Tuesday, March 13, 2012

கதை கேளு... கதைகேளு... குமரிக்கு ரயில் வந்த கதை கேளு


  நானும் எனது சிறிய தந்தையாரும் திருநெல்வேலியில் இருந்து ரயிலில் சென்னைக்கு போய்க்கொண்டிருந்தோம். நாகர்கோவிலில் இருந்து பயோனியர் பஸ்ஸில் திருநெல்வேலிக்கு வந்தோம். அது சென்னை செல்லும் ரயில் புறப்படும் சமயத்துக்கு ஒரு மணிக்கூருக்கு முன்னால் திருநெல்வேலிக்கு வரும். அந்தக்காலத்தில் அந்த பஸ்தான் Express. இரண்டரை மணிக்கூராகும் நெல்லை வந்து சேர.அரசு பஸ் எதுவும் திருநெல்வேலிக்கு கிடையாத காலம் அது. ஸ்ரீகணபதி பஸ்,TMBS  பஸ் என எல்லாமே தனியார் பஸ்தான்.ஆம் நான் போனது 1964-ல்.....


கணடக்டர் டிக்கட் கொடுத்ததும் ,அவர் விற்ற டிக்கட்டின் நம்பரையும் அதன் மதிப்பான ருபாயையும் எவ்வளவு எனச் சொல்ல ட்ரைவர் தான் ஒரு (Trip sheet)தாளில் எழுதுவார். இப்படி ஒவ்வொரு தடவை எழுதும் போதும் வண்டி நிற்பதால் ஊர் போய் சேர்வதற்கு கால நேரம் மிக அதிகமாகும்.


 நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கோ அல்லது வேறு எங்காவது போக ரயிலில் பயணச் சீட்டு எடுக்கவேண்டுமெனில் பயொனியர் Out Agency--ல் எடுக்கணும். அப்படி சீட்டு எடுத்தவர்கள் நாகர்கோவிலில் இருந்து பயோனியர் பஸ்சில் திருநெல்வேலி வரை செல்லலாம்....


மன்னராட்சியின் கீழ் தென் திருவிதாங்கூர் (Kanniyakumari District) இருந்ததால் நாகர்கோவிலுக்கு ரயில் இல்லை. சுதந்திரம் கிடைத்து 32ஆண்டுகள் ஆன பின் தான் ரயில் போகும் சத்தத்தை குமரி மக்களால் கேட்க முடிந்தது.........ஏன் ஏற்பட்டது இந்தக் காலதாமதம்.


ரயில் எப்படி, யாரால் வந்தது? ஒரு தனிமனிதன் முயற்சியினால் மட்டுமே ரயிலை குமரி கண்டது...........யார் அந்த மனிதன்?


வடசேரி தழுவிய மகாதேவர் கிராமத்தில் வெங்கடபதி ஐயரின் தத்துப் புத்திரன் ராம சுப்பையர் தான் அந்த சாதனை மனிதர்.


அவர் தான் T.V.R  என்றழைக்கப்படும்  T.V.ராமசுப்பைய்யர்,


 T.V.ராமசுப்பைய்யர்,  “ பாரதம் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை என்று பேசுகிறோம்.....காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயிலில் வர முடியுமா?குமரிக்கு வருபவன் திருவனந்தபுரத்துக்கும் ரயிலில் போகவேண்டும்.......... நெல்லை-குமரி-திருவனந்தபுரம் ரயில் பாதை அமைக்க வேண்டும்...” என நினைத்து அதற்கான முயற்சியில் இறங்கினார்.


அவரது தலைமையில் ஓர் அமைப்பு 1950-ல் உருவானது.  அந்த அமைப்புக்கு செயலாளராக தோவாளைத் தியாகி சிவதாணு பணியாற்றினார்.
1951-ல் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. செலவு அதிகம் ஆகும் என்பதால் நிதி திரட்ட எண்ணி ரெசீது புக் அச்சடிக்கப்பட்டது...ஆனால் T.V.R அவர்கள் ‘ரயில் வரும் வரை என்ன செலவானாலும் செலவுக்கு நானே தருகிறேன்’ என்று சொல்லி விட்டார்.


டெல்லிக்கும்,சென்னைக்கும் பல சமயங்களில் தன்னுடன் செயலாளரையும் அழைத்துச் சென்று அமைச்சர்கள், தலைவர்கள் என பலரை சந்தித்து குமரிக்கு ரயில் பாதை அமைக்க வேண்டினார் T.V.R.


ஆண்டுகள் தான் உருண்டோடினதே தவிர ரயில் வந்த பாடில்லை......ஏனிந்த நிலை. தமிழ் நாடும் கேரளாவும் கன்னியாகுமரி பற்றி கவலைப் படவில்லை.தமிழ் நாட்டின் பிரதான கட்சிக்கு குமரிக்கு ரயில்வரவேண்டும் என்ற அக்கறை இல்லாததும் மிக முக்கியமான காரணம். இங்குள்ள பஸ் முதலாளிகள் மறைமுகமாக ரயில் வருவதை தடுத்து வந்தனர்.


T.T.K ,T.V.R  இருவரும் முதலமைச்சர் காமராஜர் வீட்டில் சந்தித்து ரயில் வருவதற்கான ஒரு memorandum -த்தை தயாராக்கினர். அதன் பின் சற்று விரைவாக அனைத்து நடவடிக்கையும் நடந்து முடிந்தன. 1970 T.V.R -ன் வேண்டுகோள் ஏற்கப்பட்டது.


1972-ல் குமரி முனையில் ரயில்வே ஸ்டேசனுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. முதலில் குமரி அம்மன் கோவில் பக்கம் ரயில் நிலையம் அமைவதாக இருந்தது. கல் நாட்டவந்தவருக்கு அந்த இடம் திருப்தியாக இல்லை.காரணம் கோயிலின் புனிதத்தன்மைக்கு பங்கம் வரும்.....முக்கடல் சங்கமிக்கும் அழகும் கெடும் என உணர்ந்து தனியாகவே சென்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார்......அவர் அன்று அப்படி தேர்ந்தெடுத்த இடத்தில் தான் இன்று கன்னியாகுமரி ரயில் நிலையம்
அமைந்திருக்கிறது.
அன்று கல் நாட்டியவர் அன்னை இந்திராகாந்தி...... அன்றைய பிரதம மந்திரி.....


T.V.R -ன் கனவு நனவாகிறது.....1979 தமிழ் புத்தாண்டு தினம் April 15 குமரியில் இருந்து முதல் ரயில் செல்கிறது கேரளத் தலைநகரை நோக்கி.....தொடங்கி வைத்தவர் பிரதமர் மொரார்ஜி தேசாய்.......


அவரது முயற்சி பற்றி குமரி மாவட்ட பெரியவர்கள் சொன்னது:-இந்த இரயில் பாதை அமைப்பு முயற்சியிலும், சாதனையிலும், வெற்றியிலும் வேறு யாரும் பங்கு போட முடியாது. அனைத்துமே டி.வி.ஆரையே சாரும்’ என்று, மனம் திறந்து பாரட்டினார்கள், பாராளுமன்ற முதல் உறுப்பினர்களான, சிவன் பிள்ளையும், ரசாக்கும். 


‘டி.வி.ஆர்., மட்டும் முயற்சி எடுக்கவில்லையானால் கன்னியாகுமரி மாவட்டம் ரயில் பாதையையே கண்டிருக்கப் போவதில்லை’ என்றார் பிரபலத் தொழிற்சங்கத் தலைவர், டி.எஸ்.ராமசாமி.


 இப்பாதை அமைப்புக் குழுவின் செயலாளராகப் பணியாற்றிய சிவதாணுவோ, ‘எவ்வளவு பெரும் செலவு . . . விடாமுயற்சி . . . சென்னைக்கும், டில்லிக்கும் எத்தனை முறை படையெடுப்பு . . . பத்திரிகையில் விடாமல் எழுதியது, கொஞ்சமா . . . நாங்கள் எல்லாம் சோர்ந்துவிட்டோம். டி.வி.ஆர்., ஒருவரே சோர்வடையாமல் கடைசி வரை போராடி வெற்றியைக் கண்ட சாதனையாளர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


 தமது வாழ்நாளிலேயே இந்தப் பாதை அமைக்கப்பட்டதையும், அதுவும் அகல இரயில் பாதையாக உருவானதையும் காணும் பாக்கியம் பெற்றவர் டி.வி.ஆர்.,
யார் இந்த T.V.R ?
அவர் தான் தினமலர் பத்திரிகையின் நிறுவனர்..

No comments:

Post a Comment