Sunday, July 17, 2011

என்னை அடித்த என் ஆசிரியர்

10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது ஃபெப்ருவரி மாதம் பொதுத்தேர்தல் நடந்து முடிந்து காங்கிரஸ் கன்னியாகுமரிதொகுதியில் வெற்றிபெற்ற நேரம்.எனது சின்னப்பா தோவாளை வட்டார காங்கிரஸ் தலைவர்.அவர் வெற்றிவிழா ஊர்வலத்துக்காக ஒரு பஸ் நிறைய ஆட்களை ஏற்றிக்கொண்டு போனார்.அதில் நானும் ஒருவன்.அன்று கிளாஸுக்குப் போகவில்லை.

அடுத்த நாள் வகுப்புக்குப் போனோம்.காலை வகுப்பு எந்தவித தொந்தரவும் இல்லாமல் கழிந்தது.
மத்தியான நேரம் என்னை சயன்ஸ் வாத்தியார் ,“ஏய்...! பொன்னப்பா இங்க வா....நேத்து ஏன் வரல்ல...” பொய் சொல்லக்கூடாது என நினைத்து உண்மையைச் சொன்னேன்.
அவரது முகமே மாறிவிட்டது. “அப்பாவுக்குத் தெரியுமா ?”.......“ தெரியாது”.....

மத்தியானம் முதல் பீரியடு சயன்ஸ் லேபில் வைத்து கிளாஸ்...பயத்துடன் வரிசையில் போய் என் இருக்கையில் போய் இருந்தேன்.

“நேற்று வராதவங்க எந்திரீங்க”

நானும் நிண்ணேன்...

“டெஸ்ட் பேப்பரில் 75 மார்க்குக்கு குறைவா எடுத்தவர்கள் எல்லாம் நில்லுங்க”

எனக்கு 95 மார்க்கு. ஆகவே நான் இருந்து விட்டேன்.

எந்த முக சலனும் இல்லாமல் அடுத்த டெஸ்டில் கூடுதலா எடுக்க வேண்டும் எனக் கூறி
அவர்களை இருக்கச் சொல்லி விட்டார்.

“90 மார்க்குக்கு கூடுதல் எடுத்தவங்க நில்லுங்க”

நானும் எழுந்து நிண்ணேன்

“நேத்து வராதவங்க மாத்திரம் நில்லுங்க”

நான் மாத்திரம் மரம் போல் நிண்ணேன்.

என்கையை நீட்டச்சொன்னார். பிரம்பால் அடித்தார். கூனிக்குறுகிப் போனேன்.

நான் மன இறுக்கத்தில் தினமும் கிளாஸுக்குப்போனேன். வாத்தியாரை எங்கே எப்பம் பார்த்தாலும் அவரை நான் பார்க்காமல்தான் இருப்பேன். நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள் அவர் ,“ பொன்னப்பா இங்க வாடே....கோபமா? நீல்லாம் படிக்கற பையன்லா.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.இந்த வயசுல அரசியல்லாம் நமக்கெதுக்கு... நல்ல படி... போ” என்றார்

இப்போ என் மனசு லேசாயிற்று. அனேகமாக அவர் ஒருவரிடம் தான் அடி வாங்கிருக்கேன்.

இப்பவும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.....இது போன்ற வாத்தியாரகள் இன்று உண்டா?

No comments:

Post a Comment