Thursday, June 28, 2012

ராஜேந்திரன் சொன்ன உண்மை நிகழ்வு.....1


புதன் கிழமை கடுக்கரையில் இருந்த போது நான் ராஜேந்திரனிடம் பேசிக்கொண்டே இருந்தேன்.  நேரம் போவது தெரியாமல் பேச்சு தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது.
சர்ச்சைக்குரியவைகள் பேச்சின் ஊடே தலை காட்டும்போது கருத்தொற்றுமை ஏற்படுவதற்கு நேரம் கூடுதல் கழிந்து விடும். எங்கள் பேச்சில் கலந்து கொள்பவர்கள் அனைவருமே அதிகம் படிக்காதவர்கள். ஆனால் அவர்களுக்கு அனுபவ அறிவு சற்று கூடுதல். அதனால் அவர்களிடம் பாடங்கள் பல கற்றுக் கொள்வதில் ஒரு விதமான சுகம் கண்டேன்.  கிராமத்து சொற்கள் சில என் மனதில் பதிந்து விடும்.  அவைகள் வேறெந்த ஊர்களிலும் பயன் படுத்துவார்களா என்பதனை சொல்லத்தெரியவில்லை.
”நாலுண்டும் கண் அவிஞ்சாச்சு…., நல்லாதான் அவியட்டுமே”, ”என்னக் கிடுவிடிக்கு அப்படிச் சொன்ன……., சேளத்தை எப்பம் தரப்போறே….”……இது போன்ற வார்த்தைகள்  காதில் விழவேண்டுமென்றால் கிராமத்துக்குப் போயே ஆகவேண்டும்…….
மணி இரண்டை நெருங்கியது…… சபை சாப்பிடுவதற்காக கலைந்தது.
நானும் ராஜேந்திரனும் சாப்பிடுவதற்காக சாப்பாட்டு மேசையின் முன்னே போய் அமர்ந்தோம்.
அழகாக சமைக்கப்பட்ட உழுந்தஞ்சோறு. வறுத்து அரச்ச சம்மந்தி,முட்ட அவியல்,பப்படம் ,தயிர்சாதம்……சாப்பிட்டோம்.
ராஜேந்திரன் என்னிடம் . Blog  எழுத ஒரு விசயம் இருக்கு சொல்லுகேன் ”என்றான்.  
“சாப்பிட்டு முடித்தபின் சொல்லேன்… அப்பந்தான் கேட்கவும் கேட்டதை மனதில் பதியவைக்கவும் முடியும்”  என்று நான் சொன்னேன்.

சாப்பிட்டபின் சபை மறுபடியும் கூடியது. ராஜேந்திரன் சொல்ல ஆரம்பித்தான்……..
”நான் இப்பஞ்சொல்லப்போறதை மூன்று வருஷத்துக்கு முன்னமே இவங்ககிட்ட சொல்லியாச்சு…… இப்பம் திரும்பவும் அவங்க கேட்கட்டுமே.
நம்ம சரச்சந்திரன் சார் இருக்காருல்லா….. எனக்கு ஆசிரியர் அவர்…. அப்புறம் அவரும் நானும் ஒரே டிப்பார்ட்மெண்ட் …… English Department in Hindu College.”
 அவரு என்னிடம், ஆறும்பிள்ள சார்…….. உங்களுக்கு சுசீந்திரத்தில் நடராஜபிள்ளைன்னு ஒரு ஆள் நாகர்கோவில் கோர்ட்ல வேல பாக்காரு…… அவரத் தெரியுமா..? எனக் கேட்டார்.
ராஜேந்திரன் ,”தெரியாது எனத் தலையசைத்தேன்.  மிகவும் தாழ்ந்தகுரலில் வேறு யாராவது தெரிந்த ஆட்கள் உண்டோ என தமிழும் மலையாளமும் கலந்த குரலில் கேட்டார்”..என்று சொன்னார்...
ராஜேந்திரனுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது. எதற்கு இதெல்லாம் கேட்கிறார் என.

அவரிடம் ,”சார் முதல்ல விசயம் என்னண்ணு சொல்லுங்கோ. அதுக்கப்புறம் யாரு எனக்கு தெரிஞ்ச ஆள் இருக்கா எனச் சொல்லுகேன்னு சொன்னேன்.” என்றான் ராஜேந்திரன்

அவர்,”  எனக்கு ஒண்ணும் இல்ல ஆறும்பிள்ள! நான் நேத்துதான் காந்திகிராமத்துல இருந்து வந்தேன்..... அங்கதான் என்னோட சகலன் வேல பாக்குறாரு...... அங்கே கணேஷ்னு ஒரு பையனப் பாத்தேன். B.Ed படிச்சுகிட்டு இருக்கான். இங்கே சுசீந்திரத்தில் இருந்து சாந்தின்னு ஒரு பொண்ணும் படிச்சுட்டு இருந்தாள்...அவர்கள் ஒருவருகொருவர் பழகியதில் கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துட்டாங்க. சாந்தியின் வீட்டில் பயங்கர எதுப்பு. அதனால் தான் நான் உங்ககிட்ட சொல்லுகேன்” என்றார்.

”பையன் ராஜகுமாரன் போல இருப்பான். நல்ல பையன்...... பெண் வீட்டு சம்மதம் கிடைத்தால் தான் கணேஷ் வீட்டுல சம்மதிப்பாங்க....... என்றெல்லாம் என்னிடம் சொன்னார்” .

ராஜேந்திரன் , சாரிடம்,” நீங்க தீர்மானிச்சாச்சு..... சுசீந்திரத்தில் போய் அடிபடணும்னு...“ என்று சொல்லி விட்டு அவரை அழைத்துக் கொண்டு பரமேஸ்வரன் பிள்ளை என்பவரது வீட்டுக்குப் போனார்கள்.

அவரிடம் எல்லா விசயத்தையும் சொல்லி நடராஜபிள்ளையிடம் பேசுமாறு கூறினோம்.       அவரோ.”நடராஜபிள்ளை நாமெல்லாம் நினக்குற மாதிரி  ஆளு இல்ல......சம்மதிக்கவே மாட்டாரு.....நான் சொன்னாலும் கேக்க மாட்டாரு..... யாரு சொன்னாலும் கேக்க மாட்டாரு... அதனாலெ நீங்க போனாலும் ஒண்ணும் நடக்காது.” என்றார்.

ராஜேந்திரனுக்கு வேகம் வந்துவிட்டது. நடராஜபிள்ளையின் வீடு எங்கே எனக் கேட்டுத் தெரிந்தபின் இருவரும் அந்த வீடு இருக்கும் தெரு நோக்கிப் போனார்கள்....... சற்று தூரத்தில் ஒரு வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்த சரசந்திரன் சார் ,” அதோ அந்தப் பெண்தான் சாந்தி.” என்றார்.

வீட்டின் அருகே போனதும் சிரித்துக் கொண்டே உள்ளே போனாள் சாந்தி.
வாசல் முன்னெ நின்றவர்கள் உள்ளே வந்து விடக்கூடாதே என்ற நினைப்புடன் வாசல் நிலையில் கைவைத்துக்கொண்டே ,“ என்ன வேணும். இப்ப அவங்க வீட்ல இல்ல......”  இது சாந்தியின் அம்மா.

................................அடுத்தது நான் எழுதும் அடுத்த Blog-இல் பார்க்கலாமே........

No comments:

Post a Comment