Friday, June 29, 2012

ராஜேந்திரன் சொன்ன உண்மை நிகழ்வு தொடர்ச்சி...3

“ நாங்க ரெண்டுபேரும் உங்க வீட்டுக்கு வந்தோம்.... நீங்க அண்ணைக்கு இல்ல....”
 அவர். “ நீங்க ஒண்ணு செய்யுங்கோ..... போய் அவளைக் கூட்டிட்டுப் போய் அந்த பயலுக்கே கல்யாணம் பண்ணி வச்சிருங்கோ... இப்பமே போங்கோ... நான் இங்கேயே இருக்கேன்” என்று சொன்னார்.

“அதுக்கு நாங்க ஏன் இவ்வளவு தூரம் கஷ்டப்படணும் . முறையா கல்யாணம் நடக்கதுக்குல்லா உங்கள்ட்ட பேச வந்திருக்கோம்”சொன்னான் ராஜேந்திரன்.

“ நீங்க யாரு ஓய் அவளுக்கு மாப்பிள்ளை பாக்கதுக்கு....... ஆமாம்... யாருண்ணெ எனக்குத் தெரியாது....அவன் எனக்கு எழுத்து எழுதுகான்.... அன்புள்ள மாமாவுக்கு-ன்னு நான் ஆஸ்பத்திரியில் இருந்தப்போ கடவுள் புண்ணியத்தில சீக்கிரம் குணமாகணும்......” அவர் கத்தினார்.
” இதில என்னய்யா தப்பு .......” இது ராஜேந்திரன்..

எந்த முறைல அவன் எனக்கு மருமகன்........பேச்சு தாறுமாறாக போய்க் கொண்டிருந்தது..

அவர், “ நான் உங்ககிட்ட இவ்வளவு நேரமும் பேசிக்கிட்டிருந்தேன்லா... ஒரு தடவை கூட நான் அவள் பெயரையோ அல்லது மகளென்றோ சொல்லவில்லை..... ஆனால்  எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கு..... அவள் தாய் மாமன்லாம் இருக்கான்...... அவன்லாம் என் முகத்துல காரல்லா துப்புவான்......”
“நாங்கள்லாம் யாருண்ணு நினச்சிகிட்டு இப்படி பேசுறீரு.... அவர் காலேஜ் வாத்தியாரு...... நானும்.....” ராஜேந்திரன் சொல்லி முடிக்கல்ல......

அவர்,” நீ கடுக்கரை சுப்பையண்ணன் மகன் தானே...... ஒங்கிட்ட நான் பேச எனக்கு என்ன இருக்கு..... நான் இண்ணைக்கே கடுக்கரைக்குப் போய் சுப்பையண்ணனை பாத்து பேசுகேன்.”

”சரி போய் பாருங்கோ..... நான் அப்பாட்ட சொல்லிகிட்டுதானெ உங்க கிட்டேயே வந்து பேசுகேன்..... நீங்க ரெம்ப நல்ல குணம்னுலா சொன்னா பாத்தா அப்படித் தெரியல்லையே!.....
 நான் அந்தப்பையனப் பாத்திருக்கேன்..... ராஜா மாதிரி அழகாய் இருக்கான்..  நீரு நாஞ்சில் நாட்ல எப்படியோ......அவன் அவங்க ஊர்ல பெரிய குடும்பத்துப்பிள்ள.....அவங்களுக்கும் குடும்பமானம்லா உண்டு... அதனால தான் உங்க சம்மதத்துக்கு காத்துக்கிட்டிருக்காங்க......இந்த கல்யாணம் மாத்திரம் நடந்தா உம்ம மாதிரி யோகக்காரன் யாருமில்ல..... உமக்குச் சொன்னா மண்டைல ஏறவும் மாட்டேங்கு...... என்ன செய்ய....சாந்திக்கு தலையெழுத்து நல்லாயிருந்தா திருமணம் நடக்கும்... இல்லாட்டா எப்படியோ அவங்க அவங்க விதி போல நடக்கட்டும்.....” ராஜேந்திரனும் சத்தம் போட்டுச் சொன்னான்.

“ வாங்க tea  குடிக்கலாம்.......” சற்று அமைதியாக பேசினார்.

தாய் மாமன், ராஜேந்திரன் பேச்சில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு
பேசியதால் மனம் சமாதானம் அடைந்தார்.

சரச்சந்திரன் வீட்டிற்கு இரண்டு குடும்பத்தில் உள்ளவர்களும் வந்தனர்.
பையனைப் பார்ததபின் நடராஜபிள்ளையின் பேச்சில் நல்ல மாற்றம்  ஏற்பட்டது.....
 ந்கழ்ச்சியை ஆரம்பிக்கும்போது பிள்ளையாரைத்தான் வணங்குவோம். சத்சங்கம் முடிவுறும்போது ஓம் சாந்தி...சாந்தி... என்று முடிப்போம்.
கணேஷும் சாந்தியும் தெய்வக் குழந்தைகளே.....

திருமணம் நல்லபடியே முடிந்து இன்றோடு 2 1 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இரண்டு பிள்ளைகள்....... இணை பிரியாமல் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்......
முடிக்கும் முன்பு நான் சொல்லியே ஆக வேண்டியது ஒன்றிருக்கிறது....இதனைச் சொன்ன ராஜேந்திரன் மிகவும் ரசனையோடு கூறினான்..... என்னால் அந்த ரசனையை எழுத்தில் கொண்டு வரமுடியவில்லை........

மன்னித்தருள்க.....

ராஜேந்திரன் சொன்ன உண்மை நிகழ்வு-தொடர்ச்சி....2

செய்வதறியாது திகைத்து நின்ற ராஜேந்திரனும் சரச்சந்திரனும் அந்த அம்மாவின் பின்னால் நின்று கொண்டிருந்த சாந்தியைப் பார்த்தார்கள். அவள் உள்ளே வரும்படி சைகை செய்ததால் இருவருக்கும் ஒரு உத்வேகம் வந்தது.

ராஜேந்திரன் ,அம்மா... நீங்க ஒரு பொம்பளையா இருந்துகிட்டு இப்படி வந்தவங்களை குறச்சலாக்கப்படாது.... அப்படி என்ன எங்களப் பாத்தா கொள்ளக்காரன் மாதிரி தெரியா..... ஒரு நல்ல காரியத்துக்காக வந்திருக்கோம்.... நீங்க இப்படி எல்லாம் அவமானப்படுத்தப்புடாது....நீங்க செய்யது கொஞ்சம் கூட நல்லா இல்ல...என்று கூற அவள் சற்று நகர்ந்து பின்னால் போனாள். ஆனால் உள்ளே வாங்கோ என்று ஒரு வார்த்தை கூட சொல்லிக் கூப்பிடவில்லை.
முக்காலும் நன்ஞ்சாச்சு.... முழுதும் நனைஞ்சா என்னா....குறைஞ்சா போயிரும் என்று இருவரும் உள்ளே போனார்கள்.
ராஜேந்திரன் பேச ஆரம்பித்தான்....,நாங்க இப்பொ எதுக்கு வந்திருக்கோம்னு கேக்காமலேயே ஏன் இப்படி கோபப்படுறீங்க...... நாங்க உஙக மக சாந்திக்கு .........”. பேசி முடிக்கவே இல்லை. அதற்குள் அவள், ஏம்பொண்ணுக்கு மாப்பிள்ள பாக்குதுக்கு நீங்க யாரு.....உரத்த குரலில் கத்தினாள்.

அந்தச் சமயம் சாந்தி இரண்டு கப்பில் காப்பியோ தேயிலையோ கொண்டு வந்து அவளது அம்மையை ,எம்மா...எம்மா ...கூப்பிட்டாள். கோபத்தில் நின்ற அவள் திரும்பிப் பார்க்காமலேயே இவர்களைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள்.
ராஜேந்திரன் ,எதுக்கம்மா கோப்படுறீங்க.....இப்பம் என்ன நடந்து போச்சு...... நாங்க பேசுவதைக் கொஞ்சம் கேளுங்க....அதுக்கு முன்னால ஒங்க மகா என்னவோ கொண்டு வந்திருக்காள்ளா ....அத வாங்கித் தாங்கோ.....என்றான்.
திரும்பிப் பாத்தவள் வேண்டா வெறுப்புடன் அந்த கப்பை வாங்கி இருவரின் பக்கத்தில் வைத்தாள்.....
அவர்கள் இருவரும் கப்பில் உள்ளதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்கள்.....
சாந்தியின் அம்மா,நீங்க ஆம்பிளைகிட்டெல்லா பேசணும்... அவங்க  ராத்திரி ஒம்பது மணிக்குதான் வருவாங்க....இருவரையும் விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள்.
இவளிடம் பேசுவது ஒரு பயனையும் தராது என்று முடிவுக்கு வந்த இருவரும் ,பேச்சை அத்தோடு முடித்து விட்டு வீட்டை விட்டு வெளியே கிளம்ப எழுந்தார்கள்...... சற்று மறைவாக நின்ற சாந்தி கைகூப்பி வணங்குவதைப் பார்த்த இருவரும் கனத்த மனத்தோடு வெளியே வந்து என்ன செய்ய என ஒன்றுமே தோணாமல் தெருவில் நடந்து சென்றனர்.
ராஜேந்திரன் சரச்சந்திரன் சாரைப் பார்த்து,சார்...... நான் ஒண்ணு சொன்னா நீங்க கோபப் படக்கூடாது...... நான் இனிமேல் இந்த முயற்சியில் மேற்கொண்டு இறங்க வேண்டுமானால் அந்தப் பையன் கணேஷை நான் பாக்கணும்.... அவனிடம் பேச்ணும்...சொன்னான்.
அவர்,ஆறும்பிள்ள பறயுன்னது சரியாணு..... ஞான் இன்னுதன்னே அயாளிடத்து பறயும். அயாள் இவ்ட வரும்..... அப்பம் நிங்ஙள் அவரிடத்து சம்சாரிச்சு நோக்கு..... என்றார்.
சொன்னது போலவே கணேஷ் வந்தான். பார்த்ததுமே ராஜேந்திரன் அசந்து விட்டான். அழகென்றால் அப்படியொரு அழகு. ..பேசினான். ...அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது அவனது பேச்சு. பணிவான பேச்சு.  ஆனால் பேச்சினில் இருந்த உறுதி. பண்பாடு போற்றப்படவேண்டும் என்பதில் உள்ள நேர்மை... எல்லாமே ராஜேந்திரனை மிகவும் கவர்ந்தது. அவன் தஞ்சை மாவட்ட்த்து சிக்கல் ஊரைச் சார்ந்த ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பையன். வசதி படைத்த நல்ல பையன்.  
எப்படியும் இந்த உள்ளங்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆவல் சரச்சந்திரனை விட ராஜேந்திரனுக்கு அதிகம் வந்துவிட்டது.
அவரிடம்,“ சார் ......... நாம் ரெண்டுபேரும் நாளைக்கு கல்லூரி முடிந்ததும் கோர்ட்டுக்குப் போறோம்...... நடராஜபிள்ளையைப் பாத்து பேசுவோம்..... அடிச்சாலும் பட்டுக்கலாம்.....”
ஒருநாள் மாலை கோர்ட்டுக்கு இருவரும் போனார்கள். அங்கே நின்ற ஒரு பெண் இருவருடைய ஒரு மாணவரின் அம்மா.  அவளும் அங்குதான் வேலை பாக்கிறாள்..அவள் இவர்களைப் பார்த்ததும் , “ சார்.....யாரைத் தேடுறீங்க...” கேட்டாள்.
 “எங்களுக்கு நடராஜபிள்ளையைப் பாக்கணும். ஆனால் எங்களுக்கு அவரைத்தெரியாது.... நீங்க காணிச்சு தாருங்களேன்........”
சற்று தூரத்தில் கையில் எதனையோ வைத்துக் கொண்டு ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
அவள் நடராஜபிள்ளை...... நடராஜபிள்ளை ..... என உரக்க கத்த ,அந்த ஆள் இவர்கள் அருகே வந்து நின்றார்.
இவர்கள் இருவரும் பேச ஆரம்பிக்குமுன்னே , “ நீங்க அந்த சைக்கிள் ஸ்டேண்ட்டு பக்கம் போய் நின்ணுங்கோ..... அஞ்சு மணிக்கப்பறம் வாறேன்.....” சொல்லி விட்டுப் போனார். சொல்லில் பணிவும் இல்லை....கனிவும் இல்லை.....வெறுப்பை உமிழ்ந்து விட்டுப் போனது போலவே இருந்தது......
அவர் சொன்ன இடத்தில் போய் நின்றார்கள்.... மணி அஞ்சு கழிந்தது......அஞ்சரை ஆனது....... ஆறானது....... அவர் வரவே இல்லை...... வர மாட்டாரோ......ஒரு மணிக்கூருக்கும் மேல நிண்ணாச்சு...... போயிரலாமா...... நினைத்துக் கொண்டிருக்கும்போதே நடராஜபிள்ளை இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்....... என்ன சொல்லப் போகிறாரோ......

அவரது வீட்டில் பார்த்த போட்டோவில் இருந்த முகம் நினைவில் வந்தது. ஆம் இவர்தான் நடராஜபிள்ளை......
என்ன விசயம் சொல்லுங்கோ.........என்று சப்தமாய் கேட்டுக் கொண்டே இவர்கள் அருகில் வந்தார்..... முகத்தில் கோபம் தான் தெரிந்தது.....
ராஜேந்திரன் பேச ஆரம்பித்தான்.........
............................... இதிலும் முடியாது போல் தெரிகிறது................  அடுத்த blog-ஐ பாருங்களேன்........

Thursday, June 28, 2012

ராஜேந்திரன் சொன்ன உண்மை நிகழ்வு.....1


புதன் கிழமை கடுக்கரையில் இருந்த போது நான் ராஜேந்திரனிடம் பேசிக்கொண்டே இருந்தேன்.  நேரம் போவது தெரியாமல் பேச்சு தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது.
சர்ச்சைக்குரியவைகள் பேச்சின் ஊடே தலை காட்டும்போது கருத்தொற்றுமை ஏற்படுவதற்கு நேரம் கூடுதல் கழிந்து விடும். எங்கள் பேச்சில் கலந்து கொள்பவர்கள் அனைவருமே அதிகம் படிக்காதவர்கள். ஆனால் அவர்களுக்கு அனுபவ அறிவு சற்று கூடுதல். அதனால் அவர்களிடம் பாடங்கள் பல கற்றுக் கொள்வதில் ஒரு விதமான சுகம் கண்டேன்.  கிராமத்து சொற்கள் சில என் மனதில் பதிந்து விடும்.  அவைகள் வேறெந்த ஊர்களிலும் பயன் படுத்துவார்களா என்பதனை சொல்லத்தெரியவில்லை.
”நாலுண்டும் கண் அவிஞ்சாச்சு…., நல்லாதான் அவியட்டுமே”, ”என்னக் கிடுவிடிக்கு அப்படிச் சொன்ன……., சேளத்தை எப்பம் தரப்போறே….”……இது போன்ற வார்த்தைகள்  காதில் விழவேண்டுமென்றால் கிராமத்துக்குப் போயே ஆகவேண்டும்…….
மணி இரண்டை நெருங்கியது…… சபை சாப்பிடுவதற்காக கலைந்தது.
நானும் ராஜேந்திரனும் சாப்பிடுவதற்காக சாப்பாட்டு மேசையின் முன்னே போய் அமர்ந்தோம்.
அழகாக சமைக்கப்பட்ட உழுந்தஞ்சோறு. வறுத்து அரச்ச சம்மந்தி,முட்ட அவியல்,பப்படம் ,தயிர்சாதம்……சாப்பிட்டோம்.
ராஜேந்திரன் என்னிடம் . Blog  எழுத ஒரு விசயம் இருக்கு சொல்லுகேன் ”என்றான்.  
“சாப்பிட்டு முடித்தபின் சொல்லேன்… அப்பந்தான் கேட்கவும் கேட்டதை மனதில் பதியவைக்கவும் முடியும்”  என்று நான் சொன்னேன்.

சாப்பிட்டபின் சபை மறுபடியும் கூடியது. ராஜேந்திரன் சொல்ல ஆரம்பித்தான்……..
”நான் இப்பஞ்சொல்லப்போறதை மூன்று வருஷத்துக்கு முன்னமே இவங்ககிட்ட சொல்லியாச்சு…… இப்பம் திரும்பவும் அவங்க கேட்கட்டுமே.
நம்ம சரச்சந்திரன் சார் இருக்காருல்லா….. எனக்கு ஆசிரியர் அவர்…. அப்புறம் அவரும் நானும் ஒரே டிப்பார்ட்மெண்ட் …… English Department in Hindu College.”
 அவரு என்னிடம், ஆறும்பிள்ள சார்…….. உங்களுக்கு சுசீந்திரத்தில் நடராஜபிள்ளைன்னு ஒரு ஆள் நாகர்கோவில் கோர்ட்ல வேல பாக்காரு…… அவரத் தெரியுமா..? எனக் கேட்டார்.
ராஜேந்திரன் ,”தெரியாது எனத் தலையசைத்தேன்.  மிகவும் தாழ்ந்தகுரலில் வேறு யாராவது தெரிந்த ஆட்கள் உண்டோ என தமிழும் மலையாளமும் கலந்த குரலில் கேட்டார்”..என்று சொன்னார்...
ராஜேந்திரனுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது. எதற்கு இதெல்லாம் கேட்கிறார் என.

அவரிடம் ,”சார் முதல்ல விசயம் என்னண்ணு சொல்லுங்கோ. அதுக்கப்புறம் யாரு எனக்கு தெரிஞ்ச ஆள் இருக்கா எனச் சொல்லுகேன்னு சொன்னேன்.” என்றான் ராஜேந்திரன்

அவர்,”  எனக்கு ஒண்ணும் இல்ல ஆறும்பிள்ள! நான் நேத்துதான் காந்திகிராமத்துல இருந்து வந்தேன்..... அங்கதான் என்னோட சகலன் வேல பாக்குறாரு...... அங்கே கணேஷ்னு ஒரு பையனப் பாத்தேன். B.Ed படிச்சுகிட்டு இருக்கான். இங்கே சுசீந்திரத்தில் இருந்து சாந்தின்னு ஒரு பொண்ணும் படிச்சுட்டு இருந்தாள்...அவர்கள் ஒருவருகொருவர் பழகியதில் கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துட்டாங்க. சாந்தியின் வீட்டில் பயங்கர எதுப்பு. அதனால் தான் நான் உங்ககிட்ட சொல்லுகேன்” என்றார்.

”பையன் ராஜகுமாரன் போல இருப்பான். நல்ல பையன்...... பெண் வீட்டு சம்மதம் கிடைத்தால் தான் கணேஷ் வீட்டுல சம்மதிப்பாங்க....... என்றெல்லாம் என்னிடம் சொன்னார்” .

ராஜேந்திரன் , சாரிடம்,” நீங்க தீர்மானிச்சாச்சு..... சுசீந்திரத்தில் போய் அடிபடணும்னு...“ என்று சொல்லி விட்டு அவரை அழைத்துக் கொண்டு பரமேஸ்வரன் பிள்ளை என்பவரது வீட்டுக்குப் போனார்கள்.

அவரிடம் எல்லா விசயத்தையும் சொல்லி நடராஜபிள்ளையிடம் பேசுமாறு கூறினோம்.       அவரோ.”நடராஜபிள்ளை நாமெல்லாம் நினக்குற மாதிரி  ஆளு இல்ல......சம்மதிக்கவே மாட்டாரு.....நான் சொன்னாலும் கேக்க மாட்டாரு..... யாரு சொன்னாலும் கேக்க மாட்டாரு... அதனாலெ நீங்க போனாலும் ஒண்ணும் நடக்காது.” என்றார்.

ராஜேந்திரனுக்கு வேகம் வந்துவிட்டது. நடராஜபிள்ளையின் வீடு எங்கே எனக் கேட்டுத் தெரிந்தபின் இருவரும் அந்த வீடு இருக்கும் தெரு நோக்கிப் போனார்கள்....... சற்று தூரத்தில் ஒரு வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்த சரசந்திரன் சார் ,” அதோ அந்தப் பெண்தான் சாந்தி.” என்றார்.

வீட்டின் அருகே போனதும் சிரித்துக் கொண்டே உள்ளே போனாள் சாந்தி.
வாசல் முன்னெ நின்றவர்கள் உள்ளே வந்து விடக்கூடாதே என்ற நினைப்புடன் வாசல் நிலையில் கைவைத்துக்கொண்டே ,“ என்ன வேணும். இப்ப அவங்க வீட்ல இல்ல......”  இது சாந்தியின் அம்மா.

................................அடுத்தது நான் எழுதும் அடுத்த Blog-இல் பார்க்கலாமே........

ஒரு நாள் பஸ்ஸில் போனபோது........


கடுக்கரைக்குப் போய் ராஜேந்திரனிடம் பேசி நாட்கள் பல ஆனதால் போய் வரலாமே என்ற எண்ணத்தில் நான் ஜெயராமிடம் ," புதன்கிழமை கடுக்கரைக்குப் போணும். நீ அன்று ஃப்றீயாகத்தானே இருக்கிறாய் ? வாயேன் போயிற்று வந்திரலாமே ......"
அவன் பதிலொன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே இருந்தான்.
நான் ," என்ன ராமூ..... காலையில போனா சாயந்திரம் வரை சும்மாவே இருக்கணுமேன்னு பாக்குறியா" என்றேன்.
ஆமாம் சார் என்றான்.
அப்படீன்னா நீ வர வேண்டாம் நான் பஸ்ஸில போறேன் என்று கூறிவிட்டேன்.
புதனும் வந்தது. காலையில் 9 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்ப தயாரானேன். அந்த சமயம் என் பெயரன் பொன்னப்பன் என்னருகே வந்து ," தாத்தா...... எஙக போற..... எனக்கு ஸ்கூளுக்கு போணும்லா .....நீ தான் கொண்டு விடணும்....." சொன்னான். மூன்று வயதுப் பேரனவன். அவன் சொல்லை மீறும் மனம் ஏனோ என்னிடம் இல்லை.
நான் காத்திருந்து 9.30-க்கு அவனை அவன் ஸ்கூள் என்று சொல்லும் அடுத்த தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு அவனிடம் டாட்டா.....பை..பை.. என்று சொல்லி விடைபெற்றேன்.
அங்கிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் குறுஞ்சாலை வழியாய் நடந்து கேம்ப் ரோடில் கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். பஸ் நிறுத்துமிடம் வந்தது. பத்து நிமிட காத்திருத்தலுக்குப் பின்பு கூட்டமில்லா பஸ் வந்ததால் அதில் ஏறினேன்.
நான் ஏறின பஸ் தாழக்குடி பஸ்....... மூன்று ருபாய் கொடுத்து பஸ் ஸ்டேண்ட்-க்கு டிக்கட் கேட்டேன். ஒரு ருபாய் கூடுதலாகக் கேட்ட கண்டக்டரிடம் நாலு ருபாய் டிக்கட்டை வாங்கி அதனை சுருட்டி என் கைவிரலில் மோதிரத்தில் சொருகி வைத்துக் கொண்டேன்.
பஸ் மீனாட்சிபுரம் வந்ததும் பஸ் நிற்பதற்கு முன்னால் அடிச்சுப் பிடுச்சு எல்லோரும் இறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை என் மனம் எச்சரித்தது.' உனக்கு வயசாய் விட்டது..... அவசரப்பட்டு இறங்கி எதையாம் வாங்கிப் புடிச்சிராதே....'.
கடுக்கரை பஸ் வந்தது........நான் ஏறவேண்டிய பஸ் காட்டுப்புதுர் பஸ் வரவில்லை. திடல் பஸ் நின்றது. அதில் ஏறலாமே என அதில் ஏறினேன்......அந்த பஸ்ஸில் இருந்த பழைய பள்ளித்தோழன் இது இப்ப தெள்ளாந்திக்குல்லா போகும்.....கடுகரைக்குப் போகாதே என்றான்.
என் பக்கத்தில் இருந்த ஒரு மாணவத் தோற்றத்தில் இருந்த ஒரு இளைஞன்," இல்ல..இல்ல.....இது திடலுக்குத்தான் போகும்"
முன்பக்கத்து போர்டில் 'திடல்' எனவும் பின்பக்கத்தில் 'தெள்ளாந்தி' எனவும் இருந்ததால் உள்ள குழப்பம்.
நான் பஸ்ஸில் இருந்து கொண்டே வெளியே பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்போது 4 G V காட்டுப்புதுர் வந்து கொண்டிருந்தது.
நான் உடனே பஸ்ஸை விட்டே இறங்கி காட்டுப்புதுர் பஸ்சில் ஏறுவதற்கு தயாராய் நின்றேன். போர்டைப் பார்த்தால் அதில் வழி பெருந்தலைக்காடு என்று இருந்தது....கடுக்கரை என அதில் போடாததால் பக்கத்தில் நின்ற ஓட்டுனரிடம் போய்க் கேட்டேன்," இது கடுக்கரைக்குப் போகுமா ?" போகாது என்றான்.
அப்படியே நடந்து போகும்போது ஒரு பஸ் யாருமே இல்லாமல் அனாதையாய் நின்று கொண்டிருந்தது. முன் பக்கமும் பின் பக்கமும் போய் அறிவிப்பு பலகையைப் பார்த்தேன். 'கடம்படிவிளாகம்' ..... நான் ஏறப் போனேன்...அதே சமயத்தில் அந்த பஸ் ட்ரைவர் வந்து அதில் ஏறினார்...... அவர் என்னைப் பார்த்து உங்களுக்கு எங்கே போகணும் எனக் கேட்டார். கடுக்கரை என்றதும் சரி ஏறுங்கோ என்றார்.

அந்த பஸ் புதியதாக விட்ட பஸ்......கடுக்கரை வழியாய் போகும் என்று தெரியாததால் அதில் கடுக்கரைக்குப் போகவெண்டிய யாருமே ஏற முற்படவில்லை.

அதில் வழி கடுக்கரை என போடாததால் பலருக்கும் குழப்பமே ஏற்பட்டது.

கடுக்கரை வந்தது. நான் அடுத்த ஸ்டாப்பில் தான் இறங்கணும்..... கண்டக்டர் ஏதாவது சொல்வாரோ...... சொன்னால் என்ன ஒரு டிக்கட் எடுக்கணும்.... என நினைத்துக் கொண்டிருக்கும்போதே நையினார் தோப்பு வந்தது. நான் அந்த இடத்தில் இறங்கினேன்.
நடந்து கீழக்கோவில் அருகே வந்தேன். அப்போது நான் முதலில் ஏறி இறங்கிய திடல் பஸ் வந்தது.

நான் பயணம் செய்த பஸ் ....... மிக ஏழ்மையான நிலையில் இருந்தது......தகர டப்பாக்களின் சப்தமே ஒரு கர்ண கொடூரமான இசையை இசைத்துக் கொண்டே இருந்தது.

நல்ல தரமான வண்டியே கிடையாதா.......

ராஜேந்திரன் வீட்டிற்கு வந்ததும் மணியைப் பார்த்தேன்.......மணி மதியம் 12.

Monday, June 25, 2012

துண்டுப் பிரசுரத்தில் படித்தது.

என் வீட்டில் யாரும் படிக்காமல் போன ஒரு சின்ன பிரசுரம் என் கண்ணில் பட்ட்து படித்தேன். பிடித்திருந்தது. அதனை அப்படியே எழுதுகிறேன்.
ஹிந்து மதம் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் ஸநாதன தர்மத்தில் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஆற்ற வேண்டிய கடமைகள் யாவை என்று ரிஷிகளும் முனிவர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரேயே மந்திர ரூபமாக சொல்லியிருக்கிறார்கள்.
காலதேச வர்த்தமானத்தை ஒட்டியும் குல அறத்தை அனுசரித்தும் குறைந்தது நாற்பது ஸம்ஸ்காரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன நாம் செய்யும் கர்மாவினால் நமது உடல் புனிதப்பட்டு ஆத்ம ஞானத்திற்கு உரியதாக ஆகுமாயின் அந்த கர்மாவை ஸம்ஸ்காரம் என்று சொல்ல்லாம்.
 நாற்பது தெய்வீக கர்மாக்களில் விவாஹம் செய்து கொள்வது என்பது முக்கியமான ஒன்றாகும். வெறும் புலன் இன்பத்திற்கும், லௌகீக சௌக்கியங்களுக்கும் மட்டுமல்லாது மனிதராய்ப் பிறவியெடுத்த பயனை அடைவதற்காக நாம் ஆற்ற வேண்டிய கடமைகளாக கர்பதானம் ,சீமந்தம், குழந்தைக்கு பெய்ர் சூட்டுதல்,வித்யாரம்பம் போன்ற பல சம்ஸ்காரங்களுக்கும் திருமணம் தான் அடிப்படை என்பது சொல்லாமலேயே விளங்கும்.
வி-வாஹம் என்ற சொல்லிற்கு சிறப்பாக வளர்வது என்று பொருள். மனைவி என்பவள் புருஷனில் பாதி(அர்த்தநாரி) கணவனுடைய மிக நெருங்கிய சிநேகிதி.
தருமம்  செய்வது, பொருள் ஈட்டுவது, மகிழ்ச்சியாக இருப்பது ஆகியவற்றிற்கு அவளே ஆதாரம்.
பத்நியின் கர்ப்பத்தில் இருந்து பிறக்கும் குழந்தையைப் புத்ரன் அல்லது புத்ரி என்று சொல்கிறோம். ஆகவே அத்தகைய குழந்தையைப் பெற்றவளை தாயைப்போல் பாவிக்க வேண்டும்.
இந்த் துண்டு பிரசுரமான  இடம் ஒரு திருமண மண்டபம் 2010 மே மாதம் 23-ஆம் தேதி.

Friday, June 22, 2012

நான் கட்ட சைக்கிளில் ஓட்டிப் படித்த அந்த நாள்

சின்ன வயதில் என்னைத் தவிர என் சக தோழர்கள் எல்லோருக்குமே சைக்கிள் ஓட்டத்தெரியும்.எங்கள் ஊரில் இரண்டு சைக்கிள் கடைகள் உண்டு. ஒரு மணிக்கூருக்கு ஒரணா. இரவு முழுவதும் வண்டி வேண்டுமானாலும் எடுக்கலாம். அதற்கு வாடகை எட்டணா.அந்த சைக்கிள் கட்ட சைக்கிள். சிறுவர்களுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்டிருக்கும்....

சைக்கிள் ஓட்ட படிக்கவும் அதனை எடுப்பதுண்டு.  சைக்கிள் ஓட்டப்படிப்பவன் இன்னொருவன் துணை கொண்டு சைக்கிள் படிப்பதைப் பார்த்திருக்கிறேன்... புதியதாய் ஓட்டும் போது சமநிலை தவறும். முதுகு இடமும் வடமும் வளைந்து வளைந்து வண்டி கீழே விழுவது போன்ற நிலையில் வண்டி உருண்டோடும்..... சைக்கிள் கீழே விழாமல் பிடித்துக் கொள்வான் பின்னால் ஓடி ஓடிச் செல்பவன்..... முதுகு வளைவதைப் பார்த்ததும் பின்னால் வருவானே ஒருவன்.....அவன் முதுகில் ஓங்கி அடிப்பான்.  விதியே என்று அடிபட்டவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருப்பான்...... சில சமயத்தில் அடி பலமானால் சண்டை மூழ்வதும் உண்டு.......

இறக்கத்தில் வண்டி வேக வேக மாய் உருண்டோடும்போது கைகள் பிரேக்கை பிடிக்காமலும் கால்கள் பெடல்மீது இல்லாமலும் தாறுமாறாய் ஓடி கீழே விழுந்து உடம்பில் பல இடங்களில் அடிபட்டு இரத்தக் காயங்களுடன் வீட்டிற்குப்போய் அவஸ்தைப் பட்ட தோழர்கள் பலர் உண்டு. சொன்னால் அடி கிடைக்கும் . காலுக்கு மருந்து போடும்போது அம்மையோ அப்பாவோ பார்த்து விட்டால் அவ்வளவுதான் . ஏற்கனவே உள்ள வேதனையுடன் அவர்கள் தரும் வேதனையும் கூடும். ...

எனக்கும் சைக்கிள் படிக்க ஆசை...... அம்மயிடம் பொய் சொல்லி ஒரணா வாங்கி சைக்கிள் கடையில் போய் ஒரு மணிக்கூருக்கு சைக்கிள் வாடகைக்கு கேட்டேன். அவன் தர மறுத்தான். தந்தால் எனது அப்பா அவனைத் திட்டி விடுவார் என்ற பயமே காரணம். சைக்கிள் படிக்கணுமே என்ன செய்ய......

இன்னொரு பையனிடம் அணாவைக் கொடுத்து சைக்கிள் வாங்கி வரச் சொல்லி அதில் நான் சைக்கிள் ஓட்டிப் படித்தேன். என் முதுகும் வளைந்தது....அடி விழுமோ என நான் நினைத்தேன்..... ஆனால் அடி விழவில்லை. அன்பாக சொல்லித்தந்தான்...... ஓரளவு படித்துவிட்டேன்.

ஒருவன் சொன்னான் .பௌர்ணமி இரவில் ஒருநாள் வாடகைக்கு எடுத்து படி....என்றான்.
அம்மையிடம் கேட்டேன். சம்மதிக்கவில்லை..... கீழ விழுந்து கைய கால முறிச்சிராதே என்று சொல்லி தடுத்தாள்...... கோபம் எனக்கும் வந்தது. நேரே என் அப்பாட்ட போய் எனக்கு சைக்கிள் படிக்கணும். சைக்கிள் வாடகைக்கு எடுக்க பைசா எட்டு அணா கேட்டேன்.
உனக்கு சைக்கிள் தானே வேணும்...... நான் உனக்கு சைக்கிள் சொல்லித்தர  ஒரு ஆளையும் ஏற்பாடு பண்ணுகிறேன் என்று சொன்னா.

இரவு சைக்கிள் எங்க வீட்டுக் களத்துக்கே வந்தது. சைக்கிள் ஓட்டிப் படித்தேன்....கண் துஞ்சாமல் பயிற்சி எடுத்தேன். வெளியே ஓட்டவில்லை. களத்தினுள்ளேயே ஓட்டினேன். நான் தூங்கப் போகும்போதுதான் எனது அப்பாவும் தூங்குவதற்காக உள்ளே சென்றார்.

எல்லா பையன்களும் சேர்ந்து தடிக்காரங்கோணம் சைக்கிளில் பயணம் செய்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

எனது சின்னப்பாவிடம் Humber சைக்கிள் ஒன்று உண்டு. அதனை யாரும் தொடக்கூடமுடியாது... ஆனால் என்னிடம் ஒட்டும்படி பலதடவை சைக்கிளை தந்தது உண்டு.

கல்லூரியில் வேலைகிடைத்த உடன் ரேலி சைக்கிள் வாங்கினேன்.
காமராஜர் மறைந்த நாளன்று நாகர்கோவிலில் இருந்து சைக்கிளிலேயே கடுக்கரைக்கு நானும் சாஸ்தாங்குட்டியும் போனோம். காரணம் அன்று பஸ் போவது நின்று விட்டது.




Wednesday, June 20, 2012

குப்பையில் வீழ்ந்தபின் எழுந்து வளர்ந்த சிசு




இந்துக் கல்லூரி வரலாறு எழுதுவதற்கு நான் முற்பட்டபோதே பல முன்னாள் ஆசிரியர்கள் , கல்லூரியின் பால் ஈடுபாடு கொண்ட ஒரு சிலரை சந்திக்க ஆசைப்பட்டு சந்தித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு முக்கியமான பெரியவரை சந்திக்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. அந்த நேரத்தில் என் கட்டுரை
எழுத்துப் பணி முடிவடைந்து ஒரு கட்டுரைவடிவாக்க முயற்சி நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் அவரை சந்திக்க ஒரு நாள் மாலை நேரத்து 8 மணிக்கு ஒரு நண்பருடன் சென்றேன். நான் யாரை சந்திக்கப் போனேன் ..? ஒரு சுவராஸ்யம் கருதி இந்த வரிகளின் கடைசி வரியாய் அந்தப் பெயர் இருக்கட்டுமே என நான் நினைத்தேன். அதனால் அந்தப் பெரியவரின் பெயரை உடன்தானே  தொடர்ந்து  எழுதவில்லை.
நேரடியாகவே அவரிடம் கேட்டேன். பல கேள்விகள் கேட்டேன். சற்று விளக்கமாகவும் தெளிவாகவும் பதில் கிடைத்தது. ஏற்கனவே பல விசயங்கள் எனக்குத் தெரிந்திருந்தது. ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டதில் திருப்தியும் அடைந்தேன்.
அந்தப் பெரியவர் ,” என் அப்பாவினது பிறப்பு பற்றி ஏதாவது கேள்விப் பட்டிருக்கிறாயா?......” எனக் கேட்டார். இல்லையென்றேன். அது ஒரு அதிசயமான செய்தி……,இதுவரை கதையிலும் படித்ததில்லை…….கேள்விப்பட்டதும் இல்லை……
அவர் சொன்ன செய்தி:
எனது அப்பா பிறந்த கதை ………என் அப்பாவைப் பெற்ற ஆச்சி பிரசவ நேரம் நெருங்கும் வேளையில் மிகக் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டாள். நோய் அவளை வாட்டியது. அதிக மருத்துவ நுட்பம் இல்லாத காலம். நோயின் வலியிலும் பிரசவவலியிலும் துடித்த அவள் அமைதியானாள். சப்தம் இல்லை. சிசுவும் பிறக்கிறது. சிசுவிடமும் ஒரு சின்ன சப்தமும் இல்லை. கூடியிருந்தவர்கள் தாமாகவே ஒரு முடிவுக்கு வருகிறார்கள். தாயும் பிள்ளையும் செத்துப் போனதாக நினைத்து பிறந்த சிசுவை வீட்டின் பின்புறக் குண்டினில் கொண்டு போட்டு விட்டு வந்தார்கள்.
அப்பொழுது மருத்துவம் பார்க்கும் பெண் வீட்டுக்கு வந்து குழந்தை பெற்றவளைத் தொட்டுப் பார்த்து உயிர் இப்போதான் போச்சு என்றாள். சிசுவை எங்கே என்று கேட்க அவர்கள் சொன்னதைக் கேட்டு அதிற்சியடைந்து அவளே ஓடிப் போய் குப்பையில் கிடந்த குழந்தையை எடுத்து வந்தாள்.
அந்தக் குழந்தை சிறிது நேரத்தில் அழ ஆரம்பித்தது……….. தாய் ஓய்வில்….. சேய் அழுததை பார்த்தவர்கள் அழவா….. சிரிக்கவா……….. இதுவும் விதியோ.
அந்த சிசு யார்? 
என்னிடம் பேசிக்கொண்டிருந்தவர் திரு.B.வள்ளிநாயகம் பிள்ளை.
அவரது தந்தை வடிவீஸ்வரம் புத்தன் வீட்டு செல்லையாபிள்ளை பாட்டா. இந்துக் கல்லூரி உருவாக, அரும்பாடுபட்ட பூதலிங்கம்பிள்ளை….. பூப்போன்ற மனம் கொண்ட அவர் அன்று சருகாய் போகாமல் இருந்தது இந்துக் கல்லூரி உருவாவதற்கே…….

Sunday, June 17, 2012

திருமணச் சடங்கு


ஜனுவரி மாதம் 8-ஆம் தேதி யன்று காலையில் திருநெல்வேலிக்கு ராமகிருஷ்ணனுடன் போவதற்காக அவரது வீட்டுக்கு ஜெயராமன் கார் ஓட்ட நான் போனேன். அன்று ம.சு.பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா. டாக்டர் பட்டம் பெறுவதற்காக ராமகிருஷ்ணனும் அதனைக் காண்பதற்காக நானும் போனோம். மகனை வழி அனுப்புவதற்காக அவர் அம்மையும் அப்பாவும் வெளியே வந்தார்கள். எனது பள்ளி ஆசிரியரவர்.
நான் எனது ஆசிரியரிடம்,” நீங்க இருவரும் வரலாமே…..” கேட்டேன்.
“எனக்கு கண் சரியாகத் தெரியாது…. நடப்பதற்கும் சற்று சிரமம்…..” என்றார். அவர் சொல்லி முடிப்பதற்குள் அருகில் நின்ற ராமகிருஷ்ணனின் அம்மை, ”நீங்க போறீங்கள்ளா……. அது நாங்க போறது மாதிரிதான்…” இந்த சொல் என்ன மந்திரச் சொல்லா…… அது என்னை என்னவோ செய்தது…உடம்பினுள்ளேயே ஒரு இரசாயன மாற்றம் ஏற்படுவது போன்ற உணர்வு.
”திருமணச் சடங்கு சம்பந்தமாக எனக்கு சில தகவல்கள் தேவைப்படுகிறது. அதனை அறிய ஒருநாள் நான் வருவேன் “ என்று ஆசிரியரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்………..
சொன்னபடி பல தடவை போக முயன்றும் தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. 15-06-2012 வருவேன் என்று சொல்லிவிட்டுதான் போனேன். ஆனால் ராமகிருஷ்ணன் வீட்டில் இல்லை. எனக்கு வீட்டிற்குள் போய் சாரைப் பாக்கவா அல்லது திரும்பவா என யோசித்துக் கொண்டிருக்கும்போதே சார் என்னை உள்ளே அழைத்து விட்டார்.
என் சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தேன்.
இப்பொழுது பெண்ணைப் பெற்றவர்கள் வரன் தேடி அலைகிறார்கள். முன்காலங்களில் அப்படி இல்லை. பையனின் பெற்றோர்கள் தான் பெண் பார்க்க பெண் வீட்டுக்குப் போய் தன் மகன்களுக்கு பெண் கேட்பார்கள்.
பையன்கள் வீட்டிலும் திருமணம் நடப்பதுண்டு…… பையன் வீட்டார் பொன்னாபரணங்கள் செய்து பெண்ணுக்கு கொடுப்பதுண்டு.
திருமண தினத்தன்று மாப்பிள்ளை பெண் கையில் மஞ்சள் கயிறு கட்டுகிறார்களே……அது ஏன்? மாப்பிள்ளை யார்? பொண்ணு யார் என அடையாளம் காட்டுவதற்காகவா…?
அவ்வாறு கட்டுவதை காப்புக் கட்டு என்பார்கள்….. காப்பு என்பது பாதுகாப்பு…… துர் ஆவிகளும் எந்த விதமான ஏவல்களும் புதுமணத்தம்பதிகளை தாக்காமல் பாதுகாக்க, பாதுகாப்புக்கு அவர்கள் கையில் காப்பு கட்டுவார்கள். அது இன்றும் நடைமுறையில் இருக்கிறதே…….
நாலாம் நீர்ச் சடங்கு பற்றி கேட்டேன்.  ஏழு நாட்கள் திருமண விழா முந்நாட்களில் நடக்கும் .நான்காம் நாள் நடக்கும் ஒரு சிறிய சடங்கு தான். சுத்தமாக இருக்கவே குளிக்கும் சடங்கு அது. பின் நலுங்கு விளையாட்டு……
பப்படம் பொடித்து தலையில் போடுவது திருஷ்டி போக என்கிறார்கள்.
காலில் தண்டை போடுவது பற்றியும் சொன்னார்.
தண்டை என்பது தடை என்ற சொல்லில் இருந்து வந்தது…. பூண்டு…. பூடு ஆனது போல..
பெண்ணுக்கு வெளியே போகத்தடை….. நடந்துவரும் பெண்ணின் காலில் தண்டை இருந்தால் எதிரே ஆண்கள் வரத் தடை …….ஒதுங்கி நிற்க வேண்டும்……
ஏழாம் நீர்ச் சடங்கு என்றால் என்ன..? சரியாக தகவல் இல்லை. ஏழு நாட்கள் திருமணம் நடக்கும் அல்லவா ! அந்த ஏழாம் நாள் திருமணநாளில் கயிற்றில் கட்டிய பொன் தாலியை தங்கச் செயினில் கொருப்பார்கள். மஞ்சள் நீர் விளையாட்டு என ஒன்று உண்டு. அத்தான் மைத்துனன் மீதும் கொழுந்தி மீதும் மஞ்சள் நீரை விரட்டி விரட்டி கொட்டுவார்கள். அதெல்லாம் இப்போ இல்லை
 அதன் பிறகு வந்திருந்த விருந்தினர்கள் தத்தமது வீட்டுக்கு கிளம்புவார்களாம்.

Friday, June 15, 2012

கவிமணியின் கடைசிக் கவிதை

இன்று மாலையில் திரு குமாரசாமி அவர்களை சந்திக்கும்போது அவர் கையில் கிழிந்தும் நைந்தும் போன மஞ்சள் நிற பேப்பர் ஒன்று கையில் இருந்ததைக் கண்டேன் .
இது என்னது என நான் கேட்கும் முன்னமே காந்திநாதன் இது ஒரு பத்திரிகை ....பழைய பத்திரிகை என்று கூறவே அதனை நான் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன் .
அந்த பத்திரிகை ஆரம்பித்த ஆண்டு 1874 என்று அறிந்து கொண்டேன் .
இந்தியாவில் வெளியான ஆறாவது தமிழ் பத்திரிகை .
ஆசிரியர் : D .C .ஜோசப் .
திருவிதாங்கூர் கொச்சி யில் வெளியான முதல் தமிழ் தினசரி .
நாகர்கோவிலில் இருந்து வெளியான பத்திரிகை .

பத்திரிகையின் பெயர் தியாக நாடு. முதல் பக்கத்தில் பத்திரிகையின் பெயரான
தியாக நாடு வின் இரு பக்கத்திலும் தாமரை மலர் இடம் பெற்றிருந்தது .

நான் பார்த்த பத்திரிகை வெளியான தேதி 15-8-1953.
சுதந்திர தினத்தன்று வெளியான பத்திரிகையில் " சுதந்திரம் " என்ற தலைப்பில்
கவிதை ஒன்று இருந்தது.

                                                          வெண்பா  

நாடும் நகரும் நகர்ப்புறமும் நன்றாக
வீடும் குடியும் விளக்குமுறப்- பாடுபட்டுப்
பெற்ற சுதந்திரத்தைப் பேணி வளர்ப்பதுவே
கற்ற பெரியோர் கடன் ....
                                                         வேறு   


ஆக்கம்  வேண்டுமெனில் - நன்மை 
       அடைய வேண்டுமெனில் 
ஊக்கம் வேண்டுமப்பா -ஓயா
  துழைக்க வேண்டுமப்பா  .


நெற்றியின் வியர்வை -நிதமும் 
    நிலத்தில் வீழ்ந்திடிலே 
வற்றி வாடாமல் -சுதந்திரம் 
  வளர்ந்து வருமப்பா . 


இதனை எழுதியது யார் தெரியுமா? கவிமணி தேசிக விநாயகன் என அச்சாயிருந்தது .  ஆம் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளைப் பாட்டா தான் .
இதுதான் அவர் எழுதிய கடைசிக் கவிதை என அந்தப் பத்திரிகையை 
வைத்திருந்த குமாரசுவாமி அவர்கள் சொன்னார். மேலும் அவர் சொன்னார்,:" படுக்கையில் இருந்த கவிமணி சொல்ல குமாரசாமி  எழுதினாராம். 
இந்தத் தகவலைத் தந்த தினத்தந்தி குமாரசாமிக்கு என் அன்பு கலந்த நன்றி.
கவிமணி ஆண்டு:1876-1954.
பிறந்த நாள் :27-7-1876
மணி ஒலி நின்ற நாள்:26-9-1954  



Tuesday, June 12, 2012

தெ.தி.இந்து கல்வியல் கல்லூரியை நிறுவியவர்





கொஞ்ச நாட்களாக ஒன்றுமே எழுதுவதில்லையே ஏன்…? என் மகன் என்னை வாஞ்சையோடு அழைத்துக் கேட்டான்…. எழுத வேண்டும் என்று ஆசைதான்….. என்ன எழுத…….எழுதுவதற்கு எதுவும் இல்லையே…? அனுபவங்களை யல்லவா எழுத வேண்டும்……? 


வீட்டில் அடைந்து கிடந்தால் எப்படி அனுபவம் கிடைக்கும். எனக்கே சற்று மனம் வருந்துகிறதோ எனத் தோன்றியது…….இல்லை…இல்லவே இல்லை…….


வீட்டில் கூடுதல் நேரம் இருந்தேன். ஆனால் எழுதிக் கொண்டே இருந்தேன். ஆம் சத்தியமாய் எழுதிக் கொண்டுதான் இருந்தேன். என்னை ஆளாக்கிய என் தாய்..... கல்லூரி.... இந்துக் கல்லூரி....அதன் வரலாறு எழுத முற்பட்டேன். அதனால் சற்று இடைவெளி.......


 நான் என் அன்னையை தந்தையைப் பற்றியெல்லாம் எழுதி விட்டேன். என்னை இன்று ஒரு மனிதனாய் உலவ வைக்கக் காரணமான என் தாய் போன்ற கல்லூரியைப் பற்றி உருப்படியான வரலாறு எழுத வேண்டாமா.


அதன் அறுபது ஆண்டுகால வளர்ச்சியான வரலாறை எழுத நினைத்து எழுத ஆரம்பித்தேன். முதலில் கல்லூரியின் எல்லா ஆண்டுமலர்களும் வேண்டும். அனைத்தும் கிடைத்தன. நான் இக்கல்லூரியின் மாணவன்…ஆசிரியன்….. ஆனாலும் என்னிடம் எதுவும் இல்லை.ஆனால் மற்றவர்களிடம், நண்பர்களிடம் இருக்கும் என எதிர்பார்த்தேன். 


ஆனால் அனைவரும் என்னைப் போலவே இருந்ததில் எனக்கும்
மகிழ்ச்சிதான்…..

முன்னாள் பேராசிரியர்… ஒரு மலையாள ஆசிரியர்…..அவர் இன்று உயிரோடில்லை….ஆனால் பொக்கிசமாக போற்றி வைத்திருந்த ஆரம்பகால ஆண்டுமலர்கள் அனைனத்தினையும் என் வேண்டுகோளை யேற்று டாக்டர் ராமகிருஷ்ணகுரூப் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கி பேராசிரியரின் மனைவி திரும்பத் தந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தந்து 
உதவினார்கள். எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
அந்தப் பேராசிரியர் திரு. உன்னிகிருஷ்ணன் அவர்கள். அவர் குடும்பம் திருவனந்தபுரத்தில் ..........
சுருக்கமான வரலாறு ஒன்றினை இன்று எழுதி முடித்தேன்……தகவல்கள் கிடைத்தாலும் கணினிதானே…. எந்த இடத்தில் நுழைக்க முடியுமோ அந்த இடத்தில் சேர்த்து விடலாம்…..
கல்லூரியில் இடம் இல்லை என்ற சொல்லுக்கே இனி இடம் இல்லை என்பது போல் இந்துக் கல்லூரி உதயமான ஆண்டு 1952. இன்று 2012.

வயதான ஒருவர் தனது தோட்டத்தில் தென்னங்கன்று ஒன்றை நட்டுக் கொண்டிருந்தார். அவரது பேரன் அவரது அருகில் சென்று, “தாத்தா….தாத்தா… இந்த கடும் வெயிலில் ஏந்தாத்தா கஷ்டப் பட்டு இதனை நடுகிறாய்……உனக்கு அதனால் என்ன பயன் கிடைத்து விடப் போகிறது…… வா..வா…. எழுந்திரு “ எனக் கூறி அழைத்தான்.
பெரியவர் வேலையை முடித்துவிட்டு பேரனிடம் பேசினார்.
“ அதோ தென்னை மரங்கள் காய்களை தந்து கொண்டிருக்கிறதே……… அது யார் வைத்தது தெரியுமா….? என் தாத்தா வைத்தது…….அன்று நானும் இதே மாதிரி சொல்லி அவரும் கன்றுகளை நடவாமல் இருந்தால்……… யோசித்துப் பார்…….. “
இலங்கத்து வேலாயுதம் பிள்ளையும், வடிவீஸ்வரம் செல்லையா பிள்ளை பாட்டாவும் கவிமணிப் பாட்டாவின் ஆசியுடன் அந்த வயதான பருவ காலத்தில் நடந்தும், காளை,குதிரை வண்டியிலும், காரிலும் வெயிலில் அலைந்து திரிந்து கஷ்டப் பட்டு உழைத்து உருவாக்கிய கல்லூரியால் எத்தனை எத்தனை பேரன்கள் உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் நிம்மதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நினைப்பதற்கே இனிப்பாக இருக்கிறது.
மாணவனாய் பார்த்த கல்லூரி……..ஆசிரியனாய் வாழ்வித்த கல்லூரி…… ஓய்வுற்றபோதும் இதம் தந்த கல்லூரி……..இயக்குநர் குழு உறுப்பினரான பெருமையைத் தந்த கல்லூரி…..எல்லாமே பிரமிப்பாய் இருக்கிறது. அன்று மரங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. இன்று கட்டிட அறைகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது.  தேசிக விநாயகர் படைத்த அன்னை பூமி…… அந்த பூமித்தாய்க்கு இந்துக் கல்லூரி என்றொரு சேய். 2008-ல் கல்வியல் கல்லூரி என இன்னோரு சேயும் பூமிதாய்க்கு கிடைத்தது…….. ஒரே வளாகத்தில் இரு கல்லூரிகள். காலம் காலமாய் மாணவர்களுக்கு ஒளி விளக்காய் வழி காட்டிக் கொண்டிருக்கும் கல்லூரி அமைத்தவர்களை என்றும் நினைவு கொள்வோம்.

இந்துக் கல்லூரியை நிறுவிய தலைவர் திரு வேலாயுதன் பிள்ளை…. இன்று புதியதாகப் பிறந்த கல்லூரியை நிறுவிய தலைவர் கடுக்கரை ராசப்பன் என்ற பொ.ஆறுமுகம்பிள்ளை.
கல்லூரி ……..எனது தாய்……….தினமும் போற்றி வணங்குவேன்……வைரவிழா ஆண்டு 2012-13.