Thursday, September 1, 2011

மறக்கமுடியாத மாணவன் சுப்பிரமணியம்


1996-ம் ஆண்டு ஜனுவரி மாதம் 26-ம் தேதி மத்தியானம் 3 மணியளவில் நான் வீட்டில் ஏதோ ஒன்றைப்படித்துக் கொண்டிருந்தேன். ஒரு சத்தம் கேட்டு என் கவனம் திரும்பும் போது ஒரு குரல் ,'அய்யோ ஆச்சியின் தலையில் இரத்தம் ’என என் காதினில் விழுந்தது. உடனே நான் என் அம்மா இருந்த அறைக்கு மிக வேகமாகப் போனேன்.பாத் ரூமில் எந்த விதமான பதற்றமும் இல்லாமல் தரையில் கால் நீடடியபடி இருந்து கொண்டே தன் கையால் தலையில் இரத்தம் வந்த இடத்தில் பொத்திக் கொண்டிருந்தாள்.

நான் அம்மையைப் பார்த்து , “ உடனே, ஆஸ்பத்திருக்கு போலாம்” -- சொல்லி விட்டு பெனெடிக்ட் டிரைவருக்கு போண் பண்ணி உடந்தானே வரும்படி சொல்ல அவரும் காரை கொண்டு வந்தார்.

மருமகன் மோகனுக்கும் தகவல் சொல்லி அவனும் உடனே வந்து விட்டான்.அம்மையின் உடம்பு மிகவும் கனமான உடம்பானதால் சற்று சிரமப்பட்டுதான் காரில் தூக்கி கொண்டு வைத்தோம். பக்கத்தில் உள்ள ஒரு டாக்டரிடம் போனோம். அவர் அங்கு இல்லை. அவரது கிளினிக்குக்குப் போகச்சொன்னார்கள். அங்கு போனோம். கார் உள்ளே போக முடியவில்லை.அதனால் நான் அங்குள்ள நர்ஸைப் பார்த்து விசயத்தினைக் கூறி யாரையாவது இரண்டு பேரை உதவிக்கு அனுப்புமாறு கேட்டேன். அவளையும் வந்து பார்க்குமாறு கூறினேன். பாராமுகமாக இருந்தாள் அந்த நர்ஸ்.

டிரைவர் பெனெடிக்ட் , “வாங்க சார், நாம் ------------- ஆஸ்பத்திருக்குப் போலாம்” எனக் கூறி அங்கு அழைத்துச் சென்றார்.அங்கு முதல் சிகிச்சை நடந்தது. 3 நாள் தங்க வேண்டும் என்றார்கள்.தங்கினோம்....

மறுநாள் பெரிய டாக்டர் வந்தார். சற்று நேரத்தில் ஒரு பெண் பயிர்ச்சி டாக்டர் வந்து பார்த்தாள். இரத்தம் அடைக்க வேண்டும் என்றாள்.

நான் அவளிடம் , ‘இப்பொதான் பெரிய டாக்டர் வந்தார்.; அவர் ஒன்றும் சொல்லவில்லையே ” எனக் கூறினேன் .அவள் கோபத்துடன் சென்று பெரியவரிடம் கூற அவருக்கும் கோபம் வந்தது.

என்ன செய்ய.... எனக்கு ஒன்றுமே ஓடவில்லை.என் நண்பர் வித்தியசாகர் உதவியுடன் கல்லூரி மாணவன் (M.Sc; Physics) blood donate பண்ண வந்தான்.அவனைக் கூட்டிக் கொண்டு போய் ஒரு சாதா பென்ச்சில் படுக்க வைத்து இரத்தம் எடுத்தார்கள். இரத்தம் எடுத்து வெளியே வந்த அவனைப் பார்த்தேன்.

அவன் உடுப்பு முழுவதும் இரத்தம். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அவனிடம் கேட்டேன். ஏதோ கூறி பரவாய் இல்லை சார் என்றான்.நான் இரத்தம் எடுத்த அந்த ஆளை மிகவும் கோபத்துடன் திட்டினேன்.

இரத்தம் என் அம்மைக்கு செலுத்தப் பட்டது.அடைத்து முடிந்ததும் பெரியவரின் மகன் வந்தான். அவனும் டாகடர் தான்.

“எதற்கு ப்ள்ட் அடச்சீங்க.. தேவையுமில்லை. பிரயோஜனமும் இல்லை.”

அவன் கம்பவுண்டரைப் பார்த்து ஏன் இரத்தம் அடச்சீங்க... எனக் கூறி சென்று விட்டான்.

மறுநாள் அதே பெண் டாக்டர் வந்தாள். இன்னமும் ஒரு பாட்டில் இரத்தம் அடைக்கணும், என்றாள். நான் என் சந்தேகத்தை அவளிடம் கேட்க முனைந்தபோது ,அவள் கோபத்துடன் வெளியேறினாள்.

நான் அந்தக் கம்பவுண்டர்,சின்ன டாகடர் -யை சந்தித்து இது விசயமாக பேசினேன். இரத்தம் அடைத்தாலும் பெரிய பலன் ஒன்றுமில்லை. வ்யது அதிக மானதால் வேண்டாம் என்றார்கள்.

நான் என் அம்மையிடம் பேசினேன். வீட்டுக்குப் போகணும் என்பதில் பிடிவாதமாக இருந்தாள். நான் கடுக்கரைக்குப் போணுமா எனக் கேட்டேன். வேண்டாம் என்றாள்..

நான் வீட்டுக்கு போக தீர்மானித்து கணக்கை முடிக்கச் சொன்னேன்.

பெரிய டாக்டர் அழைப்பதாக கூறவே நான் அவரைப் போய் பார்த்தேன்.

அவர், “ உங்க அம்மைட்ட உங்களுக்குப் பாசமே இல்லையா? நான் இரத்தம் அடைக்கணும்னு சொல்கேன்... நீ வேண்டாங்கிற.... நான் டாக்டரா ... நீ டாக்டரா?....

” உங்க மகன் தான் இரத்தம் வேண்டாம்ணு சொன்னார்”.

அவர் கோபத்துடன் என்னைத் தரக்குறைவாகப் பேச ஆரம்பித்தார்.

நான்,“ எவ்வளவோ ஆஸ்பத்திரி நாகர்கோவிலில் இருக்கு . நான் உன்ன நம்பி வந்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்... நீ ஒண்ணு சொல்லுக... ஓம் மகன் இன்னொண்ணு சொல்லுகான்.ஒரு நிமிசம் கூட இனி இங்க இருக்கமாட்டேன்....இரத்தம் கொடுக்க வந்த பையனிடம் கூட சரியாக இரத்தம் எடுக்க தெரியவில்லை.... நீயும் ஒன் ஆஸ்பத்திரியும்......”, எனக் கூறி உடந்தானே என் அம்மையை என் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டேன்.

பின் நாகர்கோவில் தனியாக க்ளினிக் நடத்திக் கொண்டிருந்த மருத்துவரை அழைத்து வந்து காட்டினேன். அவரும் வயதாகி விட்டதால் ஸ்கேன் பார்த்து ஆப்பிரேசன் செய்வதும் நல்லதல்ல எனக் கூறி மருந்துகள் எழுதித் தந்தார்.

என் அம்மாவைத் தினமும் வந்து பார்த்து பணிவிடைகள் செய்த கிருஷ்ணம்மாள் ,“அம்மாவின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் அதிக நாள் இருக்கமாட்டாள்,” எனவும் கூறினாள்..

மருந்து சாப்பிட்ட உடன் கை காலை மிகவும் வேகமாக அசைத்துக் கொண்டு சப்தமிடுவதைப் பார்த்து மனதுக்கு சங்கடமாக இருக்கவே நான் எனது அண்ணன் பாஸ்கரனின் மகன் ஸ்ரீகுமாரை வந்து பார்க்கச் சொன்னேன்.

அவன் வந்து பார்த்து மருந்து எதுவும் கொடுக்க வேண்டாம் என்றான்.அதன் படியே மருந்தை நிறுத்தினோம்.

அதன் பிறகு அதிகக் கஷ்டப் படாமல் ,நீர் ஆகாரம் உண்டு பழையநினைவுகளைசொல்லிய வாறே நினைவு தப்பி ஒரு வாரம் கழிந்து பெப்ருவரி மாதம் 20-ம் தேதி எங்களை விட்டுப்பிரிந்தாள்.

நாட்கள் சென்றன.

என் அம்மைக்கு இரத்தம் தந்தவனுக்கு பென், ருபாய் கொடுக்க வேண்டும் என நினைத்து அவனைக் கல்லூரியில் வைத்து அழைத்தேன்.அவனும் வந்தான். அவன் பெயர் சுப்பிரமணியம். அவனிடம் நான் கொடுத்த எதையும் வாங்க மறுத்து விட்டான்.

அவன், “நான் உங்க மகன் தினேஷின் நண்பன் தான். அவனும் நானும் ப்ள்ஸ் 2 ஒரே பள்ளிக்கூடத்தில் தான் படித்தோம். உங்க வீட்டுக்குகூட நான் வந்திருக்கேன்,” என்றான்

நான் அவனிடம் என்னை மன்னிக்கும்படியும் ஆஸ்பத்திரியில் நடந்த குளறுபடிக்கு வருந்துவதாகவும் கூறினேன். “ எனக்காக ஒரு மன ஆறுதலுக்காகவாவது நான் தருவதை வாங்கலாமே”
என்றேன்.

அவன் எனக்காக பென்னை மட்டும் எடுத்துக்கொண்டான்.காலம் கடந்தது. ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடம் கழிந்து ஒரு நாள் காலை டெலிபோண் மணி அடித்தது. நான் தான் எடுத்தேன்.

ஒரு பழைய மாணவன் தான் பேசினான்..... “ சார்..... கொட்டாரத்தில் இருந்து பேசுகிறேன். சுப்பிரமணியம் இறந்து விட்டான்...”

நான், “எந்த சுப்பிரமணியம்.” எனக் கேட்டேன்.

“உங்க அம்மைக்கு இரத்தம் கொடுத்தான்லா அந்த சுப்பிரமணியம்” .

எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

அந்த நேரத்தில் வித்தியாசாகர் எனக்கு போண் பண்ணி இதே விசயத்தைக்கூறி போகலாமா எனக் கேட்க நாங்கள் இருவரும் போனோம்.

எங்களுக்கு போண் பண்ணின பையன் எங்களை சுப்பிரமணியத்தின் அப்பா இருந்த இடத்துக்கு அழைத்துக் கொண்டுபோனான்.

நேற்றே அவன் இறந்ததாகவும் , பரிட்சையில் மார்க்கு குறைந்து அப்பா திட்டியதால் அவன் தற்கொலை செய்து விட்டதாகவும் கூறினார்கள்.

அவனது பெற்றோருக்கு ஒரே பையன். அம்மா அஞ்சல் அலுவலகத்தில் வேலை. அப்பா ஓய்வு பெற்ற போலீஸ்.

“ சுப்பிரமணியத்தின் டயரியில் இருந்த அவனது ஆசிரியர்கள் பெயர் இரண்டே இரண்டு தான். அதான் உங்களுக்கு தகவல் தரச் சொன்னேன். நல்லா இருக்கவேண்டும்ணுதானெசார் ஒவ்வொரு அப்பாவும் நினைப்பாங்க.... நான் செய்தது தப்பா...நீங்க சொல்லுங்க....”அவரது கதறல் என் நெஞ்சினைப் பிழிந்தது....

எங்கள் விழியோரம் நனைந்தது.என்ன சொல்லித் தேற்ற முடியும்......

அமைதியாய் இருந்து ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லாமல் திரும்பினோம்.....

No comments:

Post a Comment