவளால் நிமிர்ந்து நடக்கவே முடியாது எனபது கொஞ்ச நேரம் போனபின் தான் தெரிந்தது.

சற்று நேரம் இருந்து விட்டு , வெளியேறினோம்.
என் மனம் கனமாய் இருந்தது. அந்தப் பெண் யாராக இருக்கும்?

அடுத்த நாள் வேலை செய்ய வந்த அவரிடம் தனியாக பேசும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து அவரிடமே கேட்டேன் அந்த பெண் யாரென்று ?.
”என் மனைவி” அவர் சொன்னார்.

நான் சிலை போல் பேசாமல் நின்றேன்.

அவரே பேச ஆரம்பித்தார். “ அவள் என் தாய் மாமா ராம்கிருஷ்ணனின் மகள். அவளுக்கு மாப்பிள்ளையே கிடைக்கவில்லை. எனக்கு அவர் மாமா மட்டும் அல்ல. எனது குரு. என்னை ஆளாக்கினதே அவர் தான். நானே என் மாமன் மகளைக் கட்டலேண்ணா யாரு அவளைக் கட்டுவா..... அவளுக்கு பாதுகாக்க யாரு இருக்கா... ஒருத்தரும் இல்ல. என் அம்மையும் என்ன மாதிரியே நினைச்சா. அதனால நானே கட்டிகிட்டேன்.”

எவ்வளவு பெரிய தியாகம் குடும்பத்துக்காக..... அவர் மீதுள்ள மதிப்பு மிக அதிகமானது.

அவளது குணம் மிக நல்ல குணம்.

வயோதிகம் அவரை வாட்டும் நேரம் நெருங்கியது.... கொடுமையான நோயும் அவரை துன்புறுத்தியது....அதுதான் அவருக்கு வந்த முதல் நோய். தனக்கிருந்த நோய் பற்றி அவரது மனைவியிடம் சொல்லவில்லை... நோய் பற்றி கவலைப் பட்டதை விட தன் அருமை மனைவியை இனி யார் கவனிப்பார்கள் என்ற பரிதவிப்பு அவர் மனதை ரொம்பவே பாதித்தது.....
காலன் விரட்ட ஆரம்பித்தான். ஒடிப் பார்த்தார்...... வெல்ல முடியுமா காலனை..... நாடித்துடிப்பு சீராக இல்லையென்று சொல்லி பக்கத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போனார்கள். அப்பந்தான் தெரிகிறது அவளுக்கு.. தன் மணாளன் நோயினால் கஷ்டப்பட்டது கண்டு கண் கலங்கினாள்.
ஓரிரு நாள் கழிகிறது. நிருபதிக்கு குளுக்கோஸ் போட்டு சிகிச்சை நடக்கிறது என்று அவளிடம் ஒருவர் சொன்னார்....

“ அய்யோ.... ஒரு ஊசிவரை இது வரை அவர் போட்டதே கிடையாதே.... எப்படி அவரால் இதைத் தாங்க முடியும்” என்று கத்தினாள்...... கீழே சுருண்டு விழுந்தாள்...... விழுந்தவள் எழுந்திருக்கவே இல்லை.

மனைவி இறந்ததை எப்படி நிருபதியிடம் சொல்வது?

ஆஸ்பத்திரியில் இருந்து ஒருவர் வேகமாக வீட்டிற்குள் வருகிறார். அவர் சொன்னார்,”

நிருபதிப் பாட்டா போயிட்டாரு.....

காலன் நிருபதியை கொண்டுபோனால் பதி இல்லா மனைவியை பார்க்க ஆளில்லை என்று அவளையும் கொண்டு போனானோ .....

Tuesday, July 24, 2012

தெருவே வீடென வாழ்பவர்களுக்கு ஒரு நாள் உணவளிக்கும் “அவர்”

அந்த நேரம் அதிகாலை நேரம். நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன்.
எங்கும் எந்த இடத்துக்கும் போவதற்காக அல்ல. நடக்க வேண்டுமே என்பதற்காக நடந்து கொண்டிருந்தேன்.

என் எதிரே வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தோளில் பச்சை நிற சோல்னா பையுடன் வேகமாக சாலையில் சற்று தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். இடைவெளிக் குறையக் குறைய அவரது முகம் அவரை யாரென்று அடையாளம் காட்டிற்று. அவர்........ ம்...ம்.. அவர் பெயர்..... யாராக இருந்தாலென்ன...... அவரது பெயரா முக்கியம்...?

என்னருகே வந்த அவரிடம் , “ என்ன --, ஸ்பீடா நடந்து வாறீங்க......” கேட்டேன்.

அவர் மிகவும் நிதானமாக “எனக்காக அங்கே ஒருவர் காத்து நிற்கிறார்......பின்னால் சந்தித்தால்  நாம் பேசலாம்....” என்று தெளிவாகவே சொல்லிவிட்டு வேகமாய்ப் போய் அவருக்காக காத்திருந்த எனக்குத் தெரியாத அவருடைய ஸ்கூட்டரின் பின்பக்கம் ஏறிப் போய்விட்டார்.

அன்று அவருடைய செயல் எனக்கு வித்தியாசமாகவே பட்டது.
 
 அந்த நிகழ்வு என் நினைவினை விட்டுப் போன பின் இருவருமே சந்தித்தோம். அவரும் அதனைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

அதன்பிறகு  ஒருநாள் ...... காலை நேரம்..... அவரை அதே சோல்னா பையுடன் சந்தித்தேன்.....அவர் நின்று கொண்டிருந்தார்.... ஆம் அவர் ஒருவரின் வருகையை எதிர் பார்த்துக் கொண்டு நிற்கிறார்.

நான், “ என்ன--, இங்கே நிக்கிறீங்க ..... யாராவது வரணுமா.?...”

அவர்,  “ஆமாம்.... இப்போ ஒருவர் வருவார்..... அவரும் நானும் போய் சாலையோரத்தில் கோவில் பக்கத்தில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு இந்த பொதியலை கொடுத்துவிட்டு வருவோம். மாதத்தில் ஒரு நாள் இது போல செய்து வருகிறோம்....”

எனக்கு அவர் சொன்னது சற்று வித்தியாசமான அதிர்ச்சியைத் தந்தது.
பிச்சைக்காரர்கள் தெருத்தெருவாய் பிச்சை எடுப்பார்கள். அவர்களைத் தேடித்தெருத்தெருவாய் அலைந்து கண்டுபிடித்து பொதியலைக் கொடுக்கிறார்களே. அதிசயமாக இருக்கிறதே...!

நான் அவரிடம்,“நீங்கள் இருவரும் தான் செலவு செய்வீர்களா....இந்த உணவுப் பொட்டலத்தை வாங்கும் செலவுக்கு நானும் பணம் தந்தால் நீங்கள் வாங்கிக்கொள்வீர்களா.......”

அவர்,” உங்கள் பிறந்ததினம் அல்லது பிள்ளைகள் பிறந்ததினம் அல்லது பேரன் பேத்திகள் பிறந்ததினம் வரும் நாளில் உணவு கொடுக்க நீங்கள் ருபாய் தந்தால் வாங்கிக்கொள்வோம்” என்றார்.

நானும் என்மகள் பிறந்தநாளன்று அவரிடம் அவர் கேட்ட ருபாயைக் கொடுத்தேன். அது முறையாக பயன்படுத்தப்பட்டது.

காலச் சக்கரம் உருண்டோடியது. ஒரு நாள் என் நண்பர் ஒருவருடன்   அவரும் அவருடன் சில நல்ல மனம் கொண்ட இருவரும் எனது வீட்டுக்கு வந்தனர்.

அவர் கையில் சோல்னா பை இருந்தது. ஆனால் அந்தப் பையில் ஒன்றும் இல்லாமல் காலியாகவே இருந்தது.அந்தப் பையை பார்த்ததும் என் நினவுகள் என்னை பின்னோக்கி இழுத்துச் சென்றது.

நான்,“  இது அதே சோல்னா பைதானா!...... உணவுப் பொட்டலத்தை கொடுத்தாச்சா?.......”

 “இல்ல இது அந்தப் பை இல்ல...... பொதியலைக் கொடுத்தாச்சு.......” என்றார்.

அவரது பேச்சில் இருந்த கிண்டல் எனக்குப் பிடித்திருந்தது.

நான், “ நான் பை எனச்சொன்னது அந்த அர்த்தத்தில் அல்ல.  அது ஒரு அடையாளமாக என் மனதுக்குப்பட்டது. இத்தனை ஆண்டுக்குப் பின்னும் யாரோ ஒருவர் என்றோ செய்த ஒரு நற்செயல் இன்று என்னை அச்செயல் பற்றி பேசவைக்க அந்தப் பை எனும் சொல் தேவைப்பட்டது.”என்றேன்.

பை மாறும். பையின் நிறம் மாறும் .உணவும் மாறும். வாங்கும் இடம் மாறும். பெறுபவர்கள் மாறுவர்.நடை மாறி காரில் பயணம் என்று எல்லாமே மாறும். அவருடன் வரும் ஆட்கள் கூட மாறுவர்.

மாறாதது ஒன்றே ஒன்றுதான். அந்த ஒன்று பிச்சைக்காரர்களுக்கு கொடுக்கும் நற்செயலே......  அந்தச்செயலை செய்து கொண்டிருக்கும் அவர்  தோற்றத்தில் மாறினாலும், நற்செயல் செய்வதில் இருந்து மாறவே இல்லை.

ஒவ்வொரு ஆங்கில மாதம் 23-ஆம் நாளில் அவரது சோல்னா பை உணவுப் பொட்டலங்களை சுமக்கத் தவறுவதே இல்லை.

பிச்சைக்காரர்களை தேடிப் போவதும் இறையைத் தேடிப்போவதும் ஒன்று தானோ...... திருவண்ணாமலை விசிறி சாமியார் தன்னை பிச்சைக்காரனென்றுதானே கூறுவார்.

அதெல்லாம் இருக்கட்டும்... நற்செயல் செய்தவரின் பெயர் ?

பெயர் முக்கியமா....? செயல் முக்கியமா?

செயல் முக்கியம் என்றே மனதில் கொள்க..... பெயர் வேண்டுவோர் பெயர் ஒன்று வைத்திடுக.

அழகாய் இருப்பதால் அழகு என்க. அழகு என்றால் முருகு தானே முருகென்க..... முருகன் என்றால் வேலன் தானே..... வேலனை பாலசுப்பிரமணி என்றும் அழைக்கலாமா....... அழைக்கலாமே......பாலன் என்றும் கூப்பிடலாமோ......

எந்தப் பெயரிட்டு ரோஜாவைக் குறிப்பிட்டாலும் ரோஜா என்றுமே மணக்கும். ”அவர்”... அவராகவே இருக்கட்டும்.... அதுதான் அவருக்கு அழகு.

Wednesday, July 11, 2012

எது நல்ல குங்குமம்......தாலியை கயிற்றில் தான் போடணும்

ரயிலில் பயணம் செய்யும்போது பல அனுபவங்கள் பாடமாய் அமைவதுண்டு .
 தாம்பரம் ரயில் வந்தடைந்ததும் ,நாங்கள்   இருந்த இருக்கையின் பக்கத்தில் ஒரு தம்பதியினர்  வந்து அமர்ந்தனர். அவர் வரும்போதே ஒரு பாடலை மெல்லிய குரலில் பாடிகொண்டே வந்தார்.
அவர்கள் இருவரும்  பேசிக் கொண்டிருந்தனர். "ஒரு TV நிகழ்ச்சியைப் பற்றி பேசும்போது ,நான் பின்னால் இருந்ததால் குரல் எனக்கு
  சரியாக கேட்கவில்லை...." அவள் அவரிடம்  சொன்னாள் .

எவ்வளவு நேரம் பேசாமல் இருப்பது ?நாமே பேசுவோம் .....

நானே அவரிடம் பேச ஆரம்பித்தேன்.

 'நீங்கள்  நாகர்கோவிலுக்குத்தானே போகிறீர்கள்'  என  நான் கேட்க   அவர் ,ஆமாம்  என்றார் .

என்னை எங்காவது பாத்திருக்கிறீர்களா என்று என்னைக் கேட்க ,நான் அவரிடம்,' இல்ல......நீங்க  போன் பேசும்போது ,"பிள்ளையார் கோவில் பக்கம் காலைல வந்துரு" என  சொன்னீங்க ......

அதனால  நாகர்கோவில் தான்  என நினைத்துக் கொண்டேன் ......

உங்க பெயர் சந்திரனா ?     .......எப்படிச்சொன்னேன் ....

அவருக்கு ஆச்சரியம் ...

அதனையும் நீங்க போனில் பேசும்போது தான்  கேட்டேன் என்று சொன்னேன்

அவர்  கம்பளத்தில் பத்தி,குங்கும கடை ......பிச்சி ஸ்டோர்ஸ் ...... வைத்திருக்கிறேன்.நாங்க இப்பம் ஒரு நிகழ்ச்சிக்கு போயிற்று வாறோம் .... கோபுரம் மார்க்கு குங்குமம்  கம்பெனி நடத்தும் நிகழ்ச்சி .... கூடுதலாக விற்ற தால் எங்களை அழைத்து கௌரவித்தார்கள் ...52 பேர் கலந்து கொண்டோம் ...அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி நடந்தது.
,தங்க லாட்ஜ் ,சாப்பாடு,போய் வர AC ticket எல்லாம் கம்பனி செலவுதான்.

"எங்களுக்கு  வெள்ளியில் விளக்கு பரிசாக தந்தார்கள்....

 என்மகள் திருமணத்துக்கு கொடுத்த வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாமே பரிசாக கிடைத்தது தான்."

"நான் ,என்ன உங்க மகளுக்கு கல்யாணம் ஆயிற்றா ...... நீங்க பாக்கதுக்கு சின்னப் பையன் மாதிரியல்லா இருக்கியோ !"

"அப்படியா ..... நான் சின்ன பையன் மாதிரியா இருக்கேன். எங்க அண்ணன் மகளுக்கு கல்யாணம் நடந்தபோது ,எல்லோரும் என்னைப் பாத்து
உங்க தம்பியின் மகளுக்கா கல்யாணம்  என்று கேட்டார்கள்.என் தலை முடி வெள்ளையா இருக்கில்லா .... "

"இல்ல..... சின்னப் பையன் போலதான் நீங்க இருக்கியோ ......  உங்களை பார்த்தும் நீங்க இருவரும் பாடகர்கள் என நினைத்துக் கொண்டேன். " இது நான்.

அவர் ," எனக்கு ஒரு பையன் இருக்கான். B.tech படிச்சுட்டு இருக்கான்.....
நாங்க இருவரும் காலைல கடைக்கு வருவோம். நான் மாவட்டம் முழுவதும் வேனில் பத்தி ,குங்குமம் கொடுத்து  விட்டு வருவேன்.கடையில் வேலைக்கு ஆள் ஒன்றும் கிடையாது"
.
நான் சற்று வெளியே போன போது ,அவர் என்னருகே வந்து  ,"நீங்க சொன்னது சரிதான்.ஆனால் என் மனைவி பாடகி இல்லை. கல்யாணத்துக்கு முன் கதா காலட்சேபத்துக்கு போவது உண்டு. திருவாடுதுறை ஆதினத்தில் அவள் ஒரு புலவர்."

பேச்சு மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.

நாங்கள் வெள்ளாளர்கள். நீங்க யாரு ? அவர் கேட்டார்.

நான், " நாங்களும் உங்க ஆள்தான்...... உங்க மனைவி தாலியை மஞ்சள் கயிற்றில் போட்டிருக் கிறாங்களே ...திருநெல்வேலியா?" கேட்டேன்.

இல்லையில்லை இந்த ஊர்தான். கொட்டாரம் தான் எங்க ஊர் ..
நான் என்னைப் பற்றி  சொன்னதும் அவர் கடுக்கரையில் இருந்த ஒருவரைப் பற்றி பெருமையாகக் கூ றி  தெரியுமா ?என்று கேட்டார்.

என்மனைவி ," குங்குமத்தை நெற்றியில் வைத்தால் , நெற்றியில் கருப்பு தழும்பு ஏற்படுகே..... நல்ல குங்குமம் எது.."கேட்டாள் .

கோபுரம் மார்க்கு குங்குமம் தான் நல்லகுங்குமம் என்றாள் .

"தாலியை கயிற்றில் தான் போடவேண்டும். திருமணமான புதிதில் நான் சின்னப் பெண்ணாக இருந்தேன் . தங்க செயினில்தான் தாலி போட்டிருந்தேன் .ஆனாலும் என்னை கல்யாணம் ஆயிற்றா என்றுதான் என்னைக் கேட்டார்கள்."
"அதன்பிறகுதான் நான் மஞ்சள் கயிற்றில் தாலி கட்ட ஆரம்பித்தேன்.இந்து மதம்
 எதை சொல்கிறதோ அதையே நான் செய்கிறேன்.

நான்  வருடத்துக்கு  ஒரு முறை கயிறை மாற்றுவேன்."என்றாள் . நெற்றி வகிடில் குங்குமத்தை வைப்பதுவும் எனது பழக்கம் என்றும் சொன்னாள் .

காலையில் ரயில் நாகர்கோவில் வந்தது.....ரயில் நண்பர்கள் பிரியா விடைபெறும்
நேரமும் வந்தது . வணக்கம் சொல்லி விட்டு வந்தோம்....

ரயில் நட்பில் கிடைத்த அனுபவம்

மே மாதம் 2-ஆம் தேதி ரயிலில் நாகர்கோவில் நோக்கி எக்மோரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தோம் . சற்று வேகமாகவே போய்க் கொண்டிருந்தது. கிளம்பிய சற்று நேரத்தில் ஒருவர் என்னிடம் வந்து எனது டிக்கெட் கேட்டார்.
அவர் சாதாரணமான உடையில் இருந்தார்.பொதுவாக DTR வெண்ணிற ஆடையில் கறுப்புக் கலர் கோட்டுடன்  கையில் ஒரு பேடுடன் அல்லவா வருவார். எந்த அடையாள அட்டையும் அவரிடம் இல்லை. சரி ..! ஓடும் ரயில் தானே யார் பார்க்கப்போகிறார்கள் என்று அவர் இஷ்டப்படி வருகிறாரோ ......

நான் அவரிடம் என்னிடம் இருந்த print out -ஐ  கொடுத்தேன் ...அவர் சரி பார்த்துக் கொண்டிருக்கும்போதே ...... எனது seat இங்கு இல்லை.ஆனால் எனது family இங்கே இருக்கிறது .....பக்கத்தில் கிடைத்தால் வசதியாய் இருக்கும் ....என நான் சொன்னேன் . அவர் கண்டுகொள்ளவே இல்லை.

அரை மணி நேரம் கூட ஆகவில்லை...... இன்னொருவர் வந்தார். அவரும் என்னிடம் டிக்கெட் கேட்டார்.இவர்  தான் DTR .......அவர் உடை சொன்னது....

"இப்பம் தானே ஒருவர் வந்து check பண்ணினார் ....."..நான் சொன்னேன்.

"' ஓ !.... squad  வந்துட்டுப் போனாரா...... OK ....OK ....."

எனக்கு அடுத்த இடத்தில் இருந்த இருவர் .....அடையாள அட்டை இல்லாததால் .....மாட்டிக் கொண்டனர். இருவரும் BE பட்டதாரிகள் .....
அவர்கள் மறுபடியும் டிக்கெட் எடுத்தார்கள் .fine-ம்  சேர்த்து 2200/-....

அந்த இருவரில் ஒருவருக்கு அழகியபாண்டியபுரம் ...... இன்று காசு இப்படி செலவாகணும்னு இருக்கு .......

அந்த squad ஏன் இப்படி நடந்து கொள்கிறார். அவர்களை பார்த்தால் பரிதாபமாக இருந்தது. ஒரே எரிச்சல் .....

சே ! என்ன இப்படி இருக்கிறார்.கொஞ்சம் கூட மனிதாபமே இல்லாமல்...... இவ்வாறாக  நான் பேசிக்கொண்டிருக்கும் போதே ,ஒருவர் என் பேச்சில் தலையிட்டார்.
"எங்களுக்கு ஒண்ணும் செய்ய முடியாது.....ஏன்னா எங்க வேலை அப்படி...."

எனக்கு பகீர் என்றிருந்தது.....
"நீங்களும் squad தானா ...!'
சிரித்துக்கொண்டே அவர் ஆமாம் என்றார்.....

கொஞ்ச நேரம் நான் ஒண்ணும் பேசாமல் வந்தேன்.

நாங்கள் இருந்த பெட்டியில் fan ஓடிக் கொண்டிருந்தது ...அதனால் அவருக்கு குளிர் கூடுதலாக இருக்கவே ,என்னிடம் அதை நிறுத்தலாமா என என் அனுமதியைக் கேட்டார்.

ஒரு squad அப்படிக் கேட்டது..... சற்று வித்தியாசமாகவே எனக்குப் பட்டது.

நட்புடன் பேச ஆரம்பித்தார் ......
நான் பல சந்தேகங்கள் கேட்டேன்.

ID card இல்லாமல் இருந்தால் அது without ticket தான். .... இப்போ புதியதாக வந்திருக்கும் ஆதார்  கார்டு வரை அனுமதிக்கலாம் .....
புகைப்படம் உள்ள ATM card , post office தரும் ID கார்டு ,Driving licence ,Voters ID ,Passport
 Bank Passbook with photo .....இவையெல்லாம் அனுமதிக்கப்பட்டவை .

மிக முக்கியமான ஒரு விஷயம் :-

ஒரே printout  இல் ஒருவருக்கு அதிகமாக பலர் பயணம் செய்யும்போது யாராவது ஓருவர் ID வைத்திருந்தால் போதுமா? எல்லோரும் வைக்க வேண்டுமா?

சந்தேகம் இருந்தால் அதனையும் காண்பிக்கவேண்டும் ......

Agents -டம் நாம் டிக்கட் வாங்க நமது அடையாள அட்டையைக் கொடுப்போம் ...

நமது டிக்கட்டுடன் அடையாள அட்டை இல்லாத ஆட்களின் பெயரையும் சேர்த்து  தந்து விடுவார்கள்.

நமது அடையாள அட்டையின் நகலில் ,இன்னொரு ஆளின் புகைப்படத்தை வைத்துவிடுவார்கள் .....
கண் குருடு என பொய் சொல்லி ஏமாத்தியவனை அவன் பிடிபட்டது ......எல்லாமே சொல்லிக் கொண்டே வந்தார்.

'ஏமாற்றுபவன் .....அவனை நெருங்கும்போது ...பயப்படுவது அவன் கண்களில் தெரியும். அவன் கைகளை பிடித்துப் பார்த்தால் நாடித்துடிப்பே அவனைக் காண்பித்து விடும்'.

"நாங்களும் கண்காணிக்கப் படுவதுண்டு..... அதனால் எங்களால் ஏதும் செய்ய முடியாது......"
பேசிக் கொண்டிருக்கும் போதே முதல் squad வந்தார்......
"நீங்க upper berth எடுத்துக்கிறீங்களா ......"

Thank you .....நான் சொன்னேன்.

இப்போ இவர் எனக்கு நல்லவராகவே தெரிந்தார் ...
எனக்கு berth தந்ததால் அல்ல. அவர்களுக்கு கொடுத்த பணியை அவர்கள் சரியாக செய்வதால்.

அந்த squad இருவரும் குமரி மாவடத்துக்காரர்கள்....ஒருவர் கபடி வீரர். இன்னொருவர் Atheletic  .....
ரயில் நட்பில் கிடைத்த அனுபவம் புதியதாய் இருந்தது இந்தத் தடவை ...... 

எல்லோரும் அன்பானவர்களே.

ஜூலை மாதம் ஒன்றாம் தேதி சென்னையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக போய் கலந்து அதன்பின் அங்கிருந்து வர மார்ச்சுமாதமே 
train டிக்கெட் reserve செய்து விட்டோம்.
ஜூன் மாதம் 30-ஆம் தேதி மாலை புறப்பட்டு சென்னை சென்றோம் .....
எத்தனையோ தடவை சென்னைக்குப் போயிருந்தாலும் ,எனக்கு  இந்தத் தடவை போகும்போது உணர்வுகள் வித்தியாசமாக இருந்தது.எப்பம் போனாலும் நான் தங்குவது பள்ளித்தோழன் வீட்டில் தான்.அவனது மகன்கள் என்னிடம் அன்பாய் இருந்ததால் எனக்கு அங்கு போய் தங்கி நண்பனிடம் பழைய கதை பேசி
 மகிழ்ந்தது பிடித்திருந்தது.

அதன்பிறகு காலங்கள் எம் மனநிலையை மாற்றின.

நான் என்மனைவியுடன் சென்னை செல்லும் போதெல்லாம் ,அன்பாக அழைத்த என் வாழ்வில் அதிகம் நேசித்த ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஒருவரின் அன்பினை மதிப்பதற்காவே அங்கு உரிமையுடன் தங்குவது வழக்கமாயும்  பழக்கமாகவும் இருந்தது.

யார் கண்பட்டதோ தெரியவில்லை...... எழுதுவதும் நல்லதில்லை ....... 

அன்பும் நிலையானது இல்லை என்பதனை உணர்ந்தேன் ..... அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் .....பொய்யானது கண்டு கலங்கிப் போனேன்.

'தொப்புள் கோடி உறவெல்லாம் ......'கூடப்பொய்க்கும்  காலமிது

தவழ்கின்ற காலத்தில்இருந்தே ,தடுமாறி வீழ்ந்து விடாமல் இருக்க , மூத்தோன்  சுமையை தாங்கிய   என் மனம் கனத்த நெஞ்சுடன் அடிக்கடிக் கலங்கிப் போகிறது.

அப்படி கலங்கக்கூடாது......

 ஏறிய பின்  ஒருவன் ஏணியை எட்டி உதைக்காமல் இருந்தால் ,அது அந்த ஏணி செய்த பாக்கியம்..

ஓடுபவன் ஒருநாளும் ஓட்டப்பந்தயத்தின் போது திரும்பிப் பார்க்கவே கூடாது..
நேற்று என்ன நடந்தது ........ கவலைப் படாதே ......கழிந்த காலம் ....போயிற்று .  மீண்டும் வராது......கலங்காதே...

இப்படியெல்லாம்  யார் யாரோ சொன்னதெல்லாம் நினைவுக்கு வரும்.....

நானும் ஒரு அசாதாரணமான மனிதன் அல்லவே...... என் மனமும் மாறிப் போயிற்று......
நான் சென்னையில்  வெளியே தங்கிட முடிவெடுத்து  என்  பள்ளித் தோழரிடம் ,
lodge -ல் room புக் பண்ணச்சொன்னேன்  .

ஆனால் என் மனைவி அதனை விரும்பவில்லை....... சூழ்நிலையும் அவள் சொன்னதே  சரி என உணர்த்தியது .....

ஒரு கதவு அடைக்கப்பட்டால் ,இன்னொரு கதவு திறக்குமே. நான் சொல்வது மனக்கதவு ........
எங்கே தங்குவது திணறித்தான் போனேன். வீடுள்ளவனுக்கு ஒரு வீடு.
வீடு இல்லாதவனுக்கு எல்லாவீ டும் வீடே. 

அதிகமான சாப்பாடு. நிம்மதியான தூக்கம் தந்த அருமையான அறை ......

எல்லோரும் அன்பானவர்களே.

Tuesday, July 10, 2012

வடக்கு வீட்டுக் குடும்பத்தில் ஒரு முருகன்


MuruganSirமுருகன்  ..இவர் வடக்குத் தெருவில்  வசித்து வருகிறார்.. சின்ன   வயதில் இருந்தே இவரை வடக்கு வீட்டு முருகன் என்று தான் எல்லோரும் சொல்வார்கள் . ஆரம்பப் பள்ளி ஆசிரியராய் ஆரம்பித்த இவர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராய் ஓய்வு பெற்றார்..


வடக்கு வீட்டுக் குடும்பத்தின் காரணவர் என்று  வயது மூப்பின் அடிப்படையில் ஒருவர் பதவி வகிப்பார்..அவர் தான் அந்தக் குடும்பத்தில் முதல் மனிதர்.. திருமணப்பத்திரிகையில் அந்தக் காரணவர் பெயரை முதன்மைப் படுத்தி ,அவர் அழைப்பது போல் இப்படிக்கு என்ற இடத்தில் அவர் பெயரை அச்சடிப்பார்கள்..
ஆனால் இப்பொழுது அந்த முறை மறைந்து போயிற்று..  காலமாற்றம் கோவில் கொடைவிழா நடப்பதிலும் ஏற்பட்டது .ஆனால் எப்படியோ கோவில் திருப்பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன .
பலரது முயற்சியால் அவ்வப்போது கொடை விழாக்கள் சிறப்பாக நடந்து முடிந்தது.. இந்த வருடம் May மாதம் கொடை சிறப்பாக நடந்து முடிந்தது..
தனது 70 வயதிலும் ஒரு இளம் வயது வாலிபன் போல் அலைந்து ,கஷ்டப்பட்டு  மிக அழகாய் கொடியினை நடத்தி முடித்த முருகன் அவர்களை பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள் .
வடக்கு  வீட்டு முருகன் என்ற  பெயர் வடக்கு வீட்டுக் குடும்பத்தில் உள்ள எல்லோருமே அறிந்த பெயர்..
தனது மகன் கொடை க்கு வராதிருந்தது அவருக்கு வருத்தம் இருந்ததோ இல்லையோ எங்கள் எல்லோருக்கும் இருந்தது..

 வடக்கு வீட்டுக் குடும்பத்தில் ஒரு முருகன் ........ அவன் செயல் அழகன் ......

Monday, July 9, 2012

வேண்டும் கிராமத்துக் கொடைவிழா

மே மாதம், 33 வருடங்களுக்குப் பின் கடுக்கரையில் பூதத்தான் கோவில் கொடைவிழா நடந்து முடிந்தது.மிக சிறப்பாகவே நடந்தது.
எனக்கு ,இதற்குமுன்னால் நடந்த இரண்டு கொடைவிழாக்களை  பார்த்ததாக ஞாபகம்...

வடக்கு வீட்டுக் குடும்பத்தாரின் குல  தெய்வம் பூதத்தான் . 
தனியாக ஒரு கோவில் வடக்குத்தெருவில் தம்புரான் கோவில் பக்கம் இருக்கிறது.
  இந்தக் கோவிலில்  மேலும் 7 அல்லது 8 குடும்பத்தாரின் குல தெய்வங்கள் உண்டு.
இவர்கள் எல்லோரும் சேர்ந்து,வடக்கு வீட்டார்  நடத்தும்  விழாவில் கலந்து கொடை விழாவினை மேலும் சிறப்பிக்க ஆதரவு தருவார்கள்.  

பூதத்தான் சாமி ஆடுபவர் வடக்கு வீட்டுக் குடும்பத்தில் பிறந்த ஒருவர். 
இந்த வருடம் சிவராமன் தான் பூதத்தான் சாமி  ........
 சிவனணைந்த பெருமாள் சாமி ஆடியவர் வடக்குத்தெரு ராஜேந்திரன் .இவர் ஓய்வு பெற்ற இந்துக்கல்லூரிப்  பேராசிரியர் .
பண்ணிமாடன் சாமி ஆடியது சென்னையில் ஒரு கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மாதேவன் .சின்ன வயதுகாரர் .
புலமாடன் ------ கடுக்கரை தெங்கிரி  ....மற்றும் நாகருபிள்ளை ,ஐயப்பன், தாணப்பன்,......என சிலரும் சாமி ஆடுவார்கள்.
இவர்களில் பிரதானமாய் ஆடுபவர்கள் பண்ணிமாடனும் புலமாடனும் தான் .

முதல் கொடைவிழா ....நான் பார்த்தது  ....எனது 19 வயதில்.... 
சாமியாட்டம் , நய்யாண்டிமேளம் ,கணியான் ஆட்டம் ,..... மிகப் பெரிய கொடை விழா ......

இரண்டாம் கொடைவிழா அதுவும் சிறப்பாய்  நடந்தது........

இந்த வருடம் மே மாதம் 17,18,19 தேதிகளில் கொடைவிழா நடந்தது ....
மிகவும் பிரம்மாண்டமாய் நடந்து முடிந்தது.

மிகவும் முயற்சி செய்து முன்னின்று நடத்தியவர்  திரு.மா.அணஞ்சபெருமாள் .
இவர்  ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். வடக்கு வீட்டு முருகன்.
குடும்பத்தார் அனைவரையும் நேரிலும்,கடிதம் எழுதியும் தகவல் பரிமாறி , தேவைக்கு அதிகமாகவே நிதியும் பிரித்து நல்ல முறையில் கொடையை நடத்திய பெருமை முருகனுக்கே .....
அவரது மகனுக்கு இவ்விழாவைப் பார்க்கும் வாய்ப்பு  இல்லாமல் போனது  மனத்தை மிகவும் காயப்படுத்தியது.

எனக்கேற்பட்ட உணர்வுகள்:-

ஒரே குடும்பம் .....ஒரு பெரிய குடும்பம் இன்று பல குடும்பங்களாக இருக்கக் கண்டேன்.. அனைவரையும் அறிந்த ஒரே ஆள் முருகன் சார் மட்டுமே.
எனக்கு அதிகம் பேரைத் தெரியவில்லை .என்னையும் அதிகம் பேருக்குத் தெரியாது .
ஆனாலும் புன்முறுவலுடன் ஒருவருக்கொருவர் பேசாமலே,அன்பினை பரிமாறிக்கொண்டார்கள் .... வடக்கு வீட்டுப் பெண்களின் கணவன் மார்களும் , ஆண்களின் மனைவி மார்களும் கலந்து கொண்டது ..சந்தோசமாய் இருந்தது..

குடும்பத்தில் உள்ள ஒரு சிறுமியின் நடன அரங்கேற்றம் முதல் நாள் நடந்தது. குடும்பத்தில் உள்ள ஒருவரின் நாட்டியக்குழுவினரின் (ரோசினி  நாட்யாலயா)
நடன நிகழ்ச்சி நடந்தது.


கடுக்கரை ஊரில் இருந்தே இரண்டு வில்லிசைக் கலைஞர்கள் வில்லுப் பாட்டு பாடியது முருகன் சாரின் நல்ல குணத்துக்கு உதாரணமாகவும் அமைந்தது.நன்றாகவும் இருந்தது.

நான் மறந்து போன நையாண்டி மேளம் .....இரண்டு செட் மேளம்  ...... ஜன ரஞ்சகமான பாடல்களை நாதஸ்வரத்தில் இசைத்து பாடியது ...... அனைவரையும் கவர்ந்தது . மூன்றாம் நாள் நேரில் போய் இருந்து ரசித்தேன்.

கணியான் கூ த்து .......அதில் சகோதரர்கள் இருவரின் ஆட்டம் மிகப் பிரம்மாதமாய்  இருந்தது.....

இது ஒரு குடும்ப விழா . குடும்ப சங்கமம் .......மன நிறைவைத் தந்த ஒரு விழா .

 25 வருடங்களுக்குப்  பின் கல்லூரியில் படித்த மாணவர்கள் ஒரு இடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் ,நானும் அவர்களது ஆசிரியன் என்ற முறையில் அழைக்கப்பட்டு கலந்து கொண்டேன். ஒவ்வொருமாணவனும்  தன் மனைவி பிள்ளைகளுடன், மாணவிகள் தங்கள் கணவன் பிள்ளைகளுடன் வந்திருந்தார்கள் ....
எனக்கு அது மிகவும் அதிசயமாய் இருந்தது.. .. மூன்று   வருஷங்கள் மட்டுமே படித்து விட்டு பிரிந்து போனவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்திக்க ஒரு இடத்தில் கூடுகிறார்கள் என்றால் ...... உண்மையில்  எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது .கூடவே  மகிழ்ச்சியாகவும் இருந்தது.


 அவர்களது குழந்தைகள்.....பெற்றோரின் அசிரியர்  என  அறிந்தபின் என்னைப் பார்த்து   கைகள்  கூப்பி கும்பிட்டது ..... பெருமிதமாகவே இருந்தது. உணரத்தான் முடியும் ...எழுத்தில் வடிக்க  முடியாது..

இது போன்ற உணர்வு எனக்கு இந்தக் கொடைவிழாவில் வந்தது.

"உன் பிள்ளயா என்ன படிக்கிறான் ........ 3rd year  B.E படிக்கிறான்..  இவளா.... அவள் மெடிக்கல் படிக்கறாள்..... ஏன் மகன் வரவில்லை .......leave கிடைக்கவில்லை ....
இப்பந்தான் வந்தாள் .....தூரத்தில் இருந்து தனியே வரமுடியாதில்லா ..... இப்படி
எத்தனை எத்தனை சம்பாசணைகள் ......"



 பூர்வீகக் குடும்பத்து வடக்கு  வீட்டில்  இன்றும் வசித்துவரும்  90-க்கும் அதிக வயது பெரியவரை சந்தித்து அவரது ஞாபக சக்தியை கண்டு ஆச்சரியப்பட்டது.... பல நாள் ஆனபின்னும் எங்கள் பெயரை  மறவாதிருந்தது..

இரண்டு நாட்கள் எல்லோருடனும் சேர்ந்து உணவு உண்டது........


வேண்டும் இனியும் இந்த அனுபவம் ......
மூட நம்பிக்கை என ஒதுக்கி விடவேண்டாம் .....
வேண்டும் இது போன்ற கொடைவிழா .....

உணர்ந்தால் தான் புரிந்து கொள்ள முடியும் .... அன்புள்ளோர் அனைவரும் உணர்வார்கள் .......
நம் கலாச்சாரம் ஊரையும் காக்கும் .... நாட்டையும் காக்கும்.



வேர்கள் பலமாய் இருந்திடவும் ,பாரம்பரிய  நாதஸ்வர , நாட்டிய , கிராமிய கணியான் ஆட்டம் அழியாதிருக்கவும் கொடைவிழா  வேண்டும் ....



குடும்ப சாமி பூதத்தான் எங்களை மட்டுமல்ல எல்லோரையும் காக்கட்டும் .

Sunday, July 8, 2012

என்னவோ நினைத்தேன் .....எதனையோ எழுதினேன்

கன்னியாகுமரி ரொம்பத்தான் மாறிப்போய்விட்டது . மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதை தெரிந்தபின்னும் , மாறிய கன்னியாகுமரி மனதை மகிழ்விக்க மறுப்பதேன்.
வீட்டின் மாற்றம் நம்மால் விரும்பி ஏற்கப் படுகிறது . தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் மாறிப் போயே போய்  விட்டது. எனக்கு தரையில் இருந்து சாப்பிட ஆசைதான். ஆனால் பரிமாறுவதற்கு வசதியாய் இருப்பது மேசை  சாப்பாடு என்று பெண்கள் சொல்வதால் எனது ஆசை நிறைவேறாமல் இருக்கிறது .
                                                                                                                                                                                                                                                                                                           நானே எடுத்துச்சாப்பிடப்  பழக வேண்டும்.இந்தப் பிறவியில் சாத்தியப்படுமா ..
முயற்சிக்கிறேன் .......

உடை மாறித்தான் போயிற்று ..... கல்லூரி ஆசிரியர்கள் அணியும் கட்டம் போட்ட ஆடையும் , இறுக்கமாக அணியும் ஜீன்ஸ் பான்ட் -உம் பிடிக்கவே இல்லை. பெண் ஆசிரியர்கள் ....... எழுதவே  கைகள் தயங்குகிறது.

                              பயிலும்  மாணவ மாணவிகளுக்கு சீருடை.... மாற்றம் மகிழ்ச்சியை தருகிறது.

ஆசிரியர்களும் மாற வேண்டாமா ...... Hand Kerchief எனது பான்ட் பாக்கட்டில் இருந்தது வெளியே தெரிந்தது என்பதற்காக துறைத் தலைவரின் கண்டனத்திற்கு ஆளானேன் நான். உலகெங்கும் டிரஸ் கோடு பின் பற்றப்படுகிறது . மாறவேண்டிய மாற்றம் ..... எப்போ  மாறும்.

ஆசிரியைகளுக்கு  கண்டிப்பாய் வேண்டும் சீருடை.

 பணிதல் பயிலுபவர்களுக்கு மட்டுமல்ல ....பணியாற்றுபவர்களும் பேண வேண்டிய ஒன்று பணிதல் . பணிவான பண்பே உயர்ந்தது .

எதையோ எழுத நினைத்து இதை எழுதுகிறேன்...... இதுவும் உரக்க சொல்ல வேண்டிய சிந்தனை தானே... இருந்து விட்டுப் போகட்டுமே இந்த வரிகளும்.....

கடுக்கரையும் மாறிப் போயிற்று..... இந்த மாற்றம் எனக்குப் பிடித்திருக்கிறது..

மாற்றமே இல்லா மலைகளை அரணாகக் கொண்டு மாறிய இரு அம்மன் கோவில்களும் வடக்கேயும்      நுழைவாயிலிலும் காட்சி தரும் மாற்றம் எனக்குப் பிடித்திருக்கு.

ஊரு விட்டு வேறோர் ஊருக்குப் போய் வாழ்ந்தாலும் ,தான் பிறந்த ஊரை ,
வேரை மறவா இளைஞர்களை நினைத்து மிகவும் பெருமைப் படுகிறேன்.

கோவில் புதுப்பித்தல் , குடும்பக் கோவில் கொடைவிழா ...... எதுவானாலும் சிறப்பாய் நடந்து முடிவதற்கு காரணமாய் இருப்பவர்கள் வெளியூர்வாள் கடுக்கரை மக்களால் தான்.. அவர்கள் தான் முதுகெலும்பு ......

உள்ளேயே இருக்க ஆசைபட்டால் கருவறையில் இருந்து வெளியே வராமல்
இருக்கலாமே....வெளியே போனால் தான் வளர முடியும்.

கருவறை தந்தவளைத்  தவிக்க விடாமல் ,உன்னிடம் தன்னைத் தந்தவளையும் ,சின்ன வயதில் அறிவூட்டிய ஆசானையும் மதித்து வாழ்ந்தால் உன் வாழ்வு மெருகுறும். ஊர் .....அதுதான் வேர்..... அந்த வேரை மறவா எம்மூர்
சின்னவர்களை போற்றுவதில் என் மனதுக்கு சந்தோசமாய் இருக்கிறது .

கடுக்கரை மாறித்தான் போயிற்று..... மாறட்டும் ..... மாற்றம் ஒன்றுதானே நிரந்தரம்.

என்னவோ நினைத்தேன் .....எதனையோ எழுதி முடித்தேன் ..... நானும் மாறி விட்டேனோ....... ஆம்  மாறிவிட்டேன் .... எப்படி எழுதக்கூடாது என்பதற்கு
என் வரிகள் சாட்சியாய் இருந்து விட்டு போகட்டுமே....

Saturday, July 7, 2012

கல்லூரி பாடத்திட்டக் குழு திறமையுடன் செயல் பட வேண்டவே வேண்டாமா?

ஜூன் மாதம் ஒரு நாள் கல்லூரிக்கு சென்றபோது ,சுவரில் ஒட்டியிருந்த ஒரு செய்தி எனை வெகுவாகப் பாதித்தது . ஒரு தரமற்ற , நடுநிலையாளர் என்றில்லாமல் எல்லோருமே வெறுக்கத்தக்க ஒரு கதையை உள்ளடக்கிய ஒரு புத்தகத்தை பற்றிய செய்திதான் அது.
எந்த வருடத்திலேயோ அச்சடிக்கப்பட்டு விலை போகாமலும் யாராலும் படிக்கப்படாத ஒரு புத்தகத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இளம்கலை
 மாணவர்களுக்கு  பாடப்புத்தகமாக வைத்திருந்தது .
அதில் உள்ள  "நோன்பு" சிறுகதை , ஆண்டாள் பற்றிய அவதூறு பரப்பும் விதமாக அமைந்திருந்தது .

அதனை கண்டித்து அந்த சுவரொட்டியில் எழுதப் பட்டிருந்தது ...... அதில் உள்ள நியாயம் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
சுயமாக எழுதாமல் வேறொரு கதையை தழுவி எழுதும் எழுத்துகளையே
 நிராகரிக்க வேண்டும் என்பது நியம விதியாக இருக்க வேண்டுமல்லவா !
சிறுகதையை படிக்கும் போது ,படிப்பவனுக்கு சுயமாக ஒரு கதையை எழுதத்
தூண்டவேண்டும் ......
எங்கே கதை இருக்கிறது அதை மாற்றி எழுதலாம் .....என
 கதையைத் தேடி மாணவர்கள் ஒடக் கூடா து .
       
நோன்பு கதை கொண்ட “நோன்பு” புத்தகம் கல்லூரிக் கல்விப் பாடத்திட்டத்தில் எவ்வாறு சேர்க்கப்பட்டது? யாரோ ஒருதனிமனிதனின் தூண்டுதல் காரணமாக சேர்க்கப்பட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. அவரைத்தவிர Board of studies உறுப்பினர் ஒருவராவது படித்துப் பார்த்திருந்தால் இன்று ஏற்பட்டிருக்கும் அவல நிலை வந்திருக்காது. அசிங்கியமான பொருள் தோன்றும்படியான அட்டைப்படம் கூட எரிச்சலையே ஏற்படுத்துகிறது.
முதல் கதையே (கோணலே) கல்லுரியில் பயில ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு முற்றும் கோணலாக ஆகிவிடக்கூடாதல்லவா .இந்த நூலையே தவிர்த்து விட்டு சமநிலை தவறா நல்லாசிரியர்களைக் கொண்டு வேறொரு நல்ல நூலை தெரிந்தெடுப்பது ஒன்றே ம.சு.பல்கலைகழகத்தின் மேல் படிந்துள்ள மாசு நீங்குவதற்கான நல்வழியாகும்......
ஒரு நல்ல படைப்பாளி ,தன் படைப்புகளை தலையில் சுமந்து கொண்டு கதை இருக்கு ...... வாங்குங்கோ .....என எவன் வீட்டு வாசலிலும் போய் நிற்க மாட்டான் ......
ஒரு பல்கலைக்கழகம் எல்லாபடைப்புகளையும் வாங்கி  வைத்துக்  கொள்ள அது ஒரு குப்பைக் கூடையுமல்ல .......
Board of studies உறுப்பினர்கள் வருடம் ஒரு நாள் நடக்கும் கூட்டத்துக்கு வருவதற்காக மட்டும் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல.. யாரோ தரும் புத்தகம்  நிர்ப்பந்தம் காரணமாக அதனை ஆராய்ந்து பார்க்காமல் ஆயிரத்துக்கும்  அதிகமான  மாணவர்கள் பயில தேர்ந்தெடுக்கப்படக் கூடாது
ஒவ்வொரு உறுப்பினரும் தனது கல்லூரி சக ஆசிரியர்களிடம் கலந்து இதனைப் பற்றி திறந்த மனதோடு ஆலோசனை செய்ய வேண்டும் .

பல  நூல்களைப்  படித்து ஆராய்ந்து அவற்றில் சிறந்த ஒன்றைத்
தேர்ந்தெடுக்கவேண்டும் இப்படித் தேர்ந்தெடுத்த நூலை மற்ற உறுப்பினர்களின் பார்வைக்கும் கொண்டுவந்து எல்லா            
நூல்களையும்  படித்துப்      பரிசீலனை செய்து அவற்றுள் ஒன்றினை
 தேர்ந்தெடுத்து முடிவெடுக்க வேண்டும்..

திருந்துமா ..... மாறுமா ..... பாடத்திட்டக் குழு ...... நம்பிக் கை சிறிதும் எனக்கில்லை ....... காலம் ஒரு நாள் மாறும்.

அந்த நம்பிக்கை மட்டும் எங்கையோ மனதில் ஒரு இடத்தில் இருக்கிறது..

Friday, July 6, 2012

காரும் நானும்

கார் ஓட்டத் தெரியாதவன்லாம்  எதுக்கு கார் வைத்திருக்கணும் ? நியாயமான கேள்விதானே .
சைக்கிள் ஓட்டத் தெரியாதவன் சைக்கிள் வைத்திருப்பதில்லை . scooter ஓட்டத் தெரியாதவனும் scooter வாங்க மாட்டான் .
எனக்கு கார் ஓட்டத்தெரியாது.
பலரும் என்னைப் பார்த்து கார் ஓட்டத்தெரியுமா? என்று கேட்பார்கள் .
கார் ஓட்டிப் படிக்க வேண்டியது தானே ! என்றும் நானே ஓட்டக் கற்றுக் கொண்டேன் நீயும் படிக்கலாமே என்றும் பலரும் பலவிதமாக என்னிடம் சொல்வார்கள்..
நானும் பதில் ஒவ்வொருவிதமாக சொல்லிக்கொண்டிருப்பேன் ....
நான் வங்கியில்நின்று கொண்டிருந்தேன் .
ஒருவர் கையில் பேனாவை வைத்துக் கொண்டு ஒரு வங்கி செல்லானை என்னிடம் தந்து அவர் சொல்வது போல் எழுதித் தரும்படி கேட்டுக் கொண்டார்.
நான் அவரிடம் ," நீங்களே  எழுத வேண்டியது தானே ...."என சொன்னேன்
அவர் என்னிடம் ,"எனக்கு எழுதத் தெரியாது ......."என்றார்.
சற்று ஆச்சரியத்துடனும் குறும்புடனும் அவரிடம் இருந்து பேனாவை         வாங்கிக் கொண்டே," அப்பம் எதுக்குப் பேனாவை வைத்திருக்கீங்க ....." சொன்னேன்.
அவர் சொன்னார் ," எனக்குத்தானே எழுதத் தெரியாது .......உங்களுக்குத்  தெரியும்லா ...."
அவர் சொன்ன பதில் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.
எனக்கும் காருக்கும் பொருந்துமல்லவா.....
ஒரு குருடன் விளக்குடன் இரவு நேரம் நடந்து போய்க்கொண்டிருந்தான் .....
 எதிரே வந்தவன் ,அவரிடம்," உமக்குத்தான் கண் தெரியாதே ....எதுக்கு விளக்கை சுமந்து கொண்டு வருகிறீர்..     "எனக் கேட்டான்..
அவர்,,"இந்த விளக்கு எனக்கில்லை ....உனக்கு..  நீ என்மேல் மோதிவிடக்    கூடாதல்லவா......."


எனக்கு ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாத காலம் .எங்க வீட்டில் எனது சின்னப்பா அவருடைய ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு போவார்.


ஒருநாள்  காலையில் வீட்டுக்கு வந்து ஸ்கூட்டரை துணியால் துடைத்துக் கொண்டிருந்தார் .....
நான் சின்னப்பா விடம் ," இப்பம் எதுக்கு தொடைக்கணும் .....போகும் போது தூசி படத்தானே செய்யும் ....."என்றேன்.


நான் சொன்னதைக் கேட்டு சத்தம் போட்டு சிரித்து விட்டார் அவர்..


ஏன் சின்னப்பா சிரிக்கிறீங்க...!


"அடப் பைத்தியக்காரா  நீ எங்காவது வெளியில் போனால் அழுக்காகி விடும் என்று அழுக்கு சட்டையும் பேண்டும் தான் போட்டுட்டுப் போவாயா ..."  என்று கேட்டார்.


உனக்கு scooter ஓட்டத்தெரியுமா ? என்று என்னைக் கேட்க நான் தெரியாது என சொன்ன உடன் ," MSc வரை படிச்சுட்டு இன்னமும் ஸ்கூட்டர் படிக்காம இருக்கியே ! வா ,இண்ணைக்கு படிக்கலாம் ....எனச்சொல்லி  ஸ்கூட்டரை வெளியே எடுத்தார்.


என் கையில் ஸ்கூட்டரை தந்து ஏறி இருக்கச்சொன்னார் .நான் ஏறி இருந்து கொண்டே இருகைகளாலும்  ஹான்பரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.
இறுக்கி பிடிக்கவேண்டாம் ...சற்று free யாக பிடித்துக் கொள் . என்று சொல்லி
kick  starter -ஐ மிதித்து ஸ்டார்ட் பண்ணினார் .
வண்டி நகராமல் சத்தம் பூத்துக் கொண்டே இருந்தது. இப்போ வண்டி Neutral -இல் இருக்கு என சொல்லித்தந்தார் .


எல்லாம் சொல்லித் தந்துவிட்டு,என்னை கியர்-ஐ போடசொல்ல  நானும் என்னவோ செய்ய அது jump -ஆகி தென்னை மரத்தில் மோதாமல் போய் நின்றது.


பயந்து விடாதே என சொல்லி என்னை வெளியே அழைத்துக் கொண்டு சீதப்பால் போய் அங்கே இரண்டுமணி நேரம் ஓட்டிப் பழகினேன் .


50 வயதான எனது சின்னப்பா 23 வயதான எனக்கு ஸ்கூட்டர் -ம் தந்து தானும் வந்து  ஸ்கூட்டர் ஓட்டப் படிக்க சொல்லித்தந்ததை மிகப் பெரிய பெருமையாக நான் இன்றும் நினைத்து மகிழ்கிறேன்.


அதன் பிறகு தான் அவருடைய மகன் சுரேந்திரன் அதே ஸ்கூட்டர்--இல் ஒட்டிப்படித்தான் .......


நான் ஸ்கூட்டர் படித்ததை பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கும்போது என் உறவினர் அடித்த comment :-" அவருக்கே சரியா ஓட்டத்தெரியாது ....அவரு  இவருக்கு சொல்லிக்கொடுத்தாரா ....!"


நான் ஸ்கூட்டர்--இல் தான் தினமும் கடுக்கரையில் இருந்து கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தேன் ...... ஆனால் தினமும் அதில் போய் வந்தது என் அப்பாவுக்கு  பயமாய் ,அதனால் நான் போய் வருவது வரை நிம்மதி இல்லாமல் இருப்பதை அறிந்து ஸ்கூட்டர்--ஐ கொடுத்து விட்டேன்.


என்றும் பொல தினமும் BUS  என்னை சுமந்து சென்றது.....அப்பாவுக்கும் நிம்மதி ......சாலையில் செல்வோருக்கும் நிம்மதி .....


இவர்கள் எல்லோரையும் விட ஒரு உயிர் மிகவும் நிம்மதியாய்,ஆனந்தமாய் துள்ளி விளையாடியது..... ஆம் அந்த மனத்துக்கு சொந்தக்காரர் யாராய் இருக்க முடியும் என் மனைவியைத்தவிர .....    '

Thursday, July 5, 2012

ராஜேந்திரன் சொன்ன.............. 5

"வேண்டாம் .....வேண்டாம் .... அந்தத்தெருவில  எனக்குத் தெரிந்த ஆளு இருக்காரு .... அதனால  சரசந்திரன்  வீட்ல வச்சுப் பேசலாம் ...." என்று  சொன்னார் நடராஜபிள்ளை ....
ஒரு தேதியில் சந்திக்க முடிவெடுத்து ,அந்த நாளில் கணேசுடன் அவனது அப்பாவும் வந்தார்கள் .
ராஜேந்திரன் ஒரு   செயரில் இருந்தான்.. நடராஜபிள்ளை ராஜேந்திரனைப் பார்த்தபடியே ,கணேசையும் அவனது அப்பாவைப் பார்க்காமல் பேசிக்கொண்டிருந்தார் ..


அவர் ," நான் கல்யாணத்துக்கான செலவைக்  கொடுத்திருகேன் ..... அவங்களே  கல்யாணத்தை  நடத்தட்டும் ....."

இதற்கு கணேஷ் வீட்டார் சம்மதிக்கவில்லை .

ராஜேந்திரன் ,அவரிடம்," என்ன  நீங்க என்னைப்  பாத்தே பேசிட்டிருக்கீங்க ..... கொஞ்சம் திரும்பிப் பாருங்க .....கணேஷ்  அங்கே இருக்காம்லா ...." சொன்னான்..

லேசாக தன்  முகத்தை சற்று திருப்பி ,கணேஷைப் பார்த்தார்.

இறுக்கமான அவரது  முகம் தளர்ந்தது . கடுகடுப்பாய் இருந்த முகம் மென்மையாய் மாறியது. இதெல்லாம் நடந்தது  அவரையும்  மீறி அவரது
 மனம் செயல் பட்டதால் தான்..

கணேஷின் அழகும் பணிவும் அவரின் மனத்தைக் கட்டிப் போட்டன..

அதன் பிறகு நடராஜபிள்ளையின் பேச்சில் செயலில் ஒரு பெரிய மாற்றமே  தெரிந்தது ....

சாந்தியின் வாழ்க்கையும் கணேஷுடன் வசந்தமாய் தொடங்கியது.....

இருபது வருடங்களுக்கு அப்புறம்   இன்றைய தேதியில்   அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நான் கேட்டேன் ராஜேந்திரனிடம்  ..........

இரு குழந்தைகளுடன் தஞ்சை மாவட்டத்தில் சிக்கல் என்னும் ஊரில் வாழ்ந்து  வருகிறார்கள்..

சிக்கல் கோவிலின் தர்மகர்த்தாக்களில்  கணேஷும் ஒருவர்..... மிக அதிக செல்வாக்குள்ள ஒரு நபராய்  இருக்கிறார்.
நடராஜபிள்ளையும்  கணேஷும் மாமனார் மருமகன் உறவைப் பாதுகாத்தே வருகிறார்கள்..
எல்லாம்  கொடுத்த ஆண்டவன் முதல் குழந்தையை சற்று ஊனமாய் படைத்து விட்டான்.
அதனால் நிலை குலையாமல் இனி வேறொரு பிள்ளை வேண்டாம் என உறுதியான முடிவில் இருந்தாலும்  ஆண்டுகள் பல கழிந்தபின் ஒரு குழந்தையை எக்குறையும் இல்லாமல் கொடுத்தான் ஆண்டவன்  .
இப்படியொரு மனமொத்த தம்பதிகளை காண்பது மிகவும் அரியது என்று அவர்களை அறிந்தவர்கள் எல்லோருமே சொல்லும்படியாக வாழ்ந்து வருகிறார்கள் ........
நாமும் வாழ்த்துவோம்....... வாழ்க பல்லாண்டு  என.........

ராஜேந்திரன் சொன்ன உண்மை நிகழ்வு தொடர்ச்சி...4

அவசர அவசரமாக முந்தைய வரிகள் முடிக்கப்பட்டு நான் வெளியூர் சென்று செவ்வாய்கிழமைக் காலையில் என் இருப்பிடத்துக்கு வந்தேன்.
எனது மகன் முருகன் நீங்க எழுதிய “உண்மை நிகழ்வி”ன் முடிவு தெளிவாக எழுதாதது போல் இருக்கிறதே..... மெதுவாகச் சென்ற ரயில் திடீரென வேகமாய் செல்வது போன்று இருந்தது எனச் சொன்னான்.

எனக்கு அவன் சொன்னது சரியெனப் பட்டது. நான் எழுதாமல் விட்டு விட்டதை எழுதுவது அவன் கேட்டதால் தான்.........
 முருகனிடம் சொன்னது ............
நடராஜபிள்ளை ராஜேந்திரனிடம் ," நீங்கள் சொல்வதை நானும் என் மனைவியும் ஏற்றுக்கொண்டாலும் என் மைத்துனன் அதான் அவளின் தம்பி சம்மதிக்கவே மாட்டான் ...... என் மனதுக்கும் அவ்வளவாக இஷ்டம் இல்ல ... நீ கூட எனக்கு வேண்டி பேசமாட்டேங்குறியே ......."

"அவரிடம் நான் பேசட்டுமா "  ராஜேந்திரன் கேட்டான் .

"சரி! நாளைக்கு நீங்க இதே இடத்துக்கு  நீங்க வாங்க  அவரையும்  வரச்சொல்கிறேன்...."

சொன்னபடி ராஜேந்திரனும்  சரச்சந்திரனும் போய் நின்றார்கள் ......
சற்று தூரத்தில் அத்தானும் மைத்துனனும் வந்து கொண்டிருந்தார்கள் .......

அவர்கள் அருகே வந்தார்கள் ........சற்று நேரம் ராஜேந்திரனையே உற்றுப் பார்த்த படியே ......," ஆ..... இது யாரு நம்ம  ஆறும்பிள்ளைல்லா .....நாம இரண்டு பேரும் பி..யூ சி படிசசோம்லா .....ஓம் பிரண்டு ' டத்தி'இப்போ எங்கிருக்கான் ..."

இருவரும் தனியே போய் பேசினார்கள் ........

"இந்தத் திருமணம் நடக்காது ......ஏனென்றால் சாந்தியின் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை ..... நான் சம்மதிச்சா அவரு உன் மகளாய் இருந்தால் சம்மதிப்பாயா  என்று என்னிடம் கோபப்படுவார் ..... அதனாலே  எப்படியாவது இத  நிறுத்து ....."

ராஜேந்திரன் அவரிடம் ," எந்தக் காலத்துல நீ இருக்க ......அவங்க இருவரும் உங்க சம்மதத்தோட இந்த ஊரில நடத்தணும்னு ஆசைப்படறாங்க .....  உங்க மனசுப்படி அவளது இஷ்டம் இல்லாமல் நடந்தாக் கூட அவள் வாழ்க்கை நல்லா இருக்குமா ....நல்லா இருக்காது.....நரகமாகவே இருக்கும் ..... கொஞ்சம்  யோசித்துப் பாருங்கோ ......... சாந்தியின் நல்ல வாழ்க்கைக்காக  தயவு  செய்து நான்   சொல்வதைக் கேளுங்கோ ..........."  .சொன்னான் .

அவங்க  நால்வரம் ஒரு கடையில் போய் இருந்து tea குடித்துக் கொண்டே பேசிகொண்டிருந்தார்கள் .....

நடராஜபிள்ளையின் மைத்துனன் அவரைப் பார்த்து,," ஆறும்பி ள்ளை சொல்வது சரி   என எனக்குப்  படுகிறது......  பெத்த கடனுக்காக நாம் கல்யாணத்தை நடத்திருவோம்..... அதுக்கப்புறம் நாம வேணும்னா  போணும் .... இல்லாட்டா போகாண்டாம் ......."

எல்லோரும் சமாதானமாக பேசி , இரு குடுமபத்தினர்களும் ஒரு பொது இடத்தில் சந்திக்க முடிவெடுத்தார்கள் .

 ராஜேந்திரன் ,"       எங்க  வீட்ல வச்சு பேசலாம் ," என்றான்..

தயவு செய்து அடுத்த பிளாக்கில் பார்க்கவும்  .........