Wednesday, July 27, 2011

மந்திரத்தை நம்பி மதி இழந்ததால் ஏற்பட்ட கொடுமை

கிச்சனும் கணபதியும் பள்ளியில் வகுப்புத் தோழர்கள்.

கிச்சனின் அப்பா வசதி படைத்த நல்ல மனம் படைத்தவர்.
கணபதிக்கு அப்பா கிடையாது.

அம்மை தினமும் மோர் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் இருவரும் காலத்தை கழித்துக் கொண்டிருந்தாரகள்

கணபதி நன்றாகப் பாடுவான். ஒரளவு படிக்கவும் செய்வான். தினமும் காலையில் ஒரு பையை எடுத்துக்கொண்டு போய் பின்னங்கொட்டை பொறுக்கி அம்மாவிடம் கொடுப்பான். அதை காசாக்கி சேமித்து வைப்பாள். அறுவடை காலத்தில் அறுக்கும் வயலில் உதிர்ந்து கிடக்கும் கதிரை எடுத்தும் ,தேங்காய் வெட்டும் தோப்பில் தேங்காய் பொறுக்கிப் போட்டால் கிடைக்கும் தேங்காயையும் கொடுத்து அம்மாவின் சுமையை அவனும் சுமந்து வந்தான்.

கிச்சனுக்கும் கணபதிக்கும் படிப்பதில் போட்டி.தினமும் இருவரும் சேர்ந்தே பள்ளிக்கூடம் போவார்கள்.கணபதி பள்ளிக்கு வரவில்லையென்றால் கிச்சனுக்கு வகுப்பில் இருக்கவே பிடிக்காது. மாலையில் அவன் வீட்டில் போய் பார்த்து அவனுடன் பேசினால் தான் கிச்சன் நிம்மதியடைவான்.கிச்சனுக்கு குடிக்க மோர் கொடுப்பாள் கணபதியின் அம்மா.காசு கொடுத்தாலும் வாங்க மாட்டாள்

சிவாஜி, எம்.ஜி.ஆர் -ஐ தியேட்டரில் அவன் பார்த்ததே இல்லை. சுவரில் தான் பார்த்திருக்கிறான்.கிச்சன் கூப்பிட்டாலும் சினிமா பாக்க போக மாட்டான். கிச்சனுக்கும் கணபதியில்லாமல் சினிமா பார்ப்பது பிடிக்கவில்லை. நிறுத்தி விட்டான்.கிச்சனிடமும் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. காரணம் கணபதி. அவன் வறுமையிலும் நேர்மையானவன்.

தன்மகன் நல்ல பண்புகளுடன் இருப்பதற்கு காரணமே கணபதியின் நட்புதான் என கிச்சனின் அப்பா அவனிடமே கூறுவார். புஸ்தகம் வாங்க காசு கொடுத்தாலும் கணபதி வாங்க மாட்டான்.
கணபதி கிச்சன் வீட்டுக்கோ, தோட்டத்துகோ போவான் ஆனால் வேலை செய்து காசு வாங்கவே மாட்டான்.கிச்சன் வீட்டில் கணபதிக்கு அதிக மதிப்புண்டு.

கீச்சானின் சப்தம் கேட்பதற்காக கீச்சானை வைத்து பள்ளி மாணவர்கள் களிப்பதுண்டு

கணபதிக்கு கீச்சான் பிடித்துக் கொடுத்தால் நாலணா ,எட்டணா கிடைக்கும்.

கணபதியின் அம்மா அவனிடம், “கீச்சான் பிடிக்க மரத்திலெல்லாம் ஏறாதே..விழுந்திருவ”

ஒரு மத்தியான வேளை. ஊரெல்லாம் ஒரே பேச்சு “கணபதியை பாம்பு கொத்திற்று.”

கிச்சன் காதிலும் விழுந்தது. ஒடினான். எங்கெல்லாமோ தேடி கடைசியில் அவன் இருந்த இடம் அறிந்து அங்கே போனான். அந்த வீட்டின் படிப்புரையில் மயங்கிய நிலையில் கிடந்தான்.
கிச்சனுக்கு அழுகையே வந்தது... திரும்ப வீட்டுக்கு ஓடிப் போய் அவன் அப்பாவிடம் விசயத்தைக் கூற அவரும் வந்து பார்த்து , “ கணபதியை ஒரு டாக்டரிடம் அல்லது நம்ம வைத்தியரிடமாவது காண்பிக்கலாம்......கடித்த இடத்தில் ஒரு கயறு வைத்து கட்டவாவது கூடாதா....” சத்தம் போட்டார்.

கணபதியின் அம்மா அழுது கொண்டே இருந்தாள்... அங்கிருந்த ஒரு ஆள், கணபதியின் சொந்தக்காரன்,“ அந்த வீட்டில் உள்ளவருக்கு மந்திரம் எல்லாம் தெரியும்...விசத்தை இறக்கீருவாரு....அவர்தான் கட்டியிருந்த கயிற்றையும் அவிழ்த்துட்டாரு...”

விசம் வேகமாக தலைக்குப் போயிற்று

கணபதியின் நிலமை மிக மோசமானது... யாரொ ஒருவர் உள்ளூர் வைத்தியரை அழைத்து வந்து அவர் கணபதியின் உயிர் பிரிந்தது என சொன்ன பிறகு தான் உண்மை தெரிந்தது.

மந்திரம் மகனைக் காப்பாற்றும் என நினைத்த தாய் கதறினாள்.... ஊர்க்காரர்கள் மந்திரவாதியை ஏசியும் அவர் வீட்டின் மீது மண்ணையும் கல்லையும் வீசினாரகள்.

கிச்சன் மாத்திரம் பயித்தியம் பிடித்தது போல் அழுது கொண்டே போனான்.

கிச்சனின் அப்பா, “ மந்திரத்தை நம்பி மதியையும் இழந்துட்டோமே. ஏன் , அந்த கயிற்றை அவிழ்த்தான்... இது கூட தெரியாத சண்டாளனா அந்த.........”

No comments:

Post a Comment