Wednesday, September 28, 2011

நானும் அ,ஆ... சொல்லிக் கொடுத்தேன்.

நவராத்திரி இன்று ஆரம்பம்....

கொலு வைப்பது என்பது எங்க வீட்டில் அதாவது எனது சின்னவயதில் கிடையாது. 9-ம் நாள் பூஜையன்று காலையில் சரஸ்வதி படத்தையும் மற்றும் விநாயகர் படம்,லட்சுமி படத்தை எடுத்து ஈரத்துணியால் துடைத்து எங்க அப்பா தன் பூஜை அறையில் வைப்பார்.மாலையில்
நாங்கள் புஸ்தகத்தை சரஸ்வதி படத்தின் முன் வைப்போம்.அன்று பொரியும் கடலையும் உண்டு.கடுக்கரையில் சில வீடுகளில் கொலு வைப்பதும் உண்டு. அதிசயமாக அந்த வீடுகளுக்கு போய் கொலு பார்ப்போம். அங்கு கிடைக்கும் கடலைக்கு ருசி கூடுதல் போன்ற உணர்வு இருக்கும்.

என் நணபர்கள் என்னிடம் ,“ உங்க வீட்ல ஏன் கொலு வைக்கல” எனக் கேட்கும்போது மனதில் வருத்தமும் கோபமும் வரும்.

கடலை இருக்கு எடுத்துட்டுப் போ.அவனுக்கு கொடு இவனுக்கு கொடு என எங்க அம்மா சொன்னதைக் கேட்டு இண்ணைக்கு எவம்மா கடல கொடுத்தா வாங்குவான் எனச் சொல்லி கோபத்தைக் காட்டுவேன்.

ஏம்மா.. நம்மவீட்ல கொலுவே வைக்கல.. நான் கேட்டால் என்னிடம் “அப்பாட்ட போய் கேழு” என்பாள். அப்பாவின் முன்னே நின்று பேசவே பயப்படும் நான் போய் இதைப் போய் கேட்பது என்பது நடக்காத காரியம்.

பத்தாம் நாளில் 5 வயதான பிள்ளைகளுக்கெல்லாம் ஏடு தொடங்குவார்கள்.அப்பொழுது ஆசிரியர்களின் வீட்டிற்குப்போய் அ,ஆ,இ,ஈ......என ஏடு தொடங்குவார்கள்.அரிசியில் பிள்ளையின் கையினைப் பிடித்து எழுதுவார்கள்.சிலேட்டிலும் எழுதுவார்கள்.எனக்கு ஏடு தொடங்கியது ஆசிரியர் அல்ல...ஊர் முதலடியாய் இருந்த வடக்குத்தெரு ஆறுமுகம்பிள்ளை. பனை ஓலையில் எழுத்தாணியால் அ முதல் ஃ வரையிலும் 1 முதல் 10 வரையும் எழுதி எழுதிய எழுத்துக்கள் தெளிவாய் தெரிய மஞ்சள் தடவி கையில் தந்தார்.அது தான் ஏடு.

என் மகனுக்கு ஏடு தொடங்கியவர் வீரமணி சார். தெரிசனம்கோப்பில் அவன் தத்தா வீட்டில் வைத்து சிலேட்டில் எழுதித் தொடங்கினார்.

என் பையன்கள் கொலுவைக்க ஆசைப்பட்டு என்னை பொம்மை வாங்கி வர நச்சரித்தார்கள்..
தாத்தாக்கு இதெல்லாம் புடிக்காது. தாத்தாட்ட கேழு சம்மதிச்சா நான் வாங்கீட்டு வாறேன்.
கேட்டது தன் பெயரன் அல்லவா. பொம்மை வாங்க பணமும் கொடுத்தார்.கொலு முதன் முதலாக வந்தது என் பிள்ளைகளல் தான்.

ஒருதடவை என் தம்பி செல்லத்தின் மகளுக்கு கீழத்தெரு வீட்டில் நடந்த ஏடு தொடங்கும் நிகழ்ச்சிக்கு நாங்கள் போயிருந்தோம்.ஏடு தொடங்க வரவேண்டிய ஆசிரியர் வரவில்லை.குறிப்பிட்ட நேரம் நெருங்கிக் கொண்டே இருந்தது. ஆசிரியர் வரவே இல்லை. என்ன செய்யலாம்.....எனது சின்னப்பா கணேசபிள்ளை...ஒரு வாத்தியார்தானே ஏடு தொடங்கணும்...தங்கமும் வாத்தியார்தானே...அவன இங்கவந்து இருக்கச் சொல்லு....
பெரி்யவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதைத்தவிர வேறு வழியே இல்லை. அ,ஆ ...ஒழுங்கா வருமா...போய் இருந்தேன்.பிள்ளை அவள் பெயரும் தங்கம் தான் ...
ஏடு தொடங்கி முடிந்ததும் குருதட்சணையாக தட்டத்தில் ருபாய் போட்டார்கள்...ஒரு புதுமையான அனுபவம்....பணம் எதனையும் எடுக்காமல் எழுந்த என்னிடம் என் சின்னப்பாவே எடுத்து என்னிடம் தந்து மிக மகிழ்ச்சியாய் , தஙகத்துக்கு தங்கம் ஏடு தொடங்கியது ரொம்ப சந்தோஷம் எனக் கூறியது இன்றும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

என் மருமகள் புஸ்கலை மிகவும் விரும்பி நான் தான் ஏடு தொடங்கவேண்டும் என விரும்பியதால் பேரன் அறிதிக்கும்,பேத்தி பூஜாவுக்கும் நான் தான் ஏடு தொடங்கினேன்.

குவைத்தில் இருந்து கொண்டு இதனை எழுதும் போது என் நினவுகள் என் வீட்டுக்கு என்னை அழைத்துச் செல்கிறது.

No comments:

Post a Comment