Wednesday, July 20, 2011

கடுக்கரை ஆறுமுகம்பிள்ளையும் இடலாக்குடி ரஹீம்சாகிப்பும்

தந்தையின் நட்பை மதித்த மகன்

என் தந்தையின் உயிர் நண்பர்.அவர் பஸ் முதலாளியாக இருந்தவர்.அவரிடம் வேலைபார்த்தவர்களே பின்னால் பிரபல பஸ் முதலாளியானார்கள்.

அவருடைய புன்சிரிப்புதான் அவருக்கு அழகு. எப்பொழுதும் உண்மையே பேசுவதால் அவர் முகமும் அழகாகவே இருக்கும். தனக்காக ரயில்பிரயாணத்தின் போது ஒருவரை தன் மகன் அடித்து அது பிரச்சனையாகி போலீஸ் வந்து விசாரிக்கும்போது சாட்சி சொல்ல யாருமே முன்வராத நிலயில் அடித்தான் என்று சாட்சி சொன்னவர்.

வயதான காலத்தில் தனியாக இருக்க விரும்பி மணக்குடிக் கடற்கரையில் ஒரு இடம் வாங்கி ஒரு குடில் அமைத்தார்.அது அவருடைய பிள்ளைகளே அப்பாவுக்காக கட்டிக்கொடுத்தது.அங்கு தான் தங்கினார்.ஆன்மீகப் பயணத்தை தவிர அவர் எங்கும் எதற்கும் போவதில்லை.

அந்த ஊரில் கூட தண்ணீருக்காக கிணறு தோண்டினால் அது உப்பு நீராகவே இருக்கும். ஆனால் குடிலுக்கும் கடலுக்கும் இடையில் இவர் தோண்டிய இடத்தில் சுவையான நீர் கிடைத்ததை அவர் ஆண்டவன் கருணை என்றே கூறி வந்தார்.

வீட்டு வாசலில் அவர் அங்கு இல்லையென்றால் ஒரு அட்டை தொங்கும் அதில் இருக்கும் வாசகம் , “ வெளியூர் சென்றிருக்கிறேன்.திரும்பி வருவது ஆண்டவன் கையில்”.

என்னை அவரது பிள்ளை போலவே பாசம் காட்டுவார். நாகர்கோவில் வந்தால் மணிமேடைப் பக்கம் உள்ள ஒரு மாடியில் இருக்கும் அவரைப் பார்க்காமல் நானோ எனது அப்பாவோ
போனதே கிடையாது. என்னை பாளையங்கோட்டையில் St.Xaviours Hostel-ல் சேர்த்தவர் அவர். காலங்கள் கரைந்தோடின. கடற்கரையில் இருக்கும் அவரைக் காணச் சென்றேன்..அன்போடு உபசரித்தார்.

நான், “ மார்ச் 28-ஆம் தேதி எனக்கு கல்யாணம். கண்டிப்பா வரணும்”

அதற்கும் பதில் ஒரு புன்சிரிப்பு தான். அவரைப்பார்த்த பின் அவரது மகனையும் அவர் வீட்டில் போய் அழைத்தேன்.அவர், “ நாங்கள் எல்லோரும் கண்டிப்பாக வருவோம் ஆனா அப்பா வரவே மாட்டார்.இது வரை எங்கும் போனதில்லை அதனால நீ தப்பா நினச்சுராதே”

என் திருமணத்திற்கு அவரது மனைவி உட்பட எல்லோரும் வந்தார்கள்.பெரியவரை அவர்களுடன் காண வில்லை.

திருமணச் சடங்கு, சாப்பாடு எல்லாம் முடிந்து நான் ஒரு அறையில் இருக்கும்போது ஆஜானுபாகுவான பெரியவர் அவருக்கே உரித்தான அழகு தரும் அந்தக் காந்தக் கவர்ச்சிப் புன்னகையோடு வந்தார். நான் பட பட வென்று எழுந்து நின்று வரவேற்றேன்.

“பொண்ணக்கூப்பிடு... திருநீறு எடு”

நாஙகள் அவரது காலில் விழுந்து வணங்கி அந்த மகானின் ஆசி பெற்றோம் .

“ என்ன.. அப்படிப் பாக்குற..ஓங்கல்யாணத்திற்கு என்னால வராம இருக்க

முடியமா?.ஆறும்பிள்ளை ஏசிப்புடுவார்ல்லா ?” புன்சிரிப்போடு சொன்னார்....

நட்புக்கு அவர் கொடுத்த மதிப்பு கண்டு நான் மலைத்து விட்டேன். என் மேல் உள்ள

அன்பையும் நான் புரிந்து கொண்டேன்.என்அப்பா அடைந்த அதிக

மகிழ்ச்சியையும் கண்டேன்.

1979 என்று நினைக்கிறேன் வருடம் சரியா ஞாபகம் இல்ல. ஒரு நாள் ஒரு மத்தியான நேரம்

“தங்கம்... தங்கம்...” அழைத்தார் அப்பா. பதட்டத்தோடு காணப்பட்ட அப்பா என்னிடம்

“ நம்ம ரஹீம் இறந்துட்டாரு...எனக்கு நடக்க முடியாதுல்லா..நீ போவியா...”. அப்பாவின்

கண்களில் கண்ணீர் ..

இடலாக்குடி... அரிப்புத்தெரு.. அவர் வீட்டுக்குப் போனேன். பெரும் கூட்டம்

அவரது மகன் அன்சாரி என்னைக் கண்டதும் , “ தங்கம்.. இங்க வா”

என்னை அந்தப் பெரியவரின் உடல் இருந்த கட்டிலின் அருகே கூட்டிக்கொண்டு போனார்.

பெரியவரின் மேல் உள்ள போர்வையை முகத்தை பார்ப்பதற்காக சற்று அகற்ற முற்படும்போது

அன்சாரியிடம்,“ இனிமேல் துணியை நீக்கி முகத்தை காட்டக்கூடாது ” ஒரு பெரியவர்

சொன்னது என் காதிலும் விழுந்தது.

“ இது யாரு தெரியுமா ? கடுக்கரை ஆறுமுகம்பிள்ளையின் மகன். வாப்பா மதிக்கும் ஒரு

பெரியவரின் மகன்...இவன், முகத்தைப் பார்த்தால் தான் என் மனம் சந்தோசப்படும் என

உறுதியான குரலில் கூறவே, முகத்தினை மூடியிருந்த போர்வை முகம் மாத்திரம்

தெரியும்படி அகற்றப்பட்டது . அழகான அதேப் புன்சிரிப்பு....அவர் முகம் கண்ட நான் என்

முகம் பொத்தி வாய் விட்டு அழுதே விட்டேன்.

கனத்த மனதோடு வீடு வந்து சேர்ந்து என் தந்தையிடம் விவரம் கூறினேன்

நெகிழ்ந்து போன அப்பாவின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு கன்னத்தில் வழிந்தோடியது.

நண்பனின் மறைவுக்காக என் அப்பா வருந்தியதை கண்டு நானும் கலங்கினேன்

நட்புக்கு வயோதிகமும் இல்லை மரணமும் இல்லை.

தந்தையின் நட்புக்கு மதிப்பளித்த

மகனின் செயல் இன்றும் என்நெஞ்சை வருடிக் கொண்டிருக்கிறதே.

மதம் கூட நட்புக்கு குறுக்கே வரவில்லையே...

No comments:

Post a Comment