2008-ல் ஒரு நாள் காலையில் நான் வீட்டில் இருக்கும்போது என்னுடைய மாணவரும் என்னுடன் வேலை பார்த்தவருமான கணிதப் பேராசிரியர் சுவாமினாதன் என்னைப் பார்க்க வந்தார்.அவருடன் இன்னொருவரும் இருந்தார்.
“சார்,இவர் உங்க ஸ்டுடெண்ட்.என்னுடன் B.Sc Maths படிச்சான்”
“ரொம்ப சந்தோசம்..என்ன விசயமா வந்தீர்கள்”
“நாங்கள் 25 வருடத்திற்கு முன்னமே இந்துக் காலேஜ்ல பி.எஸ்ஸி படிச்சவங்கள் எல்லோரும் நாரூல்ல ஒரு இடத்தில் கூடப்போகிறோம்.சாயந்திரம் ஒரு 6 மணிக்கு மீட்டிங்க் நடத்துறோம்.அதில் நீங்கள் கலந்துக்கணும், வீட்ல மேடத்தையும் கூட்டிட்டு வரணும்”
எப்படி இது சாத்தியமாயிற்று என நான் கேட்டேன்.
“4 மாதங்களாகவே இதற்கான வேலைய ஆரம்பிச்சுட்டோம். எல்லோரையும் contact பண்ண முடியல...”
“ ரொம்ப ஆச்சரியமா இருக்கே சாமினாதன் நாம் தினமும் M.S University Study Centre-ல சந்திக்கிறோம். சொல்லவே இல்ல”
”நான் கண்டிப்பா வரணுமா.....நீங்க ரொம்ப strict -ஆக இருப்பதால் உங்களுக்கு தெரியுமே.படிச்ச எல்லோருக்குமே என்ன புடிக்குமா..? நான் அடிக்கக் கூட செய்திருக்கேன்.அதனால நான் வரணுமா சாமினாதா......”
“அப்படிச் சொல்லாதீங்கோ...நீங்க அப்படி இருந்ததனாலதான் சார் நாங்க இப்பம் நல்லா இருக்கோம்.நாங்க எங்க குடும்பத்தோட வந்து உங்கள் எல்லோரையும் அவர்களிடம் எங்கள் ஆசிரியர்கள் இவர்கள் எனக் காணிப்பதற்காகவே தான் சார் இந்த மீட்டிங்கை நடத்துறோம்”
“முடிந்தால் வருகிறேன்.....கண்டிப்பா வர முயற்சி செய்வேன்...”
அந்த நாளும் வந்தது. அக்சயா ஹோட்டலில் நடந்த கூட்டத்துக்கு ராமு,நான்,எனது மகன் முருகன் மூவரும் காரில் போனோம்.கொஞ்சம் நேரம் ஆனதால் கூட்டம் ஆரம்பித்து விட்டது.
எல்லோரும் பேசினார்கள்....எனது முறை வந்தது. “......மனக் கவலையோடு வந்த நான் உங்கள் ஒவ்வொருவரின் முகங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.....”
நினைவுப் பரிசு தந்தார்கள். கூட்டம் முடிந்தது. சாப்பிட ஆரம்பித்தோம். எல்லோரும் வந்து நலம் விசாரித்தார்கள்.அசோக் பத்மராஜ்,சுசீந்திரம் தாணுபிள்ளை,தனலட்சுமி....தங்கள் பிள்ளைகளயும் அழைத்து வந்து ,”இது எங்க சார்” எனக் கூறுவதைக் கேட்ட என் மனது நனைந்தது.
கல்லூரி விழா ஒன்றில் நான் ஒரு பரிசு வாங்கியது பற்றி ஒரு மாணவன் ஞாபகப்படுத்தினான்.
Analytical Geometry-பாடத்தில் அனைவரும் பாஸானதால் எனக்கு ஒரு புக் கிடைத்தது.
எனக்கு நாம் மிகவும் strict -ஆக இருந்தது விட்டோமோ....சில பழைய மாணவர்களைப் பார்த்த போது பழைய சம்பவங்களும் ஞாபகத்துக்கு வந்து மனசைக் கஷ்டப்படுத்தின.
சார், நீங்க அப்ப என் பென்னை என்னிடம் இருந்து பறித்து வெளியே எறிந்து விட்டீர்கள் ....
உங்க கிளாஸ் அமைதியாய் இருக்கும்லா. நான் என்னை அறியாமலே பாள்பாயிண்ட் பென்னை வைத்து சத்தம் வரும் படியாக க்ளிக்...க்ளிக்...என ப்ரஸ் பண்ணிக் கொண்டிருந்தேன்,......
சார்,என் நோட்ட மாத்ரம் பாத்து கையெழுத்துப் போடமாட்டீங்க சார்... ஏன் என்றால் ஒரு தடவை நான் Home Work -ஐ அடுத்த நோட்டப் பாத்து எழுதினத கண்டு புடிச்சிட்டீங்க
சார்,நீங்க என்னிடம் ஒரு மாசத்துக்கும் அதிகமாக பேசவே இல்ல....நீங்க போட்ட டெஸ்ட் நான் எழுதாமல் சினிமா பார்க்கப் போனது உங்களுக்கு தெரிந்து விட்டது....
சார்,நான் இப்ப ஆசிரியரா இருக்கேன்....நான் உங்களைதான் follow பண்றேன்.
என் மனம் லேசானது இதையெல்லாம் கேட்கும் போது....
சார், நான் என் தங்கிச்சியை B.Sc maths ல தான் சேர்த்தென்.எங்க அப்பா பெண்கள் கல்லூரியில் சேர்க்கணும்னு நினைச்சா...நான் தான் இந்துக் காலேஜ்ல maths department மட்டும் தான் ரெம்ப strict என அப்பாட்ட சொன்னேன்.....
எனக்கு எந்த விருதுகளும் கிடைக்க வேண்டும் என விரும்பிய தில்லை.ஆனால் விருதை விட மகிழ்ச்சி தரும் விமர்சனங்கள் ரொம்பவே சந்தோசத்தைத் தந்தது. நம்மை நம்பி சேர்க்கும் மாணவர்களின் பெற்றோரை ஏமாற்றக் கூடாது என்பது தான் என் எண்ணமாய் இருந்தது.
சக ஆசிரியர்கள் என்னை விமர்சிப்பது உண்டு.நான் அதைப் பொருட்படுத்தியதே இல்லை.
எனது ஆசிரியர் ஒருவர் R.S.P. அவர் பிஸிக்ஸ் ஆசிரியர். ஒரு நாள் என்னைப் பார்த்து , “ பொன்னப்பா....நீ என்னோட மாணவன். ஒரு பயலும் நம்மள கண்டா பயப்படமாட்டாங்கான்.
உன்னக் கண்டா பயப்படுகான். எப்படிடே....நீ ஆளும் கட்ட....சின்னப் பையன் போல இருக்க. இத்தனைக்கும் எங்கிட்ட ரிக்கார்டு நோட்டுக்கு மார்க்கு வேற இருக்கு....நீ நல்ல prepare பண்ணி க்ளாஸ் எடுக்க....நல்ல பேரு இருக்கு உனக்கு...keep it up. I am very proud of you.”
என்னை ஊக்குவித்த ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.
எனது சொந்தக்காரர் ஒருவரும் ஆசிரியர். அவரும் ஒருநாள் தன் சக ஆசிரியர்களிடம் என்னை பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.என்னிடம் , “மச்சினா....வந்து 2 மாசம் கூட ஆகல்ல....பொழி பொழிண்ணு பொழிக்கியே.....”
எங்கள் துறைத் தலவர்கள் அனைவருமே எனக்கு ஊக்கமே தந்தாரகள்.
போற்றுபவர் போற்றட்டும்.... தூற்றுபவர் தூற்றட்டும்.....என்ற கவியின் வாக்குதான் எனக்கு தாரக மந்திரமாய் இருந்தது.என் மனச்சாட்சிப் படியே என் பணிதனை முடித்தேன் என்பதும் உண்மை.
என் அப்பா இந்துக்கல்லூரி நிர்வாகி்யாய் இருந்ததினால் நான் எப்படி வேலை செய்கிறேன் என்பதை அறிந்து என்னிடம், “ தங்கம்.... நீ நல்ல க்ளாஸ் எடுக்கியாம்..நல்ல பேரு இருக்கு. ஆனால் 3 மணியான உடனே வீட்டுக்கு புறப்படுகியாமே....இனி அப்படி செய்யாதே”
என் அப்பா ஆசைப்பட்டதால் தான் ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தேன்.....இன்றும் ஒரு ஆளாய் இருக்கேன்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை தானே.....
No comments:
Post a Comment