ஆக்குப்பெரை என்பது தென்னை ஓலையால் வேயப்படுவதாகும். அதில்தான் சாப்பாடு பந்தி வைப்பார்கள். சாப்பாடு பொங்குவதற்கு தனியாக சமையல்காரரை நியமித்து அதற்கு என்று தனியாகப் பெரையும் போடுவார்கள்.பெரை போடுபவர்கள் பூதப்பாண்டியிலும்,தெரிசனம்கோப்பிலும் உண்டு.
சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள் கடுக்கரையில் உண்டு. அதனை வாங்கி வைத்தவர்கள் வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் ட்ற்ஸ்டிகளாக இருந்த ஒட்டடுக்கு வீடு பிச்சைக்காரன்பிள்ளை என்ற திருச்சித்தம்பலம் பிள்ளையும் கீழத்தெரு திரவியம்பிள்ளையும் தான்.
சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள் கடுக்கரையில் உண்டு. அதனை வாங்கி வைத்தவர்கள் வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் ட்ற்ஸ்டிகளாக இருந்த ஒட்டடுக்கு வீடு பிச்சைக்காரன்பிள்ளை என்ற திருச்சித்தம்பலம் பிள்ளையும் கீழத்தெரு திரவியம்பிள்ளையும் தான்.
நீளமாக இருக்கும் பந்தல்….மோட்டுப்பந்தல் தான் கல்யாண வைபவங்களுக்கு போடுவார்கள்.மூங்கில் கம்புகளைத்தான் மேற்கூரைப் போடுவதற்கு பயன்படுத்துவார்கள்…..தடிமன் கூடிய கம்பை நான்கு குச்சைகளில் (மூலைகளில்) கால்களுக்காக நடுவார்கள்.பெரையின் அகலம் எந்த அளவு..?
அப்போதெல்லாம் தரையில் இருந்துதான் சாப்பிடணும்.. நான்கு வரிசைகள் நீளமான பந்திப் பாய் தரையில் போட்டிருக்கும். இருவரிசைக்கும் இடையே சாதம், கறிகளை விளம்புவர்கள் நடந்து போவதற்கு வசதியாக இடம் விடப்பட்டிருக்கும்…. 4 வரிசை அமைக்க ஏதுவாக ஒரு பெரையின் அகலம் இருக்கும்..
பெரையின் மோட்டுப் பகுதியில் வைக்கோல் வைத்துப் போட்டு மூடி இருப்பார்கள்…மழை வந்தால் ஒழுகாமல் இருக்கவே அப்படிச் செய்வார்கள்….
மழை நீர் தரை வழியாக பெரையின் உள்ளே வராமல் இருக்க, பெரையைச் சுற்றி பெரையின் அடிப்பாகத்தில் ஓலையை மண்ணை வைத்து அணைத்தும் வாசலில் வரப்பு போன்ற சிறிது தடுப்பும் இருக்கும்.
மூன்று விதமான அளவுகளில் பெரைகள் இருக்கும். பந்திப்பெரை,ஆக்குப்பெரை,கலவறப்பெரைகள் தான் அவை…… ஆக்குபெரையில் தான் அடுப்புக் கூட்டி சமையல் வேலை நடக்கும்.
மண்தரையாதலால் எல்லாப் பெரைகளிலும் மாட்டுச்சாணி போட்டு மெழுகி,புழுதி வராமல் தரையை பண்படுத்தி வைத்திருப்பார்கள்……. கலவரைப்பெரைதான் store room. பந்திபெரை தான் சாப்பாடு நடக்கும் இடம். முகூர்த்தத்துக்கு வருபவர்கள் பந்திப்பெரைத்தரையில் விரித்திருக்கும் ஜமக்களத்தில் அமருவார்கள். பெரையின் ஒரு அற்றத்தில் நாதஸ்வரக் கச்சேரி நடக்கும்….
சமையலுக்கு அந்தக் காலத்தில் நிபுணர்களாய் இருந்தவர்களில் முக்கியமானவர் பார்வதிபுரம் அப்புவும் அவரது சீடர்களும்தான்.. சமையல்காரர்கள் செய்யும் வேலயைக் கண்காணிக்க ஊரில் உள்ள ஒருவர் இருப்பார்.
முகூர்த்தம் முடிந்ததும் வெத்தலை,பாக்கு தாம்பாளத்தில் வைத்து வந்திருந்த அனைவருக்கும் கொடுப்பார்கள்… உள்ளூர் ஆட்கள் அதனை வாங்கி வெளியே போய் அவர்களது வீட்டுக்கேப் போய்விடுவார்கள்…..
பந்தியில் இருந்த ஜமக்காளத்தை எடுத்து பின் மாப்பிள்ளை வீட்டார் பந்திப்பாயில் அமர்வார்கள்.பின் இடம் இருந்தால் வயதான முதியவர்களைக் கூப்பிட்டு அமரச்சொல்வார்கள்.அடுத்த பந்தியிலும் அதுவே தொடரும்….உள்ளூர் ஆட்களை மறுபடியும் சாப்பிட அழைக்க அதன் பிறகு அவர்கள் வருவார்கள்…அதன்பிறகு தான் பெண்வீட்டார் சாப்பிடுவார்கள்.
பந்திப்பாயில் எல்லோரும் அமர்ந்தபிறகே விளம்ப ஆரம்பிப்பார்கள். முதலில் தலைவாழை இலையைப் போடுவார்கள்………தேர்ந்தெடுத்த நல்ல இலையை தான் முதலில் கொண்டு வருவார்கள்……மாப்பிள்ளை வீட்டாரின் மனம் கோணாதபடி மிகவும் பௌயமாக கேட்டுக் கேட்டு பருமாறுவார்கள்…. முதலில் உப்பு,…பின் வரிசையாக வாழைக்காய் தொவட்டல்,அவியல்,தடியங்காய் கிச்சடி,இஞ்சிக் கிச்சடி,மிளகு பச்சடி,நாரங்காய் பச்சடி,சேனை எரிசேரி,ஓலன், ஏத்தங்காய் உப்பேரி……
சாதம் போட்டதும் பின்னால் பருப்பு பப்படம் வரும்…….இதற்கிடையில் ராமச்சிவேர் போட்டு சூடாக்கிய நீரை இலையின் முன்னே இருக்கும் பித்தளைக் கப்பில் அல்லது அலுமீனிய கப்பில் விட்டுக் கொண்டே அங்கேயும் இங்கேயும் மாறி மாறி வந்து போய்க் கொண்டிருப்பான்………பருப்பு விட்டு சாப்பிட்டு முடிந்த பின் தான் சாம்பார் வரும். அமைதியாய் சாப்பிடுவார்கள்….புளிசேரி விட்டு சாப்பிட்டபின்……பாயசம்…பழம் பால்பாயசம் போளி….வரும்.. ஒரு பாயசம் வந்த பின் அதை சாப்பிட்டு முடித்தபின் தான் அடுத்த பாயசம் வரும். நெருக்க மாட்டார்கள். இவற்றையெல்லாம் கண்காணிக்க ஒருவர் உண்டு.அவர் எந்த இலையில் எது இல்லையோ அந்தக்கூட்டை வைக்க ஆவன செய்வார்.
முதல் வரிசைக்காரர்கள் சாப்பிட்டபின் பெரைக்கு வெளியே வந்து பெரிய வார்ப்பில் இருக்கும்தண்ணீரை பனைஓலைத்தோண்டியில் கோரி எச்சிக்கையைக் கழுகுவார்கள்.
பந்தியில் ஆட்கள் அமர்ந்தபின் அவசரமாக சாப்பிட்டுவிட்டு போக யாராவது வந்தால் சின்ன பிள்ளைகளை எழுப்பி அந்த இடத்தில் அமரவைப்பது உண்டு.அதனால் அழுதுகொண்டே செல்லும் பையனை சமாதானப்படுத்தி அடுத்த பந்தியில் உட்கார்ந்து சாப்பிடச் செய்வார்கள்……… மெதுவாக ஒரு பந்தி முடிந்ததும் பெரையைச் சுத்தம் செய்த பின், சாப்பிடாமல் இருப்பவர்களை அழைப்பார்கள்…அழைத்த பின் தான் அவர்கள் போய் சாப்பிடுவார்கள்…
வயதான சொந்தக்காரர் யாராவது திருமணத்துக்கு வராமல் வீட்டில் இருந்தால் அவருக்கு சாப்பாடு அவரது வீட்டுக்கே கூடப் போவதும் உண்டு….. சாப்பிட்டு வெளியே வருபவர்களுக்கு வெத்திலை,பாக்கு,சுண்ணாம்பு கொடுக்க யானைக்கால் பெட்டியில் எல்லாவற்றையும் வைத்து கொண்டு வருவான் ஒருவன்......வேண்டியவர்கள் வெத்தலையை அவனிடம் வாங்கி போடுவார்கள்.
No comments:
Post a Comment