Sunday, October 9, 2011

மனித நேயம் கொண்ட ஒரு எழுத்தாளர்

1983 -ஆம் வருடம் பல சூழ்நிலையால் நாகர்கோவிலுக்கு குடும்பத்தோடு தாமசத்துக்குப் போனோம்.என்னுடைய ஆசிரியரும் என் சக ஆசிரியருமான R.S.P. சாரின் உதவியால் அவரது பக்கத்து வீட்டை வாடகைக்கு வாங்கித் தந்தார்.

ராமவர்மபுரத்தில் ராமன்பிள்ளை தெருவில் சட்டனாதன் என்பவரது வீடு. பர்வதவர்த்தினித் தெருவும் பக்கத்துத் தெரு.அங்கே எனது ஊர் ஆறுமுகம்பிள்ளை அவரது மனைவியின் வீட்டில் தான் இருந்தார்.என்னை அவர் ஒரு தமிழ் எழுத்தாளர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்
அந்த வீட்டு மாடியில் பலர் தரையில் இருந்தனர்.சிலர் எனக்குத் தெரிந்தவர்கள்.எழுத்தாளரை எனக்குத் தெரியும்.என்னை அன்று தான் அவர் பார்க்கிறார்.

வெகு ஜனப் பத்திரிகைகள் ,அவற்றின் செயல்பாடுகள் பற்றி எல்லோரும் பேசினர். இதுபோன்று நடக்கும் கலந்துரையாடல்களுக்கு “காகங்கள்” என்று பெயரிட்டிருந்தார். எல்லோரும் தன் கருத்துக்களை சொல்லி முடித்தபின் தன் கருத்தை எழுத்தாளர் சொல்வார்.

அவரது ஜே ஜே சிலக் குறிப்புகள் படித்தேன்...கடினமாக இருந்தது...என்னைப் போலவே பலரும் கூறினர்.அவர் எங்களுக்காக எழுதுகிறார் என ஒரு பத்திரிகையில் சுஜாதாவும் கூறியிருந்தார்.

ஒரு மாதப் பத்திரிகை அவரால் ஆரம்பிக்கப் பட்டது.அவர் கையெழுத்திட்ட சந்தா ரெசீது என்னிடம் இருந்தது...முதல் புத்தகத்தின் அட்டைப்படம் எனக்குப் புரியவில்லை.அதற்கான விளக்கத்தை பல நண்பர்கள்,ஆசிரியரிடம் கேட்டும் பயனில்லை.

அந்த ஆசிரியருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன்.பத்திரிகயைப் பாராட்டியும் அட்டைப் படத்தைப் பற்றியான என் மன ஆதங்கத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தேன்.அதன் பிறகு
வந்த 2-ம் இதழில் நான் எழுதிய இரண்டு வரிகள் ஆசிரியர் கடிதத்தில் இருந்தது.அந்த வரிகள் குறையைச் சுட்டிக்காட்டிய வரிகள்....தங்கம் என்ற பெயரில் வந்தது எனபதால் நான் தான் அது என்று அவருக்கும் தெரியாது...

அவரது எழுத்துக்களைப் படித்து எழுதும் ,சொல்லும் விமர்சனங்கள் எதுவுமே பொருத்தமாய் இருப்பதில்லை. அவர் வெகு ஜனப் பத்திரிகைக்கு எழுதுவதே இல்லை.

அவரதுப் பேச்சின் நியாயமும் உண்மையும்தான் என்னை கவர்ந்தவை.

அரசு அலுவலகத்தில் அதிகாரியின் முன்னால் இருக்கும் மேசையில் எதிர்புறம் நாற்காலிகள் எதுவும் இல்லாமல் இருப்பதையும் இருந்தாலும் மக்கள் அதில் உட்கார தயாராய் இல்லை என்பதையும் அவர் ஒரு கூட்டத்தில் கூறியதைக் கேட்டு ரசித்ததுண்டு... நானும் ஒரு அதிகாரியின் முன்னால் நின்று பேசுவது நடந்த ஒன்றுதானே.

நான் அவருடைய ஒரு கதைகூடப் படித்ததில்லை 2011 வரை. பெங்களூருக்குக் போன போது வித்தியாசாகர் தந்த ஒரு புளியமரத்தின் கதையை முழுவதும் படித்தேன்.காலம் கடந்து தான் படித்தேன்....மிகவும் ரசித்துப் படித்தேன். இந்தியா திரும்பியதும் அவரது கட்டுரைகள் பலதைப் படிக்கணும். அவர் புத்தேரி சென்று கவிமணியைப் பார்த்ததை அவரது கட்டுரை நூலில் படித்தேன்....அதனால் எல்லாவற்றையும் படிக்கணும் போல் இருக்கிறது....

இந்திராகாந்தியின் இறுதி ஊர்வலத்தைப் பார்க்கணுமே முடியுமா ? உனக்குத் தெரிந்தவர்கள் யார் வீட்டிலாவது T.V இருக்கிறதா ? கடுக்கரையில் இருந்து கோலப்பத்தான் என்னிடம் கேட்டார். நாங்கள் போனது அந்த எழுத்தாளரின் வீட்டுக்கு தான்....அந்த ஹாலில் இடம் கொள்ளாத அளவுக் கூட்டம்....எங்களை அன்பாக வரவேற்று வசதியாய் இருக்கவும் பார்க்கவும் உதவினார். அங்கிருந்த எல்லோருக்கும் tea வந்தது. ஆனால் அவர் T.V ஒளிபரப்பை பார்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

அவரிடம் ஒருவர் தன் தங்கச் செயினை விற்று பணம் வாங்கிச் சென்றார்....வருடம் ஒன்று கழிந்தது....நிர்ப்பந்தம் சூழ்னிலை காரணமாக அந்த எழுத்தாளரிடம் வந்து அழுது கொண்டே தன் நிலையைக் கூறி செயினைக் கேட்டதும் எந்த வித மறுப்பும் கூறாமல் கொடுத்த பணத்தை மட்டுமே வாங்கி செயினைத் திருப்பிக் கொடுத்த நல்ல மனிதநேயம் கொண்ட ஒரு மனிதர்தான் அவர்.

வருடம் ஞாபகம் இல்லை. ஜனுவரி மாதம் ஒன்றாம் தேதி....பெனெடிக்ட்-ன் காரில் (20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து முதல் சவாரியாக எங்களைத்தான் கூட்டிற்று போவார்.அவருடைய முதல் வருமானம் ஜனுவரி 1-ம் தேதி எங்களிடம் இருந்துதான் வாங்க வேண்டும் என இன்றைய தேதி வரை நடந்து கொண்டிருக்கிறது) FM radio கேட்டுக் கொண்டே போகையில் அந்த எழுத்தாளரைப் பற்றி அவரது மருமகள் பேசியதைக் கேட்டேன்.வீட்டு புரோக்கர் கூட மொபைல் போன் வைத்திருக்கிறார்....எனக்கும் போன் வைக்கணும்னு என தமாசாக கூறியதைப்பற்றி......சொல்லிக்கொண்டிருந்தார்.

அவர் ஆரம்பித்த பத்திரிகை காலச்சுவடு

No comments:

Post a Comment