Monday, July 9, 2012

வேண்டும் கிராமத்துக் கொடைவிழா

மே மாதம், 33 வருடங்களுக்குப் பின் கடுக்கரையில் பூதத்தான் கோவில் கொடைவிழா நடந்து முடிந்தது.மிக சிறப்பாகவே நடந்தது.
எனக்கு ,இதற்குமுன்னால் நடந்த இரண்டு கொடைவிழாக்களை  பார்த்ததாக ஞாபகம்...

வடக்கு வீட்டுக் குடும்பத்தாரின் குல  தெய்வம் பூதத்தான் . 
தனியாக ஒரு கோவில் வடக்குத்தெருவில் தம்புரான் கோவில் பக்கம் இருக்கிறது.
  இந்தக் கோவிலில்  மேலும் 7 அல்லது 8 குடும்பத்தாரின் குல தெய்வங்கள் உண்டு.
இவர்கள் எல்லோரும் சேர்ந்து,வடக்கு வீட்டார்  நடத்தும்  விழாவில் கலந்து கொடை விழாவினை மேலும் சிறப்பிக்க ஆதரவு தருவார்கள்.  

பூதத்தான் சாமி ஆடுபவர் வடக்கு வீட்டுக் குடும்பத்தில் பிறந்த ஒருவர். 
இந்த வருடம் சிவராமன் தான் பூதத்தான் சாமி  ........
 சிவனணைந்த பெருமாள் சாமி ஆடியவர் வடக்குத்தெரு ராஜேந்திரன் .இவர் ஓய்வு பெற்ற இந்துக்கல்லூரிப்  பேராசிரியர் .
பண்ணிமாடன் சாமி ஆடியது சென்னையில் ஒரு கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மாதேவன் .சின்ன வயதுகாரர் .
புலமாடன் ------ கடுக்கரை தெங்கிரி  ....மற்றும் நாகருபிள்ளை ,ஐயப்பன், தாணப்பன்,......என சிலரும் சாமி ஆடுவார்கள்.
இவர்களில் பிரதானமாய் ஆடுபவர்கள் பண்ணிமாடனும் புலமாடனும் தான் .

முதல் கொடைவிழா ....நான் பார்த்தது  ....எனது 19 வயதில்.... 
சாமியாட்டம் , நய்யாண்டிமேளம் ,கணியான் ஆட்டம் ,..... மிகப் பெரிய கொடை விழா ......

இரண்டாம் கொடைவிழா அதுவும் சிறப்பாய்  நடந்தது........

இந்த வருடம் மே மாதம் 17,18,19 தேதிகளில் கொடைவிழா நடந்தது ....
மிகவும் பிரம்மாண்டமாய் நடந்து முடிந்தது.

மிகவும் முயற்சி செய்து முன்னின்று நடத்தியவர்  திரு.மா.அணஞ்சபெருமாள் .
இவர்  ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். வடக்கு வீட்டு முருகன்.
குடும்பத்தார் அனைவரையும் நேரிலும்,கடிதம் எழுதியும் தகவல் பரிமாறி , தேவைக்கு அதிகமாகவே நிதியும் பிரித்து நல்ல முறையில் கொடையை நடத்திய பெருமை முருகனுக்கே .....
அவரது மகனுக்கு இவ்விழாவைப் பார்க்கும் வாய்ப்பு  இல்லாமல் போனது  மனத்தை மிகவும் காயப்படுத்தியது.

எனக்கேற்பட்ட உணர்வுகள்:-

ஒரே குடும்பம் .....ஒரு பெரிய குடும்பம் இன்று பல குடும்பங்களாக இருக்கக் கண்டேன்.. அனைவரையும் அறிந்த ஒரே ஆள் முருகன் சார் மட்டுமே.
எனக்கு அதிகம் பேரைத் தெரியவில்லை .என்னையும் அதிகம் பேருக்குத் தெரியாது .
ஆனாலும் புன்முறுவலுடன் ஒருவருக்கொருவர் பேசாமலே,அன்பினை பரிமாறிக்கொண்டார்கள் .... வடக்கு வீட்டுப் பெண்களின் கணவன் மார்களும் , ஆண்களின் மனைவி மார்களும் கலந்து கொண்டது ..சந்தோசமாய் இருந்தது..

குடும்பத்தில் உள்ள ஒரு சிறுமியின் நடன அரங்கேற்றம் முதல் நாள் நடந்தது. குடும்பத்தில் உள்ள ஒருவரின் நாட்டியக்குழுவினரின் (ரோசினி  நாட்யாலயா)
நடன நிகழ்ச்சி நடந்தது.


கடுக்கரை ஊரில் இருந்தே இரண்டு வில்லிசைக் கலைஞர்கள் வில்லுப் பாட்டு பாடியது முருகன் சாரின் நல்ல குணத்துக்கு உதாரணமாகவும் அமைந்தது.நன்றாகவும் இருந்தது.

நான் மறந்து போன நையாண்டி மேளம் .....இரண்டு செட் மேளம்  ...... ஜன ரஞ்சகமான பாடல்களை நாதஸ்வரத்தில் இசைத்து பாடியது ...... அனைவரையும் கவர்ந்தது . மூன்றாம் நாள் நேரில் போய் இருந்து ரசித்தேன்.

கணியான் கூ த்து .......அதில் சகோதரர்கள் இருவரின் ஆட்டம் மிகப் பிரம்மாதமாய்  இருந்தது.....

இது ஒரு குடும்ப விழா . குடும்ப சங்கமம் .......மன நிறைவைத் தந்த ஒரு விழா .

 25 வருடங்களுக்குப்  பின் கல்லூரியில் படித்த மாணவர்கள் ஒரு இடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் ,நானும் அவர்களது ஆசிரியன் என்ற முறையில் அழைக்கப்பட்டு கலந்து கொண்டேன். ஒவ்வொருமாணவனும்  தன் மனைவி பிள்ளைகளுடன், மாணவிகள் தங்கள் கணவன் பிள்ளைகளுடன் வந்திருந்தார்கள் ....
எனக்கு அது மிகவும் அதிசயமாய் இருந்தது.. .. மூன்று   வருஷங்கள் மட்டுமே படித்து விட்டு பிரிந்து போனவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்திக்க ஒரு இடத்தில் கூடுகிறார்கள் என்றால் ...... உண்மையில்  எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது .கூடவே  மகிழ்ச்சியாகவும் இருந்தது.


 அவர்களது குழந்தைகள்.....பெற்றோரின் அசிரியர்  என  அறிந்தபின் என்னைப் பார்த்து   கைகள்  கூப்பி கும்பிட்டது ..... பெருமிதமாகவே இருந்தது. உணரத்தான் முடியும் ...எழுத்தில் வடிக்க  முடியாது..

இது போன்ற உணர்வு எனக்கு இந்தக் கொடைவிழாவில் வந்தது.

"உன் பிள்ளயா என்ன படிக்கிறான் ........ 3rd year  B.E படிக்கிறான்..  இவளா.... அவள் மெடிக்கல் படிக்கறாள்..... ஏன் மகன் வரவில்லை .......leave கிடைக்கவில்லை ....
இப்பந்தான் வந்தாள் .....தூரத்தில் இருந்து தனியே வரமுடியாதில்லா ..... இப்படி
எத்தனை எத்தனை சம்பாசணைகள் ......"



 பூர்வீகக் குடும்பத்து வடக்கு  வீட்டில்  இன்றும் வசித்துவரும்  90-க்கும் அதிக வயது பெரியவரை சந்தித்து அவரது ஞாபக சக்தியை கண்டு ஆச்சரியப்பட்டது.... பல நாள் ஆனபின்னும் எங்கள் பெயரை  மறவாதிருந்தது..

இரண்டு நாட்கள் எல்லோருடனும் சேர்ந்து உணவு உண்டது........


வேண்டும் இனியும் இந்த அனுபவம் ......
மூட நம்பிக்கை என ஒதுக்கி விடவேண்டாம் .....
வேண்டும் இது போன்ற கொடைவிழா .....

உணர்ந்தால் தான் புரிந்து கொள்ள முடியும் .... அன்புள்ளோர் அனைவரும் உணர்வார்கள் .......
நம் கலாச்சாரம் ஊரையும் காக்கும் .... நாட்டையும் காக்கும்.



வேர்கள் பலமாய் இருந்திடவும் ,பாரம்பரிய  நாதஸ்வர , நாட்டிய , கிராமிய கணியான் ஆட்டம் அழியாதிருக்கவும் கொடைவிழா  வேண்டும் ....



குடும்ப சாமி பூதத்தான் எங்களை மட்டுமல்ல எல்லோரையும் காக்கட்டும் .

No comments:

Post a Comment