Wednesday, June 20, 2012

குப்பையில் வீழ்ந்தபின் எழுந்து வளர்ந்த சிசு




இந்துக் கல்லூரி வரலாறு எழுதுவதற்கு நான் முற்பட்டபோதே பல முன்னாள் ஆசிரியர்கள் , கல்லூரியின் பால் ஈடுபாடு கொண்ட ஒரு சிலரை சந்திக்க ஆசைப்பட்டு சந்தித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு முக்கியமான பெரியவரை சந்திக்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. அந்த நேரத்தில் என் கட்டுரை
எழுத்துப் பணி முடிவடைந்து ஒரு கட்டுரைவடிவாக்க முயற்சி நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் அவரை சந்திக்க ஒரு நாள் மாலை நேரத்து 8 மணிக்கு ஒரு நண்பருடன் சென்றேன். நான் யாரை சந்திக்கப் போனேன் ..? ஒரு சுவராஸ்யம் கருதி இந்த வரிகளின் கடைசி வரியாய் அந்தப் பெயர் இருக்கட்டுமே என நான் நினைத்தேன். அதனால் அந்தப் பெரியவரின் பெயரை உடன்தானே  தொடர்ந்து  எழுதவில்லை.
நேரடியாகவே அவரிடம் கேட்டேன். பல கேள்விகள் கேட்டேன். சற்று விளக்கமாகவும் தெளிவாகவும் பதில் கிடைத்தது. ஏற்கனவே பல விசயங்கள் எனக்குத் தெரிந்திருந்தது. ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டதில் திருப்தியும் அடைந்தேன்.
அந்தப் பெரியவர் ,” என் அப்பாவினது பிறப்பு பற்றி ஏதாவது கேள்விப் பட்டிருக்கிறாயா?......” எனக் கேட்டார். இல்லையென்றேன். அது ஒரு அதிசயமான செய்தி……,இதுவரை கதையிலும் படித்ததில்லை…….கேள்விப்பட்டதும் இல்லை……
அவர் சொன்ன செய்தி:
எனது அப்பா பிறந்த கதை ………என் அப்பாவைப் பெற்ற ஆச்சி பிரசவ நேரம் நெருங்கும் வேளையில் மிகக் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டாள். நோய் அவளை வாட்டியது. அதிக மருத்துவ நுட்பம் இல்லாத காலம். நோயின் வலியிலும் பிரசவவலியிலும் துடித்த அவள் அமைதியானாள். சப்தம் இல்லை. சிசுவும் பிறக்கிறது. சிசுவிடமும் ஒரு சின்ன சப்தமும் இல்லை. கூடியிருந்தவர்கள் தாமாகவே ஒரு முடிவுக்கு வருகிறார்கள். தாயும் பிள்ளையும் செத்துப் போனதாக நினைத்து பிறந்த சிசுவை வீட்டின் பின்புறக் குண்டினில் கொண்டு போட்டு விட்டு வந்தார்கள்.
அப்பொழுது மருத்துவம் பார்க்கும் பெண் வீட்டுக்கு வந்து குழந்தை பெற்றவளைத் தொட்டுப் பார்த்து உயிர் இப்போதான் போச்சு என்றாள். சிசுவை எங்கே என்று கேட்க அவர்கள் சொன்னதைக் கேட்டு அதிற்சியடைந்து அவளே ஓடிப் போய் குப்பையில் கிடந்த குழந்தையை எடுத்து வந்தாள்.
அந்தக் குழந்தை சிறிது நேரத்தில் அழ ஆரம்பித்தது……….. தாய் ஓய்வில்….. சேய் அழுததை பார்த்தவர்கள் அழவா….. சிரிக்கவா……….. இதுவும் விதியோ.
அந்த சிசு யார்? 
என்னிடம் பேசிக்கொண்டிருந்தவர் திரு.B.வள்ளிநாயகம் பிள்ளை.
அவரது தந்தை வடிவீஸ்வரம் புத்தன் வீட்டு செல்லையாபிள்ளை பாட்டா. இந்துக் கல்லூரி உருவாக, அரும்பாடுபட்ட பூதலிங்கம்பிள்ளை….. பூப்போன்ற மனம் கொண்ட அவர் அன்று சருகாய் போகாமல் இருந்தது இந்துக் கல்லூரி உருவாவதற்கே…….

1 comment:

  1. Nice to read such earlier unknown facts.Keep writing.Ungal pani todara vanthukkal

    ReplyDelete