Sunday, September 11, 2011

என் குவைத் பயணம்.............1கடுக்கரைக்குப் போவது தள்ளிக் கொண்டே போனது. செப்டம்பர் மாதம் திங்கள் கிழமைப் போகலாம். ஆனால் ஏற்கனவே போட்ட ப்ளான் படி கடையில் போய் இரண்டு மாதத்துக்குத் தேவையான மருந்தினை வாங்க வேண்டுமே .8 -ம் தேதி இரவு ஒரு மணிக்குப் போகணும். அதிகாலை 5 மணிக்கு ஃப்ளைட்.அதற்கு முன்னால் மூன்று நாட்கள் தான் இருக்கு.திங்கள் காலை ராமு வந்தான். அவன் தான் ஒரு ஐடியா சொன்னான்.

“சார்,டேப்லெட்ஸ் நிறைய வாங்கணும்லா.எனக்குத் தெரிந்த கடைக்குப் போலாம்....”

அவன் சொன்னது போலவே கடைக்குப் போனோம்.மருந்துச் சீட்டை வாங்கிப் பார்த்து விட்டு, “ எல்லாமே வாங்கித் தாறேன்.இப்பம் போயிட்டு 4 மணிக்கு வாங்களேன்” என்றான் ராமுக்கு தெரிந்த அந்த ஆள்.

“ராமு ....என்ன செய்ய எனக்கு 4 மணிக்கு காலேஜ்ல ஜெனரல் பாடி மீட்டிங்குக்கு போணுமே” என்றேன்.

“அதுக்கென்ன சார். நான் உங்கள காலேஜுல கொண்டு விட்டுட்டு மருந்து வாங்கிட்டு வாறேன்”

ஒருவழியாய் மருந்து வாங்கியாச்சு.
செவ்வாய் காலை 10 மணி யளவில் கடுக்கரைக்குப் போகத் தயாரானேன்.

“எங்க போறீங்க கடுக்கரைக்கா .....எனக்கு தெரிசனம்கோப்புக்குப் போணுமே.நானும் வாறேனே..”சொன்னாள் என் மனைவி

ஒரு மணி நேரம் கழிந்தது. தெரிசைக்கு அவளது அண்ணனின் வீட்டுக்குப் போனோம்.அவளும் கடுக்கரைக்கு வருவாள் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

“ஓம் நமச்சிவாயா.”..என் மொபைல் சத்தமாய் பாடி என்னை அழைத்தது.

“சார், நான் கோபாலகிருஷ்ணன் பேசறேன்...வீட்டிலதானே இருக்கீங்க”

“நீங்க எங்க இருக்கீங்க கோபாலகிருஷ்ணன்” இது நான்.

“நான் தெரிசனம்கோப்பில இருக்கேன் சார்”

“நானும் இப்ப இங்கதான் பஞ்சாயத்து தலைவர் மணி அண்ணன் வீட்டுல இருக்கேன்”


எனக்கு ஒரே ஆச்சரியம்.


கோபாலகிருஷ்ணன் வந்தார்.பழைய மாணவர் அவர்.மங்களூரில் இருந்து நாலு நாள் லீவில் வந்தவர் என்னையும் அவரது மிக பிஸியான நேரத்தில் பார்க்க நினைத்தது சந்தோசமாக இருந்தது.எனக்கு NHM writer-என்ற ஒன்று இருக்கிறது.அதனை டவுண்லோடு செய்தால் தமிழில் பதிவு செய்யமுடியும் என சொல்லித்தந்தவரே அவர் தான். மேலும் முகனூல் அனுபவமும் அவரிடம்தான் முதன் முதலாய் ஆரம்பம் ஆனது. எனது ஒய்வு நேரம் இனிமையாய் இருக்க மிகவும் உதவியாய் இருப்பது மட்டுமல்ல. என் தமிழ் என்னை சோர்வில்லாமல் வாழவும் வைக்கிறது. பொழுதுகள் ஒருவித அர்த்தத்துடன் எனக்கும் போகிறது.
கொஞ்ச நேரம் பேசிவிட்டு நான் கடுக்கரைக்குப் போக வேண்டியிருந்ததால் கோபாலகிருஷ்ணனிடம் விடை பெற்றுக் கிளம்பினேன்.
நான் மட்டுமே கடுக்கரைக்குப் போனேன்.அவள் என்னுடன் வரவில்லை.பிறந்த வீடல்லவா....தனது இருபது வயது வரை வாழ்ந்த,நடந்த,விளையாடிய,பழகிய ஊரல்லவா.......

வடக்குவாச்செல்லி அம்மன் கோயிலுக்குப் போனேன்,போட்டோ எடுத்தேன்.திருப்பணிக்குழு தலைவர் கீழத்தெரு திரு.காந்தி வெயிலில் தன் 80 வயதிலும் நின்று கொண்டு இருந்ததைக் கண்டேன்

ராஜேந்திரன் வீட்டுக்குப் போய் அவர் தந்த மூன்று புஸ்தகங்களையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி தெரிசைக்கு வந்து ரவியின் வீட்டில் மத்தியானச் சாப்பாடை முடித்து விட்டு எங்க வீடு வந்து சேர்ந்த போது நேரம் மணி 2.40.


வாங்க வேண்டியது இனி ஒன்றும் இல்லை.

நேரம் போனது.

தினேஷ் மருந்துகளும் வேறு சிலவற்றையும் வாங்கி வரச்சொன்னான்

அடுத்த நாள் திரும்பவும் கடைக்குப் போய் தேவையானதை வாங்கினோம்.

ஒருவழியாக எல்லாம் வாங்க வேண்டியதை வாங்கியாச்சு.
பார்சல் பண்ணணும் அது ஒன்றுதான் பாக்கி. வியாழன் இரவு ராமு மற்றும் பேரன்கள் காளீஸ்,அறிதி மூவரும் அழகாக பார்சலை நல்ல முறையில் கட்டி முடித்தார்கள்.
இரவு யாருமே தூங்கவில்லை. 12.45 மணிக்கு காரில் புறப்பட்டுப் போனோம் திருவனந்தபுரத்துக்கு..............................(முடியவில்லை தொடரும்)

No comments:

Post a Comment