Thursday, June 28, 2012

ஒரு நாள் பஸ்ஸில் போனபோது........


கடுக்கரைக்குப் போய் ராஜேந்திரனிடம் பேசி நாட்கள் பல ஆனதால் போய் வரலாமே என்ற எண்ணத்தில் நான் ஜெயராமிடம் ," புதன்கிழமை கடுக்கரைக்குப் போணும். நீ அன்று ஃப்றீயாகத்தானே இருக்கிறாய் ? வாயேன் போயிற்று வந்திரலாமே ......"
அவன் பதிலொன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே இருந்தான்.
நான் ," என்ன ராமூ..... காலையில போனா சாயந்திரம் வரை சும்மாவே இருக்கணுமேன்னு பாக்குறியா" என்றேன்.
ஆமாம் சார் என்றான்.
அப்படீன்னா நீ வர வேண்டாம் நான் பஸ்ஸில போறேன் என்று கூறிவிட்டேன்.
புதனும் வந்தது. காலையில் 9 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்ப தயாரானேன். அந்த சமயம் என் பெயரன் பொன்னப்பன் என்னருகே வந்து ," தாத்தா...... எஙக போற..... எனக்கு ஸ்கூளுக்கு போணும்லா .....நீ தான் கொண்டு விடணும்....." சொன்னான். மூன்று வயதுப் பேரனவன். அவன் சொல்லை மீறும் மனம் ஏனோ என்னிடம் இல்லை.
நான் காத்திருந்து 9.30-க்கு அவனை அவன் ஸ்கூள் என்று சொல்லும் அடுத்த தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு அவனிடம் டாட்டா.....பை..பை.. என்று சொல்லி விடைபெற்றேன்.
அங்கிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் குறுஞ்சாலை வழியாய் நடந்து கேம்ப் ரோடில் கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். பஸ் நிறுத்துமிடம் வந்தது. பத்து நிமிட காத்திருத்தலுக்குப் பின்பு கூட்டமில்லா பஸ் வந்ததால் அதில் ஏறினேன்.
நான் ஏறின பஸ் தாழக்குடி பஸ்....... மூன்று ருபாய் கொடுத்து பஸ் ஸ்டேண்ட்-க்கு டிக்கட் கேட்டேன். ஒரு ருபாய் கூடுதலாகக் கேட்ட கண்டக்டரிடம் நாலு ருபாய் டிக்கட்டை வாங்கி அதனை சுருட்டி என் கைவிரலில் மோதிரத்தில் சொருகி வைத்துக் கொண்டேன்.
பஸ் மீனாட்சிபுரம் வந்ததும் பஸ் நிற்பதற்கு முன்னால் அடிச்சுப் பிடுச்சு எல்லோரும் இறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை என் மனம் எச்சரித்தது.' உனக்கு வயசாய் விட்டது..... அவசரப்பட்டு இறங்கி எதையாம் வாங்கிப் புடிச்சிராதே....'.
கடுக்கரை பஸ் வந்தது........நான் ஏறவேண்டிய பஸ் காட்டுப்புதுர் பஸ் வரவில்லை. திடல் பஸ் நின்றது. அதில் ஏறலாமே என அதில் ஏறினேன்......அந்த பஸ்ஸில் இருந்த பழைய பள்ளித்தோழன் இது இப்ப தெள்ளாந்திக்குல்லா போகும்.....கடுகரைக்குப் போகாதே என்றான்.
என் பக்கத்தில் இருந்த ஒரு மாணவத் தோற்றத்தில் இருந்த ஒரு இளைஞன்," இல்ல..இல்ல.....இது திடலுக்குத்தான் போகும்"
முன்பக்கத்து போர்டில் 'திடல்' எனவும் பின்பக்கத்தில் 'தெள்ளாந்தி' எனவும் இருந்ததால் உள்ள குழப்பம்.
நான் பஸ்ஸில் இருந்து கொண்டே வெளியே பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்போது 4 G V காட்டுப்புதுர் வந்து கொண்டிருந்தது.
நான் உடனே பஸ்ஸை விட்டே இறங்கி காட்டுப்புதுர் பஸ்சில் ஏறுவதற்கு தயாராய் நின்றேன். போர்டைப் பார்த்தால் அதில் வழி பெருந்தலைக்காடு என்று இருந்தது....கடுக்கரை என அதில் போடாததால் பக்கத்தில் நின்ற ஓட்டுனரிடம் போய்க் கேட்டேன்," இது கடுக்கரைக்குப் போகுமா ?" போகாது என்றான்.
அப்படியே நடந்து போகும்போது ஒரு பஸ் யாருமே இல்லாமல் அனாதையாய் நின்று கொண்டிருந்தது. முன் பக்கமும் பின் பக்கமும் போய் அறிவிப்பு பலகையைப் பார்த்தேன். 'கடம்படிவிளாகம்' ..... நான் ஏறப் போனேன்...அதே சமயத்தில் அந்த பஸ் ட்ரைவர் வந்து அதில் ஏறினார்...... அவர் என்னைப் பார்த்து உங்களுக்கு எங்கே போகணும் எனக் கேட்டார். கடுக்கரை என்றதும் சரி ஏறுங்கோ என்றார்.

அந்த பஸ் புதியதாக விட்ட பஸ்......கடுக்கரை வழியாய் போகும் என்று தெரியாததால் அதில் கடுக்கரைக்குப் போகவெண்டிய யாருமே ஏற முற்படவில்லை.

அதில் வழி கடுக்கரை என போடாததால் பலருக்கும் குழப்பமே ஏற்பட்டது.

கடுக்கரை வந்தது. நான் அடுத்த ஸ்டாப்பில் தான் இறங்கணும்..... கண்டக்டர் ஏதாவது சொல்வாரோ...... சொன்னால் என்ன ஒரு டிக்கட் எடுக்கணும்.... என நினைத்துக் கொண்டிருக்கும்போதே நையினார் தோப்பு வந்தது. நான் அந்த இடத்தில் இறங்கினேன்.
நடந்து கீழக்கோவில் அருகே வந்தேன். அப்போது நான் முதலில் ஏறி இறங்கிய திடல் பஸ் வந்தது.

நான் பயணம் செய்த பஸ் ....... மிக ஏழ்மையான நிலையில் இருந்தது......தகர டப்பாக்களின் சப்தமே ஒரு கர்ண கொடூரமான இசையை இசைத்துக் கொண்டே இருந்தது.

நல்ல தரமான வண்டியே கிடையாதா.......

ராஜேந்திரன் வீட்டிற்கு வந்ததும் மணியைப் பார்த்தேன்.......மணி மதியம் 12.

No comments:

Post a Comment