Friday, July 29, 2011

மகாத்மா காந்தி நூல் நிலையம் மறைந்தது....

இளைஞர்கள் ஒன்று கூடி அழகான நூலகம் அமைத்து ஜீவா வாலிபர்கள் சங்கம் என்ற பெயரிட்டு எல்லோரும் வந்து படிக்க வசதியாக ஒரு ஊர்க்கட்டிடத்தை தேர்ந்தெடுத்தார்கள். அது பின்னாட்களில் கால மாற்றத்தினால் ஏற்பட்ட சூழலில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஊர்வகை லைபறறியாக மாறியது.

அது தான் மகாத்மா காந்தி நூல் நிலையம் . அது இரண்டு அறைகள் கொண்டது. முன் அறை கிழக்கு மேக்காக ஒரு நீண்ட வராந்தா போல் இருக்கும். அந்த அறைக்கு அடுத்த அறை சதுர வடிவமானது. அதன் வடக்கு, மேற்கு சுவர்களை ஒட்டி பெரிய மர அலமரிகள். ஒரு மேஜை , செயர்.... லைபறறியன் ஒருவர் உண்டு. அவருக்கு சமுதாய ட்றஸ்டு சம்பளமாக ஒரு கோட்டை நெல் கொடுப்பார்கள். காலையிலும் மாலையிலும் திறந்து , கதை புக்கை சந்தாதாரர்களுக்கு எழுதிவைத்து விட்டு கொடுப்பதுதான் அவரது வேலை.

அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியங்களின் எல்லா தொகுதிகளும் உண்டு. வருடம் தோறும் அரசு மான்யமாக வழங்கும் தொகைக்கு புக்குகள் வாங்குவதுண்டு. நாஞ்சில் நாட்டில் அதிக புஸ்தகங்களைக் கொண்ட மூன்று லைபறறிகளில் கடுக்கரை மகாத்மா காந்தி நூல் நிலையமும் ஒன்று. குமுதம், ஆனந்தவிகடன்,கல்கி,கலைக்கதிர், தினமணி, தினமலர் பேப்பர் எல்லாம் உண்டு.

நாத்திகம், முரசொலி ,இந்தியன் எக்ஸ்பிரஸ் களை யாராவது வாங்கிப் போடுவதுண்டு.
வயதில் பெரியவர்கள் உள் அறையில் இருந்து படிப்பார்கள். லைபறறியன் இருந்தால் வெளி அறையில் இருந்து படிக்கும் மாணவர்கள் அமைதியாக இருப்பார்கள். அவர் இல்லையென்றால்
மாணவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.பெரியவர்கள் சொன்னாலும் கேட்பதில்லை...அதில் சட்டம்பியான பெரிய ஆட்கள் இருந்தால் பயந்து போய் பேசாமல் இருப்பதுண்டு.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தக்காலத்து இளைஞர்களால் தான் நூலகம் பெருமை பெற்றது.கடுக்கரை கிராமம் என்றாலே கமபர் ராமன் பிள்ளை , கவி உடையார்பிள்ளை, மணமேடை அய்யாவு இவர்களை பற்றித்தான் மற்றவர்கள் கேட்பார்கள்.

கம்பர் ராமன்பிள்ளைக்கு கம்பராமாயணம் முழுவதும் மனப்பாடமாக தெரியும். மாணவர்கள் தாங்கள் படித்த புக்கை கொண்டுவந்து அதில் உள்ள ராமாயணப் பாடலின் முதல் வரியை பார்த்துப் படித்தால் பெரியவர் அதனை முழுவதுமாக ராகத்தோடு பாடி அதன் பொருள் கூறி விளக்கமும் சொல்வார். அவர் வறுமையில் தான் வாழ்ந்து மறைந்தார்.

நூலகக் கட்டிடம் உருமாறி இருக்கிறது இப்போது . ஆனால் நூலகம் இல்லை.? அலமாரிகள் எங்கே..? மதிப்பு மிகுந்த நூல்கள் எங்கே..? பிரமிக்கும் படியான பல போட்டோக்கள் போன இடம் தெரியவில்லை....அந்தக் கட்டிடத்தில் இப்போ என்ன இருக்கிறது..? யாருக்கும் கவலையுமில்லை...அக்கறையுமில்லை.... காந்தி மகானை தேசமும் மறந்தது. கடுக்கரையும் மறந்தது....

No comments:

Post a Comment