Monday, October 31, 2011

சபரிமலை யாத்திரை

கழிந்த வருடம் நான் தனியே சும்மா இருந்து என் மனம் போன போக்கிலே மனதை ஓடவிட்டுக் கொண்டிருந்தேன். ஓய்வு பெற்ற பின் எனக்கு வந்த ஒரே கடிதம் ஞாபகத்துக்கு வந்தது.அதை எழுதியது சென்னையில் இருந்து ஓய்வு பெற்ற காந்தியண்ணன்.என்னை பாராட்டியும் நான் கல்லூரி முதல்வர் ஆகவில்லையே என்ற தன் ஆதங்கத்தையும் எழுதிவிட்டு ஓய்வு பெற்றபின் எப்படி வாழ வேண்டும் என்பதனையும் எழுதியிருந்தார்.INDIAN EXPRESS க்கு Letters to the Editor க்கு எழுத அறிவுரையாக வேண்டியிருந்தார். 80 கடிதங்களுக்கும் அதிகமாக எழுதிய எனக்கு ஏனோ அதில் ஈடுபாடு வரவில்லை.

அடுத்து மனைவியை அவள் விரும்பிய வெளியூர் கோயிலுக்கெல்லாம் அழைத்துப் போக எழுதியிருந்தார். இதனை சரியாக செய்தேனா ....பல இடங்களுக்கு நாங்கள் இருவரும் போய் வந்திருக்கிறோம்.

என் தனிமையைக் கலைத்தாள் என் மனைவி. அவளிடம், “நீ போணூம்னு நினச்ச கோயிலுக்கெல்லாம் போயாச்சுல்லா.புதுசா ஒண்ணும் சக்திவிகடன்ல பாக்கல்லியா...” கேட்டேன்.

“அய்யப்பன் கோயிலுக்குப் போணும்.நான் சாகதுக்குள்ள ஒரு தடவை எப்படியாவது கூட்டிற்றுப் போயிருங்கோ”

“சபரிமலைக்கு என்னால நடந்து வர முடியும்னு தோணல்ல.உனக்கு முடியுமா ? முடியும்னா நீ காரில் துணைக்கு யாரையாவது கூட்டிட்டுப் போ.”

“போனா உங்களோடுதான் போவேன்.உங்களுக்கு மலையெல்லாம் ஏற முடியும்...வாங்க எனக்கு வேண்டி... இந்த ஒரு தடவை தானே”. கேட்டதும் எனக்கு இரக்கமாய் இருந்தது அவள் முகத்தைப் பாக்க.

கார்த்திகை மாசம் போனாலும் மகரவிளக்குக்கு போனாலும் கூட்டமா இருக்கும். ஃபெப்ருவரி மாதம் அவ்வளவு கூட்டம் இருக்காது.

புதன்கிழமை அல்லது சனிக்கிழமை சாமியை கும்பிடணும். மாசிமாதம் நடைதிறப்பு எந்தத் தேதியில் எனப் பாத்து 12-ம் தேதி போகலாம் என முடிவு பன்ணினோம். உடனே நான் என் மாணவர் ராஜேஸ்வரனிடம் பேசி ரூமுக்கு arrange பண்ணச் சொன்னேன்.அவர் ஒரு கடிதம் தந்தார்.இப்பம் மாதம் கார்த்திகை இன்னும் 3 மாதம் இருக்கிறது.லெக்‌ஷ்மணனும் கூட வருவதாக் கூறினான்.ஆனால் அவன் முதல்தடவை போவதால் 41 நாள் விரதம் இருந்து கார்த்திகை மாதம் தான் போகணும் என்பதால் வரல்லன்னு சொல்லிட்டான்.

எங்கள் காரில் போவதென முடிவு செய்து விட்டோம்.ராமு கார் ஓட்டுவான்.அவனும் நம்முடன் கோயிலுக்கு வருவான்.

தை மாதம் விரதம் இருக்க ஆரம்பித்தாள் என் மனைவி. என் மனைவி, “சிவகோல மதினியும் நம்முடன் அய்யப்பன் கோயிலுக்கு வாறாளாம்.” என்றாள்.

“அவளுக்கு முட்டு வலி இருக்குல்லா...மலை ஏறி நடந்து வர முடியுமா....”

“அவ ரொம்ப ஆசப்படுகா....நாம் கூட்டிற்று போலாமே”

“சரி...வரட்டும் ...மெதுவாப் போனா போயிரலாம்” என்றேன்.

ஃபெப்ருவரி 11-ம் தேதி Armed Reserve Police Camp-ல் உள்ள பிள்ளையார் கோயிலுக்குப் போய் நானும் என் மனைவியும் மாலை போட்டோம்.
அன்று இரவு எங்க வீட்டில் வைத்து இருமுடி கட்டினோம்.குருசாமி அய்யப்பன். நெய் அடைக்கும் போது எங்களுடன் சேர்ந்து சரணம் சொல்லிப் பாடி பாபு,மீனா,அய்யம்ம மதினி,புஷ்கலை எல்லோரும் உதவி செய்தனர்

காலை 5.45 மணிக்கு நடேஷின் காரில் போனோம். போகும்போது திருவனந்தபரத்தில் குமாரியின் வீட்டுக்குப் போய் ரூமுக்கு லெட்டர் வாங்கிற்றுப் போனோம்1.30 மணிக்கு பம்பையில் போய் சேர்ந்தோம். நடேஷின் காரில் வந்ததால் மிகவும் வசதியாய் இருந்தது. கொண்டு போன சாப்பாட்டை சாப்பிட்டோம்.சரியாக 2.15க்கு மலை ஏற ஆரம்பித்தோம்....

இரண்டு பேர் எங்கள் பின்னாலேயே வந்து, “சாரே....வெயில்ல மலை ஏறுவதற்கு உங்களால முடியாது. டோலியில் போலாம்...” என தலையாளத்தில் பேசிக் கொண்டே வந்தான்.

நான் அவனிடம் என்ன ரேட்டு எனக் கேட்க , “ மேல ஏறுவதற்கு 750 ருபாய். ஏறுவதற்கும் இறங்குவதற்கும் 1300/-” என்றான்.

அம்ம ரெண்டு பேருக்கும் ஏற முடியாது என்று கூற என் தங்கை,“ எது வரை ஏற முடியுமோ அது வரை போவோம்.ஏற முடியல்லண்ணா திரும்பீருவோம்.” எரிச்சலுடன் கூறினாள்.

கொஞ்ச தூரம் மேலே போனதும் நாங்கள் அவர்களது சுமையை வாங்கினோம். ஒரு பெரிய ஏற்றம் வந்தது.கொஞ்சம் இளைப்பாறிவிட்டு மேலே ஏறலாம்.....பைனாப்பிள் துண்டுகள் வாங்கிச் சாப்பிட்டோம். எம்மா....டோலி வேணுமா என்ற சத்தத்தை கேட்டு என் தங்கச்சிக்கு கோபம் வந்து அவனை கடும் சொற்களால் திட்டினாள்.....

ஏற ஆயத்தம் ஆனதும் சார் ஒரு பத்து ருபா தாங்கோ...அவன் ஏச்சுப் பட்டவன்....அதனால் நான் ருபா கொடுத்தேன்.மிகவும் நிதானமாக ஏற்றங்களில் ஏறி சன்னிதானத்தை அடையும் போது மணி 5.15.

3 பேரிடம் இருந்து ரூமுக்காக கடிதம் வாங்கிக் கொண்டு போனோம். லெட்சுமணன் தந்த கடிதத்தால் அழகான ரூம் கிடைத்தது....18 படிகள் ஏறி சாமிதரிசனம் முடிந்து காலையில் நெய் அபிசேகத்துக்கும் ஏற்பாடு செய்து விட்டு கடைகளுக்கு பொருள் வாங்க கிளம்பினோம்.திரும்பவும் பக்கவாட்டுப் படிவழியாக போய் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிட்டோம்.கீ செயின்,பாசி எல்லாம் வாங்கிவிட்டு ரூமில் படுத்து உறங்கினோம்

அதிகாலையில் அபிஷேகம் பண்ணியபின் சாமி கும்பிட்டு விட்டு மிகவும் திருப்தியுடன் கடையில் போய் காப்பி,தோசை சாப்பிட்டொம்.

ரூமுக்குப் போனோம்.....நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். கிட்டத்தட்ட 18 தடவை சபரிமலைக்கு வந்திருக்கிறேன் .ஆனால் இது போல் வசதியாக வந்ததே இல்லை.

நான் என் மனைவியிடம், “ என்ன திருப்தி தானா ! சிவகோலம் தான் சிரமம் இல்லாமல் மலை ஏறினா..எனக்கு கொஞ்சம் தெவங்கிச்சு...நீ கஷ்டப்படிவியோன்ணு நினச்சேன்...பரவாஇல்ல...அதிகம் கஷ்டப்படல்ல....திருப்தி தானா” ...

“ ரொம்ப சந்தோசமா இருக்கு... நீங்க லெட்சுமணனுக்குப் போண் பண்ணி thanks சொல்லுங்கோ..... அடுத்த வருசமும் இதே மாதிரி ரூமுக்கு ஏற்பாடு பண்ணணும்னூம் சொல்லி வச்சிருங்கோ”....

சிரித்துக் கொண்டே கீழே இறங்க ஆரம்பித்தோம். கடுக்கரைக்கு வந்து தங்கச்சியை அவள் வீட்டருகில் இறக்கி விட்ட பின் பொன்னப்பர் காலனிக்கு சாயந்திரம் 4 மணிக்கு வந்து சேர்ந்தோம். காரை மிகவும் பாதுகாப்பாக ஒட்டிய ராமுக்கு நன்றி சொல்ல காரை நடேஷின் வீட்டில் கொண்டு விட்டுப் போனான்.

நாங்கள் கொண்டுபோன சாப்பாடு மிக அதிகம்.அடுத்த நாளுக்குள்ளதை யாரிடமோ கொடுத்தோம். 10 ருபாய்க்கு நல்ல காப்பி கிடைத்தது.இட்லி,தோசை,சப்பாத்தி என எல்லாமே கிடைத்தது.ருசியாகவும் இருந்தது.

நாங்கள் மகரவிளக்கு முடிந்த உடன் போனதால்.கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.இனிமேல் போவதாய் இருந்தால் ,சாமியின் கருணையும் அருளும் இருந்தால் மார்ச்சு மாதம் அதாவது பங்குனி மாதம் சபரிமலைக்கு நானும் அவளும் போகணும்.


சாமியே சரணம் அய்யப்பா.

Sunday, October 30, 2011

அய்யப்பன் கோயில் விரதம்

1973 ல் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த சமயம். நவம்பர் மாதம் சபரிமலைக்கு மாலை போட்டு 9 நாள் விரதம் இருந்து ஒரு பஸ் வாடகைக்குப் பிடித்து போவதற்காக plan போட்டபோது என்னையும் அழைத்தார்கள். எனக்கு ஒரே ஆச்சரியம்.41 நாள் விரதம் இருந்தல்லவா போகணும்.அதிலும் முதல் தடவை போகும் கன்னி ஐயப்பன் மார்கள் 41 நாள் விரதம் இருக்காமல் போகலாமா ?.ஒரே குழப்பமாய் இருந்தது.

கடுக்கரையில் குருசாமிகள் பலர் உண்டு.நாகருபிள்ளைகுருசாமியிடம் போய் விசயத்தைக் கூறி போகலாமா எனக் கேட்க அவர்,கன்னி ஐயப்பன் மாரெல்லாம் விரதம் இருந்து நடந்து தான் தை மாதம் விளக்குக்குதான் போகணும் என்றார். தாமுஅண்ணனிடம் கேட்டதில், சும்ம போப்போ அந்தக் காலத்துல சொன்னாங்க அப்பம் சாலை வசதி கிடையாது.இப்பம்லா பம்பை வரைக்கும் பஸ்ல போகலாம்.நடை துறந்த அண்ணைக்கே கூட்டம் வந்திரும்.எல்லாத்துக்குமே மனசுதான் காரணம்.சாமி ஒண்ணும் செய்ய மாட்டாரு.

அப்பா என்னிடம், “ஒருத்தருட்டயும் ஒண்ணும் கேக்காண்டாம்.பிரின்சிபால், பறவைக்கரசு, வேலப்பன் லாம் வாறாங்கள்ளா. போயிற்று வா.கார்த்திகை ஒண்ணாம் தேதி மாலை போடு...”

கடுக்கரையில் ஐய்யப்பன் கோயிலுக்கு காலையில் நான் என் அம்மையுடன் போய் மாலையை சாமி சன்னதியில் வைத்து வணங்கினேன். அம்மைதான் அந்த மாலையை என் கழுத்தில் போட்டாள்.நான் அம்மையின் காலைத் தொட்டு வணங்கினேன்.குருசாமி என்று யாரையும் மாலை போடுவதற்கு நான் தேடிப் போகவில்லை.

கல்லூரிக்கு போய் சாயந்திரம் வீட்டுக்கு வந்தேன். அடுக்களையில் அம்மையை தேடினேன்.அம்மா அங்கு இல்லை.வீட்டுக்குப்பின் வடக்குத் தாவாரத்தில் ஒரு புதிய அடுக்களை உருவாகி சூட்டடுப்பில் இட்லி அவித்துக் கொண்டிருந்தாள் அம்மா....

‘ என்னம்மா இதெல்லாம் உன்ன கஷ்டபடுத்தவா நான் மாலை போட்டிருக்கேன்.’ நான் சத்தமாகவே கேட்டேன்.

‘அப்பாதான் சொன்னா....இன்னும் ஒரு வாரம்தானே...விரதம் இருக்கணும்னா சும்மையா.

‘எல்லாம் சுத்தமா இருக்கணும். நானும் உனக்கு வேண்டி காலையில் குளித்து விட்டுதான் இந்த இடத்தை சாணி வைத்து மெழுகி அதன் பிறகு தான் அடுப்பை பத்தவைப்பேன்...’

‘ஒரு வீட்டுக்கும் போயிராதே. போனால் என்னமாம் தந்தால் திண்ணுராதே. கண்ட கண்ட ஹோட்டல்ல சாப்பிடாதே...’

நான் ஒருவன் மாலைப் போடப்போய் எனக்கு முன்னாலயே அம்மையும் அப்பாவும் குளித்து நான் சாப்பிட்ட பின் அவர்கள் சாப்பிட....என் மனதில் இனம் புரியாத நெருடல். இதாவது பரவாய் இல்லை. என்னை விட 25 வயது கூடுதலான Lab attendar என்னை சாமி எனவும் நீங்க வாங்க போங்க...எனப் பெரிய மரியாதையுடன் பேசியது எனக்கு கூச்சமாக இருந்தது.

குறிப்பிட்ட நாளில் பயணமானோம். நடு இரவில் எங்கேயோ வண்டி நின்றது. அடைத்துக் கிடந்த கடையின் முன்னால் சிமென்ட் தரையில் படுத்து உறங்கி காலையில் பக்கத்தில் உள்ள ஆற்றில் காலைக் கடன்களை முடித்து விட்டு பயணமாய் பம்பை போய் சேர்ந்தோம். அங்கு குளித்தொம். காலையில் ஏதாவது சாப்பிடணுமே....நிறைய ஹோட்டல்கள் ....நாங்கள் சாப்பிட்டொம்.எங்களுடன் வந்த குருசாமியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் சாப்பிட்டது ப்ரோட்டா....சாப்பிடலாமா....சாப்பிடலாம் ,இருமுடிப்பையில் உள்ள நெய்த்தேங்காயில் நெய் அடைச்சா விரதம் எல்லாம் முடிஞ்சு...இப்படி ஒரு விளக்கம் சொன்னார்கள்....என் மனம் ஒத்துக்கவே இல்லை...எனக்காக வீட்ல அம்மா அவ்வளவு கஷ்டப்பட்டுருக்கணுமா.கடுக்கரையில் அய்யப்பன் கோயிலுக்கு போகும்போது விரதம் இருந்தா போகிறோம்.சபரிமலைக்கு பழைய காலத்தில் பஸ் வசதி கிடையாது.நடந்து செல்லும் போது சரியான சாப்பாடு கிடைக்காது,குளிர் காலம்,....இது போன்ற சிரமங்களை தாங்கிக் கொள்வதற்காக ஒரு பயிற்சியாய் செய்தவைகளை இப்போதும் தேவையே இல்லாமல் கடைபிடிக்கிறோம்.

நான் மனதளவில் சுத்தமாகவும் என்னுடன் குறைந்தது ஒருவரையாவது எனது செலவில் அய்யப்பன் கோயிலுக்குப் போகும் போது கூட்டிக் கொண்டு போவேன். என்னைப் பொறுத்தளவில் இது ஒரு ஆன்மீக சுற்றுப் பயணம்.

கோயிலுக்கு 18 படிவழியாக ஏறி சாமி தரிசனம் முடிந்து சுகமாய் வீடு வந்து சேர்ந்தோம்.
பாரம் குறைந்த இருமுடிப்பைக்கு சூடம் கொழுத்தி மாலையை கழற்றினேன்.

நான்கைந்து தடவை இது போல் போனேன். யாரையும் அதிகம் கஷ்டப்படுத்தாமல் முறைப்படி
விரதம் இருந்து தான் போனேன். மாலை போட்டபின் எல்லோர் வீட்டுக்கும் போவேன். பேசிக்கொண்டிருப்போம். ஆனால் நான் கேட்டாலும் குடிக்கக்கூட தன்ணிர் தர மாட்டாங்க....அய்யய்யோ மாலை போட்டிருக்க வீட்ல போய் குடி....சில காரணங்களால் வீடு சுத்தமாயில்ல என்று சொல்லி வீட்டுக்கு வரக்கூடாதும்பாங்க.....

நம்மைத் தேவையே இல்லாமல் கஷ்டப்படுத்தி இருமுடிப்பையை தூக்க முடியாத அளவிற்கு நிரப்பி தலையில் வைத்து நடக்க முடியாமல் நடந்து போகிறோம்.நாம் கொண்டுபோன எதையுமே அய்யப்பன் சன்னதிக்குள் கொண்டு போக முடியாது.

மலையாள மக்கள் ஒரெ ஒரு நெய் தேங்காய் மட்டுமே கொண்டு வந்து சாமி கும்பிட்டு போகிறார்கள்.

1981-டிசம்பர் 25-ல் என் தந்தை இறைவனடி சேர்ந்த நாளில் இறுதிச் சடங்குக்கு பலர் வந்தார்கள். விளாங்காட்டில் இருந்து குமரேசனும் வந்திருந்தார்....குமரேசன் அய்யப்பன் கோயிலுக்கு போக மாலை போட்டிருந்தார்.அவரிடம்,“ நீங்க தாடியெல்லாம் வச்சுகிட்டு... மாலை போட்டிருக்கீங்க....ஏன் வந்தீங்க....”

அவர் சொன்னது,“ உங்க அப்பா போய் சேந்துட்டா.கடுக்கரையில் ஐயப்பன் கோயில் கட்டுவதற்கு இடம் கொடுத்தது அப்பா தானே.அவர் புகழ் சாகவே சாகாது.... இண்ணைக்கு வரல்லன்ணா நான் மனுசனே இல்ல. வந்ததை பெரும் பாக்கியமாகவே நினைக்கிறேன் விளக்குக்கு சபரி மலைக்குப் போகப் போறேன்....உங்க கோலப்பத்தானும் நானும் எப்படின்னு தெரியுமா.எப்படி சார் நான் வராம இருக்க முடியும்....”

குமரேசனின் குரல் அடிக்கடி என் காதினில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.....மண்டல பூஜையன்று தான் என் தந்தை மறைந்தார்....

அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களை மன்னித்தருள்வாய் சுவாமியே அய்யப்பா.

சுவாமியே சரணம் அய்யப்பா

Saturday, October 29, 2011

Mathematics Association meeting and myself

MATHEMATICS ASSOCIATION க்கு ஒரு தடவை துணைத் தலைவராக என்னை இருக்கும்படி மிகவும் எங்கள் HOD வற்புறுத்தியதால் சம்மதித்தேன். சாதாரணமாக students secretary தான் வருடத்துக்கு ஒரு தடவை நடக்கும் கூட்டத்துக்கு வெளிக் College ல் வேலை பாக்கும் maths lecturer or HOD ஐ பேசுவதற்கு அழைத்து வருவான்.அதுக்காக ஒரிரண்டு நாள் வகுப்புக்கு வராமல் தன்னுடன் 2 அல்லது 3 பேரைக் கூட்டிக் கொண்டு போயிருவான்.

நான் பொறுப்பேற்றபின் மாணவச் செயலாளரை அழைத்தேன். அவன் நல்ல படிக்கக் கூடிய மாணவன்தான். “ என்ன திட்டம் வைத்திருக்கிறாய்.Chief Guest யார் ?” எனக்கேட்டேன்.

‘சார், நீங்களே சொல்லுங்கோ.....உங்களுக்குத் தெரிந்த Lecturer யாராவது இருந்தால் நீங்களே fix பண்ணீரலாம். ’ என்று சொன்னான்.

“இங்க நாங்க நாள் பூராவும் கணக்குப் பாடம் தானே சொல்லித் தருகிறோம்.ஒரு மாற்றத்துக்காக Bankல இருந்து யாரையாவது கூப்பிடலாமா....உங்களுக்கு கொஞ்ச நேரம் பயன்படும் படியாக பேசினால் நல்லா இருக்கும்லா” என்றேன்.

அவன் போய்விட்டான் அடுத்தநாள் பதில் சொல்வதாகக் கூறிவிட்டு.

அவன் வந்து சரி சார்...நீங்க சொன்னபடியே செய்திருவோம் என்றான்.

எனக்குத் தெரிந்த ஒரு வங்கி மேலாளரை சந்தித்து பேசி தேதி, நேரம் எல்லாம் குறித்து விட்டு அந்த மாணவனிடம் ஒரு மரியாதைக்காக கல்லூரி விட்டபின் சாயந்திரம் அவரை சந்தித்துப் பேசச் சொன்னேன்.

எல்லாம் முடிந்த உடன் துறைத்தலவரிடம் கூட்டம் பற்றி மாணவச்செயலாளர் சொன்னதும்
“சரி, எப்பம் போய் சொன்னீங்க...class -கட் அடிச்சுட்டு போனீங்களா. என் வகுப்பில் ஆப்சன்டே இல்லையே...”

“AP சாரே பாத்துப் பேசி முடிச்சுட்டாரு. 4 மணிக்கு மேல் போய் மேலாளரை நாங்க கொஞ்சம் பேர் பாத்துட்டு வந்தோம்.”

சொன்ன நாளில் கூட்டம் நடந்தது. வந்தவர் கணித மாணவர்களுக்கு இருக்கக் கூடிய வாய்ப்பை விவரித்தார். மாணவர்களின் பேச்சு திறனை(Communication skill) வளர்க்க வேண்டும்.கிராமத்து மாணவர்களுக்கு ஒரு பிர்ச்சினை ஏற்படும்.கல்லூரியில் படிச்சிருக்கானே இவனுக்கு எல்லாமே தெரியும் என்று மணி ஆர்டர் ஃபாம்,வங்கியில் பணம் கட்ட ,வாங்க என்ன செய்யணும் என்றெல்லாம் கேட்பார்கள். சின்னப் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் கணக்குப் பாடங்களில்,ஆங்கிலப் பாடத்தில் எதையாவது தெரியாது எனக் கேட்டு வருபவர்களுக்கு சொல்லிக் கொடுக்க தெரிந்திருக்கணும்.....

‘P.G படித்த பையன் ஒருவன் பணம் அனுப்ப வங்கிக்கு வந்தான்.ஒரு செல்லான் எடுத்து எம்டி என எழுதி அனுப்பவேண்டிய ஆளின் பெயர்,அவரது வங்கி எண் பூர்த்தி செய்து கொண்டு வாருங்க....அவன் செல்லானில் M.T என எழுதுவதற்குப் பதில் empty என எழுதிக் கொண்டு வந்தான்.....’

தினமும் பத்திரிகை படிக்கணும் , general knowledge ஐ வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் பேசி தன் பேச்சினை முடித்தார்....

அடுத்த வருடமும் இதே சுமை மறுபடியும் என் தலையில் விழுந்தது. இப்பொ வந்து பேசியது Auditor A.குளத்தூரான் பிள்ளை...அவர் பேசியது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இந்தியாவில் வேலை செய்பவர்களுக்கு பணிப் பாதுகாப்பு உண்டு. நன்றாக வேலை செய்யா விட்டாலும் ஒருவனை வேலையில் இருந்து நீக்கவே முடியாது....ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் அப்படி இல்லை.வேலையை சரியாகச் செய்யாவிட்டாலும் செய்யத்தெரியவில்லை என்றாலும் வேலை போய்விடும்....

இங்கு ஒழுங்காக வரி செலுத்துபவர்கள் மாதம் தோறும் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள்,அலுவலர்கள் .....ஆசிரியர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்பதின் அளவுகோல் வெற்றி பெற்ற மாணவர்களின் என்ணிக்கைதான்.ஆகவே நன்றாக படித்து வெற்றிபெற வாழ்த்திவிட்டு பேச்சினை முடித்தார்.

நான் HOD ஆன பின்னும் கூட்டம் நடத்தப்பட்டது என்றாலும் எனக்கு முழுமையான திருப்தி இல்லை. ஒரு தடவை என்னையும் திடீரென பேச அழைக்க நான் பேசினேன்.அப்துல் கலாமின் ‘அக்னிச் சிறகுகள்’படித்து முடித்த நேரமது.அப்போ அவர் இந்தியாவின் ஜனாதிபதியாகவில்லை.அவரது அனுபவங்கள், அவரால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பெருமை,தந்தை,தாய்,ஆசிரியர்,அவரது ஊர் மீதெல்லாம் கொண்ட அவரது பிடிப்பு.... எல்லாவற்றையும் கூறி மாணவர்கள் அனைவரும் அப்துல் கலாமை படிங்க என பேசினேன்...

நான் ஒய்வு பெற்றபின் M.Sc Mathsல் 100 மார்க்கு எடுத்த மாணவர்களுக்கு ராஜையன் சார் ஒரு கிராமின் விலையை செக்காக என்னைக் கொண்டு கொடுக்க வைத்தார்.நான் வெறும் கையுடன்
போகக் கூடாது என நினைத்து 3 அக்னிச் சிறகுகள் புக்,3 பென் வாங்கிக் கொண்டு போய் கொடுத்தேன்.

இன்றும் சோர்வு ஏற்படும் போதெல்லாம் நான் படிக்க எடுக்கும் நூல் அக்னிச் சிறகுகள்.

புட்டும் .....முட்டையும்-------- 1

காலையில் நான் என் மருமகளிடம் , “இண்ணைக்கு என்ன டிஃபன்” கேட்டேன்.புட்டு என்றாள்.
புட்டு மாவு குவைத்தில் கிடைக்கும்....தேங்காயும் கிடைக்கும். விலைதான் கொஞ்சம் கூடுதலா இருக்கும்.

புட்டு ரெடியானதும் தட்டத்தில் வைத்து தந்தாள்.சம்பா அரிசிப் புட்டு புட்டுக்குழலில் வைத்து நீராவியால் வெந்தப்புட்டு.வெள்ளையாய் தேங்காய் தூவலுடன் மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒன்று தெரிகிறதே அது என்ன என கேட்டேன். அது ஏத்தம்பழம் என்றாள்.

நான் இதுவரை இப்படி செய்து பாத்ததே இல்லையே....உனக்கு இந்த idea எப்படி வந்தது...?

கடுக்கரை பெரியம்மாதான் ஊர்ல எங்கூட இருக்கும்போது செய்தா....சாதாரணமா புட்டுடன் பழத்தைச் சேர்த்து விரகி சேர்த்து தின்பதுதான் வழக்கம்....நான் முதன் முதலாக இப்பதான் பழத்தையும் புட்டுடன் சேர்த்து அவித்து சாப்பிடுகிறேன்...நன்றாக இருந்தது.

சக்கா பழத்தையும் சிறு சிறு துண்டாக்கி புட்டு மாவுடன் சேர்த்து அவித்தாலும் நன்றாக இருக்கும் என்றாள்.

முட்டை ஆம்ப்ளேட் புடிக்குமா ? சாப்பிடலாமா ?மருமகள் என்னிடம் கேட்டாள். Cholestrol இருப்பதால் சாப்பிடக்கூடாது...ஆனால் எனக்கு அதுதான் ரொம்ப புடிக்கும் என்றேன். “ஒருநாள் சாப்பிட்டா என்னா .... ஒன்ணும் செய்யாது...மாமாவுக்கு கொடு..”.இது மனைவி.

ஆம்ப்ளேட் வந்தது.. மிகவும் கனமாக ஊத்தப்பம் போன்று இருந்தது. அதில் உள்ளி,மிளகுடன் தக்காளித்துண்டுகளும் இருந்தன. சாப்பிட்டேன். வித்தியாசமான ருசியாய் நல்லா இருக்கே.... வேறு ஏதாவது இதில் சேர்ந்திருக்கா எனக் கேட்டேன். பாலும் கொஞ்சம் சேத்திருக்கேன் என்றாள்.

இதெல்லாம் எப்படி உனக்கு தெரிஞ்சு ? ...

நான் NET ல பாத்து செய்தேன்...என்றாள்.

சினை இட்லி தெரியுமா எனக் கேட்க தெரியும் என்றாள்....

குவைத்துக்கு வரும்போது டாக்டர் சொன்னது உடம்பைக் குறைத்து எடையும் குறைக்கணும் என. எல்லாம் ஊரில போய் சாப்பட்ட குறைச்சுக்கலாம்...தினம் தினம் வித்தியாசமாக நாக்குக்கு ருசியாகவும் மனசுக்கு இதமாகவும் உணவு கிடைக்கிறது....குவைத்தை விட்டுப் போகவே அதுவும் நாள் நெருங்கும் இந்த வேளையில் மனசுக்கு என்னவோ போல் இருக்கு.பேரன் ஆச்சியுடன் கொஞ்சும் அழகை நான் ரசிக்க....தாத்தா என என்னிடமே ஒட்டிக் கொண்டு இருப்பதை அவள் பெருமிதத்துடன் பார்த்து ரசிக்க...ஊருக்குப் போய்த்தான் தீரணுமா?

தினேஷும் நானும் வெளியே போய் வீட்டினுள் வரும்போது சர்ணேஷ் வேகமாக ஊர்ந்து எங்களை நோக்கி வருவான்....மகனை எடுக்க தினேஷ் குனிந்து கை நீட்டுவான்.ஆனால் பேரனோ அப்பாட்ட போகாமல் வந்து என்னை எடுக்கச் சொல்வான்.அப்பம் நீ தாத்தா ஆச்சிக் கூட ஊருக்குப் போ எனச் செள்ளக் கோபத்தில் சொல்லி மகிழ்வான் தினேஷ்.

நான் என் பிள்ளைகளை எடுத்துக் கொஞ்சினதை விட என் பேரன்களிடம் கொஞ்சியதுதான் கூடுதல். ரத்னேஷ், புவனேஷ், சர்னேஷ்......இவர்கள் ஒவ்வொரு இடத்தில் இருப்பதால் எங்கள் ஓய்வு காலம் பிரயாணத்திலும் அவர்களுடன் கொஞ்சுவதிலும் கழிகிறது. ஆண்டவன் இதை விட வேறென்ன தரவேண்டும்..... நிம்மதி எங்கும் கிடைக்கும் பேரன்கள் இருந்தால்.

Friday, October 28, 2011

திருவையும் ஆட்டுரலும்

கல்லூரிக்குத் தினமும் காலையில் எத்தன மணிக்கு புறப்பட்டுவருவ....என பலர் கேட்பதுண்டு.

நாரூல்ல வந்து தங்கு. அப்பந்தான் பிள்ளைகள நல்ல பள்ளிக் கூடத்தில் சேக்கலாம்....உனக்கும் வசதியாயிருக்கும். இப்படி பலர் சொல்வதை கேட்பேன்.ஆனால் அம்மையை விட்டுட்டு எப்படிப் போகமுடியும்.

நீ ஒரு வீட்டப் பாரு நானும் ஓங்கூட வந்து ஒரு மாசம் இருக்கேன் என அம்மா சொன்னாள்.

நான் ராமன்பிள்ளைத்தெருவில் கொஞ்ச நாளும் பின் நல்லபெருமாள் காலனியில் கொஞ்ச நாளும் இருந்து விட்டு புதிய வீடு ஒன்றினை பொன்னப்ப நாடார் காலனியில் கட்டி அங்கே தங்கினோம்

புதுவீடு பால் காய்ச்சி வருமுன் என் மனைவி என்னிடம், “புது வீட்டுக்குப் போகதுக்கு முன்னால் உரல்,உலக்கை,திருவை,அம்மி,ஆட்டுரல் எல்லாம் மயிலாடியில் சொல்லிச் செய்து வாங்கணுமே.” சொன்னாள்.

நான் சிரித்துக் கொண்டே உலக்கை வைத்து உனக்கு இடிக்கத் தெரியுமா....grinder -ஐக் கொடுத்திருவோம்....mixieல்லாம் வேண்டாமா எனக் கேட்டேன்.

அம்மை ‘ வீடுன்னா இதெல்லாம் இருக்கணும்’ என வெடுக்கென சொன்னாள். என் மனைவி சிரித்துக் கொண்டே சொன்னதெக் கேளுங்களேன் என்று பார்வையால் சொன்னாள்.மயிலாடியில் இந்தியன் வங்கியில் வேலை பாத்த ஒருவரிடம் நான் இதைச் சொல்ல அவர் சுப்பையாத்தேவர் என்ற பெயருள்ள ஒரு ஆளை அனுப்பினார்.

அவரிடம் தேவையான அனைத்துக்கும் முன்பணம் கொடுத்தேன்.சிவப்பு நிறக் கல்லில் தமிழில் வீட்டின் பெயரை வெட்டிக் கொண்டுவரச் சொன்னேன்.

இப்பொழுது திருவை புது மெருகு மாறாமல் ,ஆட்டுரல் எல்லாம் அப்படியே பின் பக்கம் கேட்பாரற்று பரிதாபமாய் கிடக்கிறது

எங்க வீட்டுக்கு போண் வந்த கதை

1979 அல்லது 80-ம் வருடம்.கடுக்கரையில் தொலைபேசி ஒரு வீட்டில் கூட கிடையாது. பெருமாள் கோயில் பக்கம் உள்ள ரைஸ்மில்லில் மாத்திரம் உண்டு.ஓணர் இருக்கும் போது மட்டுமே வெளியாட்கள் காசு கொடுத்துப் பேசலாம். பூதப்பாண்டி Exchange. Dial phone. நாகர்கோவிலுக்கு Trunk call book பண்ணி தான் பேசணும்.பக்கத்து ஊரான நயினார் தோப்பில் ஒரு வீட்டில் தொலைபேசி இருந்தது.

போண் இருந்தும் இல்லா நிலைமை. நான் அங்கு போய் போணில் பேச விரும்புவதில்லை. ஒரு நாள் எனது HOD க்கு இரவு பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நானே தான் பேச வேண்டும் என்பதால் ரைஸ்மில்லுக்குப் போனேன். ஓணர் இருந்தார். ஓணர் எனக்கு சொந்தம் தான். அத்தான் மைத்துன உறவு.

போண் வேணுமே. நாரூலுக்குப் பேசணுமே....என நான் கேட்க அவரோ நம்பர சொல்லு மாப்பிள என்றார். போண இப்படி கொஞ்சம் எங்கிட்ட தாருங்கோ நானே பேசுகேனே என்றேன்.

போணைத் தரவே இல்லை. எனக்கு போண் பண்ணாமலேயே போயிரலாமா எனத் தோணியது.
வேறெங்க போய் பேச....வழி இல்லை...பேசிவிட்டு காசையும் கொடுத்துவிட்டு கடுப்புடன் வீட்டுக்கு வந்தேன்.

அப்பாவிடம் போய் போண் வீட்டில் வைக்க சம்மதம் கேட்டேன். அப்பாவுக்கு இஷ்டம் இல்லை.

எனக்கு மன உறுத்தல். போண நம்மிடம் தந்தா என்னா....தேஞ்சா போயிரும்....

ஊரில் ஒரு போஸ்ட் ஆபீஸ் உண்டு. திருமலையாண்டி தான் அதன் பொறுப்பாளர்.அவரிடம் போய்,“ நம்ம ஆபீஸ்ல போண் வைக்க என்ன செய்யணும்....யாரைப் போய் பாக்கணும்...”
எல்லா விவரங்களையும் கேட்டேன்.

நாகர்கோவில் அதிகாரிக்கு விளக்கமாக வின்ணப்பம் அனுப்பி விட்டு நேரடியாகவும் போய் பாத்தேன். பிரச்சனை ஒண்ணுமே இல்லை....போண் வச்சுரலாம்.... ஆனா இப்பம் Instrument stockil இல்லை என்றார்கள்.

திருநெல்வேலியில் இருந்து தான் instrument வரணும். அந்த செக்ஸனில் இருப்பவர் ஒழுகினசேரியில் இருந்து கணபதியாபிள்ளை எனவும் தெரிந்து கொண்டேன்.

யார் இந்த கணபதியா பிள்ளை ? கடுக்கரை வடக்குத்தெரு பப்புவின் தங்கச்சியின் மாப்பிள்ளைதான் இவர்....அவருக்கு ஒரு கடிதம் நானே எழுதினேன். ஒரு வாரத்தில் கடுக்கரை போஸ்டாபீஸ்ல போண் வந்தது.....

போஸ்டாபீஸ் அலுவலக நேரம் மத்தியானத்தோடு முடிஞ்சுரும்.... அந்த நேரத்துக்கு அப்புறம்
பழைய குருடி கதவைத் திறடி கதை தான்....

MINI CLUB -ல் போண் வச்சுரலாம் எனப் plan போட்டேன். கிருஷ்ணன் , “ அது வேண்டாண்ணெ .... நீ தான் பணம் கட்டணும்..அதுக்கு உங்க வீட்லயே வச்சுரலாமே”

அப்பா சம்மதிக்க மாட்டாங்களே ......

அப்பம் என் தங்கச்சிக்கு குழந்தை பிறந்து வீட்ல இருந்தா.சிசேரியன் மூலம் தான் பிரசவம்.
வீட்ல அப்பா இல்ல...நானும் இல்லை.....தங்கச்சிக்கு strich போட்ட இடத்தில் வயிற்றில் ரத்தக் கசிவு இருந்தது...குளிக்கும்போது பாத்து பயந்துட்டா...

அம்மையும் என் மனைவியும் ஒரு Taxi பிடிக்க படாது பாடு பட்டார்கள்.....ஒரு போண் இருந்தால் இந்தப் பிரச்சினை உண்டா.......ஒருவழியாக அப்பாவின் அனுமதி கிடைத்தது.

வீட்டில் போண் வைக்க வின்ணப்பித்தேன். பூதப்பாண்டி exchange-இருந்து வந்து பாத்தாங்க. அந்தச் சமயத்திலல்லாம் எந்த ரூம்ல வைக்கணும் என் முன்கூட்டியே சொல்லணும்.

அப்பாவின் ரூமில தான் வைக்கணும்னு சொன்னேன்.

அதன் படியே போண் வந்தது. போண் உள்ள முதல் வீடு எங்க வீடு.
எங்களுக்கு மட்டும் அல்ல ......எல்லோருக்குமே பயன்பட்டது....

எனது Telephone number: 63

Thursday, October 27, 2011

சுத்தம் சோறு போடுமா....

புத்தேரி பிள்ளை தந்த நாஞ்சில்நாடன் எழுதிய ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ படித்துக் கொண்டிருந்தேன்.நாவல் என எண்ணிப் படிக்க ஆரம்பித்தேன். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற தலைப்பில் ஓவியர் ஜீவா எழுதிய முன்னுரை இது நாவல் இல்லை கட்டுரை என அறிவித்தது.படித்த பல முன்னுரைகளில் இது எனக்குப் பிடித்தது. “ நீண்ட பயணங்களின் போது மூத்திரம் பெய்ய பெண்கள் படும் கஷ்டத்தை எந்தப் பெண்ணியவாதியாவது வெளிப்படுத்தியிருக்கிறாரா தெரியவில்லை.பெரும் பயணியான நாஞ்சிலுக்குத்தான் ‘கொட்டிக் கிழங்கோ கிழங்கு’ எனக் கூவத் தோன்றியுள்ளது.” இது ஜீவாவின் வரிகள்

பெண்கள் வேலைக்குப் போகும் இடங்களில் இடையில் ஒருமுறையேனும் மூத்திரம் பெய்ய வசதியில்லை.நிறையப் பெண்கள் வெளியே போய் மீண்டும் வீடுவந்து சேரும் வரை மூத்திரம் பெய்வதில்லை.....துர்நாற்றமற்ற கக்கூஸ் இல்லாததும் காரணமாக இருக்கலாம்.
கோடிக்கணக்கில் வியாபாரமாகும் நிறுவனங்களில் இருக்கும் கழிப்பறைகளை எட்டிப் பார்த்தால் உண்ட உணவும் குடலும் கூட வெளிச்சாடிவிடும். ஆசிரியரின் ஆதங்கம் இது......

சுத்தம் பார்த்தால் சோறு கிடைக்காதே.

குவைத்தில் உள்ள எல்லாக் கடைகளிலும் கழிப்பறைகள் மிக மிக அழகாக இருக்கும்.கைகளைத் துடைக்க tissue பேப்பர் அல்லது ஈரமான கைகள் உலர heater வசதி
இருக்கிறது.சில கீர்த்தி வாய்ந்த கடைகளில் உள்ள toilet-ல் தானாகவே இயங்கி தண்ணீர் பாய்ந்து சுத்தம் செய்து விடுகிறது. heater-ன் அருகே ஈரமான கைகளைக் கொண்டு போன உடன் வெப்பக்காற்று தானாகவே வந்து கைகளை உலர வைக்கிறது.

காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சிக்காக நீண்ட நெடும் நடை பாதை FAHAHEEL கடற்கரையில் உள்ளது. அங்கே ஒரு இடத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித் தனி வெவ்வேறு கட்டிடத்தில் toilet உள்ளன.அதனை சுத்தமாகவே வைத்திருக்கிறார்கள்.

சினிமா தியேட்டர்களில் toilet நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு சுத்தமாக இருக்கிறது.

கிராமங்களில் கக்கூஸ் வசதியே கிடையாது....இருட்டானதும் பெண்கள் ஒதுங்கும் இடத்துக்கு அதாவது சாலை ஓரங்களில் அவர்கள் இருப்பதால் அந்தச் சாலை வழியாக ஆண்கள் போக மாட்டார்கள்.போகவும் கூடாது என்பது எழுதப்படாத சட்டம்.வசதி உள்ளவர்கள் சிமெண்டில் பீங்கான் போல செய்து கக்கூஸ் அமைத்திருப்பார்கள்....இலவசமாக அரசு பீங்கான் கொடுத்தது.....யாரும் அதிகமாக பயன்படுத்தியதாகத் தெரியவில்லை

காலங்கள் மாற மாற வசதிகள் பெருகினாலும் நவீன கழிப்பறைகள் எல்லார் வீட்டிலும் இல்லாத நிலைதான்.

எங்க வீட்டில் களத்தில் தென் கிழக்கு மூலையில் கக்கூஸ் இருந்தது.அதன் கிழக்குப் பக்கம் ரோடும் ஆறும்... ராத்திரியானால் அங்கு போக பயமாய் இருக்கும்...
என்னுடைய ரூம் மாடி. அது களத்தில் வீட்டின் பக்கத்தில் மேற்குப் பக்கம் இருந்தது.அதில் கக்கூஸ் கட்ட அப்பா சம்மதிக்கவில்லை....எனக்கு வேலை கிடைத்து வேலைக்குப் போகும் நான் படும் அவதியைப் பாத்த அப்பா கக்கூஸ் மாடியிலேயே கட்டித் தந்தார்.எங்க ஊரில் உள்ள முதல் toilet attached room என்னுடையதே.

இந்த நவீன உலகில் இன்றும் எடுப்பு கக்கூஸ் இருக்கும் வீடுகள் உள்ள ஊர் ஒன்று இருக்கிறது........திருநெல்வேலி.

அப்பா வாங்கின ரேடியோ

வில் வண்டியில் அப்பா போத்தியூருக்குப் போகும்போதெல்லாம் நானும் அப்பா கூடப் போக ஆசைப்படுவேன்.சில சமயங்களில் என்ன க்கூட்டிட்டுப் போவாங்க. அங்கு ஒரு தாத்தாவின் வீடு உண்டு.வீடு பழைய வீடா இருந்தாலும் தாத்தா இருக்கும் ரூம் மிகவும் அழகாக இருக்கும். சுவரில் அழுக்கே பாக்க முடியாது.பிள்ளை இல்லா வீடு அப்படித்தான் இருக்கும் போல.மின்சார வசதி இல்லாக் காலம் அது. அங்கு ஒரு ரேடியோவில் பாட்டு பாடிக்கொண்டே இருக்கும். அது ஒரு பேட்டரி ரேடியோ. வானொலி என்ற பத்திரிகையும் அங்குதான் நான் பாத்திருக்கேன்.சென்னை வானொலியில் வரும் நிகழ்ச்சியை அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எனக்காக சினிமா பாட்டும் அவருக்கு மனசிருந்தா போடுவார். சுவரில் கடிகாரம் காட்டும் நேரமும் ,அவர் கையில் உள்ள காந்திக் கடிகாரம் காட்டும் நேரமும் , ரேடியோ அறிவிக்கும் நேரமும் ஒன்று போல் இருக்கும்படி பாத்துக்கொள்வார்.

மின்வசதி கிடைத்ததும் அவர் வேறொரு வால்வு ரேடியோ வாங்கினார்.கடுக்கரையில் முதன் முதலாக ரேடியோ வாங்கியது கீழத்தெரு அத்தையின் வீட்டில். REMCO ரேடியோ அது. நான் கல்லூரியில் படிக்கும் போது அப்பாட்ட ரேடியோ வாங்கச் சொன்னேன்.நீ ஹாஸ்டல்லதான இருக்க....படித்து பாஸான பின் கேழு வாங்கலாம்னு அப்பா சொல்லிவிட்டார்.
எல்லா வீடுகளிலும் பாபர்ஷாப், ஹோட்டல்களிலும் தமிழ் பாட்டுக் கேட்கலாம் எங்க வீட்டைத் தவிர.

கல்லூரியில் வேலை கிடைத்தது. ‘இனிமேலும் நம்ம வீட்ல ரேடியோ இல்லேண்ணா மகாக் கேவலம்’ என அம்மையிடம் கிண்டலாகச் சொன்னேன்.

நாகர் கோவிலில் சுந்தர் ரேடியோஸ் என்றும் ப்ரீமியர் ரேடியோஸ் என்றும் எத்தனையோ கடைகள் இருக்கு. ஆனால் எனக்காக மட்டுமே ரேடியோ வாங்கச் சம்மதிச்ச அப்பா எந்தக் கடைக்கும் போகாமல் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் சொல்லி ரேடியோ வாங்கச் சொன்னா.

அவன் வாங்கி வந்த ரேடியோ .second hand....telefunken. எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல.அந்த ரேடியோ ஒரு வாரமாய் வீட்டில் அப்பாவின் ரூமில் இருந்தது.நான் அதை தொடவும் மாட்டேன்...பாக்கவும் மாட்டேன். யாருமே தீண்டாமல் அப்படியே இருந்தது. என்ன கூப்பிட்டு , “ தங்கம்...ரேடியோ வேணும்னு நீதான கேட்ட....எடுத்து ஒன் ரூமில வச்சுக்கோ”....

அம்மாவிடம் போய், “இந்த ரேடியோ எனக்கு வேண்டாம்... அப்பாக்கு ரூம்லயே இருக்கட்டும்....”.

அம்மா, “உனக்கு பாட்டு தானே கேக்கணும். இதுல கேக்காதா...அப்பா ருபா கொடுத்து உனக்காகதானே வாங்கினா....நீ வேண்டாம்னு சொன்னா அப்பாக்கு கோபம்தான் வரும்...”.

நான், “ ருபாயை ஏங்கிட்ட தந்தா எனக்கு புடிச்சதை நானே வாங்கி இருப்பேன்லா.”அம்மையும் நானும் பேசியது அப்பாவின் காதில் விழுந்தது.ஒண்ணுமே சொல்லல.....

அடுத்த நாள் அப்பாவின் மனம் நொந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த ரேடியோவை எடுத்து என் ரூமில் வைக்க அப்பாவின் ரூமுக்குப் போனேன். பழைய ரேடியோ இருந்த இடத்தில் வேறொரு ரேடியோ இருந்தது. பெரியதாய் இருந்தது. BUSH radio.இதுவும் second hand radio தான். ஆனால் பாக்க அழகாய் இருந்தது. நான் வாங்கணும்னு நினச்சது பிலிப்ஸ் ரேடியோ.

ரேடியோவை இது நாள் வரை வாங்காமல் எனக்காக மட்டுமே இப்பம் வாங்கி இருக்கா.அப்பா என்னால் மனம் வருந்தக்கூடாதே....

மிக சந்தோசத்தில் அப்பா,“ இது புடிச்சிருக்கா” என நம்பிக்கையுடன் கேட்டார்.

புடிச்சிருக்கு என்றேன்.

ஒன் ரூம்ல கொண்டு வைக்கச் சொல்லட்டா என்று கேட்ட மறு நிமிடம் ரேடியோவும் அதை வைக்க ஒரு மேசையும் எனது ரூமில் இருந்தன.

Arial வைக்கப்பட்டது.2 சவுக்கு மரத்தினை நட்டு அதன் உச்சியில் ஏரியல் ஒயரை இணைத்து ரேடியோவின் பின்னால் இருக்கும் socketல் ஏரியலின் ஒரு முனையை சொருகி ரேடியோவில் பாட்டுக் கேட்டேன்.

என்னை விட அப்பாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

ரேடியோக்கு 15 ருபாய் போஸ்டாபீசில் licence fees கட்டினோம்.(இப்பொழுது licence கிடையாது)
78 வயதான என் தந்தையை மீறி நான் எதுவுமே செய்யத் துணிந்தது இல்லை.அப்பாவுக்கு நான் சின்னப்பிள்ளை....ஆம் 26 வயதிலும் செல்லப்பிள்ளை.

அப்பா இறக்கும் வரை அந்த ரேடியோ என்னிடமே இருந்தது. அப்பா ,அந்த ரேடியோவை வைக்க ஒரு புதிய ரேடியோ மேசையை ஆசாரியை வைத்து செய்து தந்தார்.ரேடியோவின் விலையை விட மேசைக்கு ஆன செலவு கூடுதல்.....

Wednesday, October 26, 2011

கடுக்கரையில் அலைகள் ஓய்வதில்லை

“எம்மா....வண்டி போட்டு சினிமா பாக்க போக அப்பா சம்மதிச்சாச்சு.எங்க கூட நீயும் வாம்மா”...... “நான் வரல்ல நீங்கள்ளாம் போங்கோ”....இது ஒரு நாள் நானும் அம்மையும் பேசியது. மணத்திட்டை எங்கள் ஊரில் இருந்து 3 மைல் தூரத்தில் இருக்கும்.அங்கு தான் தியேட்டர் இருக்கு. பழைய படங்கள் போடுவாங்க.அப்பாவுக்கு சினிமா புடிக்காது....பிள்ளைகள் எங்களுக்காக அதுவும் எப்பமா ஒரு தடவை சம்மதிச்சு வண்டி போட்டு அனுப்புவா. பஸ்ல போக சம்மதிக்க மாட்டாங்க.ஏண்ணா படம் பாத்துட்டு திரும்பி வர பஸ் கிடையாது, நடந்து தான் வரணும். நடந்து வரணும்னு எனக்கு ஆசையாய் இருக்கும்.....

“எம்மா.....உனக்கு சினிமா புடிக்காதா....தியேட்டர்ல பொம்பள கூட்டம்தாம்மா அதிகமாஇருக்கு. நீ ஏன் வரமாட்டேங்க”

“அப்பா ஒரு தடவை சினிமா பாத்துட்டு வந்தண்ணைக்கு ரொம்ப ஏசிப்பொட்டா.அப்பாட்ட கேட்டுட்டுதான் போனேன்..சினிமா த்யேட்டர்ல இடி விழாதாண்ணு சத்தம் போட்டா. என்னால எதுக்கு இடிவிழணும்னுகிட்டு சினிமா பாக்கவே போக மாட்டேன்”

காலங்கள் கடந்தன. நான் கல்லூரியில் வேலை பார்க்கும் போது என் நண்பர் வித்யாசாகர் என்னிடம்,“ பொன்னப்பா... ஒரு சின்ன help....please.....எனக்காக..மறுக்க கூடாது.பாரதிராஜா சினிமா சூட்டிங்க்காக நாரூலுக்கு வந்திருக்காரு.பல location பாத்ததிலே கடுக்கரையில் ஒங்க வீடு புடிச்சிருக்கு .நான் ஓம்பேரச்சொல்லி பிரச்சனை ஒன்னுமில்லன்னு சொல்லிட்டேன்.எப்படி சம்மதிப்பியா” கேட்டார்.

“அப்பாட்டதான் கேக்கணும். ஆனா இப்பம் அறுவடை சமயம்... களத்தில் சூடடிக்கும் வேலை நடந்துட்டுருக்கு. எங்கப்பா சம்மதிப்பாண்ணு தோணல்ல. கேட்டுச் சொல்கேன்.”

அப்பாட்ட போய் கேட்டேன். இப்பம் வயல் அறுத்து கெட்டு களத்தில் இருக்கிறது. அறுப்படிப்பு முடிந்து வரச்சொல் என அப்பா சொன்னதை நான் வித்யாசாகரிடம் சொன்னேன்.
காலையில் அப்பா என்னக் கூப்பிட்டார் “கட்டாயம் கொடுக்கணுமா. எனக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்ல...ஆனா ஓம் friend வித்யாசாகர்லா கேட்டுருக்காரு.சரி உனக்காக ...சம்மதிக்கேன். நாளைக்கு வரச் சொல். 2 நாள் வந்து எடுத்துட்டுப் போகச்சொல். ஒரு கண்டிசன்....செருப்பு போட்டுட்டு எவனும் களத்துல வரக்கூடாது.”....நான் பஸ்ஸில் போகும்போது அப்பாவின் மனசையே நினைச்சுட்டு இருந்தேன்....எனக்காகல்லா சரிண்ணு சொல்லி இருக்கா. shootting நடந்தா கூட்டம் ரொம்ப வரும் களத்த நாசமாக்கீருவாங்களே.என்ன செய்ய....நேத்துதான் சொல்லியாச்செ...அப்படியே விட்ரலாம்.... சினிமாவே புடிக்காத அப்பா சினிமா எடுக்க அனுமதி தந்ததே எனக்காக மட்டுமே....சாதாரண நாட்களில் கூட காலில் செருப்பு போட்டு களத்தில் அப்பாவுக்கு பயந்து நடந்து செல்ல மாட்டார்கள்....பீடியோ எதுவுமே குடிக்கவும் கூடாது....என்னால் எந்த மன வருத்தமும் அப்பாவுக்கு ஏற்படக்கூடாது.....முடிவெடுத்தேன் சினிமா shooting -க்கு அனுமதிக்க வேண்டாம்.
என் ரூமில் இருக்கும்போது வித்யாசாகர் வந்தார். அவரிடம் நான் நினைத்ததை சொன்னேன்..... அவர் பரவாய் இல்லை என்றார்.அவர் மத்தியானம் திரும்பவும் என்னிடம் வந்து, “பொன்னப்பா.... நீ சொன்னஎல்லாம் பாரதி ராஜாட்ட சொன்னேன். அவர் நிபந்தனைகள சரியாக கடைபிடிப்போம்னு சொல்கிறார்....என்ன செய்ய நட்புக்காக சம்மதித்தேன்....

சொன்ன படியே வேறு எங்கோ நடக்க வேண்டிய shooting-ஐ cancel பன்ணிகிட்டு கடுக்கரையி்ல் எங்க வீட்டில் படப்பிடிப்பு நடந்தது. பாரதிராஜாவும் கேமரா மேன் கண்ணனும் செருப்பு போட அனுமதி கிடைத்தது. வேறு யாரும் செருப்பு போடவில்லை.கார்த்திக்,ராதா முதல் முதலாக நடிக்க தியாகராஜன் ராதாவினண்ணனாக நடித்த ஒரு சில ஸீனை எடுத்து முடித்து விட்டுப் போனார்கள்.

அறுவடை முடிந்த பின் மறுபடியும் படபிடிப்பு நடந்தது. எங்கள் களத்தில் ஒரு குடில் அமைக்க அனுமதித்தோம். எங்கள் சொந்தக்கார சிறுமிகள் இருவர் அந்த சினிமாவில் ஒரு காட்சியில் வருவார்கள்.பாரதிராஜாவின் மகனும் என் மகன் தினேஷும் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.அந்த சினிமாவில் வரும் வில்வண்டியும் காளையும் என் மனைவியின் அப்பா தெரிசனம்கோப்பில் இருந்து அனுப்பி தந்தார்கள். எதுக்குமே நாங்கள் ஒரு பைசா கூடவாங்கல. படம் பார்க்கும்போது நன்றி அறிவிப்பில் என் அப்பா பெயர் போடுவதாகச் சொன்னது இல்லாமல் இருந்தது. வித்யாசாகர் பெயர் இருந்தது.

அந்த சினிமா அலைகள் ஓய்வதில்லை

Tuesday, October 25, 2011

தீபாவளித் திருநாள்

கடுக்கரையில் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது தீபாவளி சமயத்தில் என்னுடன் விளையாடவரும் பையன்கள் கையில் எறிபடக்கு ,சட சட என தரையில் தேய்த்தால் சப்தம் கேட்கும் குச்சு,குத்து வெடி என பல விதமான crackers வைத்து மகிழ்ச்சியாய் காணிக்கும்போது எனக்கும் ஆசை யாய் இருக்கும்.

அப்பா உங்களுக்கு பட்டாசு வாங்கி அலமாருல பூட்டி வச்சுருக்கா.தீபாவளிக்கு எண்ணெய் தேச்சு குளிச்சுட்டு எல்லாம் கொழுத்தலாம்.வெடிக்ககூடிய எதுவும் இல்லை.கம்பி மத்தாப்பும், தீப்பெட்டி மத்தாப்பும் மட்டுமே. இரவுதான் கொழுத்த வேண்டும். ஒண்ட்ர அடி நீள கம்பு ஒன்றின் முனையில் மத்தாப்பை சொருகி வைத்து கொழுத்தணும். எரிஞ்சு முடிஞ்சதும் அதனை சின்னத் தண்ணீர் தொட்டியில் போடவேண்டும்.வெளியே போக அனுமதிக்க மாட்டார் அப்பா. கொஞ்சம் வளந்த உடன் சின்ன எறிப் படக்கு வாங்கிதந்தா....

தீபாவளி இப்படியே வாழ்க்கை முழுவதும் கழிந்தது. ஆட்டு இறைச்சியும் எண்ணெய் தேய்த்து குளிப்பதும் மட்டுமே தீபாவளி என்றாகிப் போனது.

எனது பிள்ளைகள் ஆசைப்பட்டார்கள் என்பதற்காக வாங்கிக் கொடுப்பது வழ்க்கமானது. HINDU பேப்பரில் பம்பாயில் இருந்து பிள்ளை என்பவர் எழுதிய கடிதம் crackers கொழுத்தி காசை செலவழிப்பதற்குப் பதில் T.B Hospitalக்கு நன்கொடை கொடுக்கலாம் என அறிவுறித்தியது. இரண்டு வருடங்களாக அவர் இது போன்று எழுதுவதை படித்ததில் எனக்கும் அது பிடித்துப் போனது. பிள்ளைகள் இருவரும் வளந்த உடன் என் கருத்தைச் சொல்லி அவர்களை என் பக்கத்தில் இழுத்து விட்டேன்.ஆனால் மகள் சிறுமியாய் இருந்ததால் அவளுக்கு மாத்திரம் வாங்கிக் கொடுப்போம். என் மனைவியின் முன்னால் வைத்துதான் மகள் பட்டாசு கொழுத்தணும்....

ஒவ்வொரு தீபாவளி தோறும் பிள்ளைகளுக்கும் மற்றும் வேண்டப்பட்டவர்களுக்கும் துணி மணி எடுத்து கொடுப்பது வழக்கமானது. பக்கத்து வீடுகளுக்கு sweets கொடுப்பதையும் வழக்கமாய் வைத்திருக்கிறோம்.குவைத்தில் இருக்கும் நாங்கள் sweets,வடை,அப்பம் எல்லாம் நாங்கள் இருக்கும் Flat -ன் ஆசிர் Saleem-க்கு கொடுத்தோம். கொடுத்ததை அன்போடு வாங்கியது மனசுக்கு சந்தோசமாய் இருந்தது.

இப்போ படக்கெல்லாம் வாங்கி காசைக் கரியாக்காதே எனச் சொன்னால்
பேரன்கள் என் சொல் கேட்பார்களா? நிச்சயமாய் கேட்க மாட்டார்கள்...இன்று அமெரிக்காவிலே தீபாவளி படக்குகளுக்கு மதிப்பு அதிகமாய் இருக்கிறது.நாம் ஏன் இந்தியப் பேரனைத் தடுக்கணும்......அன்பு தீபாவளி வாழ்த்துகள்.

செயற்கரிய செயலைச் செய்த பெரியார்

1985 அல்லது 1986 என நினைக்கிறேன்.கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் நடத்தியது.தமிழ் நாடு முழுவதும் ஒன்றுபட்டு நடத்திய பெரிய போராட்டம்.பள்ளி ஆசிரியர்களும் ஆதரவாகப் போராட்டத்தில் இறங்கியதால் கல்விச் சாலைகளில் வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை.அரசு எந்த முடிவும் எடுக்காததால் போராட்டம் தீவிரம் அடைந்தது.
தர்ணா நடத்தியதால் அரசு ஆசிரியர்களைக் கைது செய்து பாளையாங்கோட்டை சிறையில் அடைத்தார்கள்.நான் அந்தச் சமயத்தில் சுகமில்லாமல் வீட்டில் இருந்தேன்.என் கூட வேலைபாத்தவர்களும் போராட்டத்தில் பங்கு கொண்டு ஜெயிலுக்குப் போனாங்க.

சுந்தரேசன் விசயத்தைச் சொன்னபோது நானும் போராட்டத்தில் கலந்து கொள்ளத் தீர்மானித்தேன். என் மனைவியோ ‘போகாதே...போகாதே என் கணவா’என்று பாட மாத்திரம் செய்யவில்லை. காச்சல் சரியாக்கூட விடல்ல....இப்பம் போனா கஷ்டம்லா....

நான் Dr.Rejae-ஐப் போய் பார்த்து காய்ச்சல் சட்டுணும் கொணமாக injection ஏதாவது போடுங்களேன்....போராட்டத்தில் சேர்ந்து ஜெயிலுக்குப் போகப் போறேன்.அவர் எனக்கு நன்கு தெரிந்தவர் ....போராட்டத்தை வெகுவாக எதிர்த்தும் கிண்டலாகவும் பேசி என்னைப் ஜெயிலுக்கு போகாதீங்கோ என சொன்னார்.நான் வற்புறுத்தவே மருந்துகள் தந்து அனுப்பினார்.

2 நாள் கழித்து நானும் சுந்தரேசனும் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன்னெ நின்ற மற்ற நண்பர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் பங்கு கொண்டு ஜெயிலுக்குப் போனோம். கோர்ட்டுக்குப் போய் அங்கிருந்து ஒரு பஸ்ஸில் ,பாளையாங்கொட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றார்கள். இவ்வாறு ஜெயிலுக்குப் போவது இரண்டாவது தடவை. உள்ளே போனதும் எங்கள் அங்க அடையாளங்களை பாத்து ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்தார்கள். அலுமினியத் தட்டும் தந்தாங்க. வித்தியாசமான அனுபவம்.முதல் 2 நாளா கூட்டம் அதிகம் இல்லாததால் சமாளித்து விட்டோம்.அதன்பிறகு சிறை நிரம்பி வழிந்ததால் குளிக்க,கக்கூஸ் போக பட்ட கஸ்டங்கள் சொல்லி மாளாது.

காலையில் வரிசையில் நின்று உப்பு மாவோ என்னமாம் தருவாங்க.....பள்ளி ஆசிரியர்களே முன் வந்து பொங்கவும் பரிமாறவும் செய்ததால் ஏதோ ஒரு மாநாட்டில் கலந்தது போலவே இருந்தது.கடுக்கரையில் இருந்து பல வாத்தியார்கள் எங்க கூடவே ஜெயில்ல இருந்தாங்க.....தினமும் இரவு உறங்கப் போவதுக்கு முன்னால பாட்டுப் பாடுவதும்,மிமிக்ரி,பேச்சு என நேரம் போவதே தெரியாமல் நாட்கள் நகர்ந்தன.மருமகன் மோகன் இரண்டு நாள் எங்களுக்காக அவல் கொண்டு வந்து தந்தான்.

பகல் பொழுது பல ஆசிரியர்களுடன் பேசிப் பொழுதைக் கழிப்போம். நான் ஒரு ஆசிரியரைப் பாத்தேன்.ஒல்லியான தேகம்.அமைதியான முகம். எளிமையான தோற்றம் தலையில் முன் நெற்றியின் நடுவே தலை முடி.....ரெண்டு சைடுலேயும் கசண்டி....பள்ளிவாத்தியாரா இருக்கும்னு நானே நினச்சுகிட்டேன்....அவரிடம் போய் பேச ஏனோ எனக்கு மனசு வரல்ல. அவர் சற்று வயதானவர். போராட்டத்துக்கு மிகவும் ஆதரவு கொடுத்தவர்.
ஒரு வழியாக போராட்டம் முடிவுக்கு வந்தது....கோரிக்கைகள் நிறை வேறியது.

சில வருடம் கழிந்தபின் அரசாணை வந்தது.வசந்தமும் வந்தது. கூடுதல் சம்பளம். Arrears-ம் கிடைத்தது.ஒரு நாள் தினத்தந்தி பேப்பரைப் பார்க்கும்போது,“ கல்லூரி ஆசிரியர் ஒருவர் தனக்கு கிடைத்த arrears பணத்தை குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்காக கொடுத்தார்.ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் நூலகராக இருக்கிறார்” என்ற செய்தியில் அவரது போட்டோ இருந்தது. ஓ....இவர் நம்ம கூட ஜெயில்ல இருந்தவருல்லா....பள்ளி வாத்தியார்ணுல்லா நெனச்சுட்டென்.

இவர் தான் கல்யாண சுந்தரம். திருநெல்வேலியில் ஒரு ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது ரோட்டரி கவர்ணராக இருந்தவர் அழைத்து வேலை கொடுத்தார்.
அய்யோ என்ன விசித்திரமா இருக்கு. ஓய்வு பெற்ற பின் தனக்கு கிடைத்த பணம் அனைத்தையுமே பொது விசயத்துக்கு அளித்து விட்டார்.மாதம் கிடைக்கும் பென்சனை என்ன செய்வாரோ?.....

பத்திரிகை வாயிலாக அறிந்த செய்தி.Super Star -ன் மனைவி நடத்தும் ‘ஆஸ்ரம்’ பள்ளியில் வேலை பார்த்ததாக...இவரது குரல் ஒரு பென்ணின் குரல் போல் கீச்சுகுரலாக இருக்கும்.ரேடியோவில் இவரது பேட்டிய கேட்டபோது அறிந்து கொண்டேன்..இவர் நோயினால் அவதிப்பட்டு ஹாஸ்பிட்டலில் இருந்தபோது
இவருக்கு மருத்துவ நிதி பிரித்து கொடுக்க சங்கம் முனைந்தது.ஆனால் அதனை ஏற்க மறுத்து விட்டார். ஒரு ரூபாய் தாருங்கள் அதுவே போதும் எனக் கூறிவிட்டார்.

இன்று அவரது நிலமை என்ன? எங்கிருக்கிறார் ? எதுவுமே தெரியவில்லை.....

செயற்கரிய செயல்களைச் செய்பவர் பெரியவர்.....

Monday, October 24, 2011

குவைத்தில் உள்ள காய்கறிச் சந்தை

Posted by Picasa


20-தேதி வியாழனன்று என் பேரனின் பிறந்த நாள் விருந்து முடிந்து வீட்டுக்கு வரும்போது மணி 10.30 ஆகிவிட்டது. வீட்டுக்கு வந்த பின் தோவாளை மகாதேவன் குடும்பத்தினரும் ஆஸ்ராமம் மாதேவனின் குடும்பத்தினரும் நாங்களும் பேசிக் கொண்டிருந்தோம். ஊரில் தான் இது போல கூடிப் பேசுவது வழக்கம். சடங்கு,வீடு பால் காய்ச்சி புது மனை புகுவிழா முடிந்த பிறகு ஒவ்வொருவரும் கூடி இருந்து வந்தவர்களை எல்லாம் விட்டு விட்டு வராதவர்களைப் பற்றி பேசுவோமே ஊரில்.

மணி 12 ஆனதும் தூக்கம் கண்ணைத் தழுவ ஆரம்பித்ததால் கூட்டம் கலைந்தது. அப்பொழுது தோவாளை மகாதேவன் என்னிடம் ,”காலையில் 8.30 க்கு புறப்பட்டு இருங்கோ. நாம் Friday market -க்குப் போலாம்” சொல்லிவிட்டுப் போனார்.

சொன்னது போலவே காலையில் வந்தார்.ஆனால் நாங்கள் போனது ALFORDA எனும் காய்கறிச் சந்தை.


Alforda is the vegtables and fruits market. it is in Sulaibiya. the area of the market is three hundred thousand square metres. the area is found in Circular shape. the circular area has been divided into four sectors.One sector ie the quadrant shape is open area reserved for car parking. there are three entrances found in this sector to enter the building. It is fully air-conditioned. the vegetables and fruits are brought fresh from local kuwait and the surrounding countries in the world. the market is opened for those who are Kuwaitis and all people. The entire buiding is built in the portion of the three sectors.

மகாதேவன் என்னை போட்டோ எடுக்கும்போது  ஒரு ஈரானியர் என்னுடன் நின்று போட்டோ எடுக்க ஆசைப் பட்டார்.

பல நாட்டினர் பணியில் இருந்தாலும் தலையில் சுமந்து செல்லும் பணி இல்லை.எல்லாமே கை வண்டியும் மோட்டாரில் ஓடும் வண்டியும் தான்.

Posted by Picasa

விருந்தோம்பல்

குமரிக்கடலில் முங்கி பேசுவதை குவைத் கடலில் இந்தியர்கள் குளிக்கும்போது கேட்கும் காலம் ஒன்று வரும். நிலத்தால் பிரிக்கப்பட்டாலும் நீரால் குமரிக்கடல் நீரும் குவைத்துக் கடல் நீரும் ஒன்றே. தமிழனின் பாரம்பரிய கலாச்சாரம் இங்குளோர் கையில் பத்திரமாக இருக்கிறது.வேற்றுமையிலும் ஒற்றுமை உண்மையாய் இருப்பது இந்தியாவில் இல்லை என்பது தான் நிதர்சனமாய் இருந்தாலும் வெளிநாட்டில் வாழும் இந்தியரகள் ஒற்றுமையாய் வாழ்கிறார்கள்.வாய்ச் சொல் வீரர்கள் இங்கு செயல்வீரர்களாய் வாழ்கிறார்கள்.

குவைத்தில் வேலை பார்ப்பவர்கள் வீட்டை, நாட்டை பிரிந்து பல மைல்களுக்கு அப்பால் இருப்பதால் சம்பாதிப்பதை செலவே செய்யாமல் மிச்சப்படுத்தி Bank-ல் போட்டு பாஸ்புக்கை மாத்திரமே படித்துப் பார்த்து மகிழ்வார்கள் என நினைத்தேன்.இங்கு வந்து பார்த்தபின் தான் புரிந்து கொண்டேன். வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள்.

குவைத்தின் ஒரு ருபாய் கொடுத்து எதையாவது வாங்கும்போது அய்யய்யொ... இது 180 ருபாயா வேண்டாமே என் என் மனம் துடிக்கும்....எனக்கு குடிக்க காப்பி, டீ வேணுமான்ணு கேட்டால் மனதில் நம்ம ருபாயை நினத்துப் பாத்து வேண்டாம்னுதான் சொல்லிக் கிட்டிருந்தேன். தினேஷ் என்னிடம்,“ அப்பா என் நண்பர்கள் உங்களை அவங்க வீட்டுக்கு கூட்டிற்று வரச் சொன்னாரகள்....வருவீங்களா” கேட்டான். நான், “ அதெல்லாம் எதுக்கு....அவங்களுக்கு எதுக்கு கஷ்டம்”
என்றேன்.

நாட்கள் சென்றன.

நானே எனது மகனிடம் Casio watch வேணும் விலை 3 கே.டி தான் எனச் சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.

தமிழர்களின் கலாச்சாரமான விருந்தோம்பலை விடாமல் பாதுகாத்து வருகிறார்கள் இங்கு வாழும் நம்மவர்கள். பழைய தமிழ் இலக்கியங்கள் பல தமிழர்களின் விருந்தோம்பலைப் பற்றிக் கூறி இருக்கிறது.

நம் கவி வள்ளுவன் ,“ இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு” கூறி இருக்கிறார்.

உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் விருந்தோம்பலுக்கு என ஒரு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணப்படி பார்த்தால் விருந்து என்றால் புதியவர் என பொருள். முன்னாளில் முன்னால் தெரியாதவர்களையே விருந்தினர் என்று சொல்வார்கள். ஆனால் இன்று நாம் யாரை விருந்தினர் என்று சொல்கிறோம்.வீட்டிற்கு வரும் சொந்தக்காரர்களை, நண்பர்களையே
விருந்தினர் என்கிறோம்.

விருந்தோம்பலை வளர்த்து நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்பது நல்லதே.

திருமணம் தவிர்த்து எல்லா நிகழ்ச்சிகளும் பிறந்த நாள் விழா,நாட்டிய அரங்கேற்றம்,திறப்புவிழா,கலாச்சார நிகழ்வுகள் என குவைத்தில் நடந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்டேன்.

நாம் இருக்குமிடம் எதுவோ அதுவே இல்லம் என்கிறபோது ஆனந்தம் பொங்குமே.

அன்பாக எங்களை அழைத்து விருந்தளித்தவர் வெங்கட்ராமன் போற்றி.
வந்த நாளில் ஓணச்சாப்பாடு அவருடைய ஹோட்டலில்......

தூத்துக்குடி சிவராமன் வீட்டிற்குப் போனோம்.அவர்கள் அனைவரும் எங்களுக்கு புதியவர்கள். நானும் என் மனைவியும் புதியவர்கள்.அன்பாக அளித்த விருந்தினை ருசித்தோம்.அவரது Laptop-ல் internet வசதி இருந்தது.அதனை நான் பயன் படுத்தி LIC premium கட்டினேன். வாசல் வரை வந்து எங்களை வழியனுப்பினார்கள்.

தோவாளை மகாதேவன்,புத்தேரி பிள்ளை, ஆஸ்ராமம் மாதவன் எல்லோருமே ஒரு VIP treatment-டன் விருந்தளித்து கௌரவித்தார்கள்.

வீட்டிற்குப் போன உடன் எல்லோருமே முதலில் தந்தது தன்ணீர்.

குவைத்தியர்கள் முதலில் விழாவில் கொடுப்பது Black Tea.அதை மறுக்காமல் வாங்கி குடிக்கணும்.மறுத்தால் அது அவர்களை அவமானப்படுத்துவதாகும்.

விருந்தோம்பலுக்கு 9 இலக்கணம் உண்டு. விருந்தினரை நாம் நம் வீட்டுக்கு வந்த உடன், அவரது வரவைப்பற்றி வியந்து பேசணும். நல்ல சொற்களைக் கூறுதல், இனிமையாக எடுத்துக் கூறுதல், விருப்பத்துடன் பார்த்தல், வருக வருக என வரவேற்றல், அவரைக் கண்டவுடன் எழுந்து மரியாதை செய்தல், அவர் எதிரே நின்று மகிழ்ச்சியான செய்திகளைக் கூறுதல், வந்தவருடன் அன்புடன் அருகே அமர்ந்து பேசுதல், விருந்துண்ட பின் அவர் போய்வருகிறேன் என்றவுடன் அவருடன் வாசல் வரை சென்று வழிஅனுப்பிவிட்டு வருதல் ஆகிய ஒன்பது வகைச் செயல்கள் விருந்தோம்பலின் இலக்கணம் ஆகும்.

விருந்தோம்பலின் இலக்கணம் வாசல் வரை வந்து வழி அனுப்புவது தான்.ஆனால் இவர்களோ எங்களை தங்கள் காரில் அழைத்து வந்து பழையபடி வீட்டில் கொண்டுவந்து விட்டார்கள்.கலாச்சாரம் இங்கு பத்திரமாய் பேணப்படுகிறது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.

குவைத்தை விட்டுப் போகும்போது பசுமையான இந்த நினைவுகளோடு நாங்கள் செல்வோம்.

செல்விருந்து நோக்கி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.......

பசித்தவனுக்கும் விருந்தளித்திடுவோம் அவசியம் நேரும் போது.

Sunday, October 23, 2011

குவைத்தில் பேரனின் பிறந்தநாள் விழா விருந்து.......2

 
Posted by Picasa


தினேஷ், சுதா, விழாநாயகன் பொன்சர்னேஷ் கேக் வெட்டத் தயாராக நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பின்னால் உடுப்பி இண்டெர்நேசனல் உரிமையாளர் திரு.வெங்கட்ராமன் போற்றி,புத்தேரி திரு மகாதேவன் பிள்ளை, திரு.சக்திவேல் நின்று கொண்டிருந்தனர். நான் மிக மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சமயத்தில் பிள்ளையின் மனைவி திருமதி சுபா சர்னேஷின் தாத்தா நீங்க இங்க நிக்கீங்க பேரனுடன் போய் நில்லுங்கோ என்று அன்பாக சத்தம் போட்டுக் கூற நானும் போய் நின்று கொண்டேன். தினேஷ் கேக் வெட்ட HAPPY BIRTH DAY SONG CD பாட எல்லோரும் கைதட்டி ஆரவரம் செய்தார்கள்.
மகிழ்ச்சியும் பெருமிதமும் கலந்த உணர்வோடு அங்கும் இங்கும் போய் வந்தவர்களில் தெரிந்தவர்களிடம் போய்ப் பேசிக்கொண்டிருந்தேன்.

கடுக்கரை ராமனாதனை அழைக்கவேண்டும் என நாங்கள் மிகவும் விரும்பி அழைத்தோம். வந்திருந்த அவனிடம் பேசினேன்.அப்பொழுது தினேஷ் ஒருவரை அழைத்து இவர்தான் மகாராஜபிள்ளை என அறிமுகப் படுத்தினான்.அவரது மனைவி சரஸ்வதி இந்துக்கல்லூரியில் IGNOU STUDY CENTRE ல் வேலை பாத்ததாக சொன்னார்.இப்போ இருக்கும் பாலாவின் கணவர் மாதேவன் பிள்ளையின் உறவினர் எனவும் சொன்னார்.

சாப்பிட ஆரம்பிக்கலாமே…….buffe system . ஒவ்வொருவரையும் அழைத்தாலும் யாரும் முதலில் வர முற்படவில்லை…….கேக் நன்றாக இருந்தது.அப்பொழுது தான் அதை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கேக்கை வைத்து கொடுக்க நாங்கள் plate ,spoon வாங்கிவைத்திருந்தோம்.ஆனால் ஹோட்டல் பணியாளர்கள் எதுவுமே எங்களிடம் கேட்காமல் கேக்கை வெட்டி சிறு சிறு துண்டுகளாக்கி எல்லோருக்கும் கொடுத்தார்கள்..அதற்கு முன்னால் தந்த கட்லெட்-ம் நன்றாக இருந்தது.

ஒரிஸ்ஸாவில் இருந்து ஒருவரிடம் பேசினேன்.புவனேஸ்வர் போன கதையை அவரிடம் ஆங்கிலத்தில் சொன்னேன்.பூரி ஜெகந்நாதர் கோயில் பற்றியெல்லாம் பேசினோம். குஜராத்துக்காரர் ஒருவரும் வந்தார். தூத்துக்குடி சிவராமனிடம் பேசிவிட்டு டேனியல் சார்,சக்திவேல் சார் எல்லோரையும் பாத்துப் பேசினேன். திருச்சி,கண்ணூர், என பல ஊர்க்காரர்கள் வந்து சிறப்பித்தனர்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கனியன் பூங்குன்றனாரின் வரிகள் என் மனதில் தோன்றின. ஜாதி,மத பேதமில்லா மாநில வேறுபாடற்ற மொழி வித்தியாசமின்றி உறவுக்காரர்கள் போல் அன்போடும் ஈடுபாட்டோடும் கலந்து கொண்டது எனக்கு ஒரு வித்தியாசமான சங்கமம் போல் தோன்றி உற்சாகத்தைத் தந்தது.

ஒரு வழியாக பெண்கள் எல்லோருமே வரிசையாய் நின்று தேவையான அளவு naan,pepper chicken, butter chilly chicken,fried rice,vegetable salad, gopi manjuurian,curd rice-ல் விரும்பியதை எடுத்து சாப்பிட ஆரம்பித்தனர்.

நம்மூர் பந்தியில் விசாரிப்பது போல் நான் என் பேரனின் விருந்துக்கு வந்தவர்களை ஒவ்வொரு மேசைஅருகிலும் போய் நின்று பேசியும் சிரித்தும் பெருமைப் படுத்திக் கொண்டிருந்தேன்.

பூரித்துப் போய் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த என் மனைவியை அழைத்து சாப்பிட சொல்லி இருவரும் சாப்பிட்டோம்.எல்லாமே சுவையாக இருந்தன.Soft drinks, fruit salad with ice cream ருசித்து மகிழ்ந்தோம்.

பிரியுமுன் எல்லோரும் என் மகன்,மருமகள்,பேரனுடன் இருந்து போட்டோவும் எடுத்து விடைபெற்று சென்று கொண்டிருந்தனர்.

கடைசி வரை இருந்து மண்டபத்தை விட்டு நாங்கள் போகும்போது எங்களுடன் வந்தது புத்தேரி மாதேவன்பிள்ளை,தோவாளை மகாதேவன் ,ஆஸ்ராமம் மாதவன் குடும்பத்தினர்.

வெளிநாட்டில் நடக்கும் பேரனின் ஒரு வயது பிறந்தநாள் விருந்தில் நாங்கள் கலந்து கொண்டது ஆண்டவன் அருளினாலும் கருணையினாலும் மட்டுமே.

எல்லோரது அன்பை பெற்றிருக்கும் என் மகனை நினைத்து பெருமையாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது.

எல்லாப் புகளும் இறைவனுக்கே.
நடப்பவை எல்லாம் இறைவனாலே.

குவைத்தில் பேரனின் பிறந்தநாள் விழா விருந்து.......1

t
 
Posted by Picasa


20-10-2011 ஸீஸர்ஸ் பேக்கரியில் order பண்ணின கேக்கை வாங்கீட்டு விழா நடக்கும் ஹோட்டலுக்குப் போனோம். lift -ன் பக்கத்தில் அறிவிப்பு சுவரில் ஒட்டப்பட்டிருந்தது.அது :- HAPPY BIRTHDAY PONSHARNESH PARTY ON 2nd FLOOR ......கோஹினூர் ஹோட்டலில் இரண்டாம் தளம் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. நீண்ட செவ்வக வடிவம் .வாசலின் பக்கத்தில் உள்ள சுவரில் தெர்மோ கூல் அட்டையில் HAPPY BIRTHDAY எழுத்து வடிவத்திலும் PONSHARNESH என ப்ரிண்ட்டவுட்டும் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது. ஹாலில் பத்துக்குமதிகமாக மேசை விரிப்புடன் ஒவ்வொரு மேசையின் முன் 5 செயர்களும் மற்றும் வெறும் செயர்களும் போடப்பட்டிருந்தன. சாப்பாடும் தயாராய் இருந்தன.

மேடையில் பட்டுத்துணியால் விரிக்கப்பட்டு அதன் மேல் கேக் பிரதானமாய் இன்னும் சிறிது நேரத்தில் உணவாகக் காத்துக் கொண்டிருந்தது. 6.30 மணிக்கு இருபது பேர் வந்தனர். அவர்களை தினேஷ் வரவேற்று இருக்கும் படி வேண்டினான்.

டேனியல் சார் தன் குடும்பத்துடன் வந்தார். அவரைக் கண்ட சர்னேஷ் அவரிடம் போக அழ அவர் வந்து இவனை எடுத்தார். 20 நாட்கள் கழித்துதான் அவரைப் பார்க்கிறான். அவரிடம் இருந்து அவன் எங்களிடம் கொஞ்ச நெரம் வரை வரவே இல்லை.

நான் வெளியே நின்று வரவேற்கலாமே என்ற எண்ணத்தில் கீழே வராந்தாவில் போய் நின்று கொண்டேன். தினேஷ் வந்து என்னை மேலே வந்து இருக்கும்படி கூறினான். நம் ஊர்ப் பாணியில் வரவேற்கவே நான் இங்கு நிற்கிறேன் என்று சொன்னவுடன் அவனும் மகிழ்வுடன் அங்கீகரித்த மனதோடு போய் விட்டான்.7-15 க்குப்பின் ஒவ்வொருவராக வந்து கொண்டே இருந்தார்கள்.அவர்களுடன் வந்த ஸ்ரீதர் என் கூடவே நின்றார். நாங்கள் அனைவரையும் கை கொடுத்து வரவேற்றுக் கொண்டிருந்தோம்.

எல்லோரும் வந்து விட்டனர். மணி 7.35….பிள்ளை தன் குடும்பத்துடன் வர நான் அவரை வரவேற்று அவருடன் Lift-ல் போனேன்.எல்லோரும் வந்தாச்சா…. சாமியை இன்னமும் காணவில்லையே என தினேஷிடம் கேட்க அவர் வந்து கொண்டிருக்கிறார்;பத்து நிமிஷத்துல வந்துருவார் எனச் சொன்னான்.

உடனே நான் அவரை அழைத்து வரலாமே எனக் கீழே போய் நின்றேன், சமயம்தான் போனதே தவிர அவரைக் காணவில்லை.இன்னொரு வாசல் இருக்கிறது என்று அதைத் தேடிப் போனேன். அப்போ தினேஷ் வந்து, அவர் வருவதர்க்கு இன்னும் கொஞ்சம் நேரமாகும். அவர் நாம் இருந்த வீட்டுக்குப் போய் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்.
அப்பம் அவர் வந்த பின் கேக் வெட்டினால் நேரமாயிருமே. வந்தவர்கள் காத்திருப்பதால் ஒன்றுமில்லையா எனக் கேட்டேன் தினேஷிடம். No problem.இப்பம் வந்த்ருவாரு.
நான் தினேஷிடம்.” என்னை கேக் வெட்டும்போது மேடைக்கு அழைக்காதே.சாமியைப் பெருமைப்படுத்த அவரை மேடைக்கு கூப்பிடு.
நாம் தான் 18-ம் தேதி பிறந்த நாளன்று கேக்வெட்டி கொண்டாடியாச்சுல்லா
நான் சொல்படி நீ செய்யணும். நன்றி மறப்பது நன்றன்று., நாம் நம் நன்றியை காண்பிக்க நான் சொல்வது போலச் செய் என்றேன். அவனும் நான் சொன்னதைக் கேட்டு அவன் அவனுடைய உணர்வுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டான். நானும் முழு மனதுடன் சம்மதித்தேன்.
“ நீ போய் starter-ஐக் கொடுக்கச் சொல்லிவிட்டு வா”, எனச் சொன்னேன். அவன் போய் அது போலவே எல்லாம் சொல்லிவிட்டு மறுபடியும் கீழே என்னுடன் வந்து நின்று கொண்டான். சாமியும் வந்தார்.அவருடன் ஹாலுக்குப் போனோம்.
மேடைக்கு வந்து கேக் வெட்ட தயாரானார்கள்.

நாங்கள் மேடையில் ஏறி நிற்க தினேஷ் கேக் வெட்டும்போது எல்லோரும் எழுந்து நின்று கை தட்டி தங்களுடைய மகிழ்ச்சியை காண்பித்தனர். ஸ்ரீதர் உற்சாகமாக கலந்து கொண்டார்.அவர் தான் உருளை வடிவமான ஒன்றை இயக்க கலர் பேப்பர் துண்டுகள் அழகாக பறந்து மேலே போய் பூக்கள் போல் எல்லோர் தலையிலும் விழுந்து மின்னியது. தோவாளை மகாதேவனின் கேமராவில் மணிகண்டன் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான்.தினேஷின் கேமராவில் மகாதேவன் எடுத்துக் கொண்டிருந்தார்............

Thursday, October 20, 2011

எங்கிருந்தாலும் வாழ்க நீயென் நண்பா...

வே-----ள்(சுந்தர்)என் பால்யகாலத்து சினேகிதன்.சம வயது. விளியாட,சினிமா பார்க்க மாத்திரமே படிப்பதைத்தவிர எல்லாவற்றுக்கும் எங்களுடன் வருவான். பீடி குடிப்பான். சகோதரிகள்,அவன் உட்பட 6 பேர் அவனது பெற்றோருக்கு.அஞ்சு பொம்பளப் பிள்ள இருந்தாலே அரசனும் ஆண்டியாவான்னு சொல்லுவாங்க. குடும்ப நிலவரம் உணராமல் அவன் மனக் கட்டுப்பாடின்றி தான் தோன்றியாய் வாழ்ந்து கொண்டிருந்தான்.

பணிக்கர் கடையில் கொடுக்க வேண்டிய பைசாவைக் கொடுக்க வில்லை என்பதால் அவனது அப்பாவிடம் சொல்ல நல்ல அடிவாங்கினான்.கோபத்தில் போய் பணிக்கரிடம் சண்டைக்குப் போக அந்த சமயத்தில் வந்த Tution சார் பார்த்து விட்டார். அதனால் ஓடிப் போய் விட்டான்.
அடுத்தநாள் காலயில் கடை திறந்த பணிக்கருக்கு பகீர் என்றிருந்தது. மண்ணெண்ணெய் முழுவதும் சிந்தி டப்பா காலியாய் இருந்தது.Tap திறந்திருந்தது....இது எப்படி.கடையை பலகைகளை போட்டு அடைத்துவிட்டுத்தானே போனோம்....சிந்திக்க ஆரம்பித்தார்...சுந்தரின் கைங்கரியம் தான் ....Tution வாத்தியார் வீட்டில் போய் பத்தவைத்து விட்டார். அதன் பிறகு அவரது அடிக்குப் பயந்து ஒப்புக் கொண்டான்.காசு பணிக்கருக்கு கிடைத்து விட்டது. அதன் பிறகு பணிக்கரும் சுந்தரும் நண்பரகளாகி விட்டனர். காசில்லாமலே இவனுக்கு பீடி கிடைத்தது....

ஒரு தடவை கோயிலில் பூசை செய்த காசிப் பூசாரி இவனை மண்ணெண்ணெய் சம்பவத்தைச் சொல்லி கிண்டல் பண்ணவே இவன் அவரைக் கெட்ட வார்த்தையால் திட்ட அவர் அவன் அப்பாவிடம் சொல்லி விட்டார். இதற்கும் அடி பட்டான். இரண்டு நாள் கழித்து அந்தக் கோயிலில் இருந்து பொரியை எடுத்துக் கொண்டு ஓடியதை பூசாரியே பார்த்து விட விசயம் பெரிதாய் விட்டது. ஊரில் யார் எந்த வேண்டாத்தனம் செய்தாலும் பழி இவன் பேர்லயெ வந்தது.அதை அவனது அப்பாவே எல்லொரிடமும் சொல்லிக் கேவலப் படுத்துவார். வீட்டில் பைசா காணாமல் போனால் இவன் திருடி இருப்பான் என அடிபடுவான்.

அவனது அப்பா Tution வாத்தியாரிடம் பராதி சொல்லி விட்டுப் போனார். குற்றம் சாட்டப்பட்ட சுந்தர் இல்லையென மறுக்க ஒப்புக் கொள்ள அவனை உத்தரத்தில் தொங்கும்படி தண்டனை கொடுத்தார். ஒப்புக் கொள்ளவே இல்லை...தண்ணீர் தொட்டியில் மணிக்கணக்காக நிறுத்திப் பார்த்தார்... ஒரு பிரயொஜனும் இல்லை...அவனே சொன்னான்,“ நான் அப்பாவின் பணத்தை எடுக்கவில்லை. எடுத்திருந்தால் எடுத்தேன் என சொல்வேன்.அப்பாவுக்கு எப்பவுமே சந்தேகத்துடன் தான் பாக்கா......”.

அதன் பிறகு என்ன சொல்லியும் Tution க்கு வரவே இல்லை. குறத்தியறைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் போது எட்டணாவைக் காணவில்லை யென பள்ளிக் கூடத்துக்கே வந்து அவன் பையினை சோதனைப் போட்டு பையன்கள் மத்தியில் கேவலப் படுத்தி விட்டுப் போனார். அழுது கொண்டே வந்த அவனை எங்க அப்பா கண்டு அருமையாய் கூப்பிட்டு பேசவே தினமும் என் கூடவே வீட்டில் சாப்பிடுவான்.பள்ளிக்கூடம் வருவான்.

அவன் தோற்றுப் போனான். நான் பூதப்பாண்டி பள்ளிக்கூடத்துக்குப் போகவே அவனை அடிககடி பாக்க முடிவதில்லை.
வருடங்கள் போனது. PUC நான் Hostel -ல் தங்கிப் படித்தேன்,லீவில் வரும்போது அவனும் வருவான்.ஒரு நாள் அவனிடம் பீடி வாங்கிக் குடித்தேன்.... அவனுக்கு ஒரே ஆச்சரியம்....‘ நீ பீடி குடிப்பியா என்னால் நம்ப முடியவில்லையே’ என்றான்.

நல்லா இருப்ப ஏங்கூட வச்சு பீடி குடிக்காதே. பெரியப்பா என்னை அருமையாய் வச்சிருக்கா கெடுத்திராதே என்ற அவன் எனக்கு பீடி கேட்டாலும் தர மாட்டான். மடவிளாகம் ஆசாரியிடம் 2 தங்க காப்பை கொடுத்து நல்லாக்கி கொண்டு வர சுந்தரிடம் கொடுத்தனுப்பினார் அப்பா. அதை அவன் பணயம் வைத்து காசு வாங்க முயலும் போது ஆசாரியே வீட்டுக்கு வர சுந்தர் காப்பை அம்மையிடம் கொடுத்துவிட்டுப் போனவன் தான் . வரவே இல்லை. நானும் இதுநாள் வரை அவனைப் பாக்கவே இல்லை.

ஆனால் எனக்கு இன்றும் அவனைப் பாக்க வேண்டும் போல் இருக்கிறது.கடுக்கரைக்கு அவன் வந்தாலும் என்னை பாக்க அவன் முயற்சித்ததே இல்லை. ஆனாலும் எனக்கு அவனைப் பார்த்துப் பேச வேண்டும் என்று அடி மனதிலே ஆசையாகவே இருக்கிறது.

ஏன்....அவன் என்னைக் கெட்டவனாக்க துணை வரவே இல்லையே...அவனிடம் அவன் அப்பா அருமையாய் இருந்திருந்தால் இன்று அவனும் நன்றாய் இருந்திருப்பான். எங்கிருக்கிறானோ.....இல்லையோ....தெரியவில்லை. காலம் ஒரு நாள் வரும் . நண்பன் அவனை சந்திப்பேன்......

குதிரை வண்டி

குறத்தியறை பள்ளிக்கூடத்தில் நாங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது வகுப்பு முடிந்து சாயந்திரம் வாரத்தில் ஒரு தடவையோ,இரு வாரத்திற்கு ஒரு முறையோ குதிரை வண்டி ஒன்று கடுக்கரைக்குப் போகும்.அது லிப்டன் தேயிலை விற்பனையாளர் வரும் வண்டி.அவர் பின் பக்கத்தில் ஒற்றைக் காலை வண்டியின் வெளியே தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு கீழே விழாமல் இருக்க குறுக்காகப் போட்டிருக்கும் கம்பியைப் பிடித்துக் கொண்டிருப்பார்.சிறுவர்கள் அந்த வண்டியின் பின் பக்கம் வண்டியைப் பிடித்துக் கொண்டு ஓடுவார்கள்.

நாகர்கோவிலில் குதிரை லாயம் இருந்தது.Towerபக்கம் குதிரை வண்டிகள் நிற்கும். கழுவந்தட்டுக்குப் போணுமானால் அப்போ நடந்து போகணும் இல்லேண்ணா குதிரை வண்டியிலே போணும். இன்று குதிரை வண்டிகளே இல்லை.

திருச்செந்தூரில் கொஞ்ச வருடத்திற்கு முன்னர் வரை குதிரை வண்டி உண்டு.இப்போ இருக்கா தெரியல்ல.

திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் வருவதற்குமுன் Examination paper valuation-க்குப் போக மதுரைக்கு போவோம். வீட்டில் இருந்து பஸ் ஸ்டேண்டுக்கு ஆட்டோவில் போய் மதுரைக்கு பஸ்ஸில் போவோம்.மதுரையில் இறங்கினால் மருந்துக்குக்கூட ஒரு ஆட்டோ கிடையாது. சைக்கிள் ரிக்சா மாத்திரமே உண்டு. நடந்தே மாடேண் லாட்ஜுக்குப் போவோம்.

அங்கிருந்த வேளையில் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே போய் சாப்பிடாமல் ரூமில் இருந்தே சாப்பிடுவோம்.சாப்பாடு வாங்கிக் கொண்டு வருபவன் ஒரு ரிக்‌ஷாக்காரன்.அவன் பெயர் சுப்பையா . அவன் கதையைக் கேட்டு அதை எழுதி அனுப்பினால் பரிசு கிடைக்கும். சோகமும் வேடிக்கையாய் இருக்கும்.எல்லோரும் அவனுக்கு அதிகமாகவே ருபாய் கொடுப்பார்கள்.குடிப்பது தான் அவனுக்கு மிகவும் பிடித்த விசயம்.அதனால் அவனது தேகமே நோஞ்சான் போல் தான் இருக்கும். குடிக்க என்று சொல்லி காசு கேட்பான். காசு கொடுத்து குடிக்காதே எனச் சொன்னாலும் சிரித்துக் கொண்டே போய் விடுவான்.

நாம் காசு கொடுத்து எதையாவது வாங்கிவரசொன்னால் வாங்கி வந்து மிச்ச காசையும் தந்திருவான்.பொய் சொல்ல மாட்டான்.இந்துக் கல்லூரி ,அண்ணா கல்லூரி ஆசிரியர்கள் தான் Modern Lodge க்குப் போவது வழக்கம்.அவர்கள் அனைவருக்கும் சுப்பையாவைத் தெரியும்.கிருஷ்ணன் சார்,சிதம்பரம் பிள்ளை சார் இவர்களுக்கு இவன் தான் சேவகன்.

அடுத்த தடவை வரும்போது இவ்வுலகை விட்டு மேலுலகம் சென்றதைக் கேள்விப்பட்டு மிகவும் வருந்தினோம். எங்களுடைய லக்கேஜை மாத்திரம் ரிக்‌ஷாவில் கொண்டுவர நாங்கள் நடந்தே போனது மனதில் தோன்றியது.

Wednesday, October 19, 2011

வில் வண்டியில் கல்லூரிக்குப் போன கதை

1973-ல் நான் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த சமயம்.இரண்டாம் வாரத்தில் ஏதோ போராட்டம் காரணமாக பஸ் வராது என்பதறிந்து அந்த நாளில் கல்லூரிக்கு வரமாட்டேன் எனச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

அப்பா என்னிடம்,“ நாளைக்கு காலேஜுக்கு எப்படிப் போகப் போகிறாய்” கேட்டார்.

நான் ,“ பஸ் வந்தா போவேன். இல்லண்ணா லீவு போட்டுருவேன்”

“காலேஜுல சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகல்ல.லீவெல்லாம் எடுக்கக் கூடாது.இண்ணைக்கு எதுக்கு வந்தே... நாரூல்ல பாஸ்கரன் வீட்ல தங்கி நாளைக்கு போயிருக்கலாம்லா....”

“அப்பம் நான் எப்படிப் போவது... யாரிட்டயாவது சைக்கிள் வாங்கீற்றுப் போகட்டுமா ?”

“சைக்கிள்லயும் போகாண்டாம்...நடந்தும் போகாண்டாம்..வீட்ல இரு”...இது அம்மா

“நான் சொன்னதக் கேழு. வில்லு வண்டியிலே நாளைக்குப் போ”...இது அப்பா

அப்பா சொன்னால் மறு பேச்சு பேசமுடியாது. சரி யென்று தலையாட்டினேன்.

காலையில் பப்பனாபிள்ளையண்ணன் வந்து வண்டியில் காளையைப் பூட்டி ரெடியாய்

இருந்தான்.நான் வண்டியில் ஏற வண்டியை காளை மாட்டை சாட்டையால் அடிக்க வண்டி நகர்ந்தது.எனக்கு ஒரே சிரிப்பு.வழியில் B.Com படித்துக் கொண்டிருந்த வாழைக்கோணம் வேலப்பன் பஸ் வருமா வராதா என்று அவன் வீட்டு முன்னே நின்று கொண்டிருந்தான்.நானும் வரட்டுமா என்ற அவனையும் கூட்டிகொண்டு போனேன்.

வண்டி மணிமேடை பக்கம் வந்தது. மணி 9.45.இங்க இறங்கி நடந்து போவேன்ணு சொன்னியே. என்ன செய்ய ? நான் பதில் கூறுவதற்குள் பப்பனாபிள்ளையண்ணனே நேரமாயிற்று உன்னக் கொண்டு காலேஜ் பக்கம் விட்டுட்டு நான் இங்க வந்து நின்ணுருகேன்...வண்டி காலேஜ் அருகே போய் நின்றது.

என்னைப் பார்த்த Principal Prof.L.C.Thanu சாரும் மற்றவர்களும் ஆச்சரியத்தோடு பார்த்து எப்படி வந்தே.... Taxiயிலா வந்தே... எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை....ஒன்றுமே சொல்லாமல் நான் சிரித்துக் கொண்டே வேகமாய் Attendance Register-ல் கையெழுத்துப் போடப் போய்விட்டேன்.

என் கூடவே வந்த பையன் வண்டியில் வந்த விவரத்தை சாரிடம் சொல்லி விட்டான்.அவர் மற்ற சக ஆசிரியர்களிடம் சொல்ல எனக்கு ஒரே பயம்... எங்கே பையங்களுக்குத் தெரிந்து
பட்டப் பெயர் எதாவது வைத்து விடக்கூடாதே.

அப்பா சொன்னதால் மாத்திரமே வண்டியில் வந்தேன்...எல்லாம் சரியாய் பஸ் போக ஆரம்பிச்சாச்சு. ஆனால் வீட்டுக்கும் வண்டியிலேயே போனேன்....

காமராஜ் மறைந்த நாளில் செய்தி அறிந்த உடன் வகுப்புகள் விடப்பட்டன. கடுக்கரைக்கு பஸ் போகாததால் நானும் சாத்தாங்குட்டி அத்தானும் சைக்கிளிலேயேப் போனோம். போனதும் அப்பா சைக்கிள்லயே நாரூல்ல இருந்து வந்தியா....கால் வலிக்கல்லையா....சொல்லப்படாதா பப்பனாபிள்ளைய வண்டி கொண்டுவரச் சொல்லி இருப்பேனே.... மனதுக்குள் தந்தை மனதை நினைத்துக் கொண்டே வீட்டினுள் சென்றேன்

கல்லூரி ஆசிரியரே ஆனாலும் அப்பாக்கு நான் பிள்ளைதானெ.

மின்வெட்டு இல்லா நாடு

நாங்கள் ஃபாஹீலுக்கு போன சமயத்தில் கடைகள் நிறைந்த இடத்தில் ஒரு பெரிய லாறி நங்கூரம் பாச்சி நிக்கும் கப்பல் போல் நின்று கொண்டிருந்தது. உள்ளே என்ன இருக்கு என தெரியாதவாறு ஃபுல்லா கவராகி இருந்தது.அருகே நெருங்க நெருங்க அது ஒரு Generator எனத் தெரிந்து கொண்டேன். என்ன விசயம்... மின்வெட்டா.... இல்லை.

மின் கம்பங்கள் வரிசையாய் நின்று ஒளி வீசிக்கொண்டிருந்தது.ஆனால் மின் கம்பிகளை எங்கேயும் பார்க்க வில்லை. எல்லாமே Under ground ல தான் கேபிள் போகிறது .இங்கு மின் பழுதினை நீக்க வருபவர்கள் முதலில் எங்கும் மின்சாரம் இல்லாமல் ஆகிவிடக்கூடாது என்பதற்காக இந்த generator-ல் கணக்ஸன் கொடுத்து விட்டு அதன் பிறகு தான் வேலை செய்வார்கள்.

மேலும் அறிந்த விசயங்கள்.....
இங்கு குவைத்தில் மொபைலில் லோக்கல் நம்பர் டயல் செய்யும்போது STD code எதுவும் போடுவது கிடையாது.

Hospital is only run by Government.But there are many private medical centre.

வாகனங்களில் வாகன ஓட்டுனர்கள் இடதுகை பக்கம் இருந்துதான் ஓட்டுவார்கள். முன் இருக்கயில் இருப்பவர்கள் கண்டிப்பாக பெல்ட் போடணும்.சிறு குழந்தைகள் முன் பக்கத்தில் அமரக்கூடாது.Two wheel scooter,AUTO இல்லை. TVS 50 சில இடங்களில் ஒட்டுவதைக் கண்ட்டேன். சாலையில் பல இடங்களில் குடி நீர் இருக்கிறது.

திருட்டு பயம் இல்லை. குப்பூஸ் விலை கூடியதே இல்லையாம். குப்பூஸ் கடை வைத்திருப்பவர்களுக்கு அரசு மான்யம் கொடுக்கும்.

விருந்து வியாழக்கிழமை மாலை தான் நடத்துவார்கள். அப்போதான் எல்லோரும் வருவார்களாம். ஒரு வாரத்தில் திங்கள்,செவ்வாய் களில் பிறந்த நாள் வந்தாலும் விருந்தென்று நடந்தால் அது அந்த வாரத்தில் வரும் வியாழக்கிழமைதான் நடத்துவார்கள்.

எனக்காக மட்டுமே எழுதுவதிலும் ஒரு சுகம் தெரிகிறது

என் மனதில் மலர்ந்த மலர்களையும் மலரும் நினைவுகளையும் நாளை எனது பேரன்கள் பார்த்து சிரிக்கவும் எனை நினைக்கவும் தனிமை என்னை வாட்டும் போதெல்லாம் இந்த வரிகள் என்னை இதமாக வருடவும் மாத்திரமே பதிவு செய்கிறேன்......
தங்கம்

12-10-2011 குமுதத்தில் படித்த ஒன்று பிடித்தது. அந்த வரி:-

”எது உங்களுக்கு உண்மையானசந்தோஷத்தைக் குடுக்குதோ,எதைச் செஞ்சா நீங்க நிறைவா செய்ய முடியுமோ அதைச் செய்ங்க..அதான் கீதையும் சொல்றது.எதைச்செஞ்சா நீங்க நிறைவா உணர முடியுமோ,எதை நீங்க முழுமையா ஈடுபட்டு செய்யமுடியுமோ அதை செய்ங்க.அதான் உங்க தன்னறம்” ஜெயித்த ஜெயமோகன் சொன்னது.

காலையில் நடக்கப் போகலாமா வாறியா வரல்லியா என என் மனைவியிடம் கேட்டேன். வீட்டில் AC குளிரில் இருந்துகிட்டே ஒரே குளிரா இருக்கு. நான் நடக்க வரல்ல.... ஐயோ! அதானே நான் வெளிலே வெயில்ல நடக்கப் போறேன். இவ்வாறு சொன்னதும் சிரித்துக் கொண்டே என் மனவி என்னுடன் நடக்க வந்தாள்.

இது குவைத்தில் மாத்திரமே ஏற்படக்கூடிய அனுபவம். நம்ம ஊரில் ‘வெளியில குளிரா இருக்கு நடக்க வரல்ல’என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.....

18-10-10ல் பிறந்த பேரனின் முதல் பிறந்தநாள் குவைத்தில்

 
Posted by Picasa


18 அக்டோபர் 2010 மாலை 3.20 நான் வீட்டில் இருக்கும்போது தினேஷ் George Mission Hospital-ல் இருந்து சுதா சுகமாக பெற்றாள் என மொபைல் போணில் கூறினான்.என்ன பிள்ளை என அவனும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை.பிள்ளை வரம் கேட்டு வந்ததனால் ஈஸ்வரன் பேர் போடணும்னு நினைத்திருந்தான்.குவைத்தில் scan பண்ணிப் பார்த்தால் என்ன பிள்ளையென சொல்லிவிடுவார்கள். இந்தியாவில் சொல்ல மாட்டார்கள்.சொல்ல மாட்டோம் என Hospital -ல் அறிவிப்பு பல இடங்களில் இருக்கிறது.ஆனாலும் எழுதித் தராமல் மனம் இருந்தால் சொல்கிறார்கள்...எப்படியும் வெளியே தெரிந்து விடும்.
என்னிடம் என்ன பெயர் வைக்கலாம் எனக் கேட்டபோது உன் இஷ்டம் எதுவோ அப்படியே செய் எனச் சொன்னேன். என் மகன் முருகன் அவன் பிள்ளைக்கு என்னைக் கேட்காமலே எனது பெயரை எழுதியேக் கொடுத்து விட்டான்.அதன் பிறகு என்ன செய்ய முடியும். அதனால் தினேஷிடம் என் பெயரை வைக்க வேண்டாம்.அம்மையின் பெயரை வைக்கணும்னு என் ஆசையைக் கூறினேன்......

ரோஜா மலரினை எப்படி அழைத்தாலும் அது மணம் வீசத்தானெ செய்யும். எப்படி அழைத்தாலும் அவன் பேரன் தானே. பொன்சர்ணேஷ் எனப் பேரன் அழைக்கப்பட்டான் .எனது அக்காள் மாத்திரம் பொன்னப்பன் என்றே இன்றும் அழைக்கிறாள்....

நேற்று 18-10-2011 எங்கள் பேரனின் முதல் பிறந்த தினம்

Tuesday, October 18, 2011

இளைஞர்களின் வழிகாட்டியாம் பிள்ளையுடன் ஒரு மாலைப் பொழுதினில் நான்



மங்காஃபில் சுல்தான் செண்டர் பக்கம் உள்ள பிள்ளையின் வீடு

ஞாயிற்றுக்கிழமை சாயந்தரம் மாதேவன்பிள்ளை வீட்டுக்குப் போகணும் என்று ஏற்கனவே தினேஷ் என்னுடன் சொல்லியிருந்தான்.அதனால் நான் பக்கத்தில் நடந்து போகக் கூடிய தூரத்தில் தானே வீடு இருக்கிறது என நினைத்துச் சொன்ன சமயத்தில் புறப்பட்டு நடந்து போகத் தயாரானேன்.

அவர் வந்து காரில் நம்மை கூட்டிற்றுப் போவார் என்று சொன்னதால் கீழ்த்தளத்தில் போய் நடைப் பயிற்சிக்காக நடந்துகொண்டிருந்தேன்.எப்படியும் பத்து நிமிஷத்துக்கு மேலாகும் அவர் வருவதற்கு....... நடக்கும்போதே நினைக்கிறேன். புத்தேரி தினெஷின் மகனின் பிறந்த நாள் பார்ட்டியில் அவரும் நானும் பரஸ்பரம் பேசியாச்சே. வீட்டுக்குப் போனால் பேச ஒன்றுமில்லையே....போரடிக்குமோ...

அவர் காரில் அவர் வீட்டுக்குப் போனோம். அந்த வீட்டுக் குழந்தைகள் யதார்த்தமாக எங்களுடனேயே இருந்து விளையாடிக் கொண்டும் பேசிக்கொண்டும் இருந்ததைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தேன்.இப்போ குவைத்தில் இருப்பது போலவே இல்லை... நாகர்கோவிலில் இருக்கும் உணர்வே இருந்தது...

T.V யில் மலையாளச் சேனல் ஒன்றின் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு வேண்டி ராஜ் சேனல் மாத்தப்பட்டது. அங்கும் செய்தி தான்....புதுச்சேரி கல்வி அமைச்சரின் 10-ம் வகுப்புத் தேர்வில் ஆள்மாறாட்டம் பற்றியதாக இருந்தது...சே..சே... ஏசியா நெட் க்கு மாறியது...அங்கு ஹரிஹரன் சங்கீதம் பாடிக்கொண்டிருந்தார்....சன் நெட் ஒர்க் எதுவுமே இல்லை.ஒரே தமிழ்ச் சேனல் ராஜ் மட்டுமே.யாருமே சீரியல் பார்ப்பது இல்லை.எப்படி நேரம் போகுது எனக் கேட்டேன். நல்ல நிகழ்ச்சிகள் நிறைய இருக்கே அதை பார்ப்போம் என்றார்கள்.
ஊருக்குப் போனாலும் பிள்ளை சீரியல் பார்ப்பது இல்லை.அதனால் வீட்டில் அவர் இருந்தால் மற்றவர்களும் பெற்றவர்களேயானாலும் சீரியல் பார்ப்பது இல்லை. நான் என் மனைவியைப்
பார்த்து சிரித்தேன்.அவளும் சிரித்துக் கொண்டே நான் நம்மூரில் சீரியல் பாக்காமல் இருந்ததையும் இப்போ இங்க வந்தபின் பாப்பதையும் சொன்னாள்...

மாதேவன் பிள்ளை என்னிடம், “நீங்க ஜெயமோகன் கதையெல்லாம் படிச்சிரிக்கீங்களா” கேட்டார். ‘குங்குமம்’-த்தில் வந்த அவருடைய அப்பா பற்றியும்,Net-ல் கெத்தில் சாகிப், வணங்கான் கதைகளும் படிச்சிருக்கேன்.எனக்கு பிடிச்சிருந்தது என நான் சொன்னேன்.
சிறந்த எழுத்தாளர்கள் நாஞ்சில் நாட்டவர்கள் தான். கவிமணி,சுந்தரராமசாமி, ஜெயமோகன்,நாஞ்சில் நாடன்,அரவிந்தன்நீலகண்டன்,அ.கா.பெருமாள்,.....இவர்களைப் பற்றியும் அவர்களது எழுத்துக்களைப் பற்றியும் எங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டோம்.பேச்சு அரவிந்தன்நீலகண்டன் பக்கம் திரும்பியது.

ஆழிபெரிது ,விஜய் T.V-ல் பேசியதும் பற்றி மிக உயர்வாக பிள்ளை பேசிக்கொண்டிருந்தார்.
ஊருக்கு வரும்போது அரவிந்தனுடன் சந்தித்துப் பேசணும்.உங்களுக்கு அவரைத் தெரியுமா? எனக் கேட்டார்.நீங்கள் வரும்போது சந்திக்கலாம் எனக் கூறினேன்.அரவிந்தனுக்கும் எனக்கும் உள்ள உறவையும் சொன்னேன். மிகச் சிறந்த அறிவாளி...இந்தச் சின்ன வயதிலே என்ன வெல்லாம் எழுதிகிறார்...சொல்லிக் கொண்டே போனார். கேட்கக் கேட்க எனக்கு இன்பமாய் இருந்தது.

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அக்காடமி விருது கிடைத்ததும் ஜெயமோகனின் வீட்டுக்கு போண் பண்ணி நாஞ்சில்நாடனின் நம்பரைக் கேட்டு அறிந்து பாராட்டு தெரிவித்ததையும் கூறினார். பணிச்சுமை கூடுதலாக இருந்த சூழ்னிலையிலும் தமிழைத் தேடிப் பிடித்துப் படிப்பதைக் கேட்டு சற்று ஆச்சரியப்பட்டேன்.
சாப்பிட அழைத்தார்கள். சாப்பாட்டு மேசையும் அழகாக இருந்தது.மேசையின் நடுப் பாகம் சற்று மேடாய் உயர்ந்து சுற்றும் வகையில் இருந்தது.அதில் பதார்த்தங்கள் உள்ள பாத்திரங்கள் இருந்தன.நாமே அதனை நம் பக்கம் நகர்த்தி நமக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளக் கூடிய அமைப்பு.வீட்டம்மாவே பரிமாற சாப்பிட்டுக் கொண்டும் பேசிக்கொண்டிருந்த போது அவர் வடக்கு வீட்டுவரலாறு பற்றி ஒரு புஸ்தகம் பார்த்தேன் கிடைக்குமா எனக் கேட்டார். நான் தருகிறேன் என்னிடம் இருக்கிறது என்றேன்.

நேரம் போனதே தெரியவில்லை. மணி பத்தானதால் நாங்கள் புறப்பட அவரே மறுபடியும் காரில் வீடுவரை வந்து விட்டுவிட்டுச் சென்றார்.

வீட்டுக்கு வந்தபின் தினேஷ், பிள்ளையைப் பற்றிச் சொன்னதைக் கேட்டு மலைத்து விட்டேன்.நாஞ்சில் நாட்டில் இருந்து 50 பேருக்கும் அதிகமாக குவைத்தில் அவரால் வேலை பார்க்கிறார்கள். என் மகன் இந்தக் கம்பனியில் வேலை பார்ப்பதும் அவரது உதவியால் தான்.ஒவ்வொரு வியாழன்று மாலையில் பிள்ளையின் வீட்டுக்கு எல்லோரும் வந்து நாஞ்சிநாட்டுத் தீயல்,புளிக்காறி,மீன் கருத்தக்கறி யினை ருசித்துப் பார்த்து செல்வது வழக்கம்.

தானும் வாழ்ந்து தன் சமுதாய இளைஞர்களும் வாழ வழிகாட்டிக் கொண்டிருக்கும் பிள்ளையின் வீட்டில் அவர் அருகே அமர்ந்து அமுதருந்தியதையும் செவிக்கு விருந்தாய் இருந்த தமிழமுதையும் என்னால் மறந்து விட முடியுமா?

Monday, October 17, 2011

தம்பி செல்லம் மறைந்த நாளில் தினேஷ் எழுதிய வரிகள்

தினேஷின் Diary ல் இருந்த ஒரு கவிதையைப் படித்தேன்.அது கடுக்கரை தம்பி
செல்லம் பற்றியது.ஆச்சரியமாய் இருந்தது.என் விழியோரம் நீர் தழும்பியது.
என் தம்பியின் நினைவினில் பல காட்சிகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தது...

ஒருநாள் நான் அவன் திருவனந்தபுரத்தில் இருந்த போது அவனுடன் Nair Union Hostel -ல் தங்கினேன்.University College-ல் எனக்கு Exam- அதுக்கு படித்துக் கொண்டிருக்கும் போது வெளியே நல்ல மழை.current இல்லை.வெளியிலும் ஒரே இருட்டு. என் தம்பியோ வேறு ஒரு அறையில் இருந்தான்.நான் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கும்போது ஜன்னல் வெளியெ ”எண்ணே எண்ணே” என அவன் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தால் 6 மெழுகுத்திரியுடன் மழையில் கொட்டக் கொட்ட நனைந்து கொண்டே நின்றிருந்தான்.Flask-ல் tea யும் தந்தான்.மெழுகுத்திரி வெளிச்சத்தில் தான் நான் படித்தேன்.

கடுக்கரையில் திரு முருக பக்தர்கள் சங்கம் நான் ஆரம்பித்தபோது அவனால் தான் அது சிறப்பாக நடந்தது. என் வீட்டு என் அறைதான் அவனுக்கும் அவன் நணபர்களுக்கும் அலுவலகம். அவனைப் பற்றி எழுத நிறைய விசயங்கள் உண்டு.

தினெஷ் திட்டுவிளை கரோல் ஸ்கூலில் படிக்கும்போது அவன் Tour போனான்.ஒரு நாள் திருவனந்தபுரம் காலையில் போய் மாலை வரணும். இரவு 8 மணி வரை பள்ளி வேன் வரவில்லை. எஙகள் படபடப்பு அதிகமானது..Railway Station- ல் போன் மூலம் கேட்டதில் ரயில் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிப் பிள்ளைகளுடன் வந்ததை அறிந்து கொண்டோம்.மினிக் கிளப்பில் இருந்த செல்லமும் கிருஷ்ணனும் சுவேகாவில் திட்டுவிளை நோக்கி போனாரகள்.
அங்கு தினேஷைக் கண்ட உடன் எங்களுக்கு தகவல் தந்தான். டூருக்கு கூட்டிற்றுப் போன ஆசிரியரைக் கண்டித்தான்........

அவன் மறைந்தது எனக்கு பேரிழப்பே.

அவனைப் பற்றி தினேஷ் எழுதிய வரிகள்:-



மே தினம் 2008-ல் ஏந்தான் வந்ததோ அன்றுதான்
சேதி ஒன்று இடிபோல் காதில் வந்து விழுந்தது
என்னையும் தன்மகன்போல் நேசித்த என்னன்பு
சின்னப்பாவின் இதயத்துடிப்பு நின்ற தினம் அன்றுதான்.
என்னப்பாவின் தம்பியில்லாக் குறையை தீர்த்த செல்ல
சின்னப்பா இனி இல்லை இவ்வுலகிலே...
போதையிலும் தடுமாறாமல் பாதை மாறா சின்னப்பா
இன்று மட்டும் பாதை மாறிப் போனதேனோ
எல்லோரும் அவருடல் அருகே அழுது கொண்டிருக்க
பல்லாயிரம் மைல்களுக்கப்பால் ஒற்றை மரமாய்
விம்மி விம்மி அழுகின்றேன்....என் கண்ணீர் துளிகள்
ஒவ்வொன்றிலும் ஒரே ஒரு முகம் தெரிகிறது....அது
பாசமுள்ள சின்னப்பாவின் சிரித்த முகம்.அந்த முகமே
இனி என்றும் என் மனதில் இருக்கும்...

Sunday, October 16, 2011

நான் வளர்த்த பப்பி

1990-ல் பொன்னப்ப நாடார் காலனியில் வீடுகட்டி தாமசஅத்துக்கு வந்தோம். அந்த பகுதியில் வீடு அதிகம் இல்லாத சமயம். காவலுக்கு பட்டி ஒண்ணு வேணும் என எல்லோருமே சொன்னார்கள்.தெரிசனம்கோப்பில் இருந்து குட்டி நாய் ஒன்றை மாமா அன்னக்கிளி மூலம் கொடுத்து அனுப்பினார்.

நாயே பிடிக்காது என் மனைவிக்கு...பயம்.என் வற்புறுத்தல் காரணமாக இரு மனதுடன் சம்மதித்தாள்.சங்கிலி ,அது வசதியாக பகல் படுக்க சாக்கு எல்லாம் உண்டு.சாப்பாடு தினமும் அவள் கொடுப்பதால் அவளையே சுற்றுச் சுற்றி வரும்.குட்டியாய் இருக்கும்போதே வந்ததால் அதற்கு பப்பி என்று பெயர் வைத்தோம்.எப்போதும் கட்டியே போடப்பட்டிருக்கும்.

அது வளர்ந்து பெரியதானதும் கட்டிப் போட்டால் சத்தம் போட்டுக் கொண்டே இருந்ததால் கட்டிப் பொடுவதை நிறுத்தினோம். கேட்டின் அடியே நுழைந்து வெளியே போய்விடும்.

என்னைக் கண்டால் பயந்து போய் பதுங்கி பதுங்கிப் போகும்.வெளியே அது போய்விட்டால் ஒரே ஓட்டம்....பின் மெதுவாக வரும். தீபாவளி சமயம்,கிறிஸ்மஸ் சமயம் வெடிச் சத்தத்துக்குப் பயந்து வீட்டுக்குள் வந்து படுத்து விடும். தண்ணீரை எடுத்தால் வெளியே ஓடிரும். என் பிள்ளைகளை கிண்டல் பண்ணுவதற்காக அடிக்கடி நான் சொல்வது “ இந்த வீட்டில் நான் சொன்னால் கேட்கும் ஒரே ஜீவன் பப்பி தான்”

அடிக்கடி வெளியே போய் மற்ற பட்டிகளுடன் சண்டை போட்டு கடி வாங்குவது தான் வாடிக்கையானது.பக்கத்து வீட்டுப் பட்டி அறிவான ஒன்று. அது அந்த வீட்டு அம்மாளுடன் எங்க வீட்டுக்கு வரும்.அப்போது பப்பி அதனுடன் சண்டையிட்டு துரத்தி விடும்.அந்த பட்டி ஒரு காலை பப்பியின் மேல் வைத்தாலே பப்பி க்ளோஸ்தான்.

ஒரு நாள் வெளியே போன் பப்பி வரவே இல்லை. சர்க்கஸ் நடந்த நேரம். யாரோ பப்பியை காசுக்கு பிடித்து வித்திருப்பான் சிங்கம்,புலியின் உணவுக்காக.

பல இடங்களில் தேடினோம்......கவலையாய் இருந்த நேரத்தில் மாமாவும் சிவனடி சேர்ந்த கவலையும் வந்தது. இந்தக் கவலை பப்பி இல்லாக் கவலையை சிறிதாக்கி விட்டது

அப்பா வளர்த்த நாய்

குவைத்தில் தெருநாயையே காணாத நாங்கள் ஒரு நாயைக் கண்டோம். நாய் ஒருவரை சங்கிலியால் இழுத்துச் செல்கிறதா அல்லது நாயை இழுத்துக் கொண்டு அவர் நடந்து போகிறாரா தெரியவில்லை. வீட்டின் வெளியே நாயைப் பார்க்கவே முடியாது. அடைபட்டுக்கிடந்த நாயல்லவா அது குஸியுடன் ஓடியும் துள்ளியும் செல்கிறது.

இப்போல்லாம் எதைப் பார்த்தாலும் பேசினாலும் ஊர் ஞாபகமும் பழைய நினவுகளும் வந்து கண் முன்னே வந்து நர்த்தனம் ஆடுகிறது. இண்ணைக்கு வாலையாட்டி வந்து குழைந்தது எங்க வீட்டு கடுக்கரை நாய்.

கால்கள் குட்டையாய் கருப்பு வெள்ளை நாய்.உள்ளூரில் பிறந்த நாய் அது. வெளியே போன அப்பாவுடன் வந்த குட்டி அது. வீட்டு வெளிமங்களாதான் அதன் இருப்பிடம். வீட்டினுள் வரவெ செய்யாது. அது கொஞ்சம் வளர்ந்ததும் அப்பா கூடவே வயலுக்கும் தோப்புக்கும் போகும்.
இரவு நேரத்தில் காம்பவுண்ட் கதவை தாழ்போட்டபின் அது காவல் வேலையை ஒழுங்காகப் பார்க்கும்.யார் வந்து கதவைத் திறந்தாலும் சப்தம் இட்டு எழுப்பிவிடும்.

வீட்டுக்கு வரும் வெளியாள் யாரையும் கண்டு கொலைத்து பயமுறுத்தாது. நாங்கள் வெளியே சென்று உள்ளே வரும்போது கொலைக்கும்.என்னுடன் வரும் நண்பர்கள் ,”நாங்க வந்தா கொலைக்க மாட்டேங்கு, உன்னக் கண்டா கொலைக்கு,” கிண்டல் செய்வார்கள். நான் பதிலுக்கு அது கொலைப்பதுக்காரணம் நான் உங்க கூட வருகுது அதுக்கு பிடிக்கல்லடா அதான் கொலைக்குது எனச் சொல்வேன்.

என் சொர்ணப்பத்தான் ,”தங்கப்பனக் கண்டா அது கொலைக்கும்....என்னக் கண்டா கொலைக்காது...” அடிக்கடி சொல்லுவார்.

நான் என் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போகும்போதெல்லாம் என் கூடவே வரும். எதிரே வரும் நாயைக் கண்டாலும் சண்டை ஒன்றும் போடாமல் பாவம் போல் பதுங்கி வந்து விடும். எந்த வீட்டிலும் கிடக்கும் எச்சியானாலும் சரி கொடுத்தாலும் சரி அது சாப்பிடாது. பட்டி என்றால் கொஞ்சமும் புடிக்காத எங்க ஆச்சி வீட்டில் கொடுத்தால் மட்டுமே சாப்பிடும்.அங்கு போனால் தரிசு பட்டி வந்திருக்கு என்று அன்பாகவும் சந்தோசமாகவும் சொல்வது அதற்கும் புரிந்திருக்குமோ என்னவோ.போகசொன்னால் அது வீட்டுக்கே போய்விடும்.

ஒருநாள் நான் வீட்டுக்குள் நுழையும்போது கொலைத்தது.. கோபம் வந்து அடிக்க கம்பை எடுத்ததும் அது என் காலைச் சுற்றியே வந்தது. அடிக்கவில்லை.....பார்த்துக் கொண்டிருந்த அப்பா ”அதை ஏண்டா அடிக்கப் போறே...ஒன்னக் கண்டவுடன் அதுக்கு சந்தோசம் வருது...அதான் கொலைத்து வெளிக்காட்டுகிறது....நீ தான் வருகிறாய் என்பதை வீட்டின் உள்ளே இருந்தே அதன் சத்தத்தைக் கேட்டே நான் தெரிந்து கொள்வேன்.

கடுக்கரை சிவன் கோயிலில் பூஜை செய்யும் கொண்டைப் போத்தி தினமும் கொயிலில் இருந்து வீட்டுக்குப் போகும் போது சந்தணம் தந்துவிட்டு போவார்.அவர் இருக்கும் வாழைக்கோணத்தில் உள்ள வீட்டுக்கு அவர் போகும்போது எங்க நாயும் அவர் கூடவே வீடுவரை போய்த் திரும்பி வரும்.இது தினமும் நடக்கும் விசயம்.எனது சின்னப்பா இறந்த சமயம். தீட்டு என்பதால் 16 நாள் அவர் எங்க வீட்டுக்கு வரவில்லை.எங்க வீட்டை தினமும் கடந்துதான் அவர் போவார். வீட்டுக்குள் வராமல் போகும் போத்தியுடன் அவர் கூப்பிட்டாலும் கூட நாய் போகவில்லை. மிகவும் அதிசயமாய் அவரே சொன்னது இது.


1974 ம் வருடம்....யார் கண்பட்டதோ....கார் ஏறி அதன் பின்பக்கம் நன்றாக அடிபட்டு துடித்து ரோட்டில் நடக்கமுடியாமல் கிடந்த நாயை எங்க வீட்டின் பின் மங்களாவில் கொண்டு கிடத்தினார்கள்.வலியால் துடித்த நாயை நான் போய் பார்த்தேன்.கண்களில் நீர் வடிந்து கொண்டே முனகிக் கொண்டே இருந்தது. ஆசான் ஒருவரை அழைத்து பார்த்தோம் பிரயொஜனமே இல்லை.

அசையாமல் கிடந்த நாய்க்கு நாங்கள் வைத்திருந்த உணவை சாப்பிடக்கூட முடியவில்லை.அப்பா அதன் அருகே வந்ததும் அந்த வலியிலும் எழ மிக வேகமாக முற்பட்டது.அப்போதுதான் அசைவதைப் பார்த்தேன்.....எஜமான் விசுவாசமா....பாசமா....
வாழ்வை எங்களுக்காக மாத்திரமே வாழ்ந்த அந்த அன்பான நண்பன் மறைந்தான்.நானும் பப்பனாபிள்ளையண்ணனும் மிகவும் மரியாதையாக அதை பக்கத்து தோப்பில் பால்,பைசா எல்லாம் போட்டு புதைத்தோம்....அதன் பிறகு நாய் வளர்க்கவே இல்லை.

இயற்கையன்னை தந்த உலக்கருவி

குவைத் மேஜிக்-க்கு போனோம்.அனுமதி இலவசம் தான்.ஆனால் உள்ளே வீகாலேண்ட் மாதிரி சில உள்ளன.அவற்றில் நாம் கலந்து கொண்டு ஆடவோ பறக்கவோ வேணுமானால் தினார் கொடுக்கணும்.Rising star,Rainbow, music express கொஞ்சம் பயமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது.மலை யேறும் பயிற்சிக்காக செயற்கையாக குன்று ஒன்றினை அமைத்து மேலிருந்து கீழாகத்தொங்கும் கயிற்றைப் பிடித்து ஏறப் பழகலாம்.

குதிரையில்,ஒட்டகத்தில் ஏறி சவாரி செய்யலாம். Indoor games-ம் பல உள்ளன.கடைகள்,ரெஸ்டாரண்ட் இருந்தன. புல்வெளியில் பலர் குடும்பம் குடும்பமாக இருந்து, கொண்டு வந்த உணவினை அருந்திக் கொண்டிருந்தனர்.கடற்கரையில் இருள் கவ்விய நேரத்தில் தீ மூட்டி எதையோ சுட்டு தின்று கொண்டிருந்தார்கள்.கடல் குளம் போல் அமைதியாய்,பூரணச் சந்திரனின் முகமும் அதன் கதிர்களும் கடலில் மின்னிக் கொண்டிருந்ததை வெகு நேரம் ரசித்துக் கொண்டிருந்தோம்.இயற்கை அழகினை நான் ரசித்தேன்.செயற்கையாக இருந்த பல விளையாட்டினை விட தங்கத்தால் தக தக என மின்னும் முழுநிலாவின் ஒளிக் கதிர்களின் பிம்பத்தினை ரசித்துக் கொண்டிருந்தேன்.கடல்நீரில் என் காலை நனைத்தேன். வாயில் நீரை விட்டு ருசி பார்த்தேன்.
ஆஹா....குவைத்தின் கடல் நீரும் உப்புதான்.

தண்ணீரின் சுவைதான் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது.கடல் நீர் எங்கும் ஒரே சுவை அது உப்புச் சுவையே.

கடைகள் இருந்த கட்டிடத்துக்கு உள்ளே போனோம். எல்லாம் இருந்தது. ஒரு செயற்கையாக falls ம் செடியும் கொடியும் இருந்தது.

தோவாளை மகாதேவனுக்கு பிடித்த இடம். அவர் அழைத்ததால் அவருடன் பொன நாங்கள் இதே போல் நம்மூரில் உண்டுமா என பேசிக்கொண்டிருந்தோம்...யோசித்தேன்.

கன்னியாகுமரியில் கூட இருக்கிறதே. இயற்கை யாகவே அழகு தரும் அற்புதங்கள் நம் நாட்டில் அதிகம் உள்ளன. காலைக்கதிரவன் எழுவதையும் விழுவதையும் நம்மூரில்தானே ரசிக்க முடிகிறது.கீரிப்பாறையில் வட்டப்பாறையில் குளிக்கப் போனால் நாள் முழுவதும் குளிக்கணும் போல் இருக்குமே. உலக்கருவி யின் இயற்கை எழில், நீர்வீழ்ச்சி,காலையில் போனால் மாலை வரை இருந்து ரசிக்கத் தூண்டும் ரம்மியமான மன நிலை வேறு எங்காவது உண்டா? திற்பரப்பு,மாத்தூர் தொட்டிப்பாலம்,சிற்றார் அருகே உள்ள சிவலோகம், பேச்சிபாறை வெள்ளிமலை....,சொத்தவிளை பீச், கடுக்கரையின் மூன்று பக்கங்களயும் சுழ்ந்து தவழ்ந்து செல்லும் சானல்....தான் என் மனதுக்கு பிடித்தவை. நம்மூர் நம்மூர்தான்...

Friday, October 14, 2011

இலங்கையில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள்

காலை 7 மணி.நானும் என் மனைவியும் காலையில் நடப்பதற்காக வீட்டின் அருகே உள்ள ஃபாஹீல் கடற்கரை நடைபாதையில் நடந்து கொண்டிருந்தோம். சற்றுத் தொலைவில் 2 கப்பல்கள் நின்று கொண்டிருந்தன. அவைகள் பிரயாணிகள் கப்பல் அல்ல.அது சாமான்களைக் கொண்டு செல்லும் கப்பல் என என் மனைவியிடம் சொல்லும்போதே அவள் நீங்கள் கப்பல்ல சிலோணுக்கு போனீங்கள்ளா.அதப் பற்றி எழுதலாமே.

எப்பம் போனேன். ஞாபகம் இல்ல..எங்கேல்லாம் போனேன் ஞாபகம் இல்ல..என்ன செய்வது...யோசித்துக் கொண்டிருக்கும்போது ராமலிங்கம் நாங்கள் அங்கே போனதைப் பற்றி எழுதிய கட்டுரை இந்துக் கல்லூரி Magazine-ல் பிரசுரமானது ஞாபகத்துக்கு வந்தது.

எந்த வருஷத்து மேகஸீன்.....என் மகன் முருகன் பிறந்து ஒரு வயசு ஆனபின் நான் போனதாக என் மனைவி சொன்னாள்.உத்தேசமாக 1979,80,81 -ஆம் வருஷத்து மேகஸீன பார்த்தால் தெரிந்துவிடும். சமயம் கிடைக்கும் போது தேடிப்பார்த்து தகவல் தரும்படி காந்திநாதனுக்கு e-mail அனுப்பினேன். உடன்தானே அனுப்பித் தந்த கட்டுரையைப் படித்தேன்.

ஜூன் மாதம் நாகர்கோவிலில் இருந்து மறந்த முதல்வர் Prof.L.C.THANU தலைமையில் புறப்பட்டுபோனோம்.Dr.D.வேலப்பன்,Dr.S.சுப்ரமணியம்,Dr.C.சங்கரன்பிள்ளை,ராமலிங்கம்,சங்கர்,கிருஷ்ணமூர்த்தி,வித்யாசாகர்,R.S.பிரபாகரன்,திரவியம் பிள்ளை,சுப்பிரமணிய பிள்ளை,பீர்முகம்மது,சத்தியமூர்த்தி,சுந்தரேசன்,நான் எல்லோரும் 11-6-79-ல் இராமேஸ்வரத்தில் இருந்து ராமானுஜம் என்ற கப்பலில் பயணமானோம்.மாலையில் தலைமன்னார் போய் சேர்ந்து அங்கிருந்து ரயில் மார்க்கமாய் கொழும்பு போய் சேர்ந்தோம்.

நானும் சுந்தரேசனும் எனது உறவினர்வீட்டுக்குப் போக அனுமதி கேட்டோம்.ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் போய் வர முடியுமானால் போங்கோ என்று சொல்ல நாங்களும் போய் பார்த்துவிட்டு வந்தோம்.அந்த உறவினரின் பெயர் பகவதி.எங்க அம்மையின் பெயரும் பகவதியம்மாள்.அம்மையின் தாய் மாமாவின் மகள் அவள்.

தமிழர்கள் அதிகம் வாழ்ந்த எந்த இடத்துக்கும் எங்களை அழைத்துச் செல்லவில்லை.

கதிர்காமம் ,அனுராதாபுரம்,திருகோணமலை,கண்டி,பொலனருவா,சிகிரியா எல்லா இடங்களுக்கும் போய் வந்தோம். முதல் நாள் எங்கெல்லாமோ சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு ஹோட்டலுக்குப் போனோம். உள்ளே நுழையும்போதே அங்கிருந்து வந்த வாடை கொமட்டியது.சாப்பாடு அறவெ பிடிக்கவில்லை. பல இடங்களிலும் சாப்பாடு நன்றாக இல்லை.

கொழும்பு வந்ததும் நாங்கள் 3 பேர் நாகர்கோவிலில் இருந்து ஒரு ஆசாரி வீட்டுக்குப் போனோம். இந்தியாவில் இருந்து வாங்கிய சங்கு மார்க் லுங்கி இரண்டு கொடுத்தோம். அவரது வீட்டில் சாப்பிட்ட சாப்பாடு ஒன்றுதான் நன்றாக இருந்தது.

சிகிரியாக் கோட்டை யென்று நினைக்கிறேன்.அங்கு போனோம். சுவரில் இருந்த ஓவியம் நமது தஞ்சாவூர் ஓவியம் போன்று இருந்தது.எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் வரைந்தது.தமிழக மன்னன் ஆண்ட காலமது. அதற்கு மேல் ஏறுவது சிரமம். ப்ரின்சிபால் உசுப்பேற்றிவிட நான்,சுந்தரேசன்,ராமலிங்கம் ஏறினோம்.

7 கிணறு பார்த்தோம். கைவிட்டு தண்ணீர் எடுக்கலாம்.ஒவ்வொரு கிணற்று நீரும் வேவ்வேறான சூட்டில் இருந்தது .எந்த காலத்திலும் இப்படியே இருக்கும்.

ராமேஸ்வரம் வந்தோம்.கஸ்டம்ஸ் செக்கிங்குக்காக வரிசையில் நின்றோம். என் முறை வந்தது. இது என்ன புஸ்தகம் எனக் கேட்க நான் ’செஸ் புக்’ என்றேன். என்ன செக்ஸ் புக்கா அதெல்லாம் கொண்டுவரக்கூடாதே என்றான். என் பின்னால் நின்ற வித்தியாசாகர் இல்லையா அது செஸ் விளையாட்டு பற்றியுள்ள புக் என்று சொன்னதும் புக்கை தந்துவிட்டான். சங்கு மார்க்கு லுங்கியை என்னிடம் கேட்டு அவன் எடுத்துவிட்டான். என்னை எதுவுமே கேட்காமல் ஜட்டியையும் சிகரெட் பாக்கட்டையும் எடுத்து விட்டான். மனதில் ஏசிக்கொண்டே வெளியே வந்தேன்.

நண்பர்கள் எல்லோரும் அங்கிருந்து ரயிலில் கிளம்பினோம். பறக்கை கோபி சார் என்னருகே வந்தார்.”பொன்னப்பா….நீ சிலோணில் வைத்து 50 காசு தந்தேல்லா. இன்னா 25 பைசா வச்சுக்கோ” என்று சொல்லி அவர் பட்ட கடனை தீர்த்தார். அவர் குணம் தெரிந்து நான் அதை வாங்கினேன்.
ஒரு வாரம் மிக சந்தோசமாக பல இடங்களைக் கண்டு களித்தோம். Celon Old Brand Arrack ஒரு இடத்தில் கிடைத்தது.கொழும்பில் Duty Free shop-ல் பொருள்கள் வாங்கினோம்.எல்லாமே தரம் வாய்ந்த பொருளாகவே இருந்தது.அந்தக் காலத்தில் அது மிகவும் கவரப்பட்ட விசயம்.நாகர்கோவிலில் எதுவுமே சொப்பனத்தில் கூட பார்க்க முடியாது.ஏதாவது வாங்கணும்னா கள்ளத்தனமாகத்தான் வாங்கணும்.

வெளிநாடு சென்ற முதல் ஆள் எங்கள் குடும்பத்தில் நான் தான் என பெருமை பீத்திக் கொண்டு கொஞ்ச நாள் அலைந்தேன்.என்ன இருந்தாலும் இலங்கையும் வெளிநாடுதானே.இப்போ அது SRI LANKA.

Thursday, October 13, 2011

17 வயதில் திருமணம்

1973-ம் வருடம். நான் பணியில் சேர்ந்த வருடம்.வேண்டா வெறுப்பால் அப்பா சொல்லி விட்டார் என்பதற்காக மாத்திரமே வேலைக்கு வந்த நேரம்.முதல் நாள் கல்லூரி முதல்வரைப் போய் பார்த்தேன். President-ஐப் பாத்துட்டு வா.

முதல் நாளே வகுப்புக்குப் போன நான் துறைத்தலைவரால் பாராட்டப்பட்டேன். வருடம் ஒன்று ஓடியது.என்னை P.U.C F Batch-க்கு Group Tutor -ஆக போட்டார்கள்.

கீரிப்பாறையில் இருந்து ஒரு பையன் என் வகுப்புக்கு வருவான்.மற்ற வகுப்புக்கு போகாமல் இருந்தது என் கவனத்துக்கு வந்தது.நான் அவனை அழைத்துக் கேட்டதில் அவனது பதிலில் திருப்தி இல்லாமல் வீட்டில் இருந்து அப்பாவைக் கூட்டிக்கொண்டு வரச்சொன்னேன். அடுத்தநாள் அப்பாவை அழைத்து வராமல் அம்மாவை அழைத்து வந்தான்.
பையனை வகுப்புக்கு போகச் சொல்லி விட்டு அவன் அம்மையிடம் பேசினேன்.நான் வாரத்துக்கு ஒரு முறை உங்களை வந்து சந்திக்கிறேன் எனச் சொல்லி அப்படியே செய்தாள்.

டிசம்பர் மாதம் முடிந்த பின் பையன் வகுப்புக்கு வரவில்லை.தாயாரும் வரவில்லை. கடிதம் எழுதி போட்டேன். தாயார் வந்தாள்....

அவள் என்னிடம், “ உங்களுக்குக் கல்யாணம் ஆயிற்றா”

இல்லை என்றேன். 17 வயதில் திருமணம்

”உங்கள் மாணவன்....அதான் என் மகனுக்கு... கல்யாணம். அவன் ஒரு பெண்ணைக் காதலித்தான்.அவனுக்கு ஜனுவரியில் கல்யாணம்....” எனக்கூறி கடிதமும் தந்தாள்.

அதன் பிறகு அவனைக் கண்டேன்.அவனும் கண்டான்.....பாத்தும் பாக்காததுபோல் போய்விட்டான்.

ஒரு நிமிடக் கதை

கடுக்கரையின் பக்கத்து ஊர் திடல்.அது ஒரு கிராமம்.அங்குள்ள அனைவரும் ஒரெ இனத்தவர்கள் தான்.விரல் விட்டு எண்ணும்படியாக ஒரு சிலர் சற்று வசதி படைத்தவர்கள்.மனிதர்கள் கூடி வாழ்ந்தாலும் சின்னச் சின்ன பிரச்சினைகள் இல்லாமல் அவர்களால் வாழ முடியாது.

ஒரு சிறிய பொறி பெரிதாய் மாறி ஒருவனை ஒருவன் வெட்டினான். வெட்டியவனை நீதிமன்றம் விடுதலை செய்தது. இறந்தவனின் தூரத்து
உறவினர்கள் காத்திருந்து வெட்டியவனை ஒருநாள் கொன்று விட்டார்கள். இது ஒரு சம்பவம்.

கடுக்கரையில் இரண்டு பேர் உறவினர்கள்.வண்ணான் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவனது தொழில் திருடுவதும் வழிப்பறி செய்வதும்.போலீஸ் அவனைப் பிடித்து தண்டித்தது. தான் போலீஸில் மாட்டியதற்குக் காரணம் அந்த உறவினர்கள் என நினைத்த வண்ணான் ஒரு நாள் அவர்களில் ஒருவரின் வைக்கப்படப்பில் தீ வைத்து விட்டான்...ஒரு வாரம் கழிந்து அடுத்தவரின் படப்பையும் கொழுத்திவிட்டான். இது வேறொரு சம்பவம்.

இவைகளில் முதல் சம்பவம் நடந்த காலம் படப்பு எரிந்த பின் நடந்தது. கொலைக்கேசுக்கான விசாரணை நாகர்கோவில் கோர்ட்டில் நடந்தது.வக்கீலின் வாதத்தால் இவனும் வெளியே வந்துவிட்டான்.வந்தவன் ஊரை விட்டே போய் எங்கோ போய் வாழ்ந்தான். இந்த வழக்கில் ஆஜரான வக்கீல் வைத்த வாதம் விசித்திரமாக இருந்தது.

இரண்டு உறவினர்களின் பெயர்கள்......அவர்கள் ஊரில் பெரிய பண்ணையார்கள்.அந்தப் பண்ணையார் இருவருக்குமே கிழக்குச்சானல் பக்கம் தென்னந்தோப்பும் பனைவிளையும் உண்டு.
பனைகளில் பதனீரை இறக்கி காய்ச்சி கருப்பட்டியாக்கி விற்றால் வருமானம் வரும். பனையேறுபவர்கள் அனைவருமே திடலில் வாழும் நாடார்கள் தான். அவர்கள் பாட்டமாக ஒரு வருஷத்துக்கு இத்தனை றாத்தல் கருப்பட்டி கொடுக்கணும். வருடம் தோறும் விட்டு வாடகை கூடுவது போல பாட்டமும் கூடும்.

பனையேறுபவர்களில் சிலர் பாட்ட கருப்பட்டிக்கு தேவையான பதனீரை மாத்திரம் காய்ச்சி மீதியை கள்ளுக்காக பாதுகாப்பாக வைத்து தானும் குடித்து குடிப்பவர்களுக்கும் விற்று அதிக வருமானத்தை ஈட்டினர்.

பண்ணையார்களின் பனைவிளையிலும் சாமுவும் ஞானமும் பனையேறினர்.

ஒருதடவை கள் இல்லையென்று சொன்னதால் கோபப்பட்டு வாக்குவாதம் நடந்தது.குடிக்க வந்தவன் வசதி படைத்தவன். அவனும் திடல் ஊரில் வசிப்பவன்.

வாக்குச்சண்டைக்கு அடுத்த நாள் விளைக்குப் போன போது தன் குடில் பிய்ந்துபோய் கிடப்பதைக் கண்டு சாமுவுக்கு மிகவும் கோபம் வந்தது. இதைச் செய்தவன் அவனாகத்தான் இருக்கும்....பணத்திமிர்.அவனை விடவே கூடாது. காத்திருந்தான் அவனை தீர்க்க....

ஒருநாள் ஒரு குளக்கரையில் வெட்டுப்பட்டு இறந்து கிடந்தான்....அவனைக் கொன்றவன் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தான். செத்தவனுக்கு ஊரில் செல்வாக்கு கிடையவே கிடையாது....இருந்தாலும் அவனது தம்பி மார்கள் இருவருக்கு ரோசம் வந்து பழி வாங்கத் துடித்தனர்....அவர்கள் வசதி படைத்தவர்கள் அல்ல.

ஒரு மாலைப் பொழுது தனியாய் வயல் வரப்பில் சென்று கொண்டிருந்தவனை உயிர் போவதுவரை வெட்டிக் கொன்றார்கள் அந்தச் சகோதரர்கள்.

இந்தச் சகொதரர்களுக்கு வேண்டி பிரபல வக்கீல் கோர்ட்டில் வாதாடினார்.

வக்கீல் வாதாடிய போது கோர்ட்டில் சொன்னது:-

இரண்டு பணக்காரர்களின் ஒருவரின் பண்ணையில் வேலை செய்பவன் தான் குற்றம் சாட்டப்பட்டுள்ள ..... பண்ணையார்கள் இருவரும் விரோதிகள்.இவர்களுக்குள் எப்போதுமே சண்டை.இருவரும் மாறி மாறி படப்பை தீ வைத்து நாசப்படுத்தினர்.

இந்தச் சண்டை வேலைக்காரர்களின் சண்டையாக மாறி பகை மூண்டது. தன்னைக் கொல்வதற்காக வந்தவனின் வெட்டுக்கத்தியை பறித்துதான் தன்னைப் பாதுகாக்கவே வெட்டினான்......

Wednesday, October 12, 2011

கதையாசிரியரே கையெழுத்திட்ட கதை யொன்று படித்தேன்

குவைத்துக்கு வந்து எல்லா இடங்களையும் பாத்தாச்சு. நேரம் போக எதையாவது படிக்கலாமே. தோவாளை மகாதேவன் தந்த ஒரு புக்கை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.அதன் முதல் பக்கத்தில் ஆசிரியரின் கையெழுத்தும் ஒப்பும் இருந்தது.

எட்டுத்திக்கும் மதயானை கதை. நாஞ்சில் நாடன் எழுதியது.

படித்தேன்.செண்பகம் கதாநாயகி. நாயகன் பூலிங்கம். பிறப்பால் வெவ்வேறு இனம். ஊரில் இருந்து அவன் விரட்டப்படுகிறான் .பல ஊர்களில் சட்டத்துக்குப் புறம்பான வேலைகளை செய்து கிடைத்த பணத்தை வீட்டுக்கு அனுப்புகிறான்.பல காரணங்களால் ஒவ்வொரு ஊரிலும் அதிக நாள் தங்க முடியாமல் கடைசியில் பம்பாய்க்கு வந்து சட்டம்பி ஆகிறான்.

செண்பகத்தை ஒரு நாள் சந்திக்கிறான்.அவள் ஆண்மையில்லா ஒருவனுடன் திருமணமான கதையை அறிகிறான். இருவரும் அங்கிருந்து வேறெங்கோ செல்கிறார்கள்.

சுசீலா அவனைவிட மூத்தவள். ஊரில் இருக்கும்போதுள்ள தொடர்பால் இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. கோமதியும் அவனை விட மூத்தவள்.இருவருக்கும் உள்ள தொடர்பால் பிரிய நேரும்போது அவன் அவளை தன்னுடன் வரும்படி அழைக்கிறான்.பானுமதி என்ற ஒருத்தியும் வருகிறாள். அவளும் மூத்தவளே...

மூத்தபெண்ணுடன் தகாத உறவு வைத்திருக்கும் பல கிராமத்து இளைஞர்களின் கதையினை அறிந்து மிக மிக ஆச்சரியப்பட்டதால் இந்தக் கதையை படிக்கும்போது அந்தக் கதையின் நாயகனின் அனுபவம் எதுவுமே அருவருப்பாக தோணவில்லை. திக்கெட்டும் சென்றாலும் விரட்டுவது மதம்பிடித்த மனமென்ற மதயானைதானோ.......ரசிக்கும்படியான கதை.ஒரு திரைப்படத்துக்கான கதையாகவும் இருந்தது

ஹவ்வாலி

4-ம் தேதி சனியன்று உடுப்பி ஹோட்டல் முதலாளி போனில் என்னிடம் ,“ எங்காவது போகணுமா
எல்லா இடங்களையும் பார்த்தாச்சா” கேட்டார்.

பார்க்க ஒன்றும் இல்லை எல்லா இடமும் பாத்தாச்சே.....

நீங்க எல்லோரும் ரெடியாய் இருங்கோ...நான் இப்போ என் மினி பஸ்ல வாறேன்.

இங்கே எல்லா வாகனங்களும் left hand drive தான்.

நாங்கள் அவருடைய எல்லா ஹோட்டல்களுக்கும் போனோம். அபாசியா என்னும் இடத்தில் உள்ள ஹோட்டலில் உள்ள அல்வாவும் ,மிக்சரும் ரொம்ப நல்லா இருந்தது.குவைத்தில் உள்ள முக்கியமான 5 Capital களிலொன்றான ஹவ்வாலி என்ற இடத்துக்குப் போனோம். கேனரியில் sandwich வாங்கித் தந்தார்.வெஜிட்டேரியன் தான், நன்றாக இருந்தது. நிறைய இடத்தில் இந்தக்கடை இருந்தாலும் இங்கு தான் நன்றாக இருக்கும் என்றார்.

வீட்டுக்கு திரும்பினோம்.குவைத்தில் கிடைக்கும் உணவான குப்பூஸின் விலை மிக மிக குறைவு. சிமெண்டின் விலை ஒரு மூடை ஒரு K.D தான். மணல் விலை ஒரு லொட் 10 K.D.
steel rod,cement bricks விலை குறைவுதான்.....பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 60 fills.

நான் வீட்டின் பக்கத்தில் உள்ள கடைக்குப் போய் 7O'clock blade வாங்கினேன். அதன் விலை 125 ஃபில்ஸ் .

Tuesday, October 11, 2011

கடுக்கரை கிராமம்

சின்ன கிராமம்.மலைகள் அரண்கள் போல் காட்சிதரும்.எங்கு பார்த்தாலும் பசுமை.பச்சைக் கம்பளம் விரித்தது போல் காட்சி தரும் வயல் வெளிகள்.அறுவடை முடிந்தபின் விளையாட்டு மைதானமாக மாறும் ஊரடி வயலகள். நான்கு திசைகளிலும் கோயில்கள். கிழக்கில் உருவாகி மேற்கும் தெக்குமாக ஒடும் ஆறு.வயக்கிணறு,கோனார் கிணறு,மேலக்கிணறு,கிராமத்துக் கிணறு,வடகிணறு,பொத்தை ஊத்து.....எதர்க்கும் யாரையும் கையேந்த வேண்டிய நிலையில்லா ஊர் அது.
இன்று வடகிணறைக் காணவில்லை. பொத்தை ஊத்துக்கு போகமுடியுமா? தெரியவில்லை.பஞ்சாயத்து நீர் வசதியை செய்து கொடுத்திருக்கு. அரிசிக்கு பஞ்சமில்லை.100 நாள் நிச்சயமாக வேலை உண்டு.பஞ்சாயத்து நூலகம்,உயர்னிலைப்பள்ளி எல்லாம் உண்டு

தை மாதத் திருவிழா, அம்மன் கோயில் கொடை,திருக்கார்த்திகை விழா,பங்குனி உத்திரத்தன்று நம்புரான் விளையாட்டு,ஆயினூட்டுத் திருவிழா ....இவையெல்லாம் ஊர் மக்களால் நடத்தப்படும் கோயில் விழாக்கள்.

வரி எழுதும்போது முதல் வரி தரவேண்டியவர் அந்த ஊரின் முதலடியோ அல்லது அந்த ஊர் மூத்தபிள்ளையோ ,பணக்காரனோ அல்ல. ஆரம்ப காலத்தில் வரி எழுதத்துவங்கும்போது ஊரின் ஈசான மூலையில் இருக்கும் வீட்டில் இருந்துதான் ஆரம்பிப்பார்கள்.அந்த வீட்டில் இருப்பவர் ஏழையாய் இருந்தாலும் சரி,இளைஞராய் இருந்தாலும் சரி அவர்தான் முதல் வரி.எனக்குத் தெரிந்தவரை கடுக்கரையில் முதல் வரி யாருக்கென்று தெரியவில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரி உண்டு ஆனால் மணமாய்ப் போகும் பெண்ணுக்கு வரி கிடையாது.

நம்புரான் வாகனத்தை தூக்குவதற்கும் தூக்கிக் கொண்டே ஒடிவிளையாட முன் போல் பலம் வாய்ந்த ஆண்கள் இல்லையென்றே சொல்லலாம்.சொக்கப்பனை சிவன் கோயில் திருக்கார்த்திகையில் கொழுத்துவது நின்றுபோனது..இரண்டு நாள் மேலக்கோயில் திருவிழா 7 நாள் விழாவாக மாறியிருக்கிறது.கோயில் ட்ற்ஸ்டின் செலவில்தான் நடந்த திருவிழா மக்களின் உதவியால் நடக்கிறது.நம்புரான் வாகனத்தை எடுத்துச் செல்லும்போது குதிரையை சுற்றிவிட சரியான ஆள் இல்லாமையால் விளையாட்டும் இல்லை.

முத்தாரம்மன் கோயில்,சிவன் கோயில் கும்பாபிஷேகம் ஊர்மக்களால் நடத்தப்பட்டது. வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது.தெய்வ கிருபையால் கடுக்கரை இளைஞர்கள் பலர் பல நாடுகளில் பணியாற்றுகின்றனர். கடுக்கரை விவசாயிகள் எவ்வளவோ சிரமத்துக்கு இடையிலும் பயிர் செய்து வாழ்கின்றனர். நெல் விலை கூடினால் தான் விவசாயிகளின் வாழ்வு வளம்பெறும்.

Sunday, October 9, 2011

மனித நேயம் கொண்ட ஒரு எழுத்தாளர்

1983 -ஆம் வருடம் பல சூழ்நிலையால் நாகர்கோவிலுக்கு குடும்பத்தோடு தாமசத்துக்குப் போனோம்.என்னுடைய ஆசிரியரும் என் சக ஆசிரியருமான R.S.P. சாரின் உதவியால் அவரது பக்கத்து வீட்டை வாடகைக்கு வாங்கித் தந்தார்.

ராமவர்மபுரத்தில் ராமன்பிள்ளை தெருவில் சட்டனாதன் என்பவரது வீடு. பர்வதவர்த்தினித் தெருவும் பக்கத்துத் தெரு.அங்கே எனது ஊர் ஆறுமுகம்பிள்ளை அவரது மனைவியின் வீட்டில் தான் இருந்தார்.என்னை அவர் ஒரு தமிழ் எழுத்தாளர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்
அந்த வீட்டு மாடியில் பலர் தரையில் இருந்தனர்.சிலர் எனக்குத் தெரிந்தவர்கள்.எழுத்தாளரை எனக்குத் தெரியும்.என்னை அன்று தான் அவர் பார்க்கிறார்.

வெகு ஜனப் பத்திரிகைகள் ,அவற்றின் செயல்பாடுகள் பற்றி எல்லோரும் பேசினர். இதுபோன்று நடக்கும் கலந்துரையாடல்களுக்கு “காகங்கள்” என்று பெயரிட்டிருந்தார். எல்லோரும் தன் கருத்துக்களை சொல்லி முடித்தபின் தன் கருத்தை எழுத்தாளர் சொல்வார்.

அவரது ஜே ஜே சிலக் குறிப்புகள் படித்தேன்...கடினமாக இருந்தது...என்னைப் போலவே பலரும் கூறினர்.அவர் எங்களுக்காக எழுதுகிறார் என ஒரு பத்திரிகையில் சுஜாதாவும் கூறியிருந்தார்.

ஒரு மாதப் பத்திரிகை அவரால் ஆரம்பிக்கப் பட்டது.அவர் கையெழுத்திட்ட சந்தா ரெசீது என்னிடம் இருந்தது...முதல் புத்தகத்தின் அட்டைப்படம் எனக்குப் புரியவில்லை.அதற்கான விளக்கத்தை பல நண்பர்கள்,ஆசிரியரிடம் கேட்டும் பயனில்லை.

அந்த ஆசிரியருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன்.பத்திரிகயைப் பாராட்டியும் அட்டைப் படத்தைப் பற்றியான என் மன ஆதங்கத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தேன்.அதன் பிறகு
வந்த 2-ம் இதழில் நான் எழுதிய இரண்டு வரிகள் ஆசிரியர் கடிதத்தில் இருந்தது.அந்த வரிகள் குறையைச் சுட்டிக்காட்டிய வரிகள்....தங்கம் என்ற பெயரில் வந்தது எனபதால் நான் தான் அது என்று அவருக்கும் தெரியாது...

அவரது எழுத்துக்களைப் படித்து எழுதும் ,சொல்லும் விமர்சனங்கள் எதுவுமே பொருத்தமாய் இருப்பதில்லை. அவர் வெகு ஜனப் பத்திரிகைக்கு எழுதுவதே இல்லை.

அவரதுப் பேச்சின் நியாயமும் உண்மையும்தான் என்னை கவர்ந்தவை.

அரசு அலுவலகத்தில் அதிகாரியின் முன்னால் இருக்கும் மேசையில் எதிர்புறம் நாற்காலிகள் எதுவும் இல்லாமல் இருப்பதையும் இருந்தாலும் மக்கள் அதில் உட்கார தயாராய் இல்லை என்பதையும் அவர் ஒரு கூட்டத்தில் கூறியதைக் கேட்டு ரசித்ததுண்டு... நானும் ஒரு அதிகாரியின் முன்னால் நின்று பேசுவது நடந்த ஒன்றுதானே.

நான் அவருடைய ஒரு கதைகூடப் படித்ததில்லை 2011 வரை. பெங்களூருக்குக் போன போது வித்தியாசாகர் தந்த ஒரு புளியமரத்தின் கதையை முழுவதும் படித்தேன்.காலம் கடந்து தான் படித்தேன்....மிகவும் ரசித்துப் படித்தேன். இந்தியா திரும்பியதும் அவரது கட்டுரைகள் பலதைப் படிக்கணும். அவர் புத்தேரி சென்று கவிமணியைப் பார்த்ததை அவரது கட்டுரை நூலில் படித்தேன்....அதனால் எல்லாவற்றையும் படிக்கணும் போல் இருக்கிறது....

இந்திராகாந்தியின் இறுதி ஊர்வலத்தைப் பார்க்கணுமே முடியுமா ? உனக்குத் தெரிந்தவர்கள் யார் வீட்டிலாவது T.V இருக்கிறதா ? கடுக்கரையில் இருந்து கோலப்பத்தான் என்னிடம் கேட்டார். நாங்கள் போனது அந்த எழுத்தாளரின் வீட்டுக்கு தான்....அந்த ஹாலில் இடம் கொள்ளாத அளவுக் கூட்டம்....எங்களை அன்பாக வரவேற்று வசதியாய் இருக்கவும் பார்க்கவும் உதவினார். அங்கிருந்த எல்லோருக்கும் tea வந்தது. ஆனால் அவர் T.V ஒளிபரப்பை பார்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

அவரிடம் ஒருவர் தன் தங்கச் செயினை விற்று பணம் வாங்கிச் சென்றார்....வருடம் ஒன்று கழிந்தது....நிர்ப்பந்தம் சூழ்னிலை காரணமாக அந்த எழுத்தாளரிடம் வந்து அழுது கொண்டே தன் நிலையைக் கூறி செயினைக் கேட்டதும் எந்த வித மறுப்பும் கூறாமல் கொடுத்த பணத்தை மட்டுமே வாங்கி செயினைத் திருப்பிக் கொடுத்த நல்ல மனிதநேயம் கொண்ட ஒரு மனிதர்தான் அவர்.

வருடம் ஞாபகம் இல்லை. ஜனுவரி மாதம் ஒன்றாம் தேதி....பெனெடிக்ட்-ன் காரில் (20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து முதல் சவாரியாக எங்களைத்தான் கூட்டிற்று போவார்.அவருடைய முதல் வருமானம் ஜனுவரி 1-ம் தேதி எங்களிடம் இருந்துதான் வாங்க வேண்டும் என இன்றைய தேதி வரை நடந்து கொண்டிருக்கிறது) FM radio கேட்டுக் கொண்டே போகையில் அந்த எழுத்தாளரைப் பற்றி அவரது மருமகள் பேசியதைக் கேட்டேன்.வீட்டு புரோக்கர் கூட மொபைல் போன் வைத்திருக்கிறார்....எனக்கும் போன் வைக்கணும்னு என தமாசாக கூறியதைப்பற்றி......சொல்லிக்கொண்டிருந்தார்.

அவர் ஆரம்பித்த பத்திரிகை காலச்சுவடு

Saturday, October 8, 2011

SCIENTIFIC CENTRE in KUWAIT

Posted by Picasa


நாங்கள் குவைத்து டவ்வருக்குப் போனோம்.120 அடி உயரம் உள்ள டாப் sphere-க்குப் போனோம்.அதன் பகுதிகள் மூன்று. வெளிப்புறம் கண்ணாடியால் கோள வடிவம் கொண்ட சுவர்.it is supported by steel frames. Near the wall there is an annular palatform which is moving very very slowly.முழுமையாக ஒரு சுற்று முடியும்போது கண்ணாடி வழியே வெளியில் தெரியும் குவைத்தின் முக்கிய பகுதிகளைக் காணமுடியும். அதனை அடுத்துள்ள உள் பக்க circular platform-ல் சின்னச் சின்ன கடைகள்....ஸ்னேக்ஸ்,காஃபி,கீ செயின்,படங்கள் வங்கலாம்.

நாங்கள் நின்று கொண்டிருந்த டவ்வரில் கீழும் ஒரு sphere வடிவத்தில் restaraunt இருக்கிறது. பக்கத்தில் ஒரு டவ்வர்...அதில் உள்ள ஸ்பீயர் தண்ணீர் டேங்க்.

அடுத்து Scientific Centre-க்குப் போனோம். அங்கு aquarium,பிள்ளைகளுக்கு அறிவியல் சம்பந்தப்பட்டது,காட்சி அரங்கம் என இருந்தன. நாங்கள் கடல் வாழ் உயிரினங்கள் இருந்த காட்சிசாலையைப் பார்த்து பிரமித்துப் போனோம்.பாலைவனத்திலும் வாழும் பாம்பு,பூனை,பறவைகள்....இருந்தன.

One who visits Kuwait must visit this place.

இந்தியர்களை சந்தித்ததில் அறிந்த சில உண்மை நிலை

காலையில் எப்பவும்போல முகம் கழுவ டேப்பைத் திறந்தேன்.சூடாக இருக்கும் தண்ணீர் இன்று சுடவில்லை.என்னடா இது நேத்துவரை கொதிக்கும் நீர் வந்தது.இன்று அப்படியில்லையே..... ஆம் க்ளைமட் மாறுகிறது...வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி டிசம்பர்-ஜனுவரியில் குளிர் பயங்கரமாக இருக்கும்.

காலை 10 மணிக்கு ground floor-ல் போய் அங்கு கிடந்த செயரில் இருந்தேன்.இதமான காற்று தழுவிக் கொண்டே இருந்தது.அது சுகமாகவும் இருந்தது.சாதாரணமாக அந்த இடத்தில் சூடான காற்று வீசுவதால் அதிக நேரம் நிக்க முடியாது.சலீம்....அவன் இந்தியாவில் பாலக்காடு-ன் பக்கத்தில் உள்ள ஊரில் இருந்து அந்த பில்டிங்கின் ஹரீஸ்-ஆக வேலை பார்ப்பவன்....சொன்னான்.வெயில் காலத்தில் AC room,வீட்டில் போய் இருந்து கொண்டு நாம் சமாளிக்கலாம். ஆனால் ஜனுவரியில் குளிர் காலத்தில் வெளியே வீசும் தணுத்த காற்றை தாங்குவதற்கு ரெம்ப கஷ்டமாய் இருக்கும்.

சலீமிடம் தினமும் பேசி காலை நேரத்தை களித்துக் கொண்டிருந்தேன்....

நாங்கள் இருக்கும் பகுதியில் அடுத்தடுத்து 11 பில்டிங்க் இருந்தன.ஒரு வரிசையில் 6-ம் அதற்கு இணையாக 5-ம்.....கீழ்த்தளம் white tiles போடப்பட்டு ஒரு நீண்ட மைதானம் போல் நடப்பதற்கும் சிறுவர்,சிறுமிகள் விளையாடுவதற்கும் வசதியாக இருந்தது...ஒவ்வொரு கட்டிடத்துக்கும் 9 தளங்கள்.ஒரு தளத்தில் 4 வீடுகள்.

grund floor-கீழும் பெரிய godown இருந்தன.11 பில்டிங்குக்கும் ஒரே ஓணர்...மாத வருமானம் ஒண்ணே கால் கோடி ருபாய்க்கும் மேலே. இது போல் அவருக்கு பல இடங்களில் இருக்கிறது.

அவனதுஅக்காளும் அத்தானும் சால்மியாவில் ஒரு ஹோட்டல் நடத்துகிறார்களாம்.இரண்டு வருசத்துக்கு ஒருமுறை ஊருக்குப் போவானாம். போகும் போதெல்லாம் திரும்பி வர வேண்டாம் என் நினைத்துத்தான் போவான்.ஆனால் ஊரில் தெண்டிப் பிழைப்பதை விட ஜீவிக்கான் வேண்டி இங்கு இருப்பதுதான் நல்லது என்கிறான்.

என் பேரனுடன் நானும் என் மனைவியும் ஒருநாள் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு கேரளப்பெண் எங்களிடம் வந்து,“ குப்பூஸ் கடை எங்கே இருக்கிறது ” என கேட்டாள்.அந்தக் கட்டிடத்தில் இருப்பவர்கள் எல்லோருமே புதுசுதான்.தெரியாது என்று சொன்னோம்.

அவள் சொன்ன அவளது கதை..... “ஊர் கோட்டயம் ,கணவர் கார் ட்ரைவர்,2 பெண் குட்டிகள்.மூத்த குட்டி B.Sc Nursing படிச்சிருக்கா..அவள் தையல் கடை வைத்து தொழில் செய்து கொண்டிருந்தாள்.குவைத்தில் வந்தால் நல்ல சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் இருந்த தையல் மெசின்களையும் விற்று வந்தாள்.அவள் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை...ஒரு தையல் கடையில் வேலை பார்க்கிறாள்...வாடகைக்கும்,சாப்பாட்டுக்குமே சரியா இருக்கு....ஊருக்குப் போனால் அங்கும் தொழில் பண்ண முடியாத நிலை..... நர்ஸிங்க் படித்த மகளை வேலைக்கு சேக்கணுமானால் ஒரு வருட அனுபமாவது வேணும்....எல்லாம் அந்தத் தம்புரான் தான் வழி காட்டணும்” என்று கூறினாள்.

இங்கே இருக்கும் ஒவ்வொரு வெளி நாட்டினரிடமும் ஒரு கதை இருக்கிறது.

Coolpex -ஐ புதிய வீட்டில் வைக்க ஒருவன் வந்தான்.பழைய வீட்டில் இருந்து அதை எடுத்து புதிய வீட்டுக்குக் கொண்டு வந்து வைக்க அவனுடன் நானும் அவன் ஓட்டிய மினி வேனில் வந்தேன்.அவன் பெயர் அப்துல் முகம்மது...கேரளம்...அவன் தனிஒருவனாக எல்லாவேலையயும் நேர்த்தியாக செய்து முடித்த பாங்கு என்னை வெகுவாக கவர்ந்தது.வேலை முடிந்ததும் காசு கேப்பானே என நினைத்துக் கொண்டே அவனுடன் பேசினேன்.அவன் சொன்னது.

6 வருடத்துக்கும் மேல் ஆகி விட்டது குவைத்துக்கு வந்து....என்ன வாழ்க்கை இது.... இந்த வேலை செய்ய நம்ம ஊருண்ணா 3 ஆள் வேணும். பாருங்கோ....ஹெல்ப்பரும் நானே. ட்ரைவரும் நானே.....இந்த வேலை முடிந்து 30 கிலோ மீட்டர் தூரம் போய் புதிய ஒண்ணு ஃபிட் செய்யணும். சாப்பாடும்,தங்கும் இடமும் நான் தான் பாக்கணும்.இந்த டிசம்பரில் முடிச்சுட்டு போயிருவேன்....சம்பாதிக்கவே இல்லேண்ணு சொல்ல மாட்டேன்...பாரியா....குட்டி எல்லாம் அங்கே.....அவங்களும் இங்கே இருந்தாலும் பரவாஇல்ல....

வேலை முடிந்தது. காசு பற்றிக் கேட்டேன்.replacement-க்கு காசு வாங்குவதில்லை என்றான்.

வீட்டின் கதவை பூட்டி விட்டு அவனிடம் விடைபெற்றுச் செல்ல முற்பட்டபோது அவன்,“ இந்த வெயிலில் எப்படி போவீங்க...நானே கொண்டு விடுகிறேன் எனச் சொல்லி பழைய வீட்டினருகே என்னை விட்டு விட்டுப் போனான்.

வாழ்க்கை வாழ்வதற்குத் தானே.அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வாழ்கிறார்கள்.எல்லோருமே ஒன்று போல் நினைப்பதில்லை.