Friday, July 22, 2011

நான் படுத்திய பாடு

எட்டாம் வகுப்பு முடிந்ததும் அடுத்து 9-ஆம் வகுப்புக்கு பூதப்பாண்டிக்கு நடந்துபோய் உயர் நிலைப் பள்ளியில் படிக்கணும் . காலையிலும் மாலையிலும் நடக்கணும்.

எனக்கு டி.சி வாங்கி அப்பா என்னை பூதப்பாண்டி ஹைஸ்கூளில் கொண்டு போய் சேத்தாங்க.

புது விதமான சந்தோசத்தில் இருந்த போது என் நண்பன் பப்பு, “ நான் திருவனந்தபுரத்தில் என் மாமாவின் வீட்டில் நிண்ணு படிக்கப் போறேன்...” மகிழ்ச்சியோடு கூறினான்... அய்யோ எனக்கும் ஒரு மாமாவோ யாருமே திருவனந்தபுரத்தில் இருக்கப்டாதா...பப்பு போவது வருத்தமாக இருந்தது

“தங்கப்பா...நானும் சந்திரனும் நாரூல்ல டி.வி.டி பள்ளியில் படிக்கப்போறோம் ..” சுரேந்திரன் கூறினான்.... ஓரு பேச்சுக்குக் கூட என்னை நீயும் வாயேன் எங்கக்கூட என்று சொல்லவில்லை.

“நீ எப்படிப் போவ... பஸ்ஸிலா...”

“இல்ல.. சின்னம்ம வீட்ல நிண்ணு படிக்கப்போறேன்”

“எனக்குண்ணு அப்படி யாருமே இல்லையே”...மிகவும் நொந்து போனேன்.

பள்ளிக்கூடம் திறந்து போக ஆரம்பித்தோம்... ஆனால் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லாமலே நான் போய் வந்து கொண்டிருந்தேன்.

எங்க அம்ம அப்பாட்ட ,“தங்கம் நாரூல்ல படிக்கணுங்கான் “.

“ போ ஒங்க மாமாவைக் கூட்டீற்றுப் போய் சேந்துக்கோ”.அப்பா என்னைப் பாத்து சொன்னார்

உடனே என் தாய் மாமாவைப் பார்த்துச் சொன்னேன்.DEO –டம் அனுமதி வாங்கி பூதப்பாண்டியில் இருந்து TC வாங்கி கார்மல் பள்ளிக்கூடத்தில் சேர்த்து Hostel-லும் சேர்த்து விட்டார்.

முதல் ரெண்டு நாள் ஊரில் இருந்து வந்தேன்.

அந்த சமயத்தில் ரவி பூதப்பாண்டியில் 11-ஆம் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தான்.

என்னைப் பார்த்து அவனும் கார்மலில் வந்து சேர்ந்தான்.

திங்கள் வந்தது. வகுப்புகள் முடிந்தன. ஹாஸ்டலில் தனியாக ரூமில் இருக்கணும் என்ற சிந்தனையில் போன எனக்கு முதல் அதிர்ச்சி படுக்க படிக்க எல்லாத்துக்குமே ஒரு பெரிய ஹால். என்னுடைய தட்டமும் கப்பும் படுக்கைக்குப் பக்கத்தில் இருந்தன.

விளையாட்டு மைதானத்திற்கு எல்லாரும் போனார்கள். நானும் போனேன்.
6 மணியானதும் பெல் அடித்தார்கள். படிக்க ஆரம்பித்தாரகள்.. 7.30க்கு மணி அடித்தது தட்டத்தை எடுத்துக் கொண்டு சாப்பிடப்போனோம்.

மறுபடியும் மணி அடிக்க படிக்க ஆரம்பித்தோம்....ஒரு குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் தூங்கப் போகணும். இவை எதிலுமே என் மனம் ஒன்றவில்லை.

மறுநாள் காலை எனக்கு காய்ச்சல். ஒரு லீடர் உண்டு. தவ்று செய்தால் பெயர் எழுதிக் கொடுக்கும் ஒரு பவர்புள் அதிகாரம் அவனுக்கு உண்டு. எல்லோரும் அவனுக்கு பயப்படணும். எனது லீடர் வள்ளிநாயகம் (அழகியபாண்டியபுரம்).

“என்னா பொன்னப்பா எப்படி இருக்கே... முகமே ஒரு மாதிரில்லா இருக்கு... காச்சலா... புடிக்கல்லியா.... வீட்டுக்கு போணுமோ” கேட்டான் வள்ளி.

நான் ஒண்ணுமே சொல்லல்ல.... முதல் வாரமானதால் வெள்ளியன்று கடுக்கரையில் இருந்து என்னைகூட்டிகொண்டு போக பிச்சக்கண்ணு பிள்ளை வந்தார்.

அவருடன் போகும்போது அவர் என்னைக் கேட்டது. “ ஹாஸ்டெல்லாம் புடிச்சிருக்கா”

திங்கள் காலை அம்மையிடம், “ நான் படிக்க மாட்டேன்... படிக்கணும்னா வீட்டில் இருந்து

தினமும் பஸ்ஸில போறேன்”

“ இப்பம் அப்பா வருவா... சொல்லு நல்லா அடிபடப்போற..”

நான் என் ஆச்சி இருந்த அறையில் போய் இருந்து கொண்டேன். அந்த ஒரு ரூமுக்கு அப்பா வரமாட்டார்.

ஆச்சி ,”போ மக்கா உன்ன நம்பில்லா ராசத்துக்கு மகனும் அங்க வந்து சேந்திருக்கான். இந்த ஒரு வருசமும் படி போ...”

அப்பா அம்மையிடம் சொன்னது எனக்கு கேட்டது. “பஸ்ஸில போய்தான் படிக்கணும்னா

அவன் படிக்கவே வேண்டாம்.... நாளையிலிருந்து மாட்டை மேய்க்கச்சொல்..”

நான் மிகவும் அடம் பிடித்து ஆச்சியின் ரூமை விட்டு வெளியே வரவில்லை.....
சாப்பிடவும் இல்லை

நாட்கள் கழிந்தன.....அப்பாவின் மனம் மாறியது....அப்போதைய டி.இ.ஓ அப்பாவுக்கு மிகவும் தெரிந்தவர்.அவர்,பையன் நல்ல பள்ளிக்கூடத்திலதானெ படிக்கான்.படிக்கட்டும்..பையனை சப்பட்டையாக்கீராதீங்கோ.... என்ன செய்வதன்றே தெரியாமல் மனம் வருந்தி வீட்டுக்கு வந்தார்.

மாமா தான் எப்படியோ அனுமதி வாங்கி மறுபடியும் பழைய குருடி கதவைத்திறடி என்பது போல பூதப்பாண்டிக்கே வந்து சேர்ந்தேன்.

நான் என் தந்தைக்கு பலவிதத்தில் மன வேதனையையும் உளச்சலையையும் கொடுத்ததை

இன்று நினைத்தாலும் என்னையே எனக்கு பிடிக்காமல் போய்விடுகிறது.

No comments:

Post a Comment