Thursday, July 14, 2011

கோபக்கார அப்பாவா....அன்பான அப்பாவா..

அப்பாவைக் கண்டால் மிகவும் பயம். அளவு கடந்த பயம்.ராத்திரி வீட்டில் அரைக்கேன் லைட்
வெளிச்சத்தில் விளக்குவைத்தவுடன் படிக்க இருக்க வேண்டும்.இல்லை யென்றால் அப்பாவின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.அம்மை அவசரப் படுத்துவாள் படி படி என. குளித்துவிட்டு சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது அப்பாவின் காதுகளில் எந்த சத்தமும் கேக்ககூடாது...வீட்டில் அந்த சமயத்தில் அம்மி கூட அமைதியாய் இருக்கும்.உலக்கைக்கு அந்த நேரத்தில் ஓய்வு.ஆட்டொரல் அசையாது...சின்னவயதில் நான் , ‘ எம்மா எங்கிருந்தம்மா இந்த அப்பாவைக் கண்டுபிடிச்சே’ கேட்டேன். எங்கம்மைக்கு ஒரே சிரிப்பு...அப்பாவிடம் சொல்லிட்டா.
அடி கிடைக்கும் என்று நினைத்த எனக்கு ஒரே ஆச்சரியம். அப்பா தன் சக நண்பர்களிடம் இதைச் சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் இப்படிக் கூறிய்து சொந்தக்காரர்களுக்கு எல்லாம் தெரிந்து அவர்கள் மத்தியில் மிகப் பிரபல சீமை ஆயிட்டேன்.

12 வயதான நான் டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் எந்த வித உணர்வுமின்றி கட்டிலில் கிடந்தேன்....உள்ளூர் வைத்தியரின் மருந்தால் எந்தப் பலனும் இல்லாததால் C.B.H புத்தேரிக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போனார்கள்...டாக்டர் நோபிள் தங்கச் சொல்லி விட்டார்...அதே சம்யத்தில் அம்மைக்கும் சொகமில்லை... நான் ஒரு கட்டிலில்.என் அம்மா இன்னொரு கட்டிலில்... இரண்டுக்கும் உள்ள இடைவெளியில் தரையில் தான் எங்க அப்பா
இரவு படுத்திருப்பார்.இரவு நேரத்தில் அம்மைக்கு ஏதாவது கொடுத்துவிட்டு படுப்பார்அப்பா. ‘அப்பா’ என்ற என் முனகலுக்கு திரும்பவும் எழுந்து எனக்கு உதவி செய்வார்....இரவு தூக்கமே தொலைந்து போனது அப்பாவுக்கு....

ஊரே போற்றும் பெரியவர்.....மிகவும் கோபககாரர்....மகனுக்கும் மனைவிக்கும் வேண்டி தரையில்...முதன் முதலாக அப்பாவை அப்போதுதான் புரிந்து கொண்டேன்...

27 நாட்கள் கண்ணை இமை காப்பது போல் கவனித்த என் அப்பா தான் நடத்திய புஸ்பாபிசேகத்திற்குக்கூட கடுக்கரை சிவன் கோயிலுக்கு போகாமல் எங்கள் அருகில் தான் இருந்தார்.

நோய் குணமானதும் வீட்டுக்கு வந்து சேந்தோம்.

இன்று நான் நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது.

‘எம்மா, இப்படிப்பட்ட அன்பான அப்பாவை எப்படிம்மா கண்டுபிடிச்ச ’.

No comments:

Post a Comment