செப்டம்பர் மாதம் 14.எங்களால் மறக்க முடியாத நாள்.21 வருடங்களுக்கு முன்னால் இதே நாளில் தான் நாகர்கோவில் பொன்னப்ப நாடார் நகரில் இருக்கும் எங்கள் வீட்டின் புதுமனை புகுவிழா நடந்தது .
பால் காய்ச்சுக்கு முந்தின நாள் சந்தை சாமான் வந்தது.விறகு கொண்டுவர வண்டி கிடைக்க வில்லை.பெனெடிக்ட் தனது காரிலேயே வங்கி வந்தார்.....அதனை இறக்கி வைக்க அவருக்கு உதவியது ஸ்ரீகுமார். இரவு முழுவதும் முழித்திருந்து தச்சுக் கழிப்பு முடிந்ததும் வீடு முழுவதும் தண்ணீர் வீட்டு சுத்தம் செய்தது என் மருமகன் மோகன்.
அதிகாலை 4 மணிக்கு பெனடிக்ட் காரில் அம்மையுடன் நாங்கள் எல்லோரும் புது வீட்டுக்கு வந்தோம்.என் மனைவி விளக்கை ஒர் கையிலும் ,ஒரு குடம் தண்ணீரை இடுப்பிலும் சுமந்து வீட்டினுள் வைத்தாள்.என் அம்மையை மெதுவாக நடத்திக் கூட்டிக்கொண்டு போய் ஒரு ரூமில் இருக்க வைத்தோம்.இன்றும் அந்த ரூமின் பெயர் ஆச்சி ரூம் .
கணபதி ஓமம்,பூஜை யெல்லாம் நடந்து கொண்டிருந்த அந்த வேளையில் எங்களை பிள்ளைகளுடன் கிழே அமரச் சொன்னார் பூஜை நடத்திய அய்யர்
பாலைக் காய்ச்சி எல்லோருக்கும் தந்தார்கள். நண்பர்கள் அனைவரும் வந்தார்கள்.
சாயந்திரம் கட்டில்களை வீட்டினுள் போட்டோம்.அம்மை இருக்கும் ரூமை எப்படி அமைத்தேன் தெரியுமா ? எல்லா ரூம்லயும் மொஸைக். அந்த ரூம் மாத்திரம் தரை ஓடு.அம்மைக்கு மற்ற தரைகள் எதுவும் ஒத்து வராது வயதானதால். கட்டில் பக்கத்தில் ஸ்விச்.பாத் ரூம்.யூரோப்பியன் க்ளோஸட். மற்றும் எல்லா வசதிகளும் அந்த ரூமில் அம்மைக்காகவே அமைக்கப் பட்டிருந்தது....
வீட்டைக் கட்டிய கொத்தனார் ,கடுக்கரையில் எங்க வீட்டைக் கட்டும்போது கையாளாக வேலை பார்த்த நிருபதி. மர வேலை செய்தவர் கடுக்கரை இசக்கிமுத்து ஆசாரி. வீட்டின் பெயரான “பகவதி” ஐக் சிவப்புக் கல்லில் மைலாடியில் பதித்து கொண்டு வந்தவர் தான் அம்மி,ஆட்டொரல்,திருவை தந்தார்.அவர் சுப்பையாத் தேவர்.கடுக்கரை ஐயப்பன் தான் பொறுப்பாய் இருந்து எல்லா வேலைகளையும் கவனித்தவன்.
வீட்டுக்கு வந்த எல்லோரும் விடை பெற்றுப் போனதும் வீட்டுக்குள் போனேன்.
அம்மை என் ரூமில் இருந்ததைப் பார்த்து என்னம்மா இங்க இருக்க எனக் கேட்டேன்.
நான் இந்த ரூமிலயே இருக்கேன் என்றாள்.
ஏனம்மா...?
அந்தக் கக்கூஸ் எனக்கு புதிசு... பழக்கமில்ல....
அம்மை 15 நாட்களுக்கும் மேலாக அங்கேயே தான் இருந்தாள்.... நிருபதியை கூப்பிட்டு அம்மையின் ரூமில் கக்கூஸை மாற்றச் சொன்னேன்.
அவர் என் அம்மையிடம், “நீங்க 3 நாள் யூஸ் பண்ணிப் பாருங்க.80 வயசுல இதுதான் கொள்ளாம். புடிக்கல்லண்ணா மாத்திரலாம்.”
அம்மையும் சம்மதித்து அதன்படியே யூஸ் பண்ணி்னாள்.....பிடித்து விட்டது.
என் மகள் ஆச்சியைப் பாத்து, வீட்டுக்கு பேரு உன் பேரா என் பேரா எனக் கேட்டாள்
என் பேருதான்....ஒம் பேரு ரெஜி-ல்லா....தாத்தாக்குப் பேருல்லா வச்சுருக்கணும்....
நான் “அப்பா கட்டின வீட்டுக்கு பேர் ‘ஈஸ்வரி பவனம்’தானே. அது அவங்க அம்மாவின் பேர் தானெ”
“கடுக்கரையில் வச்சு தட்ல நான் இருந்தேன்லாம்மா. அப்பம் மேசையில் ‘பகவதி பவனம்’ என எழுதி வைத்திருந்ததைப் பாத்துட்டு அப்பா என்ன சொன்னா தெரியுமா...ஏய் தங்கம்!...நான் வீடு கட்டி எங்க அம்மையின் பேரை வச்சிருக்கேன்.... நீயும் அதுபோல வீட்டக் கட்டிட்டு ஒன் அம்மையின் பேரை வைக்கணும்”
“ அப்பாவின் கனவை நினைவாக்கினது நான் தானேம்மா.....ஒம்பேர வைக்கச்சொன்னதே ஓம் மாப்பிள்ள தானெ அம்மா....” அம்மா மிகவும் ரசித்துச் சிரித்தாள்.
“ எம்மா... ஓங்கிட்ட ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன்...அப்பா எப்பவும் நீ கேட்கும்படி சொல்லுவாள்ளா...பாப்பாத்தி நான் போன பிறகு இருக்க மாட்டா. என் உசிரு போனதும் அவ உயிரும் போயிரும்..ஒரு பயலையும் நம்பி அவ இருக்க மாட்டா...அப்பா போய் பத்து வருஷம் ஆச்சேம்மா.....” மிகவும் ரசித்து வாய்விட்டு பழசை நினைத்து மகிழ்ந்தாள்.
“எம்மா உனக்கு எந்த மகனப் புடிக்கும்...”
“எல்லாரும் என் வயத்தில தான பிறந்தா......ஆனா தவசிருந்து பெத்தது முருகன்லா....ஒன் வீட்டு பால்காய்ச்சுக்கு வரல்லியே...”..அம்மையின் கண்ணில் நீர்....தமாசாய் பேசியது திசை மாறிப் போனதால்.....எல்லோருமே அமைதியாய் விட்டனர்.
என் மனம் பின்னோக்கிச் செல்கிறது....என் அப்பா எனக்கு வந்த ஒரு கடிதத்தில் வெளிநாட்டுக்கு ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பம் அனுப்பினால் வேலை கிடைக்கும் என்பதைப் பார்த்து விட்டு என்னைத் தனியே அழைத்துப்போய்,“எங்கைய்ல சத்தியம் பண்ணு
இந்துக்காலேஜ விட்டு எங்கேயும் போகக்கூடாது....எனக்கு வயசாச்சு...எத்தனை நாள் இருக்கப் போறேனோ....எனக்கு அப்புறம் அம்மைய சரியா யாரும் பாக்கமாட்டா...நீ தான் அம்மையப் பாக்கணும்.அவளுக்கு உன்னதான் ரெம்பப் பிடிக்கும். தோப்பை அம்மாவுக்கு அப்புறம்தான் நீங்க யாராவது எடுக்கணும்....அவள் கை நிறைய காசிருக்கும்...நான் போனபின் யாரிட்டயும் கையேந்தக் கூடாது”....
அப்பா சொன்னது போல் தான் எல்லாமெ நடந்தது. மகாராணி போல் தான் கடைசி வரை வாழ்ந்தாள்.நான் அம்மைக்கு ஏதாவது வாங்கினால் ஏன் காசை இப்படி செலவாக்குக என்பாள்.
அவளிடம் தான் பிள்ளைகள் நாங்கள் வாங்கினோம்.
அந்த மகாராணியின் உயிர் வாடகை வீட்டில் போகக்கூடாது என அடிக்கடி என் மனைவி சொல்லிக் கொண்டிருப்பாள்.
கடுக்கரையில் அரண்மனை போன்ற வீட்டை தான் இருக்கும்போதே மாற்றி அமைக்க அனுமதித்தாள் எனது அம்மா.அது 3 தனி வீடாய் மாறியது. நல்லபெருமாள் காலனியில் ஒரு சின்ன வீட்டில் எனது அம்மா,நாங்கள் இருந்தோம்.ராசியான வீடு.
நச்சரித்துக் கொண்டே இருந்த என் மனைவியின் நியாயமான கனவு நனவாகி “பகவதி” என்றபெயரில் உருவானது. பகவதி என் அம்மா பாப்பாத்தியின் இன்னொரு பெயர்.
1989 ஆவணி மாதம் கல்போட்டு 1990 ஆவணி மாதம் பால் காய்ச்சினோம்.
வீட்ட கட்டிப் பார்......கட்டி விட்டேன்...எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் என் தாயை நான்தானே கடைசி வரை பார்த்தேன் என்பது எனக்கு மன நி்றைவாய் இருக்கிறது
This comment has been removed by the author.
ReplyDeleteTears in my eyes...Am very much proud to say that you are my teacher..
ReplyDelete