Thursday, February 9, 2012

32 வருடங்களுக்குப் பின் நான் தேடிய மாணவன்

நானும் என் மனைவியும் கன்னியாகுமரிக்கு 22-1-12 ஞாயிறு மாலை சென்றோம். கன்னியாகுமரி நெருங்கியதும் வழக்கம்போல் சன்னதித் தெருவில் காரை நிறுத்த அனுமதிக்க வில்லை. கூட்டம் அன்று கூடுதலாக இருந்தது தான் காரணம்..ராமு காரை Sea வியூ லாட்ஜின் முன் சாலையோரத்தில் நிறுத்தினான். காரை விட்டு இறங்கியதும் பழைய ஞாபகங்கள் மனதில் தோன்றி மறைந்தன. 33 வருடங்கள் என் மனரதம் பினோக்கிச் சென்றது....

கடுக்கரையில் என் அப்பா அம்மாவுடன் வாழ்ந்த காலமது. என் மகள் அப்போது பிறக்கவில்லை. கன்னியாகுமரிக்கு போய் இரண்டு நாள் தங்கி வர எண்ணினோம். அப்பாவின் அனுமதியுடனும் ஆசியுடனும் இரண்டு நாட்களுக்குத் தேவையான அரிசி, வெஞ்சண சாமானத்துடன் கடுக்கரையில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டுப் போனோம்.  மூன்று மணி நேரம் கடந்து கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தோம். சத்திரத்தில் இடம் காலியில்லை.தேவஸ்வம் நடத்தும் லாட்ஜிலும் அறைகள் காலி இல்லை.

அப்பொழுது மணி இரவு 8 மணி இருக்கும். வேறு வழி ஒன்றும் தோன்றாததால் பஸ் ஏறி ஊருக்கேப் போய்விடலாம் என பஸ்ஸுக்கு காத்து நின்றோம். ஒரே எரிச்சல்.....பஸ் வரவே இல்லை....நேரம் கடந்து கொண்டே இருக்கிறது..... நாகர்கோவில் போய் அங்கிருந்து கடுக்கரைக்கு பஸ்ஸில் போகணுமே......அந்த பஸ் நாகர்கோவிலை அடைவதற்கு முன்னால் புறப்பட்டுப் போனால் என்ன செய்ய.....அதுதானே லாஸ்ட் பஸ்.

 என் மகன் தினேஸும் முருகனும் மற்றும் சிவா அவனது அம்மை எல்லோரும் காத்திருந்தோம்.

சிவாவின் அம்மாவின் உறவினர் ஒருவர் கன்னியாகுமரியில் இருப்பதாகவும் ஆனால் வீடு எங்கே இருக்குன்ணு தெரியாது எனவும் அவள் என் மனைவியுடன் சொன்னதைக்கேட்டேன்.

யாரிடமாவது கேட்கலாம் என்றால் அந்த இரவு நேரத்தில் அங்கு நின்றவர்கள் அந்த ஊர் ஆட்களா வெளியூர் ஆட்களா எனத் தெரியாது.

அப்போது என்னை நோக்கி ஒரு பையன் வந்து கொண்டிருந்தான். கிட்டே வந்ததும் தான் பாத்தேன். அவன் என் மாணவன். பெயர்.........

“சார்,....என்ன விசயம்...பஸ்ஸுக்காக நிக்கிறீங்களா.......”  நான் அவனிடம் விசயத்தைக் கூறினேன்.

பிள்ளையெல்லாம் வச்சுகிட்டு இந்த ராத்திரி நேரத்தில் போகாண்டாம் சார். நீங்க இப்பம் ஏங்கூடவாங்க....... எங்களை அழைத்துக் கொண்டு ஒரு இடத்திற்குப் போனான்.

ஒரு வீடு மாதிரி தோற்றத்தில் உள்ள லாட்ஜின் முன் பக்கம் இருந்த காளிங் பெல்லை அழுத்த வயதான பெரியவர் ஒருவர் எங்களை மாடிக்கு அழைத்துச் சென்றார்.

அது ஒரு பெரிய ஹால்.

அனறையதினம்  யாரும் வாடகைக்குகேட்காததால்   அதனை நாங்கள் மட்டுமே பயன் படுத்தினோம்.

அது Cape Lands Lodge.

 அதனை லீஸுக்கு எடுத்து நடத்துகிறார். அவர் பெயர்..........

 அவர் அன்றைய குமரி மாவட்ட நெடுமாறன் காங்கிரஸ் தலைவர். மிகவும் அன்பாக எங்களை உபசரித்தார்.

  அவர் ஒரு கிறிஸ்தவ வெள்ளாளர் என அவரே சொன்னார் .

அன்று ஒருநாள்  நாங்கள் தங்கினோம். மறுநாள் காலையில் எங்கள் கல்லூரியில் வேலை பார்த்த ராமசாமிப் பிள்ளையின் அத்தானின் வீட்டுக்கு அழைத்துப் போனான் என் மாணவன்.

அவரது எதிர் வீட்டுச் சாவியை தந்து எங்களை அங்கே இரண்டு நாள் தங்கிப் போகும்படி சொன்னார்கள்.

என் மனோரதம் புறப்பட்ட காலத்திற்கே வந்து நின்றது . நான் இரண்டு நாள் தங்கிப் போன அந்த வீட்டைத் தேடிப்பார்த்தேன் . வீடு இருந்த இடம் மறைந்து போய் புதிய கட்டிடமாக சாகர் லாட்ஜாக மாறி இருப்பதாக பிறர் சொல்லக் கேட்டேன் .

அழகான தெருக்களைக் காண முடியவில்லை .விவேகானந்தர் மண்டபம்  இல்லா விவேகானந்தர் பாறையை மனத்திரையில் பார்த்தேன்.........

அந்த நாட்களில் இருக்க இடம் தந்த பெரியவரின் பெயர் என்ன?  அந்த இடத்துக்கு அழைத்து சென்ற  மாணவனின் பெயர் என்ன?..........நாடு காந்தியை மறந்தது போல் நானும் இக்கட்டான அந்த ஒருநாளில் உதவி செய்தவர்களின் 
பெயர்களை மறந்து விட்டேனோ !

மனம் அதையே நினைத்துக் கொண்டிருந்தது.

கோவிலுக்குப் போய்திரும்பினோம் .......என் மனைவியிடம் இது பற்றி கூறி அந்த  பெரியவரின் பெயர் தெரியுமா ? எனக் கேட்டேன் .

"உங்களுக்கே தெரியவில்லை ? எனக்கு எப்படி ஞாபகம் இருக்கும்?....."

சுவாமிநாதனாக இருக்குமோ !.......ஒரே சிந்தனை ......அன்று இரவு எங்கிருந்தோ சினிமா பாட்டுக் கேட்டுக்கொண்டே இருந்தது .

"தர்மம் தலை காக்கும் ,தக்க சமயத்தில் உயிர் காக்கும் ......எம்ஜிஆர் பாட்டுக் கேட்டது ...."........அவர் பெயர் தர்மநாதனாக ...... ஆம் தர்மநாதனே தான்.

இப்போ அவர் உயிரோடு இல்லை என்பதனை அறிந்து மனம் வருந்தியது .அவரது மகன்கள் கன்னியாகுமரியில் இருப்பதாக அறிந்தேன் .

அந்த மாணவன் எங்கிருக்கிறான் ? பெயர் ....? எதுவும் தெரியவில்லையே ....தெரிந்தால் ப்ளாக் எழுதலாம் ......

6 -2 -12  திங்கள் கிழமை காலையில் பெருமாள் திரு மண்டபத்தில் நண்பரின் மகனது திருமணவிழாவுக்குப் போய்விட்டு திரும்பும் வேளையில் ,எனது கார் நிற்கும் இடத்திற்குப் போனோம். எங்களுடன் வந்த என் மகன்  முருகனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது,என் கண் பார்வை படும் படியாக இருவர் பேசிக்கொண்டிருந்தனர்.  அவர்களில் ஒருவர் குறுந்தாடியுடன் சற்று வயதான தோற்றத்தில் இருந்தார் . அவர் என்னையே பார்த்தபடி என் எதிரே வந்து நின்றார்

"சார்....! நீங்க பொன்னப்ப பிள்ளை தானே . ஹிந்து காலேஜ்ல நான் B .Sc  Maths  படிச்சேன் ........."

"அப்படியா ..... ரொம்ப சந்தோசம் .......நீங்க இப்பம் என்ன செய்யறீங்க ......."

"நான் திருவனந்தபுரத்தில் சென்ட்ரல் Telegraph ஆபீஸ் -ல் வேலை பாக்கிறேன் "

 'இப்பம் எங்க தாமசம் ...... திருவனந்தபுரத்திலா இருக்கிறீங்க ' என நான் கேட்டேன் ...

இல்ல சார்.....தினமும் கன்னியாகுமரியில் இருந்து train -ல் போய் வருகிறேன்   என்று சொன்னதும் என் பொறியில் ஏதோ ஒன்று தட்டியது .

நான் அவரிடம் எனது அந்த அனுபவத்தை சொன்னதும் , அவர் அதனை ஞாபகம்  இருப்பதாக கூறினார் . அவர் தான் தர்மநாதன் இப்போ உயிரோடு இல்லை  என்று சொன்னார் .

உடனே நான் என் மனைவியை அழைத்து அவரிடம் அறிமுகப்படுத்தினேன்.

என் மனைவி," கழிந்த நாலைந்து நாளாக உங்க பெயர் தெரியாம தவித்துக் கொண்டிருந்தாங்க . உங்க பெயரென்ன ?"... கேட்டாள்.

"முருகேசன் "   என சொன்னார் .

  32  வருடங்களுக்குப் பின் நான் தேடிய மாணவன் ஒருவனை நான் நினைத்த சில நாட்களிலேயே சந்தித்தது மிக மிக அதிசய நிகழ்வாகவே எனக்குத் தோன்றுகிறது .


2 comments:

  1. நல்ல பதிவு.
    சில நினைவுகள் தெய்வ நிகழ்வு.
    நன்றி ஐயா.

    ReplyDelete